
ஆனால், உண்மையிலேயே அவருடைய பெயரை நிலை நிறுத்தியவை அவருடைய பாடல்கள் அல்ல. குழந்தைகளுக்காக அவர் எழுதிய கதைகள்தான் அவரின் பெயரை கூறிக் கொண்டிருக்கின்றன. உபேந்திரகிஷோரின் வருகை நடப்பதற்கு முன்பு வரை, வங்காளத்தில் குழந்தைகளுக்கான கதைகள் என்பதே இல்லை என்றுதான் கூற வேண்டும். தான் எடுத்துக் கொண்ட கதையை அபாரமான உணர்ச்சிகளுடனும் புரிதலுடனும் எழுதிய முதல் எழுத்தாளரே உபேந்திரகிஷோர்தான். ‘இராமாயணம்’, ‘மகாபாரதம்’ இரண்டையும் குழந்தைகள் படிப்பதற்கான வடிவத்தில் அவர் முதலில் எழுதினார். கதைகளுக்கு அவரே படங்களை வரைந்தார்.
அந்த நூல்கள் பிரசுரமானபோதுதான், அந்த பிரசுர முறை எந்த அளவிற்கு மிகவும் கேவலமான முறையில் இருக்கிறது என்பதே அவருக்குத் தெரிந்தது. அவர் வரைந்த படங்கள் தெளிவற்றவையாகவும், இங்குமங்குமாக புள்ளிகள் விழுந்தவையாகவும் இருந்தன. யாராக இருந்தாலும், உடனடியாக அந்த வேலையையே ஏமாற்றமடைந்து நிறுத்தி விடுவார்கள். உபேந்திர கிஷோர் அந்தப் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று நினைத்தார். அவர் பிரிட்டனிலிருந்து சில அச்சு கருவிகளைக் கொண்டு வருவதற்கு கட்டளை பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து 1895ஆம் ஆண்டில் தன்னுடைய வீட்டிலேயே ‘யூ ரே அண்ட் சன்ஸ்’ என்ற பெயரில் ஒரு அச்சகத்தை அவர் ஏற்படுத்தினார். குறிப்பாக - ‘ஹாஃப் டோன் ப்ளாக் ப்ரிண்டிங்’ என்ற விஷயத்தில் அவர் உண்டாக்கிய வளர்ச்சி நிலைகளுக்காக இன்றும் உபேந்திரகிஷோர் நினைக்கப்படுகிறார்.
அந்தச் சமயத்தில், சுகுமாருக்கு எட்டு வயது. அவன் முற்றிலும் ஒரு மாறுபட்ட குடும்பச் சூழலில் வளர்ந்தான். ஒரு அச்சகம் இருந்தது மட்டுமல்ல- அதை அவனுடைய தந்தையே செயல்படுத்திக் கொண்டிருந்தார். கலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த அதே சம அளவு ஆர்வத்தை அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் அவர் செலுத்தினார். புகழ் பெற்ற பிரிட்டிஷ் பத்திரிகையான ‘பென்ரோஸ் ஆனுவ’லில் தொழில் நுட்பம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளையும் அவர் எழுதிக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் குழந்தைகளுக்கான கதைகளையும் எழுதினார். தன்னுடைய தந்தையிடமிருந்த திறமைகளை அதே அளவு என்று கூறுவதைவிட, அவரிடமிருந்து அதிகமாகவே பாரம்பரிய ரீதியாக தான் பெற்றிருந்ததை சுகுமார் செயல் வடிவில் நிரூபித்தான்.
1910ஆம் வருடம் உபேந்திரகிஷோர் ‘டுன்டுனிர் பாய்’ (தையல் பறவையைப் பற்றிய புத்தகம்) என்ற குழந்தைகளுக்கான பாரம்பரிய கதைகள் கொண்ட நூலை பிரசுரித்தார். காலப் போக்கில் அது வங்காளத்தின் காவியங்களில் ஒன்றாக ஆனது. அந்த நேரத்தில் சுகுமார் தன் கல்லூரிப் படிப்பை இயற்பியலிலும் வேதியியலிலும் இரண்டு முத்திரைகள் பெற்று முடித்தார். தன்னுடைய தந்தையைப் போலவே, சுகுமாரின் மனமும் எந்தவித பாகுபாடும் இல்லாத ஒன்றாக இருந்தது. கிழக்கு, மேற்கு இரண்டிலிருந்தும் கிடைக்கக் கூடிய எல்லா விஷயங்களிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக அவர் இருந்தார். எனினும். ஒவ்வொரு வங்காள மக்களின் இதயத்திலும் அவருக்கு ஒரு நிரந்தரமான இடத்தைச் சம்பாதித்துத் தந்தது – அவரிடமிருந்த அபாரமான நகைச்சுவை உணர்வுதான்.
