கரையைத் தொடாத அலைகள் - Page 3
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by sura
- Hits: 6257
குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்தவர், இறுதியில் நம்மை அழ வைத்தார் !
சுரா
தி.நகர் பஸ் நிலையத்திற்கு அருகில் சுதாரா ஹோட்டலை ஒட்டி இருக்கும் மகாலட்சுமி தெரு. அங்குள்ள ஒரு வீட்டின் கார் ஷெட். தகரத்தால் ஆனது. அங்கு இருந்தவை ஒரு பெஞ்ச்... பழைய ஒரு சூட்கேஸ்.... சில துணிமணிகள்... அவ்வளவுதான். அங்குதான் நான் 25 வருடங்களுக்கு முன்பு கதாசிரியர் உசிலை சோமநாதனைப் பார்த்தேன்.
அவருக்கு அப்போது வயது அறுபது இருக்கும். குள்ளமான உருவம். முதுமை தெரியும் உடம்பு. வழுக்கைத் தலை. அவற்றில் ஆங்காங்கே கொஞ்சம் முடிகள். சின்ன தலை. மீசை இல்லாத முகம். கண்களில் கண்ணாடி. மேற்சட்டை அணியாமல் பழைய ஒரு கைலியைக் கட்டிய கோலத்தில் என்னை வரவேற்றார் உசிலை. ‘வாங்க சுரா... உங்களுக்காகத்தான் நான் காத்திருக்கேன்’ என்றார். ‘உங்களைப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, பார்த்தது இல்ல... சினிமாவுல சீனியரா இருக்குறவங்க பலரும் உங்களைப் பற்றி என்கிட்ட ஏராளமா சொல்லி இருக்காங்க. இராம.நாராயணன் டைரக்ட் செஞ்ச ‘மன்மத ராஜாக்கள்’ படத்தைப் பார்த்தேன். படம் கலகலப்பா போச்சு. அப்போ என் பக்கத்துல உட்கார்ந்திருந்த சினிமா நண்பர் ஒருவர் சொன்னாரு ‘இந்தப் படம் பல வருஷங்களுக்கு முன்னாடி வந்த ‘சாது மிரண்டால்’ படத்தோட கார்பன் காப்பி. காட்சிக்குக் காட்சி இராம.நாராயணன் அப்படியே திருடியிருக்கார். அது உசிலை சோமநாதன் எழுதின கதை’ன்னார். அப்பவே உங்க மேல எனக்கு பெரிய மரியாதை உண்டாயிடுச்சு. கருப்பு – வெள்ளை படங்கள் எடுக்கப்படுற காலத்துல இப்படியொரு கற்பனையா என்று ஆச்சரியப்பட்டேன். நானே உங்களைப் பார்க்கணும்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். இப்போ இயற்கையே அப்படியொரு வாய்ப்பை உண்டாக்கிக் கொடுத்திருக்கு’ என்றேன் நான் உசிலை சோமநாதனைப் பார்த்து.
அப்போது அவர் ஒரு புராணப் படத்தை இயக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அந்தப் படத்தின் பெயர் எனக்கு இப்போது ஞாபகத்தில் இல்லை. பாக்யராஜை வைத்து ‘பாமா ருக்மணி’ என்ற படத்தைத் தயாரித்த சுந்தர்ராஜன் என்பவர்தான் அப்படத்தின் தயாரிப்பாளர். குன்னக்குடி வைத்தியநாதனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருந்தார்கள். அந்தப் படத்திற்கு பி.ஆர்.ஓ.வாக வேலை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் என்னை உசிலை சோமநாதன் வரச் செய்திருந்தார். அதற்கு முன்பு அவரை நான் பார்த்ததில்லை. என்னையும் அவர் பார்த்ததில்லை. யாரோ என் பெயரை அவரிடம் கூறியிருக்கிறார்கள். அதை வைத்து என்னைத் தன்னுடைய படத்திற்கு மக்கள் தொடர்பாளராகப் போடலாம் என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கிறார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த உசிலை சோமநாதன் எத்தனையோ வருடங்களுக்கு முன்பே படவுலகைத் தேடி வந்து விட்டார். பல்வகை துறைகளிலும் கால் வைத்த மனிதர் என்பது அவரின் பேச்சிலேயே தெரிந்தது.
