Category: சினிமா Published Date Written by சுரா Hits: 6284
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
எலிப்பத்தாயம்
(மலையாள திரைப்படம்)
இதற்கு மலையாளத்தில் ‘எலிப் பொறி’ என்று அர்த்தம். 1981ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்தப் படம் பல்வேறு திரைப்பட விழாக்களிலும் பங்கு பெற்று, விருதுகளை அள்ளிச் சென்றிருக்கிறது.
படத்தின் இயக்குநர் அடூர் கோபால கிருஷ்ணன். அவர் இயக்கிய படங்களிலேயே குறிப்பிடத்தக்க படமாக விமர்சகர்கள் கருதும் படம் இது.
கேரளத்தின் பழைய நிலப்பிரபுத்துவ வாழ்க்கையின் இப்போதைய நிலையை கண்ணாடியென காட்டும் படமிது. இந்தக் கதையின் நாயகனாக வரும் மனிதர் எலிப் பொறிக்குள் மாட்டிக் கொண்டிருக்கும் ஒரு எலியைப் போல இருக்கிறார். அவருக்கு வெளியே நடக்கும் மாறுதல்கள் எதுவும் தெரியவில்லை. அல்லது அந்த மாற்றங்களை அவர் பார்க்காமல் இருக்கிறார். இல்லாவிட்டால் பார்க்க மறுக்கிறார். அவர் அப்படி இருக்கிறார் என்பதற்காக வெளியே மாற்றங்கள் உண்டாகாமல் இருக்குமா?
ஒரு காலத்தில் அவர் இருக்கும் அந்த குடும்பமும், வீடும் அதிகாரம் படைத்ததாக இருந்திருக்கலாம். அதற்காக உலகில் எவ்வளவோ மாற்றங்கள் உண்டான பிறகும், அதே பழைய நினைப்புடனே இருந்தால் எப்படி?
அவர் அப்படித்தான் இருக்கிறார். பழைய ஜமீந்தார்தனங்களும், நிலப்பிரபுத்துவ வாழ்க்கையும் சரிவைச் சந்தித்து எவ்வளவோ வருடங்கள் ஆகி விட்டன. ஆனால், முன்பு செழிப்பாக இருந்து, இப்போது படிப்படியான வீழ்ச்சியைச் சந்தித்து, தகரும் நிலையில் இருக்கும் அந்த பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த நடுத்தர வயது மனிதரான உண்ணி இன்னும் அந்த பழைய கனவுகளுடனும், பழைய மிடுக்குடனும், பழைய அதிகார தோரணையுடனும் நாட்களை ஓட்டிக் கொண்டிருக்கிறார். பொறிக்குள் மாட்டிக் கொண்ட அவர், அதை விட்டு வெளியே வர மறுக்கிறார்.
எப்போதோ சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருந்தோம் என்பதற்காக, இப்போது வீழ்ச்சியடைந்து, தரையில் கிடக்கிற போதும் நாம் உயரத்தில் கம்பீரமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் என்ற நினைப்புடனேயே இருந்தால், அது சரியான செயலா?
அடூர் கோபால கிருஷ்ணன் தன்னுடைய குடும்பம் எந்த அளவிற்கு ஒரு வீழ்ச்சியைச் சந்தித்தது என்பதை நேரடியாக பார்த்தவர். அந்த உணர்வால் தூண்டப்பட்டுதான் இந்தப் படத்தையே அவர் எடுத்திருக்கிறார். வீழ்ச்சியடைந்து விட்ட, ஒரு பாரம்பரியக் குடும்பத்தில் சந்தோஷமும், குதூகலமும், உற்சாகமும், துள்ளலும் எப்படி இருக்கும்?
அதனால்தான் இந்த படத்தில் வரும் இல்லமும், அங்கு குடியிருக்கும் கதாபாத்திரங்களும் மிகவும் அமைதியான தன்மையில் இருப்பதாகவே காட்டப்படுகின்றனர். அப்படியே வாய் திறந்து பேசினாலும், குரல் பலமாக இருக்காது. மிகவும் மெலிந்து போயே இருக்கும். உண்ணியின் குரலும் அப்படித்தான் இருக்கிறது.
