நீலாம்பரி - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6361
மாலை நேரத்தில் குளித்து முடித்து வாசலில் நின்றவாறு கூந்தலை விரலால் வருடிக்கொண்டிருக்கும் பொழுது அவள் நீலாம்பரி பாடும் சாஸ்திரிகளை நினைத்துப் பார்ப்பாள். தூரத்தில் சூரியன் பொன் நிறத்தில் மறைந்து கொண்டிருக்கும் போது, அவள் அந்தப் பாடகனுடைய கண்களின் கூர்மையை நினைத்துப் பார்ப்பாள்.
"நாம மதுரை மீனாட்சி கோவிலுக்குப் போயிட்டு வரணும். நான் ரெண்டு நாட்கள் விடுமுறை போட்டுர்றேன்"- சுபத்ரா ஒருநாள் தன் கணவரிடம் சொன்னாள்.
"குருவாயூர் இருக்குறப்போ மலையாளிகளான நமக்கு இன்னொரு கோவில் தேவையில்லை..."- மேனன் சொன்னார். நோயாளியாக ஆவதற்கு முன்புதான் அவர் அப்படிச் சொன்னார். வாதத்தால் பாதிக்கப்பட்டு உடல் தளர்ந்து ஒன்றுக்குமே முடியாமல் படுத்திருக்கும்போது அவர் அமைதியாகக் கண்ணீர்விட்டபடி இருப்பார். அவரின் கவலைக்கான காரணங்கள் என்னவென்பது சுபத்ரா அறியாத ஒன்றாக இருந்தது.அவள் தன்னுடைய கைகளால் பிழிந்தெடுத்த சாத்துக்குடி நீரை அவரின் வாய்க்குள் ஊற்றுவாள். அவரின் உடம்பை வெந்நீரில் நனைய வைத்துப் பிழிந்த துவாலையால் அவளே துடைத்து சுத்தம் செய்வாள். டாக்டர் சுபத்ராவின் பணிவிடைகளைப் பார்க்கும் வேலைக்காரர்களும் நண்பர்களும் அவளின் கடமையுணர்வை மனம் திறந்து பாராட்டினர்.
தான் மூன்று நாட்கள் கோழிக் கோட்டை விட்டுச் செல்வதாக சுபத்ரா மருத்துவமனையில் அறிவித்தபோது நோயாளிகளின் உறவினர்கள் என்னவோ போல் ஆகிவிட்டார்கள்.
"ஏன் பயப்படுறீங்க? என்னை மாதிரி இங்க எத்தனை டாக்டர்மார்கள் இருக்காங்க! எனக்கு இப்போ வயசாக ஆரம்பிச்சிடுச்சு. நான் காலாகாலத்துக்கும் உயிரோட இருக்கப்போறேனா என்ன?"- டாக்டர் சுபத்ரா சொன்னாள்.
கோழிக்கோடு நகரத்திலேயே பெரிய அளவில் பெயர் பெற்ற ஒரு டாக்டரென்றால் உண்மையிலேயே அது சுபத்ராதான். மக்களுக்காக சேவை செய்து கொண்டிருந்த அந்தப் பெண்ணை பொதுவாக எல்லோருமே விரும்பினார்கள்.
அவ்வளவு தூரம் தானே சொந்தமாகக் காரை ஓட்டிக் செல்வதாகச் சொன்ன போது அவருடைய நண்பர்கள் எல்லோரும் அதைத் தடுத்தார்கள். டிரைவரை உடன் அழைத்துச் செல்ல விருப்பமில்லையென்றால் நன்கு கார் ஓட்டத்தெரிந்த உறவினர் ஒருவரை உடன் அழைத்துச் செல்லலாமே என்றார்கள் அவர்கள்.
தனக்கு இப்போது தனிமை தேவைப்படுகிறது என்றாள் சுபத்ரா. தனிமையும் மௌனமும்தான் இப்போது எதிர்பார்ப்பது என்று அவள் மனம் திறந்து சொன்னாள்.
ஒரு விதவைக்குப் பொருத்தமான ஆடைகளையே சமீபகாலமாக அவள் அணிந்து வந்தாள். ஆனால், மதுரைக்குப் போகும்போது அடர்த்தியான நிறங்களைக் கொண்ட பட்டுப்புடவைகளை அவள் பெட்டியில் அடுக்கி வைத்தாள். தேனிலவுக்குச் செல்லும் மணப் பெண்ணின் இதயத் துடிப்புடன் அவள் பொருட்களை அடுக்கினாள். வாசனை திரவியங்கள், முத்து மாலைகள், சிவப்பு கல் வைத்த நகைகள்- எல்லாவற்றையும் அவள் பெட்டிக்குள் எடுத்து வைத்தாள்.
3
முப்பத்தியிரண்டு வருடங்களுக்குப் பிறகு பார்க்கும்பொழுது மதுரை மிகவும் மாறிவிட்டிருப்பதை சுபத்ராவால் புரிந்து கொள்ள முடிந்தது. பழைய வீடுகளில் முக்கால் பகுதி வீடுகள் இப்போது காணாமல் போயிருந்தன. அடுக்குமாடி குடியிருப்புகளில் மக்கள் மிகவும் நெருக்கமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பூக்கள் விற்பனை செய்து கொண்டிருந்த தெருக்களில் வட இந்தியக்காரர்களின் பழைய துணிகளும் வெளிநாட்டுத் துணிகளும் விற்பனை செய்யும் கடைகள் இருப்பதை அவள் பார்த்தாள். தானும் தன்னுடைய தாய், தந்தையும் வசித்த கட்டிடம் ஒரு சிறுவர் பள்ளிக்கூடமாக மாறியிருப்பதைப் பார்த்தாள்.
