சத்யஜித் ரே - Page 2
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by sura
- Hits: 5795
மற்ற மனிதர்களிலிருந்து வேறுபட்டு இப்படித்தான் தன்னை செதுக்கிக் கொண்டிருந்தார் சத்யஜித் ரே. அவர் என்ன செய்தாலும், என்ன புகழை அவர் பெற்றிருந்தாலும் அவருடைய கால் பாதங்கள் உண்மையான உலகத்தில் மிகவும் உறுதியாக ஊன்றி நின்றிருந்தன. அவர் சிரித்தார், தமாஷ்கள் கூறினார், மற்றவர்களுடன் தன்னுடைய கருத்துக்களைப் பரிமாறினார், தான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கூர்ந்து கேட்கவும் செய்தார். படப்பிடிப்பு ஆரம்பமாகி விட்டால், அவருடைய குழுவில் இருக்கும் ஒவ்வொருவரும் அதே மரியாதையுடனும், பாசத்துடனும், நன்றியுடனும் நடத்தப்பட்டார்கள் – அது ஒரு ஆறு வயது குழந்தையாக இருந்தாலும், ஒரு எண்பத்து இரண்டு வயது பெண்ணாக இருந்தாலும்.
அவரைப் பற்றி கேள்விப்பட்டவர்கள் அல்லது அவருடைய வேலை செய்யும் முறையையும், உத்தியையும் பற்றி தெரிந்திருந்தவர்கள் அவரின் தலைமைப் பண்பு கொண்ட பணியைப் பற்றிய தங்களுடைய கருத்துக்களைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். எனினும், எந்தச் சமயத்திலும் பதில்களே கிடைத்திராத சில கேள்விகள் இருக்கத்தான் செய்கின்றன. அவை : அவர் அதை எப்படிச் செய்தார்? முன்னோக்கி அவரை செயல்பட வைத்த சக்தி எது? அவருக்கென்று இருந்த பார்வையைத் தந்தது எது?
இந்தக் கேள்விகளுக்கான பாதி பதிலைப் பெற வேண்டுமென்றால் கூட, ரேயின் குடும்பப் பின்னணியைப் பற்றி அவசியம் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப் போனால்- அவர் பிறப்பதற்கு எத்தனையோ வருடங்களுக்கு முன்பே சத்யஜித் ரேயின் கதை ஆரம்பமாகி விட்டது.
1880ஆம் ஆண்டில் மாஸுவா என்று அழைக்கப்பட்ட ஒரு சிறிய கிராமத்திலிருந்து (இப்போது அது வங்காள தேசத்தில் இருக்கிறது) கல்கத்தாவிற்கு ஒரு இளைஞர் வந்தார். அவருடைய பெயர் உபேந்திரகிஷோர் ரே சவுதரி. பண வசதிகளுக்கு நிகராக கல்வியும் சேர்ந்தே போய்க் கொண்டிருந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவர் அவர். அவருடைய முன்னோர்கள் நிலக்கிழார்களாக இருந்தவர்கள். ஆனால், உபேந்திர கிஷோரோ அறிவைத் தேடிப் பெறுவதில் அதிகமான நாட்டம் கொண்டவராக இருந்தார். அவர் ஒரு மிகச் சிறந்த ஓவியராக இருந்தார். இசையில் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. கல்கத்தாவில் படிப்பதற்கு ஒரு ஸ்காலர்ஷிப்பை அவர் பெற்றிருந்தார். அதைத் தொடர்ந்து பிரஸிடென்ஸி கல்லூரிக்குச் சென்ற அவர், 1884ஆம் ஆண்டில் ஒரு பட்டதாரியாக ஆனார்.
அந்தச் சமயத்தில் கல்கத்தாவில் ஒரு மிகப் பெரிய சமூக மாற்றம் உண்டாகிக் கொண்டிருந்தது. வங்காள ஹிந்துக்களின் ஒரு குறிப்பிட்ட குழுவினரை மேற்கத்திய கலாச்சாரம் மிகவும் ஆழமாக பாதிக்க, அதன் விளைவாக அவர்கள் தங்களுடைய பழமையான, கறாரான கொள்கைகளைக் கொண்ட மதத்திலிருந்து விலகி, ப்ரமோ சமாஜ் என்ற மதத்தை உருவாக்கினார்கள். ஹிந்துக்களிடமிருந்து இரண்டு முக்கியமான விஷயங்கள் ப்ரமோக்களை வேறுபடுத்தின. ஒன்று – ஒரே கடவுள் என்ற கொள்கை. இன்னொன்று – ஆண், பெண் என்ற இருபாலருக்கும் கல்வி விஷயத்தில் இருந்த சுதந்திரம்.
