கரையைத் தொடாத அலைகள்
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by sura
- Hits: 6258
பீம்சிங் போட்ட பாதையில் செஞ்சி கிருஷ்ணன் வாழ்ந்தார் !
சுரா
1982ஆம் ஆண்டு. அப்போதுதான் நான் படவுலகிற்குள் நுழைந்து பி.ஆர்.ஓ.வாக பணியாற்ற தொடங்கியிருந்தேன். விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த ‘சாதிக்கொரு நீதி’ என்ற படத்திற்கு முதல் முறையாக நான் பி.ஆர்.ஓ.வாக அமர்த்தப்பட்டேன். ஒரு நாள் காலையில் தி.நகரில் நான் தங்கியிருந்த அறையில் என் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, என்னைப் பார்க்க சைக்கிளில் ஒருவர் வந்திருந்தார். வயது சுமார் ஐம்பது இருக்கும். முதிர்ச்சியான தோற்றம். குள்ளமான உருவம். வழுக்கைத் தலை. பேன்ட், சட்டை அணிந்திருந்தார். அவரை இதற்கு முன்பு வேறு எங்கும் பார்த்ததாக எனக்கு நினைவு இல்லை.
‘என்னைப் பார்க்கவா வந்திருக்கீங்க? என்ன விஷயமா வந்திருக்கீங்க?’ என்று அவரைப் பார்த்து நான் கேட்டேன். அதற்கு அவர் ‘அண்ணே... என் பெயர் செஞ்சி கிருஷ்ணன். நான் ஒரு நடிகர். கடந்த 25 வருடங்களா நான் படங்கள்ல சின்னச் சின்ன வேடங்கள்ல நடிச்சிக்கிட்டு வர்றேன். நான் நடிச்ச படங்கள் நூற்றுக் கணக்குல திரைக்கு வந்திருக்கு. ‘பிலிமாலயா’ பத்திரிகையில நீங்க வேலை பார்க்குறதை அதுல வர்ற பேரை வச்சு தெரிஞ்சிக்கிட்டேன். பத்திரிகைக்காரங்கன்னா எனக்கு ரொம்பவும் பிடிக்கும். நானே நேர்ல போயி அவங்கக்கிட்ட நெருக்கமா ஒரு நட்பை உருவாக்கிக்கிடுவேன். இந்த சினிமாவுல யார் மேல வர்றதா இருந்தாலும், அவங்களுக்கு பத்திரிகையோட பலம் ரொம்ப ரொம்ப அவசியம். இத்தனை வருட என்னோட பட உலக அனுபவத்துல நான் உணர்ந்த விஷயம் இது. நீங்க பி.ஆர்.ஓ.வாகவும் இருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன். ‘கண்ணெதிரே தோன்றினாள்’ன்ற படத்துக்கு அசிஸ்டெண்ட் டைரக்டராகவும் இருப்பதாச் சொன்னாங்க. என்னை மாதிரியான ஒரு நடிகனுக்கு உங்கள மாதிரியான ஒருத்தரோட ஆதரவும், அரவணைப்பும் கட்டாயம் தேவைண்ணே. நீங்க அவசியம் இந்த சின்ன நடிகனுக்கு உதவி செஞ்சே ஆகணும்’ என்றார். முதல் சந்திப்பிலேயே மனம் திறந்து செஞ்சி கிருஷ்ணன் பேசிய முறை எனக்கு மிகவும் பிடித்தது பல பத்திரிகைகளில் பல வருடங்களாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் சீனியர்கள் பலரின் பெயரையும் அவர் கூறினார். அதிலிருந்து பத்திரிகையாளர்களிடம் நெருங்கிய உறவு வைத்திருக்கும் மனிதர் அவர் என்பதைப் புரிந்து கொண்டேன். பேசி முடித்தவுடன் என்னைக் கீழே இருந்த ‘பாரத்’ ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். இருவரும் தேநீர் பருகினோம். என்னைக் காசு கொடுக்க அவர் விடவேயில்லை. அவரே தன் கையிலிருந்து தேநீருக்கான காசைக் கொடுத்தார். ‘பத்திரிகைக்காரங்க யாராக இருந்தாலும் நான்தான்ணே டீக்கு காசு கொடுப்பேன். அதுல எனக்கு ஒரு ஆத்ம திருப்தி’ என்றார் செஞ்சி. அடுத்த நிமிடம் ‘அப்ப வர்றன்ணே... ஒண்ணும் அவசரம் இல்ல... மெதுவா எனக்கு ஏதாவது செஞ்சா போதும். ஆனா, செஞ்சி கிருஷ்ணன் என்ற இந்த சின்ன நடிகனை மறந்துடாதீங்க...’ என்று சொல்லியவாறு என்னிடமிருந்து அவர் விடைபெற்றார். அவர் சைக்கிளில் போவதையே பார்த்தவாறு நான் நின்றிருந்தேன்.
