விலைமகளின் கடிதம்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7072
பாலு அண்ணா,
நான் உங்களை இப்போதும் இந்த மாதிரி அழைப்பதற்கான தைரியத்துடன் இருப்பதற்குக் காரணம்- ஒரு விலைமகளாக வீழ்ச்சியைத் தேடிக்கொண்டவள், தன்னுடைய மதிப்பிற்குரிய சகோதரனை எப்படி அழைக்கவேண்டும் என்று சமுதாயம் இன்றுவரை ஒரு பெயரைப் படைக்காமல் விட்டிருப்பதால் மட்டுமே. மன்னிக்கவேண்டும்.
நேற்றிரவு நடைபெற்ற அந்தச் சம்பவம்- அதுதான் என்னை இந்த கடிதத்தை எழுதுவதற்குத் தூண்டியது. எந்தவொரு உணர்ச்சி வேறுபாடும் இல்லாமல்தான் அந்த சந்தர்ப்பத்தையே சந்தித்தேன். ஆனால் அது, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட என் இதயத்திற்கு ஒரு ஊசியைப் போட்டது. அப்போதைக்கு எந்தவொரு உணர்ச்சியாலும் உந்தப்படாமல் இருந்தாலும், சிறிது நேரம் சென்றதும் என் இதயத்தில் ஒரு அசைவு உண்டானது. நரம்பு மண்டலத்தில் ஒரு அதிர்ச்சி உண்டானது. குளிர்ந்து, மரத்துப்போய்க் கிடக்கும் என்னுடைய மூளையின் வழியாக ஒரு வெப்பம் நிறைந்த காற்று கடந்துசென்றது. என்னால் தூங்குவதற்கு முடியவில்லை. நான் சிந்தனையில் மூழ்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன். அழுக்கடைந்து காணப்பட்ட மெத்தையில் மல்லாந்து படுத்துக்கொண்டு ஒரு விலைமகள் சிந்தித்தாள்.
இப்போது என்னுடைய தோழிகள் களைத்துப்போய் உறங்கிக்கொண்டிருக்கும் இந்த புலர்காலைப் பொழுதில், ஒரு புழுதிபடிந்த எழுதுகோலையும் ஏதோ ஒரு காமவெறி பிடித்தவன் அவசரத்தில் மறந்துவிட்டுப்போன ஒரு நோட்டுப் புத்தகத்திலிருந்து கிழித்த கொஞ்சம் தாள்களையும் கையில் எடுத்துக்கொண்டு, இதோ என்னுடைய சிந்தனைகளை எழுதப் போகிறேன்.
அண்ணா, நான் ஒரு விலைமகள். சமுதாயத்தில் விஷப் பொருளாகக் கருதப்பட்டுக் கொண்டிருப்பவள். சந்தோஷம் என்றால் என்ன- கவலை என்றால் என்ன என்பதைப் பிரித்துப் பார்க்க இயலாத அளவிற்கு, வாழ்வின் மோசமான பக்கங்களோடு நான் இறுக ஒட்டிக் கிடந்துவிட்டேன். பிரகாசம் பரவிக் கிடக்கும், நறுமணம் கமழும் மலர்கள் நிறைந்த சமுதாயத்தின் மலைச் சரிவை விட்டு, கீழே ஆழத்தையே பார்க்க முடியாத புதைசேற்றுக்குள் நான் உருண்டு விழுந்துவிட்டேன். அல்ல- சமுதாயச் சட்டத்தின் கண்களுக்குத் தெரியாத கைகள் என்னைத் தள்ளிவிட்டன. என்னுடைய மனிதத்தன்மை மரத்துப் போய்விட்டதால், இந்த கேடுகெட்ட இடத்தின் கெட்டுப்போன நீரின் நாற்றத்தையோ, சேறு ஒட்டிக்கொண்டிருப்பதையோ என்னால் உணரமுடியவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் என்னால் உணர முடிகிறது. இந்த சேறு நிறைந்த நிலத்தில் என்னுடைய சொந்த எடையைக் கொண்டு நான் கீழே இறங்கிக்கொண்டிருக்கிறேன்... கீழே இறங்கிக்கொண்டிருக்கிறேன்... கீழே இறங்கிக்கொண்டிருக்கிறேன்.
உங்களுக்கு நன்கு தெரிந்தவைதான் என்றாலும், என்னுடைய வாழ்க்கையின் ஆரம்ப அத்தியாயங்களை நோக்கி மீண்டுமொருமுறை கண்களைப் பதிக்கவேண்டும் என்றொரு எண்ணம் என்ன காரணத்தாலோ... இந்த வேளையில் எனக்குள் உண்டாகிறது. அந்த மிகவும் புனிதமான வாழ்க்கைச் சூழலுடனேயே நான் என்னுடைய கதையைக் கூறுகிறேன்.