கல்கத்தாவிற்கு வந்தபோதே, உபேந்திர கிஷோருக்கு ப்ரமோக்களின் கொள்கைகளின் மீது ஒரு ஈடுபாடு இருந்தது. பல முன்னணி ப்ரமோ மனிதர்களை அவர் சந்தித்தார். அவர்களில் ஒருவர் துவாரகநாத் கங்குலி. எதையும் மறைக்காமல் வெளிப்படையாகப் பேசக் கூடிய மனிதர் என்ற அளவில் அவருக்கு ஒரு பெயர் இருந்தது. ஒருமுறை – பெண்களுக்கு கல்வி கற்கும் விஷயத்தில் ப்ரமோக்களுக்கு இருக்கும் விருப்பத்தைப் பற்றி ஒரு பழமை கொள்கை கொண்ட ஹிந்து மத பத்திரிகை தாங்கிக் கொள்ள முடியாத, கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தது. அதிகமான கோபத்திற்கு ஆளான துவாரகநாத் கங்குலி அந்த வரிகள் இருந்த பேப்பரை தனியாக வெட்டி எடுத்து, அந்த துண்டு பேப்பரை தன்னுடைய பாக்கெட்டிற்குள் வைத்துக் கொண்டு, ஒரு பெரிய வாக்கிங் ஸ்டிக்கைப் பற்றிக் கொண்டே, அந்த பத்திரிகையின் ஆசிரியரைப் பார்ப்பதற்காகச் சென்றார்.
‘இந்த குறிப்புகளை நீங்கள்தான் எழுதினீர்களா?’ – அவர் ஆசிரியரைப் பார்த்து கேட்டார்.
‘ஆமாம்... அதனால் என்ன?’ – ஆசிரியர் திரும்ப கேட்டார்.
‘இதுதான் அதற்கு பதில்...’ – கங்குலி மிகவும் அமைதியாக பதில் கூறினார்: ‘உங்களுடைய வார்த்தைகளை உங்களையே சாப்பிட வைப்பதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன். வாங்க... இவற்றைத் தின்னுங்க...’ இவ்வாறு கூறிக் கொண்டே அவர் அந்த துண்டுத் தாளை ஒரு பந்தைப் போல சுருட்டி, ஆசிரியரிடம் கொடுத்தார். சிறிது நேரம் அங்கேயே வாக்கிங் ஸ்டிக்கைப் பிடித்துக் கொண்டு, அந்த மனிதர் உண்மையாகவே அந்தத் தாளை மென்று விழுங்கி, ஒரு குவளையில் நீர் பருகுவது வரை அவர் நின்றிருந்தார். ‘நாளைக்கே இந்த வார்த்தைகளை நீங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லையென்றால், நான் மீண்டும் வருவேன்’- அந்த இடத்தை விட்டு நகர்வதற்கு முன்னால் கங்குலி எச்சரித்தார். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதைப் பற்றி கூறவே வேண்டாம், அவர் என்ன சொன்னாரோ, அதன்படி அந்த ஆசிரியர் நடந்தார்.
துவாரகநாத் கங்குலியால் உபேந்திர கிஷோர் மிகவும் கவரப்பட்டதற்குக் காரணம் என்ன என்பதைக் கூறுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியதில்லை. காலப் போக்கில், அவரே ஒரு ப்ரம்மோவாக மாறி, துவாரகநாத்தின் மகள் பிதுமுகியை திருமணம் செய்து கொண்டார். 1887ஆம் ஆண்டில், அவர்களுக்கு முதல் மகன் பிறந்தான். அவனுக்கு அவர்கள் சுகுமார் என்று பெயர் வைத்தார்கள்.
காலக் கொடுமை என்றுதான் சொல்ல வேண்டும் – பிரம்மோயிசத்திற்கு மாறியதன் காரணமாக அவருடைய தந்தைக்கும் (அவர் ஹிந்து மதத்தின் தீவிர ஆதரவாளர்) உபேந்திர கிஷோருக்குமிடையே ஒரு விரிசல் உண்டானது. உபேந்திர கிஷோர் மாஸுவாவிற்கு திரும்பி வரக் கூடாது என்று முடிவு செய்தார். அதைத் தொடர்ந்து தன்னுடைய பெயருடன் சேர்ந்து இருந்த, தான் நிலச்சுவாந்தார்களின் குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதைக் குறிப்பிடும் ‘சவுதரி’ என்ற பதத்தை அவர் நீக்கினார்.
நடைபெற்றுக் கொண்டிருந்த சம்பவங்களைத் தொடர்ந்து கல்கத்தாவிலிலேயே இருப்பது என்று அந்தச் சமயத்தில் உபேந்திர கிஷோர் எடுத்த முடிவு ஒரு சிறந்த முடிவாக இருந்தது. அந்த நகரத்திலேயே வாழ்ந்ததால், அவருடைய எல்லா திறமைகளும், அனைத்து அறிவுகளும் நல்ல முறையில் செயலாக்கம் பெற்றுக் கொண்டிருந்தன. உபேந்திர கிஷோர் எழுதினார், வரைந்தார்... வெகு சீக்கிரமே தான் ஒரு இசை கலைஞர் என்பதையும் நிறுவினார். அவர் வயலின் இசைத்தார், பக்காவாஜ், புல்லாங்குழல் ஆகியவற்றையும் இசைத்தார். அவரால் இயற்றப்பட்டு, இசையமைக்கப்பட்ட பல பாடல்கள் இன்றும் ப்ரமோக்களாலும் ஹிந்துக்களாலும் ஒரே மாதிரி பாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.