உபேந்திரகிஷோரின் நகைச்சுவையில் எந்தவித தவறும் இருக்காது. அதே நேரத்தில் அது மிகவும் மென்மைத் தன்மை கொண்டது. சுகுமாரின் நகைச்சுவை இன்னும் அதிகமான உயிரோட்டம் கொண்டதாக இருக்கும். அதில் பிறர் மனம் புண்படும்படி எதுவும் இருக்காது. அவர் ‘நான்சென்ஸ் க்ளப்’ என்ற பெயரில் ஒரு க்ளப்பை நிறுவினார். கையால் எழுதப்பட்ட ஒரு பத்திரிகையை தயாரிப்பது அந்த க்ளப்பின் செயல்பாடுகளில் ஒன்றாக இருந்தது. அந்த பத்திரிகையில் சுகுமார் ‘ஜாலபாலா’, ‘லக்ஷ்மணர் ஷக்திஷெல்’ என்ற இரண்டு நாடகங்களை எழுதினார். முதல் நாடகம் ஒரு பணக்கார மனிதரின் செயல்களைக் கிண்டல் பண்ணுவதாக இருந்தது. இரண்டாவது நாடகம் ‘இராமாயண’த்தை மிகவும் துணிச்சலாக, இதுவரை பார்க்காத பார்வையுடன் பார்ப்பதாக இருந்தது.
1911ஆம் ஆண்டு லண்டனுக்குச் செல்வதற்காக ஒரு கல்வி உதவித் தொகையை சுகுமார் பெற்றார். அங்குதான் அவர் அச்சு மற்றும் புகைப்படக் கலை சம்பந்தப்பட்ட தொழில் நுட்ப விஷயங்களை கற்றார். அவர் அங்கு இருந்தபோது, உபேந்திர கிஷோர் ‘சந்தேஷ்’ என்ற ஒரு பத்திரிகையை (இப்போது அந்த பத்திரிகையின் ஆசிரியராக அவருடைய கொள்ளுப் பேரன் சந்தீப் இருக்கிறார்) ஆரம்பித்தார். அதன் முதல் இதழ் 1913ஆம் ஆண்டு மே மாதத்தில் வெளிவந்தது. அதிலிருந்த பெரும்பாலான படைப்புகளை உபேந்திரகிஷோரே எழுதினாலும், சுகுமார் லண்டனிலிருந்து பல படங்களையும் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தார்.
சுகுமார் 1913ஆம் ஆண்டில் இந்தியாவிற்குத் திரும்பி வந்து, ஒரு ப்ரம்மோ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகான, திறமை வாய்ந்த சுப்ரபா தாஸ் என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்து அப்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தார் உபேந்திர கிஷோர். ஆனால், அந்த நேரத்தில் அவர் உடல் நல பாதிப்பை அடைந்தார். அவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, இரண்டு வருடங்களுக்குப் பிறகு 1915ஆம் ஆண்டில் மரணத்தைத் தழுவினார்.
தன்னுடைய தந்தையின் பணிகளை தொடர்ந்து நடத்த வேண்டிய பொறுப்பு சுகுமாரின் மீது வந்து விழுந்தது. அதை அவர் பாராட்டத்தக்க திறமையுடன் செய்தார். ‘சந்தேஷ்’ பத்திரிகை தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. சுகுமாரின் குறிப்பிடத்தக்க திறமையின் வெளிப்பாடுகளைக் கொண்ட எழுத்துக்களும் படங்களும் அதன் பக்கங்களில் வந்து கொண்டிருந்தன. அதன் வாசகர்களுக்கு அவர் ஒரு புதிய ‘நான்சென்ஸ் உலக’த்தைப் படைத்தார். அத்தகைய விஷயங்கள் அதற்கு முன்பு யாரும் பார்க்காதவையாக இருந்தன.
வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த போக்கு சில வருடங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. மிகவும் இளம் வயதிலேயே, சுகுமாருக்கு ‘காலா அஸார்’ (கருங் காய்ச்சல்) என்ற நோய் வந்து ஆக்கிரமித்தது. அதற்கு மருந்து கிடையாது. அதைத் தொடர்ந்து ரே குடும்பத்தில் கவலையின் நிழல்கள் வந்து படர்ந்தன. திருமணமாகி எட்டு வருடங்களுக்குப் பிறகு சுகுமாருக்கும் சுப்ரபாவிற்கும் 1921ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி ஒரு மகன் பிறந்தபோதுதான் அந்த கவலையின் நிழல்கள் அந்தக் குடும்பத்திலிருந்து நீங்கின. ஒரு குழந்தை வேண்டும் என்பதற்காக அவர்கள் நீண்ட காலம் காத்திருந்தனர். பையன் பிறந்ததும், அவனுக்கு அவர்கள் சத்யஜித் என்று பெயரிட்டனர். அவனுடைய செல்லப் பெயர் ‘மானிக்’. அதற்கு அர்த்தம் ‘நகை’. அந்த அளவிற்கு அவன் மதிப்பு கொண்டவனாக இருந்தான்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook