பாஷு, தி லிட்டில் ஸ்ட்ரேஞ்சர் - Page 4
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 4297
Nai உடல் நலம் பாதிக்கப்பட்டு, முனகிக் கொண்டிருக்க, வெளியே கிடக்கும் தகர டப்பாவை அடித்து, கடவுளிடம் அவளைக் காப்பாற்றும்படி அவன் வேண்டிக் கொள்கிறான். ஊரிலிருக்கும் ஆட்களிடம், அதைக் கூறுவதற்காக அவன் ஓடி வர, அவனைப் பார்த்து எல்லோரும் தங்களின் வீட்டு கதவுகளையும், சாளரங்களையும் மூடிக் கொள்கின்றனர். அந்த கிராமத்தைச் சேர்ந்த வைத்தியரை, வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வருகிறான் பாஷு. அவன் Naiக்கு அருகிலேயே இருந்து, அவள் குணமாகும் வரை பார்த்துக் கொள்கிறான்.
'நல்ல அறுவடை இருக்க வேண்டும்' என்று பாடியவாறு கிராமத்துச் சிறுவர்கள் ஆடுகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து Naiயின் பிள்ளைகளும், பாஷுவும். அப்போது பாஷுவை கிராமத்துச் சிறுவர்கள் அடித்து விடுகிறார்கள். அதைப் பார்த்து Nai வேகமாக ஓடி வந்து அந்தச் சிறுவர்களை அடித்து விரட்டுகிறாள். சிறிது நேரத்தில் - அந்தச் சிறுவர்களின் பெற்றோர்கள் அங்கு வந்து 'நீ எப்படி எங்களின் பிள்ளைகளை அடிக்கலாம்?' என்று கேட்கின்றனர்.
அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பாஷுவும் அந்தச் சிறுவர்களும் சற்று தூரத்தில் ஒன்றாகச் சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வைத்திருந்த ஒரு புத்தகத்தை எடுத்து 'ஈரான் நமது நாடு, நாம் அனைவரும் ஈரானின் குழந்தைகள்' என்று வாசிக்கிறான் பாஷு. அப்போதுதான் அவனுக்கு படிக்கவும் தெரியும் என்பதே எல்லோருக்கும் தெரிகிறது.
இதற்கிடையில் Naiயின் கணவனிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. அதில் 'வீட்டிற்கு வந்திருக்கும் சிறுவனை வீட்டில் வைத்திருக்காதே. அனுப்பி விடு' என்று அவன் எழுதியிருக்கிறான். அதைப் படித்து கவலைப்பட்ட Nai, அந்த கடிதத்தை ஒரு மறைவிடத்தில் வைக்கிறாள். அதைப் பார்த்து விட்ட பாஷு, அதை எடுத்து படித்து விடுகிறான். அதைத் தொடர்ந்து அவன் வீட்டை விட்டு வெளியேறி ஓடுகிறான். மழை பெய்கிறது. மின்னல் வெட்டுகிறது. சூறாவளி காற்று வீசுகிறது. இடி இடிக்கிறது. அவற்றைப் பொருட்படுத்தாமல், பாஷுவைப் பிடித்துக் கொண்டு வருகிறாள் Nai.
அத்துடன் நிற்காமல் 'பாஷு நம் வீட்டில்தான் இருப்பான். அவனை வெளியேற்ற முடியாது' என்று அவனை வைத்தே தன் கணவனுக்கு ஒரு கடிதத்தையும் எழுத வைக்கிறாள் Nai.
பாஷு சோளக் காட்டில் நின்று கொண்டிருக்கிறான். அப்போது அங்கு வரும் ஒரு மனிதன் பருகுவதற்கு நீர் கேட்கிறான். பாஷு தருகிறான். 'பறவைகளையும், மிருகங்களையும் விரட்டுவதற்கான இந்த பொம்மையைச் செய்தது யார்?' என்று அவன் கேட்க, 'நான்தான்' என்கிறான் பாஷு. 'நல்ல பையன்' என்று பாராட்டுகிறான் அந்த மனிதன்.
பாஷு வீட்டிற்கு வருகிறான். Naiயுடன் ஒரு மனிதன் கோபமாக பேசிக் கொண்டிருப்பதை பாஷு பார்க்கிறான். சிறிது நேரத்திற்கு முன்பு அவனைப் பாராட்டிய அதே மனிதன்தான். அவன்தான் Naiயின் கணவன். 'சிறுவனை வெளியேற்ற வேண்டும்' என்கிறான் அவன். 'முடியாது' என்கிறாள் Nai. பாஷு அருகில் சென்று, கை குலுக்குவதற்காக அந்த மனிதனின் கையைக் கேட்கிறான். அப்போதுதான் பாஷுவிற்கே தெரிகிறது- அவனுக்கு ஒரு கையே இல்லை. அடுத்த நிமிடம் - பாஷு பாசத்துடன் அவன் மீது சாய, அந்த மனிதன் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நிற்கிறான்.
சோளக் காட்டைத் தேடி பறவைகள் பறந்து வருகின்றன. கூச்சலிட்டுக் கொண்டும், தகர டப்பாக்களைத் தட்டிக் கொண்டும் Nai, அவளுடைய கணவன், அவர்களின் பிள்ளைகள் பாஷு எல்லோரும், அவற்றை விரட்டுவதற்காக வேகமாக ஓடுகிறார்கள். பாஷு அந்த குடும்பத்தில் ஒருவனாக- நிரந்தரமாக ஆகிவிட்டான் என்பதை நாம் உணர்ந்து கொள்கிறோம்.
அத்துடன் படம் முடிவடைகிறது.
Naiயாக Susan Taslimi
Bashuவாக Adnan Afravian
பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
மிகச் சிறந்த ஒரு திரைப்படத்தை இயக்கிய Bahram Beizaiக்கு -ஒரு பூச்செண்டு!