கரையைத் தொடாத அலைகள் - Page 2
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by sura
- Hits: 6257
‘நடிப்பு இல்லாமல் வேறு ஏதாவது தொழில் உங்க கைவசம் இருக்கா?’ என்று ஒரு நாள் நான் செஞ்சி கிருஷ்ணனைப் பார்த்து கேட்டேன். அதற்கு அவர் ‘சினிமாவை மட்டும் நம்பி எப்படிண்ணே வாழ முடியும்? நான் அடிப்படையில் ஒரு டெயிலர்ணே. அதனால அமைந்தக் கரையில முரளி கிருஷ்ணா தியேட்டருக்கு எதிரில் சொந்தத்துல ‘சாந்தி டெயிலர்ஸ்’ன்ற பேர்ல ஒரு தையல் கடை வச்சிருக்கேன். சம்பளத்துக்கு ரெண்டு ஆளுங்களைப் போட்டிருக்கேன். நான் படப்பிடிப்பிற்குப் போகும் நேரத்துல அவங்க கடையைப் பார்த்துக்குவாங்க’ என்றார். சொன்னதுடன் நிற்காமல், ஒரு நாள் என்னைத் தன்னுடைய கடைக்கு வரும்படி கூறினார்.
அவர் வரச் சொன்னார் என்பதற்காக ஒருநாள் நான் அவரின் தையல் கடையைத் தேடிச் சென்றேன். நான் அங்கு போனபோது, வேலை செய்யும் ஆட்கள் மட்டும்தான் இருந்தார்கள். சிறிய கடைதான். பெண்களுக்கான துணிகளைத் தைக்கும் கடை என்பதைப் பார்த்தபோதே புரிந்து கொண்டேன். அங்கு வேலை செய்து கொண்டிருந்த நபர் என்னை சிறிது தூரம் அழைத்துக் கொண்டு போனார். இரண்டு நிமிடங்கள் நடந்து செல்லும் தூரத்தில் செஞ்சி கிருஷ்ணனின் வீடு இருந்தது. இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடம். கிட்டத்தட்ட பத்து வீடுகளைக் கட்டி செஞ்சி வாடகைக்கு விட்டிருந்தார். எல்லாமே சின்னச் சின்ன வீடுகள். ஒவ்வொரு மாதமும் நிரந்தரமாக ஒரு நல்ல தொகை வருவது மாதிரியான ஏற்பாடு. நல்ல விஷயம்தான் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டேன். நான் வீடு தேடி வந்தது குறித்து செஞ்சிக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. தன்னுடைய மனைவிக்கு என்னை அவர் அறிமுகப்படுத்தி வைத்தார். ‘இவர் நடிக்கிற படங்களை எல்லாம் நீங்க பாக்குறீங்களா?’ என்று கேட்டேன் நான். அதற்கு அந்த அம்மா ‘நானும் எத்தனையோ வருடங்களா பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன். இவர் எங்கேங்க பெரிய வேஷத்துல வர்றாரு? சின்னச் சின்ன வேஷங்கள்லயே வர்றாரு. நானும் ஏதாவது ஒரு படத்துலயாவது பெரிய வேஷத்துல வரமாட்டாரான்னு பார்க்குறேன். ஆனா, அப்படி ஒரு படம் வரவே மாட்டேங்குது. அப்பத்தான் பார்ப்போம் – அதுக்குள்ள காணாமப் போயிடுவாரு. நூற்றுக் கணக்குல படத்துல நடிச்சிருக்காரு. இருந்தும், என்னங்க பிரயோஜனம்? பக்கத்து வீட்டுக்காரங்கக்கிட்டகூட என் புருஷன் இப்படியொரு பெரிய வேஷத்துல வந்திருக்காருன்னு பெருமையா சொல்லிக்க முடியல. இப்பத்தான் ஒண்ணு ரெண்டு படங்கள்ல ஏதோ கொஞ்சம் பரவாயில்லாத வேஷங்கள்ல வர்றாரு. உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்காரு. நீங்க மனசு வச்சு இவருக்கு ஏதாவது வாங்கித் தரணும்.’ என்றார். ‘கட்டாயமா வாங்கித் தருவேன். இவரே டைரக்டர்களைப் பார்த்து சின்னதா ஏதாவது கொடுத்தா போதும்னுதானே சொல்றாரு? அவங்களைப் பார்த்து பெருசா கேரக்டர் கொடுங்கன்னு இவரே உரிமையுடன் கேட்க வேண்டியதுதானே!’ என்றேன் நான். அதற்கு செஞ்சி ‘பெருசா எதுவும் வேண்டாம்ணே. சின்னச் சின்னதா கடைசில சாகுற வரைக்கும் ஏதாவது கெடைச்சிக்கிட்டுருந்தாலே போதும்ணே’ என்றார்.
