எலிப்பத்தாயம் - Page 2
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6347
இருவருக்கும் மத்தியில் இருக்கும் இரண்டாவது சகோதரி – ராஜம்மா. அவள் எப்போதும் நீல நிறத்தில்தான் ஆடைகள் அணிவாள். மென்மைத் தன்மையையும், அடிபணிதலையும், இருண்டு போன நிலையையும் காட்டுவதற்காக அவளுக்கு அந்த வர்ணத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் அடூர். எப்போதும் மவுனமாக இருந்து, செயல்படாமல் இருந்து அவளுடைய வாழ்க்கையையே குட்டிச் சுவராக்கி விடுகிறார் உண்ணி. அவள் திருமணம் செய்ய விரும்பும்போது, அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார் உண்ணி. தன் குடும்பத்தின் கவுரவத்திற்கு அதை மிகவும் குறைச்சலான விஷயம் என்று அவர் நினைக்கிறார். தன் அண்ணன் மீது கொண்ட பாசத்தாலும், மரியாதையாலும், மதிப்பாலும் தன் வாழ்க்கையை நரகமாக ஆக்கிக் கொள்கிறாள் ராஜம்மா. அண்ணனுக்கு சமைத்துப் போடுவது, அவருக்கு பணிவிடைகள் செய்வது, அவருடைய மனம் கவலைப்படாமல் பார்த்துக் கொள்வது- சொல்லப் போனால், ஒரு தியாக தீபமாக வாழ்கிறாள் ராஜம்மா. அதற்கு அந்த அண்ணன் செலுத்திய கைமாறு? அவள் உடல் நலம் பாதிக்கப்பட்டு, சாகும் நிலையில் படுத்த படுக்கையாக கிடக்கும்போது, தங்கையைக் காப்பாற்றுவதற்கு எந்தவித அக்கறையும் எடுக்காமல், வெறுமனே சோம்பேறித்தனமாக சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு பழைய பெருமைகளை அசை போட்டுக் கொண்டிருக்கிறார் அந்த ‘எலிப்பொறியில் மாட்டிக் கொண்டிருக்கும்’ மனிதர் உண்ணி!
உண்ணியின் கதாபாத்திரத்தை தனிப்பட்ட முறையிலும், மூன்று தங்கைகளின் மூலமாகவும் மிகவும் தெளிவாக நமக்கு காட்டுகிறார் அடூர் கோபால கிருஷ்ணன்.
படத்தைப் பார்த்து எவ்வளவோ வருடங்கள் ஆன பிறகும், என் மனதில் பசுமையாக நின்று கொண்டிருக்கும் சில காட்சிகள் :
1) உண்ணி சாய்வு நாற்காலியில் படுத்துக் கொண்டே, தன் தங்கை ராஜம்மாவிடம் குளிப்பதற்காக வெந்நீர் வைத்துத் தரச் சொல்லுவார். அவள் வெந்நீர் தயார் பண்ணி, வெளியே கொண்டு போய் வைப்பாள். நேரம் ஓடிக் கொண்டே இருக்கும். உண்ணி குளிப்பதைப் பற்றி நினைக்காமல், உடலில் எண்ணெய்யைத் தேய்த்துக் கொண்டு இடுப்பில் கட்டிய துண்டுடன் இப்படியும் அப்படியுமாக நிமிடக் கணக்கில் நடந்து கொண்டே இருப்பார். நீண்ட நேரத்திற்குப் பிறகு அவர் ‘ராஜம்மா, வெந்நீர் தயார் பண்ணியாச்சா?’ என்று கேட்பார். அதை எப்போதோ கொண்டு போய் வைத்து விட்டதாக கூறுவாள் அந்த அன்பு தங்கை. அவள் அருகில் போய் பாத்திரத்திற்குள் விரலை வைத்துப் பார்ப்பாள். நீர் குளிர்ந்து போய் விட்டிருக்கும். இனி இன்னொரு முறை அவள் விறகு அடுப்பில் வெந்நீர் தயார் பண்ண வேண்டும். அந்தப் பெண்ணின் துயரத்தை அந்த அண்ணன் என்று சொல்லிக் கொள்ளும் மனிதர் நினைத்தாரா?