தன்னைப் பெரிதாக இன்னும் நினைத்துக் கொண்டு, உலகத்துடன் ஒத்துப் போகாமலோ அனுசரித்துப் போகாமலோ இருக்கிறார் உண்ணி. அதன் விளைவாக வெளியில் இருக்கும் மனிதர்களுக்கும் அவருக்குமிடையே எந்தவித உறவும் இல்லாமல் போகிறது. யாருடனும் பழகாமல், யாருடனும் பேசாமல் தனக்கென ஒரு உலகத்தை அமைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படி இருக்கும்? அவனுடைய உடல் நிலை எப்படி இருக்கும்? மனம் எப்படி இருக்கும்?
அத்தகைய நிலைக்குத்தான் உண்ணி ஆளாகிறார். எப்போது பார்த்தாலும் சோம்பேறித்தனத்துடனும், தூங்கிக் கொண்டும் இருக்கிறார் அவர். சாய்வு நாற்காலியில் கால்களை நீட்டி, பகல் நேரத்தில்கூட படுத்துக் கிடக்கும் அந்த மனிதரை யாருக்குப் பிடிக்கும்?
அவருடைய செயலற்ற நிலையால் அவருடைய குடும்பத்தில் உள்ளவர்கள் படும் பாடு…? வார்த்தைகளால் அதை விவரிக்க முடியாது.
உண்ணிக்குத்தான் குறிப்பிட்டுக் கூறுகிற மாதிரி ஒரு வாழ்க்கை அமையாமல் போய் விட்டது. ஆனால், அவருடைய மூன்று தங்கைகளின் நிலை? வெளியுலகத்துடன் தொடர்பு இல்லாமல் கற்பனை உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் அந்த அண்ணனால், அந்த அப்பிராணி தங்கைகள் அனுபவிக்கும் துயர வாழ்க்கைக்கு முடிவே இல்லை.
அந்த தங்கைகள் இல்லாமல் அவர் சிறிது கூட செயல்பட முடியாது.
மூத்த தங்கை ஜானம்மா எப்போதும் பச்சை நிறத்தில்தான் ஆடைகள் அணிந்திருப்பாள். அதன் மூலம் அவள் பூமியைப் பிரதிபலிக்கிறாள். நடைமுறை வாழ்க்கை, புத்திசாலித்தனம் ஆகியவற்றை அந்தக் கதாபாத்திரத்தின் மூலம் காட்ட நினைக்கிறார் அடூர் கோபால கிருஷ்ணன். அவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் அவள் திருமணம் செய்து கொண்டு, பிள்ளைகளுடன் இருக்கிறாள். குடும்பச் சொத்தைக் காப்பாற்றுவதிலும், தன் குடும்பத்திற்கு எப்படி உணவு அளிப்பது என்பதிலும் அவள் மிகுந்த கவனம் உள்ளவளாக இருக்கிறாள். பூர்வீகச் சொத்திலிருந்து தனக்குச் சேர வேண்டிய பங்கை எப்படி கேட்டு வாங்குவது என்பதில் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் அவள் இருக்கிறாள். தன்னைப் பற்றிய சிந்தனையுடனேயே இருக்கக் கூடியவள் அவள் என்பதாக அடூர் நமக்கு காட்டுகிறார்.
கடைசி சகோதரி ஸ்ரீதேவி எப்போதும் சிவப்பு நிறத்தில் ஆடைகள் அணிந்திருப்பாள். எதிர்ப்பு, புரட்சி, இளமை, வாழ்வு ஆகியவற்றை அதன் மூலம் அடூர் கோபால கிருஷ்ணன் காட்ட முயற்சிக்கிறார். அவள் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டவள். தான் எப்போதும் பிறரை ஈர்க்கும் வண்ணம் இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவள். அவள் குடும்பத்தில் நிலவும் சூழ்நிலை பிடிக்காமல், அங்கு தங்கியிருக்கும் இறுகிப் போன தன்மை பிடிக்காமல் தன்னைக் காதலிக்கும் ஒரு இளைஞனுடன் வீட்டை விட்டே ஓடிப் போகிறாள். தன் அண்ணன் ஒரு காலத்தில் அதிகாரம் படைத்த மனிதராக இருந்திருக்கலாம். அதற்காக வீழ்ச்சியடைந்து கிடக்கும் அந்த மனிதருக்காக தன்னுடைய காதலையும், ஆசைகளையும், கனவுகளையும் இழப்பதற்கு அவள் தயாராக இல்லை. காதலனுடன் ஓடிப் போன அவளுக்கு உண்டான அனுபவம்- அது வேறு கதை!