‘சரி... அது இருக்கட்டும். சினிமாவுல நடிச்சுக்கிட்டே தையல் கடையையும் நடந்தணும்ன்ற எண்ணம் எப்படி உங்களுக்கு வந்துச்சு?’ என்று நான் கேட்டேன் செஞ்சி கிருஷ்ணனிடம். அதற்கு அவர் ‘பீம்சிங் டைரக்ட் பண்ணின ‘பதிபக்தி’தான் நான் நடிச்ச முதல் படம். சிவாஜி கதாநாயகனாக நடிச்ச படம். 1960ஆம் வருடம் அது திரைக்கு வந்துச்சுன்னு நினைக்கிறேன். அந்தப் படத்தைத் தொடர்ந்து பீம்சிங் டைரக்ட் பண்ண எல்லாப் படங்கள்லயும் நான் இருப்பேன். அப்போ ஒரு நாள் பீம்சிங் என்கிட்ட சொன்னாரு’ சினிமாவை முழுக்க முழுக்க நம்பி இராதே. இது காலம் முழுவதும் ஒரு ஆளை வாழ வைக்கும்னு சொல்ல முடியாது. சில நேரங்கள்ல வாய்ப்பு இருக்கும். சில நேரங்கள்ல வாய்ப்பே கிடைக்காமல் போனாலும் போகும். அந்த மாதிரி நேரங்கள்ல நமக்குன்னு மாற்று ஏற்பாடு ஏதாவது இல்லாம இருந்துச்சுன்னா, என்ன பண்றதுன்னு தெரியாம கலங்கிப் போய் நின்னுடுவோம். அதுனால படங்கள்ல நடிக்க வாய்ப்பு கிடைக்குதோ இல்லியோ, உனக்குன்னு சொந்தத்துல ஒரு தொழில் வச்சுக்கோ. அது பாட்டுக்கு ஒரு ஓரத்துல நடந்துக்கிட்டு இருக்கட்டும். எப்பவுமே நமக்கு படங்கள்ல வாய்ப்பு கிடைச்சிக்கிட்டே இருக்கும்னு சொல்ல முடியாது. ஒரு வேளை வாய்ப்பே இல்லாம ஒரு நாள் ஆயிடுதுன்னு வச்சுக்கோ, அப்ப நம்ம கையில ஒரு தொழில் இருந்தா, நாம எதைப் பற்றியும் கவலைப் படணும்னு அவசியமே இல்ல. எந்தவித பிரச்னையும் இல்லாம குடும்பம் நடந்துக்கிட்டு இருக்கும். நான் சொன்னதை மனசுல வச்சுக்கிட்டு வாழ்க்கையில ரொம்பவும் கவனமா நடந்துக்கோ’ன்னு. அவர் அப்போ சொன்னதை நான் வேத வாக்கா எடுத்துக்கிட்டேன். யோசிச்சுப் பார்த்தப்போ நூற்றுக்கு நூறு அவர் சொல்றது சரின்னு பட்டது. அப்பத்தான் இந்த தையல் கடையை வைக்க ஆரம்பிச்சேன். நமக்கு படத்துல நடிக்கிறதுல ஒரு நாளு பணம் வரலாம். ஒரு நாளு வராமப் போகலாம். இந்தக் கடை இருக்குறதுனால எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்ல. சொல்லப் போனா- வீட்டுச் செலவுக்கு தினமும் இந்தத் தையல் கடையில இருந்துதான் காசு வருது. பல வருடங்களுக்கு முன்னாடியே பீம்சிங் எவ்வளவு புத்திசாலித்தனமான ஒரு ஐடியாவை எனக்கு சொல்லித் தந்திருக்காருன்றதை இப்போ யோசிச்சுப் பார்க்குறேன்’ என்று சொன்னார். பீம்சிங் மீது அவர் கொண்டிருந்த பக்தியை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
அதற்குப் பிறகும் கூட செஞ்சி வழக்கம்போல வந்து என்னைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தார். ஒருநாள் எதேச்சையாக ‘தினத்தந்தி’ நாளிதழைப் புரட்டினேன். அதில் இடம் பெற்றிருந்த ஒரு செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஹார்ட் அட்டாக்கில் வெளியூருக்குப் படப்பிடிப்பிற்காகச் சென்றிருந்த செஞ்சி கிருஷ்ணன் அங்கேயே மரணத்தைத் தழுவிய செய்தியே அது.
செஞ்சி கிருஷ்ணன் மரணமடைந்து எத்தனையோ வருடங்கள் கடந்தோடி விட்டன. இருப்பினும், என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு மனிதராகி விட்டார் அவர் என்பதே உண்மை.