கரையைத் தொடாத அலைகள் - Page 4
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by sura
- Hits: 6273
அந்தப் படத்திற்கு என்று அலுவலகம் எதுவும் போடவில்லை. தி.நகர் சுதாரா ஹோட்டலில் ஒரு அறை அதற்கென்று போடப்பட்டிருந்தது. அங்கேயே உசிலை சோமநாதன் இரவில் தங்கிக் கொள்வார். ஒரு வாரம் நடைபெற்ற படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட ஸ்டில்களை ஒரு ஆல்பமாக ஒட்டி அங்கு வைத்திருந்தனர். மீதி படப்பிடிப்பு நடத்துவதற்கான பணத்திற்காக தயாரிப்பாளர் சுந்தர்ராஜன் பல இடங்களிலும் அலைந்து கொண்டிருந்தார். உசிலை சோமநாதனும் அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். நேரம் கிடைக்கும்போது உசிலை சோமநாதனைப் பார்த்து விட்டு வரலாமே என்று நான் சுதாரா ஹோட்டலைத் தேடி போவேன்.
எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், எல்லாவற்றையும் கட்டி ஒரு மூலையில் போட்டு விட்டு கலகலவென்று என்னுடன் உசிலை சோமநாதன் பேசிக் கொண்டிருப்பார். கம்யூனிஸ்ட் கட்சியில் தான் செயல்பட்டதை என்னிடம் அவர் விளக்கி கூறுவார். தொடர்ந்து அவர் பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்பார்.
வாரம் ஒரு முறையாவது கட்டாயம் நான் உசிலை சோமநாதனைப் போய்ப் பார்ப்பேன். அவரிடம் பேசிக் கொண்டிருப்பதில் எனக்கென்னவோ ஒரு திருப்தி. இப்படி பல முறை அங்கு நான் போயிருக்கிறேன். எப்போது போனாலும் சிற்றுண்டியோ சாப்பாடோ வாங்கிக் கொடுக்காமல் அவர் என்னை விட மாட்டார்.
இப்படி ஒரு நாள் போனபோது மிகவும் அமைதியாக உசிலை சோமநாதன் உட்கார்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும் அவர் ‘நகரம் ரொம்பவும் கெட்டுப் போச்சுங்க. இங்கே எல்லாமே பாருங்க... சுயநலத்தை அடிப்படையா வச்சுத்தாங்க இருக்கு. கிராமங்கள்லதாங்க உண்மையான அன்பு, பாசம், மனிதாபிமானம் எல்லாம் இருக்கு. நகரத்துல சொல்லப் போனா சுத்தமான காற்று கூட இல்ல. எல்லாமே கெட்டுப் போச்சு. தண்ணி, காற்று இதுல எதுவாவது சுத்தமா இருக்கான்னு பாருங்க. நல்ல காற்று, சுத்தமான தண்ணீர், உண்மையான அன்பு எல்லாமே கிராமத்துலதாங்க இருக்கு. நானெல்லாம் கிராமத்தை விட்டு வந்து ரொம்ப வருஷங்களாச்சு. எவ்வளவு சீக்கிரம் நகரத்துல பணத்தைச் சம்பாதிக்கணுமோ, அவ்வளவு சீக்கிரம் பணத்தைச் சம்பாதிச்சிட்டு, ஊர்ல போயி செட்டிலாயிடணுங்க. கடைசி காலத்துல நம்ம உயிரு சொந்த ஊர்லதாங்க போகணும். இந்த போலி மனிதர்கள்கிட்ட இருந்து விலகி எவ்வளவு விரைவா உண்மை ஜனங்கள்கிட்ட போய்ச் சேரணுமோ, அவ்வளவு சீக்கிரமா போய்ச் சேரணுங்க...’ என்றார் கட்டிலில் அமர்ந்தவாறு. அவர் கூற்றில் உண்மை இருப்பதாகவே எனக்கும் பட்டது. ‘நீங்க சொல்றது சரிதான். உண்மையான மனிதாபிமானத்தையும், அன்பையும், பாசத்தையும் நகரத்து மக்கள்கிட்ட பார்க்க முடியவில்லைதான். ஒரு வகையில இதை நினைச்சுப் பாக்குறப்போ மனசுக்கு சங்கடமாத்தான் இருக்கு. ஏன் இந்த நகரத்து மனிதர்கள் இப்படி இருக்காங்களோ தெரியல...’ என்றேன் நான்.
உசிலை சோமநாதனின் படம் அதற்குப் பிறகு வளர்வதாகத் தெரியவில்லை. எப்போது போனாலும் வெறுமனே உசிலையுடன் பேசிக் கொண்டிருப்பேன். ‘சீக்கிரம் ஃபைனான்ஸ் ரெடியாயிடும். நான்கைந்து இடங்கள்ல பேசியிருக்கு. பணம் கைக்கு வந்தவுடன், படத்தை ஆரம்பிச்சிட வேண்டியதுதான். இன்னொரு பிரமாதமான கதை என்கிட்ட இருக்கு. இந்தப் படம் முடிவடைஞ்சவுடனே, அதை ஒரே ஷெட்யூல்ல முடிச்சிடணும்னு நினைச்சிருக்கேங்க’ என்பார் உசிலை சோமநாதன். அவரின் மன ஆர்வத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணம் கிடைத்தால்தானே, படம் வளர முடியும்?
அதற்குப் பிறகு நான் சில பட வேலைகளில் மிகவும் பிஸியாகி விட்டதால் தி.நகர் பக்கமே என்னால போக முடியவில்லை. ஐந்து மாதங்கள் படு வேகமாகக் கடந்தோடி விட்டன. ஒரு நாள் என்னைப் பார்க்க நடிகர் ஒருவர் வந்தார். அவர் உசிலை சோமநாதனுக்கும் நன்கு தெரிந்தவர். அவரைப் பார்த்து ‘உசிலை சோமநாதன் எப்படி இருக்கார்? அவரைப் பார்த்து ரொம்ப நாளாச்சு’ என்றேன் நான். அதற்கு அவர் ‘உங்களுக்கு விஷயமே தெரியாதா? அவர் இறந்து மூணு மாசமாச்சு. ஹார்ட் அட்டாக்’ என்றார். நான் ஒரு நிமிடம் ஆடிப் போனேன். நான் உயிருக்குயிராக நேசித்த – பெரிதும் மதித்த உசிலை சோமநாதன் இறந்து விட்டாரா? என்னால் நம்பவே முடியவில்லை.
மனைவி, குழந்தைகளை உசிலம்பட்டியில் பல வருடங்களுக்கு முன்பே விட்டுவிட்டு கலைத் துறையைத் தேடி சென்னைக்கு வந்து, இங்கும் பெரிதாக ஒன்றும் சாதிக்காமல் திடீரென்று ஒருநாள் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போன உசிலை சோமநாதனை நினைத்துப் பார்த்தபோது, மனதிற்கு மிகவும் வேதனையாக இருந்தது. அவர் அடிக்கடி ‘நகரம் ரொம்பவும் கெட்டுப் போச்சுங்க. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சொந்த ஊருக்குப் போயி செட்டிலாகணுங்க’ என்று கூறுவார். அவரின் விருப்பப்படியே சீக்கிரமாகவே கிராமத்தைத் தேடி அவர் போய் சேர்ந்தார்- உயிரற்ற உடலுடன்.
தொடரும்...