Lekha Books

A+ A A-

நீலத்தாமரை - Page 7

neela-thaamarai

அம்மா:    இப்படி எத்தனை எத்தனையோ கதைகள்! (மேஜையைப் பார்த்தவாறு) குடிக்கிறதுக்கு அந்தப் பொண்ணு தண்ணி வைக்கலியா? சீக்கிரமா படுத்துத் தூங்கு.

அம்மா வெளியே போகிறாள்.

சமையலறையில் கடைசி வேலையாக தண்ணீர் விட்டு கழுவி சுத்தப்படுத்துகிறாள் குஞ்ஞிமாளு. பின்னர் அறையைத் துடைக்கிறாள். குஞ்ஞிமாளு எல்லாம் முடித்து கை கழுவி விட்டு வரும்போது அம்மா:

“இன்னொரு தடவை நம்மால ஏணியில ஏற முடியாது. ஹரிதாசனுக்கு ஒரு லோட்டாவுல தண்ணி கொண்டு போய் வைக்கணும், தெரியுதா? பச்சைத் தண்ணி...”

அவள் பாத்திரத்தில் நீரை எடுக்கிறாள். அதோடு டம்ளரையும். நாம் அவளைப் பின் தொடர்கிறோம்.

அவள் சமையலறையைத் தாண்டி ஏணியில் ஏறும்போது, ஒரு ஏணிப்படி இலேசாக அசைகிறது - ஓசை எழுப்புகிறது.

மேலே வழியில் அவள் மங்கலான வெளிச்சத்தில் சற்று தயக்கத்துடன் நிற்கிறாள். இருந்தாலும், மனதில் இருக்கும் பதட்டத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கட்டுப்படுத்தியவாறு வாசலைக் கடக்கிறாள்.

அறைக்குள் அவள் மேஜைமேல் நீர் இருக்கும் பாத்திரத்தையும் டம்ளரையும் வைக்கும்போது, எந்தவிதமான உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாக பார்ப்பது மாதிரி அவன் அவளைப் பார்க்கிறான்.

அவள் திரும்ப நடக்கிறாள்.

16

ரவு நேரம்.

அம்மா படுத்திருக்கிறாள். அவளின் காலை குஞ்ஞிமாளு பிடித்து விடுகிறாள்.

அம்மா படுக்கையில் இருந்தவாறே-

அம்மா:    பலகாரத்துக்கு அரிசி ஊறப் போட்டுட்டியா, குஞ்ஞிமாளு?

குஞ்ஞிமாளு:    ம்...

அம்மா:    அவன் படுத்துட்டானா?

குஞ்ஞிமாளு:    அறையில வெளிச்சம் இருக்குறது மாதிரி தெரியுது. பரீட்சைதான் முடிஞ்சிருச்சே! பிறகு எதுக்குப் படிக்கணும்மா?

அம்மா:    அவன் கண்ணுல பார்க்குறது எதுவா இருந்தாலும் அதை எழுதி வைப்பான். அதைப் படிச்சிக்கிட்டு இரப்பான் அவனுக்கு வேற என்ன வேலை இருக்கு?

கால்களைப் பிடித்துவிட்டுக் விட்டுக் கொண்டிருந்த கைகள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் அசைவை நிறுத்துகின்றன. போர்வையைக் கால்வரை இழுத்துவிட்ட குஞ்ஞிமாளு மெல்ல இருந்த இடத்தை விட்டு எழுந்து நிற்கிறாள்.

அவளுக்குக் கொட்டாவி வருகிறது.

இருட்டில் குஞ்ஞிமாளு படுத்துக் கிடக்கிறாள்.

குஞ்ஞிமாளுவின் முகம். பிறகு... அவளின் கண்கள்.

எங்கோ இருந்து மெதுவாகக் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு பாடல் ஓசை. உறக்கம் மெல்ல அவளை வந்து தழுவுகிறது.

இருட்டில் அசைகின்ற ஆலமரத்தின் இலைகள்.

மொட்டுகள் மட்டும் இருக்கும் சிறிய தாமரைக் குளம். கரையைத் தொட்டுக் கொண்டிருக்கும் நதியின் அலைகள். இந்தக் காட்சிகள் வழியாக ராக ஆலாபனை மிதந்து வர - நேர மாற்றம்.

17

தோட்டத்தில் கன்றுக்கட்டி கயிறில் கட்டியபடி மேய்ந்து கொண்டிருக்கிறது. குஞ்ஞிமாளுவும் செறுமி காளியும் ஓலை மடலை வெட்டி அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

வெளியே இருந்து அம்மிணியின் குரல்:

            “குஞ்ஞிமாளு...”

குஞ்ஞிமாளு பார்க்கும்போது வேலிக்கப்பால் அம்மிணி நின்றிருக்கிறாள்.

குஞ்ஞிமாளு:    இங்கே வா அம்மிணி...

அம்மிணி: எனக்கு நிறைய வேலைகள் இருக்கு. நீ கொஞ்சம் வாயேன்...

குஞ்ஞிமாளு வெட்டுக் கத்தியைக் கையில் எடுத்தவாறு அம்மிணிக்கு அருகில் வருகிறாள்.

வேலிக்கு அருகில் குஞ்ஞிமாளுவும் அம்மிணியும்.

அம்மிணி: சமையல் வேலைகள் அதிகமா? கோவில் பக்கமே உன்னை ஆளைக் காணோமே!

குஞ்ஞிமாளு:    நான் வீட்டுக்கு தூரம்... இன்னைக்கு மூணாவது நாள்.

அம்மிணி: ஹரிதாசன் இருக்காப்லயா?

