மை வீக் வித் மரிலின்
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 4322
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
மை வீக் வித் மரிலின் - My Week with Marilyn
(பிரிட்டிஷ் திரைப்படம்)
2011ஆம் ஆண்டில் திரைக்கு வந்த பிரிட்டிஷ் திரைப்படம். 'My Week with Marilyn.' 101 நிமிடங்கள். ஓடக் கூடிய இந்தத் திரைப்படத்தை இயக்கியவர் Simon Curtis.
உலக புகழ் பெற்ற திரைப்பட நடிகை மரிலின் மன்றோவை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அருமையான திரைப்படம் இது. Colin Clark என்பவர் எழுதிய 'The Prince, The Showgirl and Me' என்ற நூலையும் 'My Week with Marilyn' என்ற நூலையும் அடிப்படையாக வைத்து இப்படத்திற்கான திரைக்கதையை மிகச் சிறப்பாக உருவாக்கியவர் Adrian Hodges.
படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்டாக அமைந்தது Ben Smithardஇன் ஒளிப்பதிவு.
மரிலின் மன்றோவாக படத்தில் உயிர்ப்புடன் வாழ்ந்து, நம்மை நூறு சதவிகிதம் ஆச்சரியத்தில் மூழ்கடித்தவர் Michelle Williams.
படம் முற்றிலும் முடிவடைந்தவுடன், முதல் முறையாக Newyork Film Festival இல் திரையிடப்பட்டது. அதற்குப் பிறகு Mill Valley Film Festivalஇல் திரையிடப்பட்டது.
அருமையான நடிப்பிற்காக Michelle Williamsக்கு Golden Globe Award for Best Actress in a Musical or Comedy Motion Picture என்ற பிரிவில் விருது வழங்கப்பட்டது. ஆஸ்கார் விருதுக்காகவும் (Academy Awards), British Academy Film Awardsக்காகவும் சிறந்த நடிகைக்கான விருதுக்காக Michelle Williamsஇன் பெயர் சிபாரிசு செய்யப்பட்டது.
நம் உள்ளங்களில் நீங்காத இடத்தைப் பிடித்து, இன்னும் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் 'My Week with Marilyn' படத்தின் கதை என்ன?
இதோ...
1956ஆம் ஆண்டு. பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பை முடித்து வெளியே வருகிறான் Colin Clark என்ற இளைஞன். அவனுடைய தந்தை, தாய் இருவரும் மரியாதைக்குரிய பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். திரைப்படத் துறையில் நுழைந்து, பிரகாசிக்க வேண்டும் என்பது அந்த இளைஞனின் தணியாத தாகம். எப்படியும் தன் திறமையால் ஏதாவதொரு வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற தளராத தன்னம்பிக்கையுடன் இருக்கிறான் அவன்.
அதைத் தொடர்ந்து அவன் லண்டனுக்குப் பயணமாகி வருகிறான். திரைப்பட நடிகர் Laurence Olivierக்குச் சொந்தமான திரைப்பட நிறுவனத்தில் வேலை ஏதாவது கிடைக்குமா என்று முயற்சி செய்து பார்க்கிறான். ஆரம்பத்தில் 'வேலை இல்லை' என்ற பதில் சொல்லப்படுகிறது. எனினும், விடாமல் தினமும் அந்த அலுவலகத்திற்கு அவன் வருகிறான். யாரும் கூறாமலே, அவன் அந்நிறுவனத்தின் தொலைபேசியை எடுத்து உரிமையுடன் பதில் கூறுகிறான். வேறு சில வேலைகளையும் யாரும் கூறாமல், அவனே செய்கிறான். அவனுடைய சுறுசுறுப்பையும், வேலை செய்யும் முறையையும் பார்த்த Olivierஇன் மனைவி, Vivien Leigh உடனடியாக அவனுக்கு வேலை போட்டுத் தரும்படி தன் கணவரிடம் கூறுகிறாள். யூனியன் எதிலும் உறுப்பினராக இல்லாமலிருக்கும் ஒருவனை அவ்வளவு சர்வ சாதாரணமாக வேலையில் வைத்துக் கொள்ள முடியாது. என்ன செய்வது என்று யோசித்த Olivier, தன்னுடைய மூன்றாவது உதவி இயக்குநராக காலினைச் சேர்த்துக் கொள்கிறார். அந்த மூன்றாவது உதவி இயக்குநர், சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. இயக்குநர் கூறக் கூடிய எந்த வேலையையும், அவன் செய்யலாம். வேலை தேடிய சில நாட்களிலேயே உதவி இயக்குநர் வேலை கிடைத்தது குறித்து காலினுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!
அதைவிட சந்தோஷம் தந்த விஷயம் என்னவென்றால், அவன் பணி புரியப் போகும் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? மரிலின் மன்றோ...! திரை அரங்குகளில் மக்களுக்கு மத்தியில் அமர்ந்து, அணிந்திருக்கும் ஆடைகள் காற்றில் உயர பறக்க தன் உடல் அழகு அத்தனையையும் வெளிப்படுத்தி படம் பார்ப்போரைக் கிறங்கடித்துக் கொண்டிருந்த, தன்னையும் காந்தமென சுண்டி இழுத்த அழகுப் பெட்டகம் மரிலின் மன்றோ நடிக்கும் படத்தில் பணி புரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றால், அது சாதாரண விஷயமா?
அவன் பணி புரியப் போகும் படத்தின் பெயர் 'The Prince and the Show girl'. ஹாலிவுட்டிலிருந்து அந்தப் படத்தில் நடிப்பதற்கென்றே லண்டனுக்கு வருகிறாள் மரிலின் மன்றோ. அவளுடன் சேர்ந்து வருபவர் அவளுடைய 'இப்போதைய' கணவரான Arthur Miller. அவர் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர். இங்க்லாண்டில் படப்பிடிப்பில் இருக்கும் நாட்களில் அவர்கள் இருவரும் தங்குவதற்கு ஒரு அருமையான இடம் வேண்டும். அதை ஏற்பாடு செய்து தரும் பொறுப்பு காலினிடம் ஒப்படைக்கப்படுகிறது. காலின் அதற்கான முயற்சியில் இறங்குகிறான். அதற்குள் அவன் பேசிய கட்டிடம் எது என்பதை லண்டனில் இருக்கும் பத்திரிகைகள் மோபப்பம் பிடித்து, 'மரிலின் மன்றோ தங்கப் போகும் இடம்' என்று புகைப்படத்துடன் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டு விடுகின்றன. ஆனால், அதற்கு முன்பு இன்னொரு பாதுகாப்பான கட்டிடத்தை, மரிலின் மன்றோவும் அவளுடைய கணவரும் தங்குவதற்கு பேசி முடித்து வைத்திருக்கிறான் Colin. அவனுடைய அந்தச் செயல் Olivierவுக்கும் மரிலினின் பி.ஆர்.ஓ. Arthur P.Jacobsக்கும் மிகவும் பிடித்துப் போகிறது.
மரிலின் எப்போது லண்டனுக்கு வரப் போகிறாள் என்ற விஷயம் லண்டனிலிருக்கும் பத்திரிகையாளர்களுக்குத் தெரிந்து விடுகிறது. அவர்கள் Heathrow விமான நிலையத்தில் குழுமி விடுகிறார்கள். மரிலின் தன் கணவர் Arthur Miller, பிஸினஸ் பார்ட்னரான Milton H.Greene, Acting coach ஆன Paula strasberg என்ற பெண் ஆகியோருடன் விமானத்திலிருந்து ஒய்யாரமாக இறங்குகிறாள். ஆரம்பத்தில் செய்தியாளர்களையும், புகைப்படக்காரர்களையும் பார்த்து ஒரு மாதிரி ஆன மரிலின், பத்திரிகையாளர் சந்திப்பின்போது மிகவும் இயல்பான முறையில் இருக்கிறாள். அவர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் சிரித்துக் கொண்டே பதில் கூறுகிறாள்.
படத்தின் இயக்குநரான Olivier தன் குழுவினருடன் மர்லினுக்காக காத்திருக்கிறார். மரிலின் மிகவும் தாமதமாக வருகிறாள். அதைப் பார்த்து வெறுப்படைகிறார் Olivier. படத்தில் வரும் வசனத்தைத் தப்புத் தப்பாக வாசிக்கிறாள் மரிலின். அதை எந்தவித உணர்ச்சியுமில்லாமல் பேசுகிறாள். வார்த்தைகளை உச்சரிப்பதில் சந்தேகம் வர, அவளுக்கு உதவுகிறாள் Paula என்ற அவளுடைய Acting Coach பெண். தனக்கு அருகில் Paula அமர வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருக்கிறாள் Marilyn. அவளையே மொத்த படப்பிடிப்பு குழுவும் வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருக்கிறது.