2) உண்ணி வழக்கம்போல சாய்வு நாற்காலியில் படுத்துக் கிடப்பார். இரவு நேரம். வீட்டைச் சுற்றி தென்னை மரங்கள். தூரத்தில்… தென்னை மரத்தில் யாரோ ஏறும் சத்தம் கேட்கும். தங்கை வந்து அதை கூறுவாள். ஆனால், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், ‘யாரும் மரத்தில் ஏற மாட்டார்கள் உனக்கு வெறும் பிரமை’ என்று சர்வ சாதாரணமாக கூறிவிட்டு, மீண்டும் கண்ணயர்ந்து தூங்கி விடுவார். மறுநாள் காலையில் பார்த்தால் – இரவில் யாரோ தேங்காய்களை மரத்தின் மீது ஏறி பறித்து விட்டுச் சென்றிருப்பார்கள். இப்படியொரு ‘உதவாக்கரை’ அண்ணன் இருந்தால் இதுதான் நடக்கும்!
3) அந்த கிராமத்தில் நடைபெறும் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக நேரம் எடுத்து தன்னை தயார் பண்ணிக் கொண்டு, உண்ணி வீட்டை விட்டுக் கிளம்புவார். போகும் பாதையில் மழை நீர் தேங்கிக் கிடக்கும். சிறிய அளவில்தான். அதைப் பார்த்ததும், தயங்கிக் கொண்டு அவர் நின்று விடுவார். அதே நேரத்தில்- எதிரில்… அவர் இருக்கும் திசை நோக்கி ஒரு சிறுவன் தலையில் ஒரு சுமையை வைத்துக் கொண்டு, எந்தவித தயக்கமும் இல்லாமல் நீரில் கால் வைத்து, ஓசை உண்டாக்கியபடி நடந்து வந்து கொண்டிருப்பான். உண்ணி நீரையே தயக்கத்துடன் பார்த்து விட்டு, நிகழ்ச்சிக்கே செல்லாமல் திரும்பவும் தன் வீட்டை நோக்கி குடையுடன் திரும்பி நடப்பார்.
இப்படிப்பட்ட… யாருக்கும் பயன்படாத… வீட்டிற்கும், சொந்த சகோதரிகளுக்கும் பயன்படாத… உலகத்துடன் ஒத்துப் போகாத… யாருடனும் பழகாத ஒரு உயிர் உலகத்தில் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன?
ஊரே திரண்டு அவருக்கு எதிராக நிற்கிறது. அவரைத் தண்டிக்க அவர்கள் நினைக்கிறார்கள். யாருக்கும் பயன்படாத மனிதன், இல்லாதவனாகவே போகட்டுமே என்பது அவர்களுடைய தீர்மானம். அதற்காக அவர்கள் என்ன செய்கிறார்கள்?
அதுதான் ‘எலிப்பத்தாயம்’ படத்தின் ‘க்ளைமாக்ஸ்’.
உண்ணியாக கரமன ஜனார்த்தனன் நாயர் (பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்).
ராஜம்மாவாக – சாரதா (முத்திரை நடிப்பு!)
ஜானம்மாவாக ராஜம் கே.நாயர்.
ஸ்ரீதேவியாக ஜலஜா.
‘எலிப்பத்தாயம்’ மத்திய அரசாங்கத்தின் சிறந்த மலையாள படத்திற்கான விருதைப் பெற்றது. Best Audiographyக்கான விருதையும் அது பெற்றது.
பல திரைப்பட விழாக்களிலும் ‘எலிப்பத்தாயம்’ திரையிடப்பட்டிருக்கிறது. அவற்றில் ஒன்று 1982ஆம் ஆண்டில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழா. அதில் திரையிடப்பட்டு அனைவரின் பாராட்டையும் இப்படம் பெற்றது. அடூர் கோபால் கிருஷ்ணனை எல்லோரும் பாராட்டினர்.