குஞ்ஞிமாளு:    இருக்காரு. எப்பவும் அறைக்குள்ள இருந்து படிச்சுக்கிட்டே இருக்காரு.

அம்மிணி: அக்காவால நிக்கவும் முடியல, நடக்கவும் முடியல, குழந்தைங்க என்ன ஆட்டம் போட்டாலும் அக்காவோட வீட்டுக்காரர் ஒரு வார்த்தை கூட வாயைத் திறந்து பேசுறது இல்ல. (யாரிடம் என்றில்லாமல்) எல்லா கஷ்டங்களையும் சகிச்சுக்கத்தான் நான் ஒருத்தி இருக்கேன்ல!

(கையில அணிந்திருந்த புதிய வளையல்களைக் காட்டி) இதைப்பாரு... நல்லா இருக்கா? குஞ்ஞிமாளு ஆர்வத்துடன் அதைப் பார்க்கிறாள்.

அம்மிணி: (சிரித்தவாறு) இது தங்கம் கிடையாது. பார்க்குறதுக்கு தங்கம் மாதிரியே தெரியும். ரோல்ட் கோல்டு, அக்காவோட வீட்டுக்காரர் கோயம்புத்தூர்ல இருந்து வாங்கிட்டு வந்தாரு. நாங்க செனகத்தூர் திருவிழாவுக்குப் போறோம். குழந்தைங்க அதுக்குப் போயே ஆகணும்னு பிடிவாதம் பிடிக்குதுங்க. அக்காவோட வீட்டுக்காரரும் சரின்னு சம்மதிச்சிட்டாரு. நாங்க போறோம். நீயும் வர்றியா?

குஞ்ஞிமாளு:    அய்யோ... நான் வரல.

அம்மிணி: ஹரிதாசனோட அம்மாக்கிட்ட நான் சொல்றேன்.

குஞ்ஞிமாளு:    அய்யோ... வேண்டாம்.

அம்மிணி: அப்ப நான் வரட்டா? வாரியத்துல போய் நான் பாலைத் தர வேண்டியதிருக்கு.

அவள் நடக்கிறாள்.

வாத்தியங்களின் ஓசை. குறி சொல்லல். கையில் தட்டுடன் நின்று கொண்டிருக்கும் இளம் பெண்கள். தீப்பந்தங்கள். திரை முழுக்க வாண வெடிகள்.

குஞ்ஞிமாளுவின் முகம். உறங்கிக் கொண்டிருக்கும் குஞ்ஞிமாளு மங்கலான வெளிச்சத்தில் கண்களைத் திறக்கிறாள். தான் இதுவரை கண்ட திருவிழா காட்சிகள் ஒரு கனவு என்பதை உணர்கிறாள். அவள் மீண்டும் கண்களை மூடுகிறாள்.

மூடிய கண்களுடன், புன்னகை அரும்பியிருக்கும் முகத்துடன் அப்படியே உறங்கியும் போகிறாள். திடீரென்று அந்தக் கண்கள் திறக்கின்றன. அவள் கத்துகிறாள்.

“அய்யோ, அம்மா...!”

18

றங்கிக் கொண்டிருக்கும் அம்மாவின் முகத்தின் மேல் குஞ்ஞிமாளுவின் அலறல் சத்தம். அவள் திடுக்கிட்டு எழுகிறாள்.

“என்னடி... என்ன?”

குஞ்ஞிமாளுவின் குரல்:

“என் கால்ல, என்னவோ தாவி ஓடினது மாதிரி இருந்துச்சு...”

அம்மா:    விளக்கைப் போட்டுப் பாரு. ஏதாவது எலியா இருக்கும். நெல் பத்தாயத்தோட அந்தப் பொந்தை அடைக்கணும்னு நானும் எத்தனையோ தடவை அச்சுதன் நாயர்கிட்ட சொல்லிட்டேன்.

பாயில் மங்கலான வெளிச்சத்தில் எழுந்து அமர்ந்திருக்கும். குஞ்ஞிமாளு. அவள் ஒரு பெருமூச்சு விட்டவாறு மீண்டும் படுக்கிறாள்.

19

காலை நேரம்.

சாப்பிடும் இடம்.

பழைய பாணியில் அமைந்த ஒரு மேஜை. நான்கு ஸ்டூல்கள். ஹரிதாசன் தேநீரும், பலகாரமும் சாப்பிடுகிறான். அம்மா அருகிலேயே நின்றிருக்கிறாள். புதிதாகச் சுட்ட தோசையை ஒரு தட்டி எடுத்துக் கொண்டு வந்து மேஜை மேல் வைத்துவிட்டு குஞ்ஞிமாளு நகர்கிறாள்.

அவள் சமையலறையில் தோசை சுடுகிறாள். வெளியே தாயும், மகனும் பேசுவது அவளுக்குக் கேட்கிறது.

அம்மா:    தெற்குப் பக்கம் எலியோட தொந்தரவு இருக்கா என்ன?

ஹரிதாசன்:     இல்லியே!

குஞ்ஞிமாளுவின் முகத்தில் என்னவோ சிந்தனை நிழலாடுகிறது. புகைந்து கொண்டிருக்கும் தோசைக் கல்லில் அவள் ஒரு கரண்டி மாவை ஊற்றுகிறாள்.

காலையில் குளித்து முடித்து வரும் குஞ்ஞிமாளு படியைக் கடக்கிறபோது, ஹரிதாசனுக்காக சற்று ஒதுங்கி நிற்கிறாள்.

ஹரிதாசன் நிற்கிறான்.

ஹரிதாசன் முகத்தை உயர்த்தாமலே:

“ராத்திரி மேல வா. மூணாவது படி ஆடும். பார்த்து வரணும்.”

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel