அனுபவம் பலவிதம் - Page 6
- Details
- Category: பொது
- Published Date
- Written by chitralekha
- Hits: 6795
சில அனுபவங்கள் ஆனந்தத்தை அளிப்பவை, சில அனுபவங்கள் ஆறாத துயரத்தை அளிப்பவை, பிறக்கும் பொழுது ஓர் அனுபவம், வளரும் பொழுது ஒரு அனுபவம், வாழும் பொழுது ஒரு அனுபவம். படிப்படியாக, வாழ்க்கையின் ஒவ்வொரு கால கட்டத்திலும் அடையும் அனுபவங்கள் ஏராளம். தன்நிறைவை அளிப்பவை, தன்மானத்தைத் தகர்ப்பவை, நன்மை அளிப்பவை, தீமை அளிப்பவை, சிகரத்தின் உச்சியில் ஏற்றுபவை, அதல பாதாளத்தில் தள்ளிவிடுபவை, உயர் குணங்களை அளிப்பவை, அவற்றை அழிப்பவை... இவ்விதம் வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்கள் பலவிதம். சில அனுபவங்கள் சீர் படுத்தும், சில அனுபவங்கள் சீர் கெடுக்கும். அனுபவங்களை ஆராய்ந்து பார்த்து, நன்மைகளை மட்டுமே மனதில் தேக்கி, தீமைகளை அறவே நீக்கி வாழ்ந்தால் நல்ல அனுபவங்கள் நெஞ்சில் நிலைத்து நிற்கும்.
'பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்... பாடல்கள் பலவிதம் விதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்...' என்று பாடினார் கவியரசு கண்ணதாசன். இது போல்தான் அனுபவங்களும் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். ஒரு மனிதருக்கு ஒரு அனுபவமா கிடைக்கிறது? வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும், ஒவ்வொரு வயதிலும் வெவ்வேறு விதமான அனுபவங்கள் கிடைக்கின்றன.
உயிர் தோன்றியது முதல் உயிர் பிரியும் வரை கிடைக்கும் அனுபவங்கள் எண்ணற்றவை. நல்ல அனுபவங்கள் மட்டுமல்லாது சில தீமை பயக்கும் அனுபவங்களால் கூட நம்மை நாம் திருத்திக் கொள்கிறோம். மாற்றிக் கொள்கிறோம். அனுபவித்தால்தான் தெரியும் என்று அடிக்கடி கூறுகிறோமே அது இதுதான். அனுபவங்கள் யாரையும் புண்படுத்தாமல், நம்மை பண்படுத்தட்டும்.