‘நான் ஆரம்ப காலத்துல இருந்தே கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவன்க. ஊர் ஊரா போயி நாடகங்கள் போட்டிருக்கோம். கட்சிக்காக தமிழ்நாடு முழுவதும் போயி பிரச்சாரம் பண்ணியிருக்கோம். நான் எழுதின நாடகங்களுக்கு பாவலர் வரதராஜன் இசையமைச்சிருக்காரு. அப்பவே இளையராஜா, ஆர்.டி. பாஸ்கர், கங்கை அமரன் எல்லாரையும் எனக்கு நல்லாவே தெரியும். அவுங்களும் என் மேல ரொம்பவும் பிரியமா இருப்பாங்க. எல்லாரும் ஒரே ஏரியாக்காரங்கதானே? கம்யூனிஸ்ட் கட்சியோட கொள்கைகளைப் பரப்புவதுக்காக கல்கத்தா வரை போயிருக்கேங்க. எனக்குத் தெரியாத தோழர்களே கம்யூனிஸ்ட் கட்சியில இல்லைன்னு வச்சுக்கங்களேன். தோப்பில் பாஸி எனக்கு நல்லா தெரிஞ்சவரு. சினிமா உலகத்துல பல உருப்படியான காரியங்களைச் செய்யலாம்னுதான் உசிலம்பட்டியை விட்டு சென்னைக்கே புறப்பட்டு வந்தேன். பி.எஸ். வீரப்பா சொந்தத்துல தயாரிச்ச பல படங்களுக்கு நான் கதை – வசனம் எழுதினேன் – சோப்பு சீப்பு கண்ணாடி, பொண்ணு மாப்ளே ஆகிய படங்கள் ரொம்ப நல்ல ஓடுச்சி. ‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’ படத்துக்குக் கதை வசனம் எழுதினேன். 1967ஆம் வருஷம் படம் ரிலீஸாச்சு. படம் பிரமாதமா ஓடுச்சு. இப்படிக் கூட ஒரு நகைச்சுவைப் படம் எடுக்கலாம்னு படவுலகத்திற்கு நான் காட்டினேன். இன்னைக்கு வரைக்கும் அந்த மாதிரி ஒரு காமெடி படம் வந்திருக்குமான்னு சந்தேகம்தான். என்னென்னமோ பண்ணணும்னு நான் நினைச்சேங்க. ஆனா, ஓரளவுக்குத்தான் இங்க மனசுல நினைச்சதைச் செய்ய முடிஞ்சது. இதுவரை செய்ததுல எனக்கு திருப்தி இல்ல. எல்லாருக்கும் தெரியிற மாதிரி பேரு வாங்கியாச்சு. ஆனா, பணம் சம்பாதிக்கல. இந்த உலகத்துல பணம் சம்பாதிச்சாத்தாங்க எல்லாரும் மதிக்கிறாங்க. வெறும் திறமைக்கு இங்க என்னங்க மரியாதை இருக்கு? பணம் இருந்தால், அவன் வேற எந்தத் தகுதியுமே இல்லாதவனா இருந்தாக் கூட இந்த உலகம் கை கட்டி நிக்குது. அதுனால பணத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சம்பாதிக்கணும்ன்ற முடிவுக்கு நான் வந்திருக்கேன். வீட்ல இருக்குறவங்கள பிரிஞ்சு வந்து எத்தனையோ வருஷங்களாச்சு. மனைவி, குழந்தைங்க யாருக்கும் முறைப்படி என்னோட கடமைகளைச் செய்யல. பணம் சம்பாதிக்கணும்ன்றதுக்காகத்தான் இந்தப் படத்தையே நான் டைரக்ட் பண்றேன். தொடர்ந்து அடுத்தடுத்து படங்களைப் பண்ணுவேன். பணம் சம்பாதிப்பேன். நீங்க பக்கத்துலேயே இருந்து பார்க்கத்தானே போறீங்க- நான் சொன்னது மாதிரி நடக்குதா இல்லையான்னு’ என்றார் உசிலை சோமநாதன் தன்னுடைய மனதில் இருக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தும் விதத்தில். எப்போதும் அவர் சிரித்த முகத்துடன் பேசுவார். அனேகமாக செயற்கை பல் செட் கட்டியிருப்பார் என்று நினைக்கிறேன். பற்கள் பேசும்போது வரிசையாக தெரியும்.
எங்களின் முதல் சந்திப்பிற்கு ஒரு வாரம் கழித்து சம்பந்தப்பட்ட படத்தின் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து படப்பிடிப்பும். அருணாசலம் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடக்க எஸ்.எஸ். சந்திரனும் கோவை சரளாவும் முதல் நாள் நடித்தார்கள். காமெடி காட்சி. படப்பிடிப்பு பார்த்துக் கொண்டிருக்கும்போதே உசிலை சோமநாதனின் வசனத்தைக் கேட்டு நமக்கு சிரிப்பு வந்தது. அந்தக் காலத்தில் ‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’ படத்தில் எந்த அளவிற்கு உசிலை சோமநாதன் முத்திரை பதித்திருப்பார் என்பதைப் பார்த்தபோதே என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
ஒரு வார காலம் அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தினமும் நான் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குச் செல்வேன். எப்போது பார்த்தாலும் ஏதாவது சாப்பிடச் சொல்லி வற்புறுத்தி தன்னுடைய அன்புப் பிடியில் நம்மைத் திக்குமுக்காட வைப்பார் உசிலை.