
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
மெதுவாக மேடையேறி வந்து, தன்னுடைய அனுபவத்தைச் சொல்லத் தொடங்கிய கோதண்டபாணிக்கு வயது 68. சன்னமான குரலில் தொடங்கினார்:
“கண் பார்வைக் குறைவால் பல மாதங்களாக நான் மிகவும் சிரமப்பட்டேன். முன்பு இருந்த அளவுக்கு, கண்களில் தெளிவான பார்வை இல்லை.
வயது ஒரு காரணம். என்றாலும், என் வயதைக் கொண்ட நண்பர்கள் பலரும், நல்ல கண் பார்வையுடன் இருப்பது எனக்குத் தெரிந்தே இருந்தது.
என்னவோ தெரியவில்லை... வயதாக ஆக பார்வை மட்டும் குறைந்துகொண்டே வந்தது. கண்ணாடி அணியாமல் இருக்கும்போது, எந்தப் பொருளையும் தெளிவாகப் பார்க்கமுடியாது. பனிப் படலத்துக்குப் பின்னால் இருப்பதைப் போலவே எல்லாம் தெரியும்.
நான், ஏராளமாகப் படிப்பவன். சமீபகாலமாக, என்னால் சரியாக வாசிக்க முடியவில்லை.
‘டெக்கான் ஹெரால்ட்’, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’போன்ற நாளிதழ்களைப் பிரித்தால், அவற்றில் இருக்கும் சிறிய எழுத்துகளையும் படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புவேன். ஆனால், சமீபகாலத்தில் அது சற்று கடினமாக இருந்தது!
சிலநேரம், என்னுடைய பார்வை குறைபாட்டை நினைத்தால் மனதில் கிலி உண்டாகும். இவ்வளவு வயதான பிறகு, கண்ணில் அறுவை சிகிச்சை செய்துகொள்வது என்றால், அதற்கும் பயமாக இருக்கும். பணச்செலவு வேறு!
பணம் செலவழித்து அறுவைச்சிகிச்சை செய்துகொள்கிற அளவுக்கு எனக்கு வசதி இல்லை; நான், சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன்.
என்னுடைய மகனின் வருமானத்தில்தான் குடும்பமே ஓடிக்கொண்டு இருக்கிறது. என்னையும் என் மனைவியையும், அவன்தான் பார்த்துக்கொள்கிறான். அவனுக்கு மனைவியும், இரு குழந்தைகளும் இருக்கிறார்கள்.
அதனால், அவனுக்கு செலவை உண்டாக்க நான் விரும்பவில்லை.
எனக்கு மிகவும் தெரிந்த நபர் ஒருநாள் சொன்னார்...‘கண் பார்வைக்கு நல்லெண்ணெய் மிகவும் உதவியாக இருக்கும்; தினமும் நல்லெண்ணெய்யால் கொப்பளித்தால், தெளிவான பார்வை கிடைக்கும்’என்று.
நன்கு பழக்கப்பட்ட அவர் கூறியபடியே ‘ஆயில் புல்லிங்’செய்ய ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் கால் மணி நேரம் நல்லெண்ணெய்யை கொப்பளித்து முடித்தபிறகுதான் மற்ற வேலைகள் எல்லாம்.
ஒரு மாத காலம் தொடர்ந்து நல்லெண்ணெய்யால் கொப்பளித்தேன். அதனால், உண்டான பலன் உண்மையிலேயே ஆச்சரியப்படக்கூடியதாக இருந்தது.
நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு, பார்வையில் முன்னேற்றம்; வியக்கத்தக்க மாற்றம்! சிறுசிறு எழுத்துகளைக்கூட படிக்க முடிந்தது. எவ்வளவு தூரத்தில் இருக்கும் பொருளாக இருந்தாலும், கண்களுக்கு மிகவும் தெளிவாகத் தெரிந்தது.
சொல்லப்போனால், முன்பு கண்ணாடி அணிந்துதான் வாசிப்பேன் . ‘ஆயில் புல்லிங்’ செய்ய ஆரம்பித்தபிறகு, கண்ணாடி அணியாமலேயே
படிக்கிறேன். இது எனக்கே ஆச்சரியத்தை அளிக்கிறது. நல்லெண்ணெய்யால் எனக்குக் கிடைத்த மறுவாழ்வு என்றுதான் இதைச் சொல்லவேண்டும்.
என்னைப் போல கண் பார்வை தெளிவாக இல்லாமல் யாராவது சிரமப்பட்டால், சிறிதும் தயங்காமல் தினமும் நல்லெண்ணெய்யை கொப்பளியுங்கள். கண் பார்வையில் கட்டாயம் ஒரு மாற்றம் இருக்கும்!”
அந்தப் பெரியவரின் அனுபவம், உண்மையிலேயே அங்கு கூடியிருந்த அனைவருக்கும் சிந்தனையில் ஒரு வெளிச்சத்தைக் கொடுத்தது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook