அனுபவம் பலவிதம்
- Details
- Category: பொது
- Published Date
- Written by chitralekha
- Hits: 6795
மனிதராய் பிறந்துள்ள ஒவ்வொருவருக்கும், பிறந்தது முதல் கடைசி மூச்சு உள்ள வரை கிடைக்கும் அனுபவங்கள் ஏராளம்.
தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் பொழுது எதுவுமே புரியாத அனுபவம். அப்போது கிடைக்கும் அனுபவம் அழுகை மட்டுமே. அழுதால் பால் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளுவது ஆரம்ப அனுபவம்.
அழுதால் தன்னை அம்மா தூக்கி வைத்துக் கொள்வாள் என்பது அடுத்த கட்ட அனுபவம். பிறக்கும் பொழுது அழும் மனிதர்கள், இறக்கும் பொழுதும் அழுகிறார்கள்.
'பிறக்கும்போதும் அழுகின்றான்,
இறக்கும்போதும் அழுகின்றான்
என்று கவிஞர் பாடினார்.
நம் பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடையே நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் ஏராளம்.
சில அனுபவங்கள் நம்மை புண்படுத்தும். சில அனுபவங்கள் நம்மை பண்படுத்தும். சில சிரிக்க வைக்கும். சில சிந்திக்க வைக்கும்.
'அவனுக்கென்னப்பா... சுகவாசி! அனுபவிக்கிறான் என்று சொல்வதுண்டு.
'என்னோட கஷ்டத்தை அனுபவிச்சுப் பார்த்தாதான் தெரியும்...
'அவர் அனுபவசாலிப்பா. அவர் சொல்றதைக் கேளு.
'என்னோட அனுபவத்துக்கு உன்னோட வயசு.
'வாழ்ந்தா அவனைப் போல அனுபவிச்சு வாழணும்டா...
'அனுபவி ராஜா அனுபவி
'உன் கூட வாழ்ந்த அனுபவம் போதும்
அனுபவம் என்கிற வார்த்தை மனிதர்களிடையே வெவ்வேறு அர்த்தத்தில் வெவ்வேறு சூழ்நிலைகளில் பிரயோகிக்கப்படுகின்றன.
ஒரு ஆண் அல்லது ஒரு பெண், பொருளாதார ரீதியாக வீழ்ச்சி அடையும்பொழுது நிலை தடுமாறி. கலங்குவது ஒரு சிக்கலான அனுபவம். தன்னை சுதாரித்துக் கொண்டு 'இனி என்ன செய்யலாம்' என்று சிந்தித்து செயல்பட்டு அந்த சிக்கலில் இருந்து விடுபடுவது தைரியமான அனுபவம்.
'ஐயோ நம் நிலைமை இப்படி ஆகிவிட்டதே... இனி நம் கதி... அதோகதிதான் என்று தானே ஒரு தவறான முடிவிற்கு வந்து திரும்ப மீள முடியாத சூழ்நிலைக்கு ஆளாவது கோழைத்தனமான அனுபவம்.
பெற்ற பிள்ளைகள் நல்ல விதமாக வளராமல், தீய வழிகளில் மனதை செலுத்தி, சரியாக படிக்காமல், ஊர் சுற்றிக் கொண்டிருந்தால்... அதற்காக மனம் கலங்கி பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து பெற்றோர் பயம் கொள்வது ஒரு அனுபவம். பிள்ளைகள், தங்கள் எதிர்காலம் தங்கள் உயர் கல்வியில்தான் அடங்கியுள்ளது என்று அறிந்து அவர்களே முயற்சி எடுத்து படிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இருப்பது ஒரு அனுபவம்.
சதா சர்வ காலமும் பிள்ளைகளை 'படி, 'படி என்று நச்சரித்து அவர்களுக்கு படிப்பின் மீதே வெறுப்பு ஏற்படும்படியாக அறிவுரை என்ற பெயரில் அறுப்பதும், வறுத்து எடுப்பதும் ஒரு அனுபவம். கல்லூரிக்கு சென்ற 'தங்கள் மகள் வகுப்பிற்கு போகாமல் திரையரங்கிற்கு சிநேகிதிகளுடன் போகிறாளோ' அல்லது 'பையன்களுடன் சுற்றுகிறாளோ' என்று அவநம்பிக்கையுடன் கவலைப்படுவது ஒரு அனுபவம்.
'ட்யூஷனே வேண்டாம் அம்மா' என்று கூறி, தானாகவே நன்றாகப் படித்து நிறைய மார்க்குகள் வாங்கும் மகனை / மகளை பார்த்து தாய் அடைவது அளவிட முடியாத மகிழ்ச்சி அளிக்கும் அனுபவம்.
ஏகப்பட்ட பணம் கொடுத்து ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு வாத்யாரை வைத்து ட்யூஷனுக்கு ஏற்பாடு செய்திருந்தும்... கவனக் குறைவாலும், படிப்பில் நாட்டமின்மையாலும் மகன் / மகள் மிகக் குறைந்த மார்க்குகள் வாங்கும் பொழுது மகள் / மகன் மீது சுடு சொற்களை வீச வைக்கும் ஆத்திரமான அனுபவம்.
'என் மகள் என்னிடம் எதையும் மறைக்க மாட்டாள், என்னிடம் அனுமதி பெறாமல் எங்கும் போக மாட்டாள்' என்று மிக்க நம்பிக்கை வைப்பது ஒரு அனுபவம்.
புத்திமதி கூறும் பெற்றோரை தங்களை நன்மைக்காகத்தான் கூறுகிறார்கள் என்று புரிந்து கொள்ளாமல், அவர்கள் புகட்டும் புத்திமதிகளை காது கொடுத்து கேட்பதற்கு கூட பிடிக்காத பிள்ளைகளின் அனுபவம் அறியாமை நிறைந்த அனுபவம்.
'என் மீதுள்ள அக்கறை காரணமாகத்தான் என் அம்மா எனக்கு அறிவுரை கூறுகிறார், என் அப்பா எனக்கு ஆலோசனை வழங்குகிறார் என்று புரிந்து கொண்டு பள்ளி அல்லது கல்லூரியில் இருந்து வந்த உடனே அம்மாவிடமோ அப்பாவிடமோ அன்று நடந்த அனைத்து விஷயங்களையும் மறைக்காமல் கூறுவது சில பிள்ளைகளின் ஒளிவுமறைவற்ற மனப்பான்மையை வெளிப்படுத்தும் அனுபவம்.
பையன்களுக்கு வேறு வித அனுபவம். அப்பா, அம்மாவிற்கு தெரியாமல் ஊர் சுற்றுவது. அப்பாவின் சட்டை பாக்கெட்டில் இருந்து காசை எடுப்பது... எடுப்பது என்ன... திருடுவது... இரவு முழுக்க பெண் சிநேகிகளுக்கு மெஸேஜ் அனுப்புவது... படிப்பைத் தவிர அத்தனையையும் செய்து விட்டு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கல்லூரி முதல்வரிடமோ அப்பாவிடமோ மாட்டிக் கொண்டு முழிப்பது ஒரு அனுபவம்.
நல்லதையே நினைத்து நல்லதையே செய்து நன்மைகளை அடைவது நல்லதொரு அனுபவம். தீமைகளை மட்டுமே நினைத்து, பிறர்க்கு தீங்கு செய்தபடியே வாழும் மனிதர்களுக்கு, காலம் கடந்து அவர்கள் செய்த தவறுகளை உணர்வது அவர்களை வருத்தத்தில் மூழ்க வைக்கும் அனுபவம்.
வாழ்க்கையில் 'எது வந்தாலும் ஒரு கை பார்த்துடறேன். என்னோட அனுபவத்துக்கு இதெல்லாம் தலைமுடிக்கு சமம்' என்று சிலர் வீறாய்ப்பாய் பேசுவது வீரமான அனுபவம்.
எழுபத்தைந்து வயது நிறைந்த ஒரு முதியவர், 'என்னோட இந்த எழுபத்தஞ்சு வருஷத்து அனுபவத்துல...' என்று ஆரம்பித்தார்கள் என்றால், அவர் ஆரம்பித்த உடனேயே ஆள் அரவம் இன்றி அங்கிருந்து அகன்றுவிடத் தோன்றும்.
சில பெரியவர்கள், தங்கள் அனுபவங்களைப் பற்றி சுவராஸ்ய மான தகவல்களை கூறும்பொழுது, நமக்கு அந்த அனுபவங்களில் இருந்து அநேக பாடங்கள் கிடைக்கும். அறிவுரைகளையும் அறிந்து கொள்ள முடியும்.
கடவுள் பக்தியுடன் தெய்வீக சிந்தனையில் ஈடுபடுவோர்க்கு ஒரு அமைதியான அனுபவம். கடவுளை நம்பாமல் நாத்திகம் பேசும் மனிதர்களின் பேச்சில் வேறுவித அனுபவம்.
இரவில், நித்திரை அன்னை தானாக நம் இமைகளை உறங்க வைப்பது ஒரு நல்ல தூக்கத்தின் அனுபவம். தூக்கமே வராமல் இரவு முழுவதும் தவித்து, படுக்கையில் புரண்டபடி கஷ்டப்படும் பொழுது தூக்கமின்மை ஒரு துன்பமான அனுபவம்.
அலுவலகங்களில் வேலை செய்யும் ஒருவர் அல்லது ஒருத்தி, நேர்மையாக தன் பணிகளை செய்து வருவதால் அதிகாரிகளால் பாராட்டப்படும் பொழுது, உழைப்பிற்கேற்ற பாராட்டுகளை பெறும் அனுபவம்.
குறித்த நேரத்தில் கொடுத்த பணிகளை முடிக்காமல் சோம்பேறித்தனமாய் நாட்களை நகர்த்திவிட்டு பின்னர், உயர் அதிகாரிகளின் கண்டனத்திற்கு ஆளாகி, அவமானப்படுவது ஓர் அனுபவம்.