என்னைப் பெற்றெடுத்து சில நாட்கள் கடப்பதற்கு முன்பே என்னுடைய தாய் மரணத்தைத் தழுவிவிட்டாள். நம்முடைய குடும்பத்தின் ஒரு தூரத்து சொந்தக்காரியான மாதவியம்மா என்னை மிகவும் கவனம்செலுத்தி வளர்த்த ஒரு மெல்லிய நினைவு இப்போதும் எனக்குள் இருக்கிறது. ஆனால், எனக்கு நல்ல நினைவு தெரிந்தபோது, முதன்முதலாக கண்களால் பார்த்தது... பாலு அண்ணா, உங்களுடைய அன்பு நிறைந்த முகத்தைத்தான். பதினெட்டு வருடங்களுக்கு முந்தைய அந்தக் காலத்தை நான் இப்போதும் நினைத்துப் பார்ப்பதுண்டு. நான் அப்போது ஆறு வயது கொண்ட சிறுமியாக இருந்தேன். பாலு அண்ணா, நீங்கள் பதினொரு வயது கொண்ட குறும்புத்தனம் நிறைந்த சிறுவனாக இருந்தீர்கள். இருபக்கங்களிலும் ஒடிச்சுகுத்திப்பூக்கள் இடைவிடாமல் மலர்ந்து காட்சியளிக்கும் வேலிகளைக் கொண்ட ஒற்றையடிப் பாதை வழியாக நாம் பள்ளிக்கூடத்திற்குச் செல்வோம். வழியில் காணும் மரங்களை நோக்கி வெறுமனே கல் எறிந்துகொண்டும், பந்தைத் தட்டிக்கொண்டும் ஆரவாரம் உண்டாக்கியவாறு நடந்துசெல்லும் உங்களுக்குப் பின்னால் நான் ஒரு பச்சை நிற ஃப்ராக் அணிந்து கொண்டு, கையில் ஒரு சிறிய குடையை வைத்தவாறு, மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டபடி நடந்துசெல்லும் அந்தக் காட்சி இப்போதுகூட எனக்கு முன்னால் பிரகாசமாகத் தெரிகிறது. நீங்கள் சிலேட்டையும் புத்தகத்தையும் வேலியில் மறைத்து வைத்துவிட்டு வழியிலிருக்கும் மாமரத்தில் ஏறி மாங்காயைத் திருடும்போது, அதன் உரிமையாளர் வருகிறாரா என்று பார்த்தபடி நான் கீழே காவல் காத்து நின்றுகொண்டிருப்பதும், அதற்குப் பரிசாக நீங்கள் எனக்கு நெல்லிக்காய் பறித்துத் தரவோ காட்டுச் செண்பக மரத்தின்மீது ஏறி பூக்களைப் பறித்துத் தரவோ செய்வதும் நேற்று நடந்ததைப்போல தோன்றுகிறது. ஒருநாள் நான் பொறுக்கிச் சேர்ந்த முந்திரிக் கொட்டைகளை எண்ணிக்கொண்டிருந்தபோது, நீங்கள் ஒரு பெரிய கத்தியை எடுத்துவந்து, ஒரு முந்திரிக் கொட்டையை ஒரே வெட்டில் இரண்டாகப் பிளக்க முயற்சித்ததையும், தவறுதலாக அந்த வெட்டு என்னுடைய வலது கையின் சுண்டு விரலில் விழ, அதைத் தொடர்ந்து விரலின் ஒரு துண்டு தனியாக வந்ததையும், நான் உரத்த குரலில் சத்தம் போட்டு அழுததையும் தெளிவாக நினைத்துப் பார்க்கிறேன். அடுத்த வருடம் நான் பள்ளிக் கூடத்திற்குச் சென்றபோது, ஆசிரியர் என்னுடைய கை விரலைக் கூர்ந்து பார்த்துவிட்டு, அது எப்படி நடந்தது என்று என்னிடம் கேட்டபோது, பாலு அண்ணன்தான் அதைத் துண்டாக்கி விட்டார் என்று கூறினால், உங்களுக்கு ஆசிரியரிடமிருந்து அடி கிடைக்குமே என்று பயந்து, நான் அதை வெயிலில் வைத்ததால் கரிந்து போய்விட்டது என்று ஒரு பொய்யைக் கண்டுபிடித்து கூறியதையும், ஆசிரியர் அந்தத் தகவலை என் தந்தையிடம் கூறியபோது, அவர்கள் எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்து என்னை அருகில் வரவழைத்து, மீண்டும் விசாரணை நடத்தியதையும் நான் நன்கு நினைத்துப் பார்க்கிறேன். நீங்கள் என்னை அடிக்கவோ அல்லது வேறு வகையில் குறும்புத் தனங்களை வெளிப்படுத்தவோ செய்யும்போது, நான் கண்களில் நீர் நிறைய தேம்பித்தேம்பி அழுவதும், நீங்கள் என்னையே வெறித்துப் பார்த்துவிட்டு என்மீது இரக்கம் உண்டாகி என் அருகில் வந்து, கண்ணீரைத் துடைத்து கன்னத்தில் முத்தமிட்டு, என்னை முதுகில் சுமந்து நீண்ட தூரம் குதிரைச் சவாரி செய்யவைத்து, என்னை மீண்டும் சிரிக்கச் செய்ததும், வேறு நினைவுகளும், இளமைக்கால கொண்டாட்டத்தின் கொடிகளைப்போல எனக்கு முன்னால் பறந்துகொண்டிருக்கின்றன. ஹா! அந்த சிறுபிள்ளைப் பிராயம் எவ்வளவு புனிதமானதாக இருந்தது! எந்த அளவிற்கு அன்பு நிறைந்ததாக இருந்தது! அது ஒரு கனவைப்போல அப்படியே கடந்து போய்விட்டது. நீண்ட காலம் செல்லம் கொடுத்து கொஞ்சி வளர்த்த ஒரு பஞ்சவர்ணக்கிளிபோல அது கைகளை விட்டு பறந்து போய்விட்டது.