அந்தச் சந்திப்பிற்குப் பிறகு கட்டாயம் மாதம் ஒரு முறையாவது செஞ்சி கிருஷ்ணன் என்னைப் பார்க்காமல் இருக்க மாட்டார். காலை 7 மணிக்கு நெற்றியில் திருநீர் அணிந்த கோலத்துடன் வந்து நிற்பார். சில நேரங்களில் என்னைத் தூக்கத்தில் இருந்து கூட அவர் எழுப்பியதுண்டு. அவர் எப்போது வந்தாலும் நடப்பது தேநீர் பருகுவதும், பத்து நிமிட நேரம் ஏதாவது பேசிக் கொண்டிருப்பதும்தான். ‘அப்ப நான் வர்றேன்ணே... இன்னைக்கு ஷூட்டிங் எதுவும் இல்ல. அதான் பத்திரிகை நண்பர்களைப் பார்க்கலாம்னு கிளம்பிட்டேன். முதல்ல உங்களைத்தான் பார்க்க வந்தேன். இன்னும் மூணு பேரை பார்க்க திட்டம் போட்டிருக்கேன். பார்த்துட்டு மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போக சரியா இருக்கும்’ என்று கூறும் செஞ்சி அடுத்த நிமிடமே சிட்டென பறந்து விடுவார்.
ஆரம்பத்தில் சைக்கிளில் வந்த செஞ்சி கிருஷ்ணன் கொஞ்ச நாட்கள் கழித்து டி.வி.எஸ். 50யில் வர ஆரம்பித்தார். அவருக்கு நான் பி.ஆர்.ஓ.வாக வேலை செய்த சில படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தேன். அதற்காக எத்தனையோ முறை எனக்கு நன்றி சொல்லி இருக்கிறார் செஞ்சி. என்னிடம் கூறியதுடன் நிற்காமல், பார்ப்பவர்களிடமெல்லாம் ‘அண்ணன்தான் எனக்கு அந்த சான்ஸை வாங்கிக் கொடுத்தார். வாழ்க்கை முழுவதும் நான் அதை மறக்கவே மாட்டேன்’ என்று மனம் திறந்து செஞ்சி கூறுவார். இதை நானே பலமுறை கேட்டிருக்கிறேன்.
ஆரம்பத்தில் தனியாக என்னைப் பார்க்க வரும் செஞ்சி பின்னர் வேறு யாராவது இரண்டு நடிகர்களை தான் வரும்போது அழைத்துக் கொண்டு வருவார். நான் எந்த முகவரிக்கு மாறியிருந்தாலும், என்னைப் பார்க்காமல் இருக்க மாட்டார். ‘அண்ணே... இவர் திடீர் கன்னையா. அருமையான நடிகர். நிறைய நாடகங்கள்ல நடிச்சிருக்கார். எவ்வளவு பெரிய வசனம் கொடுத்தாலும் ஏ-ஒன்னா பேசி நடிப்பார். எந்தக் கேரக்டரை வேணும்னாலும் நம்பி கொடுக்கலாம். பிரமாதமா பண்ணுவார். இப்போ சில படங்கள்ல நல்ல கேரக்டர்கள் செஞ்சிக்கிட்டு இருக்கார். நீங்களும் உங்க சம்பந்தப்பட்ட படங்கள்ல ஏதாவது நல்ல கதாபாத்திரமா இவருக்கு வாங்கிக் கொடுங்க. இவர் பேரு ஈர்க்குச்சி பாபு. ஆள் ஒல்லியா ஈர்க்குச்சி மாதிரி இருக்குறதுனால இப்படியொரு பேரை வச்சிருக்கார். சொந்தத்துல கடை வச்சிருந்தார். வியாபாரம் சரியா நடக்காம கடையை மூட வேண்டியதாப் போச்சு. என்ன செய்றதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு உட்கார்ந்திருந்தார். ஏற்கெனவே நாடகங்கள்லயும், படங்கள்லயும் நடிச்சிக்கிட்டு இருந்த ஆளுதான். நான்தான் வற்புறுத்தி திரும்பவும் இவரை சினிமா பக்கம் இழுத்துட்டு வந்திருக்கேன். இவருக்கும் நீங்க அவசியம் ஏதாவது செய்யணும்ணே... எனக்குக் கூட மெதுவா செய்யுங்க. இவங்களுக்கு எவ்வளவு சீக்கிரம் சான்ஸ் வாங்கித் தர முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் செஞ்சீங்கன்னா, இவுங்க குடும்பம் நடத்த உதவினது மாதிரி இருக்கும்’ என்பார் செஞ்சி கிருஷ்ணன். உடனே பக்கத்தில் நின்றிருக்கும் திடீர் கன்னையாவும், ஈர்க்குச்சி பாபுவும் மரியாதையுடன் என்னைப் பார்த்து வணங்கி நிற்பார்கள். அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு எத்தனையோ முறை என்னிடம் வந்திருக்கிறார் செஞ்சி. சொல்லப் போனால்- அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் இல்லாமல் செஞ்சி என்னைப் பார்க்க வந்ததே இல்லை என்பதே உண்மை. சில நேரங்களில் பரஞ்ஜோதி என்ற நடிகரையும் செஞ்சி அழைத்துக் கொண்டு என்னிடம் வந்திருக்கிறார்.