சத்யஜித் ரே
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by sura
- Hits: 5794
1
குடும்பம்
1934ஆம் ஆண்டு. கல்கத்தாவிலிருந்த பாலிகஞ்ச் அரசாங்க உயர்நிலைப் பள்ளி தன்னுடைய வருடாந்திர பரிசு அளிக்கும் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தது. அந்த விழாவிற்காக எப்போதும் செய்யக் கூடிய வழக்கமான கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் ‘இசை - ஓவியம்’ என்றொரு வித்தியாசமான நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தார்கள். ஒரு சிறுவன் ஒரு குறிப்பிட்ட காட்சியை விளக்கி, ஒரு பாடலைப் பாடுவான். இன்னொரு சிறுவன் அந்த காட்சியை மிகவும் வேகமாக அந்த பாடலைப் பாடிக் கொண்டிருக்கும்போதே, ஓவியமாக வரைவான். இதுதான் அந்த நிகழ்ச்சி.
படம் வரைவது என்பது ஒவ்வொரு வருடமும் நடந்து கொண்டிருந்த ஒன்றுதான். ஆனால், அந்த வருடம் ஒரு பிரச்னை உண்டானது. காட்சியைப் படமாக எப்போதும் வரையக் கூடிய சிறுவன் பள்ளிக்கூட கல்வியை முடித்து விட்டான். அவனுக்கு மாற்றாக வேறொரு மாணவனைக் கண்டு பிடிக்க வேண்டும். அந்த விஷயத்தை பிரச்னைக்குரிய ஒன்றாக ஓவிய ஆசிரியர் நினைக்கவில்லை. தன்னை மிகவும் கவரும் அளவிற்கு அருமையாக படங்கள் வரையக் கூடிய ஒரு திறமை வாய்ந்த சிறுவனை அவருக்குத் தெரியும். ஆனால், அதற்காக அணுகியபோது, அந்தச் சிறுவன் மேடைக்குச் சென்று படம் வரைவதற்கு அப்போது மறுத்து விட்டான். ஒரு மிகப் பெரிய கூட்டத்திற்கு முன்னால் நின்று கொண்டிருப்பது என்ற விஷயமும், எல்லோருடைய கவனமும் குவிந்திருக்கக் கூடிய மையப் புள்ளியாக இருப்போம் என்ற விஷயமும் அவனை அதைச் செய்ய தடுத்தன. இதில் மோசமான விஷயம் என்னவென்றால், அவன் சில பரிசுகளைப் பெற்றிருந்தான். அவற்றைப் பெறுவதற்காக அவன் மேடைக்குச் செல்ல வேண்டியதிருந்தது. அதைத் தாண்டி ஒரு நிமிடம் கூட செலவழிப்பதற்கு அவன் தயாராக இல்லை.
ஏமாற்றமடைந்த ஓவிய ஆசிரியர் வேறொரு சிறுவனைத் தேட வேண்டியதிருந்தது. ஆனால், அவன் முன்பு பார்த்த மாணவன் அளவிற்கு திறமை கொண்டவனாக இல்லை.
அந்த கூச்ச சுபாவம் கொண்ட, தன்னை நன்கு புரிந்து வைத்திருந்த சிறுவனுக்கு அப்போது பதின்மூன்று வயது. அவன் பெயர் சத்யஜித். ஒருகாலத்தில் தன்னுடைய வாழ்வின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை மிகப் பெரிய மக்கள் கூட்டங்களுக்கு மத்தியில் தான் செலவிட வேண்டியதிருக்கும் என்பதையோ விருதுகளை வாங்க வேண்டியதிருக்கும் என்பதையோ, ஃப்ரான்ஸின் மிக உயர்ந்த ‘லீஜியன் டி ஹானியர்’ விருதினை தான் வாங்க வேண்டியதிருக்கும் என்பதையோ, வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கார் விருதைப் பெறுவோம் என்பதையோ அவன் அந்தச் சமயத்தில் சிறிது கூட நினைக்கவில்லை.
தன்னுடைய வாழ்நாளில், வெவ்வேறு மூலைகளிலிருந்தும் சத்யஜித் ரே ஏராளமான பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் வாங்கிக் கொண்டிருந்தார். இருப்பினும், உலக திரைப்பட வரை படத்தில் இந்திய திரைப் படங்களை இடம் பெறச் செய்த முதல் மனிதர் அவர்தான் என்று யாராவது குறிப்பிட்டால், அதற்கு எதிராக நிறைய குரல்கள் எழாது என்பதே உண்மை. ஒரு மிகச் சிறந்த திரைப்பட தயாரிப்பாளராக வரக் கூடியதற்கான சூழ்நிலைகள் இருக்க, அவர் தன்னை படங்களை இயக்கும் மனிதர் என்ற அளவில் நிலை நிறுத்திக் கொண்டார். ஆனால், அவருடைய ஆர்வங்களும் ஆற்றல்களும் அதையும் தாண்டி இருந்தன. திரைப்பட உருவாக்கத்தில் ரே கையாளாத ஒரு சிறிய பகுதிகூட இல்லை என்பதுதான் உண்மை. திரைக் கதையை எழுதுவதிலிருந்து, ஆடைகளுக்கான துணிகளைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து, தன்னுடைய படங்களுக்கு சுவரொட்டிகளை வரைவதிலிருந்து, இசையமைப்பதிலிருந்து, கேமராவைக் கையாள்வதிலிருந்து, படப்பிடிப்பு முடிந்த பிறகு படத் தொகுப்பு செய்வதிலிருந்து எல்லாவற்றையும் அவர் செய்திருக்கிறார்.