அங்கிருந்து தெற்குப் பக்கமாகச் சென்று கோவில் குளத்தையும் அதைத் தாண்டி பாசி படர்ந்துபோய் அலங்கோலமாகக் காட்சி அளித்த மடத்தையும் அவள் பார்த்தாள். மடத்தை நோக்கி சுபத்ரா நடந்தாள். வாசல்படிகள் இடிந்துபோய் காணப்பட்டன. அடைக்கப்பட்டிருந்த வாசல்கதவை பல தடவை தட்டியும் யாரும் அதைத் திறப்பதாகத் தெரியவில்லை. சாஸ்திரிகளும் அவருடைய குடும்பமும் இந்த இடத்தைவிட்டு வேறு எங்காவது போயிருக்கலாம் என்ற முடிவுக்கு அவள் வந்தாள். மனிதர்கள் வசிக்கக்கூடிய ஒரு இடமாக அது தெரியவில்லை. கட்டிடத்தைச் சுற்றி புதர்களும் முள்செடிகளும் அடர்த்தியாக வளர்ந்திருந்தன.
அவள் திரும்பிச் செல்லலாம் என்று படிகளில் இறங்கியபோது, கேட் திறக்கப்பட்டு ஒரு வயதான உருவம் அவளை நோக்கி வந்தது. அது- ஞானாம்பாள் என்பதைப் பார்த்தவுடன் அவள் புரிந்து கொண்டாள். கிட்டத்தட்ட ஐம்பது வயது ஆகியிருக்கும் அவளுக்கு. ஆனால், பார்க்கும்போது எழுபது வயது ஆன பெண்ணைப் போல் அவள் காட்சியளித்தாள். ஞானத்தைப் பார்த்து உண்மையிலேயே அதிர்ந்து போய்விட்டாள் சுபத்ரா. என்ன ஆயிற்று ஞானத்திற்கு? தலைமுடி முழுக்க விழுந்து வழுக்கையாகிப் போன தலையையும், நரம்புகள் புடைத்துக் கொண்டிருக்கும் கைகளையும், ஒட்டிப் போன கன்னங்களையும், விழுந்துபோன பற்களையும் கொண்ட அந்தப் பெண் பார்ப்பதற்கே மிகவும் அவலட்சணமாக இருந்தாள். பழைய புடவை கட்டிய எலும்புக்கூடாக அவள் காட்சி தந்தாள்.
"யாரு?"- ஞானம் கேட்டாள்.
"என்னைத் தெரியலையா? நான்தான்... சுபத்ரா. உன்கூட சாஸ்திரிகள்கிட்ட சங்கீதம் படிச்சவ..."- சுபத்ரா சொன்னாள்.
"சுபத்ராவா?"- ஞானம் கேட்டாள்.
"ஆமா... சாஸ்திரிகள் எங்கே? மதுரைக்கு வந்தவுடன் உங்க ரெண்டு பேரையும் பார்க்கணும்னு தோணுச்சு. முப்பத்துமூணு வருடங்கள் கழிச்சு நான் மதுரைக்கு வந்திருக்கேன்."
"மீனாட்சி கோவிலுக்குப் போயி சாமி கும்பிட்டியா?" ஞானம் கேட்டாள்.
"இல்ல... வர்ற வழி இது. உன்னையும் சாஸ்திரிகளையும் பார்த்துட்டு, அதற்குப் பின்னாடி ஹோட்டலுக்குப் போயி குளிச்சிட்டு கோவிலுக்குப் போகலாம்னு நான் தீர்மானிச்சிருந்தேன்"-சுபத்ரா சொன்னாள்.
"நீ ரொம்பவும் தாமதமா வந்துட்டே. சாஸ்திரிகள் இந்த உலகத்தைவிட்டு போயிட்டாரு. டைஃபாய்ட் காய்ச்சல்ல இறந்துட்டாரு. அவரு இறந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆயிடுச்சு"- ஞானம் சொன்னாள்.
"பேப்பர்ல அவர் இறந்த செய்தி எதுவும் வரலியே!"- சுபத்ரா ஆச்சரியம் தொனிக்கக் கேட்டாள்.
"பேப்பர்ல வர்ற அளவுக்கு உள்ள செய்தி ஒண்ணுமில்லையே அவரோட மரணம்! அவர் ஒரு சாதாரண பாகவதர். பேரோ பணமோ அவர் எதுவும் சம்பாதிக்கல. ரொம்பவும் கஷ்டப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாரு. கஷ்டப்பட்டு செத்தாரு. குழந்தைகள் இல்லையேன்னு நான் குறைப்பட்டு சொல்றப்போ அவர் சொல்வாரு; 'எல்லா சிஷ்யர்களும் என்னைப் பொறுத்தவரை குழந்தைங்கதான். 'என்னோட ஆபத்தான நேரங்கள்ல நிச்சயம் அவங்க வந்து உதவுவாங்க'ன்னு. ஆனா, நடந்தது என்ன? பழைய சிஷ்யர்கள் எல்லாத்துக்கும் கடிதம் எழுதிப்போட்டோம். யாரும் பதில்னு பேருக்குக்கூட எழுதல. யாரும் பணம் அனுப்பி வைக்கணும்னு நினைக்கல. அவரை சிகிச்சை செய்றதுக்குக்கூட பணம் பத்தல..." ஞானம் தடுமாறிய குரலில் சொன்னாள்.
சுபத்ரா ஞானத்திற்கு ஆறுதல் சொன்னாள். அவள் அணிந்திருந்த ஜாக்கெட்டின் மணம் சுபத்ராவிற்கு சகிக்க முடியாத ஒன்றாக இருந்தது.