ஆனால், அத்துடன் அது நின்று விடவில்லை. அந்த திரைப்பட படைப்பாளி பின் இருக்கையில் போய் அமர்ந்து கொண்ட சில தருணங்களும் இருக்கின்றன. அவருடைய கையிலிருந்த கேமராவை ஒரு பேனா ஆக்கிரமித்தது. அவர் சிறு கதைகள், புதினங்கள், விளையாட்டுப் பாட்டுகள், குழந்தைகளுக்கான பாடல்கள் என்று பலவற்றையும் எழுதினார். மூளை விளையாட்டுக்களையும், விடுகதைகளையும் எழுதினார். முடிவே இல்லாத அளவிற்கு ஓவியங்களை வரைந்தார். இவை அனைத்துமே குழந்தைகளின் பத்திரிகையான ‘சந்தேஷ்’க்காக. அதன் ஆசிரியராக அவர் இருந்தார்.
இந்த எல்லா செயல்களுக்கும் மத்தியில், அவர் தொலைபேசியில் பதில் கூறுவதற்கு நேரம் கிடைக்கும்படி பார்த்துக் கொண்டார். தன்னுடைய எல்லா தொடர்பு விஷயங்களையும் அவரே பார்த்துக் கொண்டார். ஒவ்வொரு கடிதத்திற்கும் அவரே நேரடியாக பதில் எழுதினார். அவருக்கு வரும் பெரும்பாலான கடிதங்கள் ‘சந்தேஷ்’ பத்திரிகையின் இளம் வாசகர்களிடமிருந்து வந்தன.
ரேயைச் சந்திக்கக் கூடியவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு அவருடைய படைப்பாற்றலைப் பார்த்து மட்டும் ஆச்சரியம் உண்டாகவில்லை. அவருடைய எல்லையற்ற ஆற்றலைப் பார்த்தும்தான். கூர்ந்து கவனம் செலுத்துதலில் அவருக்கு இருந்த ஆழத்தைப் பார்த்து அவருடைய மனைவி பிஜோயா ஆச்சரியத்தில் உறைந்து போய் விட்டாராம். அவர் கூறுகிறார்: ‘ஒரு அறை முழுக்க ஆட்கள் அமர்ந்திருக்க, அவரை நான் பார்ப்பேன்’- அவர் ஒரு முறை குறிப்பிட்டார் : ‘தன்னுடைய புகழ் பெற்ற சிவப்பு நிற நோட்டு புத்தகத்தை திறந்த நிலையில் தன் மடியின் மீது வைத்துக் கொண்டு தன் நாற்காலியில் அமர்ந்து கொண்டே அவர்களுடன் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருப்பார். அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பார். ஆனால், அவருடைய கை எந்தச் சமயத்திலும் எழுதிக் கொண்டிருப்பதை நிறுத்தாது. நான் அதைப் பற்றி ஒருமுறை அவரிடம் கேட்டேன். அப்போது ஒரே நேரத்தில் மூன்று, நான்கு காரியங்களை எத்தனையோ வருடங்களுக்கு முன்பே தான் கற்றுக் கொண்டிருப்பதாக அவர் கூறினார். அவர்கள் இருப்பதைப் பற்றி அவர் கவலைப் படவே மாட்டார்.’
ஒரு இந்தியனுக்கு, ரே மிகவும் உயரமான மனிதராக தோன்றுவார். 6.4’ அடி உயரத்தில் நின்று கொண்டு, தன்னைச் சுற்றி நின்று கொண்டிருப்பவர்களை அவர் குனிந்து பார்ப்பார். தன்னுடைய உயரத்திற்கேற்ற குரலும் அவருக்கு இருந்தது. ஒரு ஸ்டூடியோவின் தளத்தில் எல்லோருடைய குரல்களுக்கும் மத்தியில் அவருடைய கம்பீரமான குரல் தனித்து கேட்கும். இவ்வளவிற்கும் அவர் எந்தச் சமயத்திலும் குரலை உயரத்தி பேசவும் மாட்டார். மிகுந்த தன்னம்பிக்கை நிறைந்த ஒரு அமைதித் தன்மையுடன் அவர் வேலை செய்து கொண்டிருக்கும்போது, ஒரு குறிப்பிடத்தக்க ஆளுமையை அவர் உண்டாக்குவார். இன்னும் சொல்லப் போனால் – வாழ்வில் நாம் பார்ப்பதைவிட அந்தத் தோற்றம் மிகப் பெரியதாக இருக்கும். பணியில் ஈடுபட்டிருக்கும்போது பல நேரங்களில் அவரைப் பார்த்த மக்கள் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். ‘இந்த அளவிற்கு இயல்பான மனிதரா!’