ஜல சமாதி - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6908
ஐம்பத் தொன்பது வயதைக் கொண்ட ஒரு மனிதனை உள்ளே இழுப்பதற்கு எவ்வளவு நீர் இருக்க வேண்டும் என்று யாரும் கணக்கு போட்டுக் கூறவில்லை. ஆசையற்ற மனிதர்களின் உடல்களை எடுத்துக் கொள்ளும் நீருக்கு, ஈவு, இரக்கம் இவையெல்லாம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
வாஸ்துவால் உண்டாகும் பிரச்சினைதான் இதற்குக் காரணம் என்று யாரோ கூறினார்கள். தொழிற்சாலையில் பிரதான கட்டடம் இருக்கும் இடத்தில் முன்பு சுடுகாடு இருந்தது என்று வேறொரு ஆள் கண்டுபிடித்துக் கூறினார். செட்டியார்கள் அவசர அவசரமாக வாஸ்து பார்க்கும் மனிதரை அழைத்துக்கொண்டு வந்து பிரதான வாயில் இருக்கும் இடத்தை கிழக்கு மூலைக்கு மாற்றியபோது, அலுவலக நிர்வாகி அய்யர்வாள் எதுவும் கூறவில்லை. அமைதியாக உட்கார்ந்து கொண்டு வெள்ளியாலான வெற்றிலைப் பெட்டியைத் தட்டிக் கொண்டே என்னவோ மெதுவான குரலில் பாடிக் கொண்டிருந்தார்.
தூய வெண்மை நிறத்தில் பருமனான உடலைக் கொண்ட, பஞ்சு போன்ற நீளமான தலைமுடியையும் நரைத்த அடர்த்தியான புருவங்களையும் கொண்ட ஒரு மனிதர் அய்யர்வாள்.
யாராவது கிணற்றில் விழும்போது மட்டும்தான் தூரத்திலிருக்கும் நகரத்திலிருந்து கிராமத்திற்கு ஒரு வாகனம் புறப்பட்டு வரும். குண்டும் குழியுமாக இருக்கும் கிராமத்துப் பாதைகள் வழியாக சாய்ந்தும் முனகிக் கொண்டும் வந்துசேரும் அந்தப் பழைய ஜீப்... கஞ்சிப் பசையின் அடையாளம் மறையாமல் விறைத்துக்கொண்டிருக்கும் ஆடைகளுடனும் தூக்கக் கலக்கத்துடனும் இருக்கும் போலீஸ்காரர்கள்...
தற்கொலைதான். போலீஸ்காரர்களுக்கு ஒருமுறைகூட இந்த விஷயத்தில் சந்தேகம் உண்டாகாது. தற்கொலைகள் அதிகமாக நடக்கக்கூடிய ஊர் அது. அங்குள்ளவர்கள் எப்போதும் நிம்மதி தேடிக் கொள்வது ஜலசமாதி மூலம்தான்.
நேரம் அதிகம் ஆகிவிட்டிருந்தது.
“போடா கண்ணு...''
தூக்கத்திலிருந்து எழுந்திருப்பதைப்போல முனுசாமி கருப்பையனின் முதுகைத் தட்டினான். மஃப்ளரைத் தலையில் இறுகக் கட்டி, கொட்டாவி விட்டவாறு கருப்பையன் சைக்கிளில் ஏறினான். சக்கரங்கள் மீண்டும் கிறீச்சிட்டன. மெதுவாக தலையை ஆட்டியவாறு பி.யூ. சின்னப்பாவுடன் உறவு கொண்டு அவன் இருட்டுக்கு மத்தியில் பாதையில் செல்வதைப் பார்த்தவாறு நின்றிருந்தான் முனுசாமி.
அடுத்த நிமிடம் முனுசாமி வேகமாக நடக்க ஆரம்பித்தான். மிகவும் களைப்பாக இருந்தது. தூக்கம் வந்து கொண்டிருந்தது. இரு பக்கங்களிலும் நிழல் விரித்து நின்று கொண்டிருந்த பெரிய புளிய மரங்களுக்கப்பால் எதையும் தெளிவாக அவனால் பார்க்க முடியவில்லை. மங்கலான வெளிச்சத்தில், மிகவும் அருகில் முன்னால் அந்த பழைமையான கிராமத்துப் பாதை தெரிந்தது. கால்கள் வழி தவறிப் போக வாய்ப்பில்லை. எத்தனையோ வருடங்களாக நடந்து போன பாதை அது. தொழிற்சாலை வருவதற்கு முன்பு சுற்றிலும் கரும்புத் தோட்டங்கள் இருந்த பகுதி அது. சொல்லப்போனால் அப்போது பாதை என்று கூறுவதற்கு அங்கு எதுவுமில்லை. அகலம் குறைந்த சில வரப்புகள் இருக்கும். அவ்வளவுதான்.
ஆவணி மாதத்தில் ஒரு புலர்காலைப் பொழுதில் வேகமாக சீறியவாறு வந்த மூன்று நான்கு வண்டிகளிலிருந்து கூட்டமாக வேறு இடத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு வந்து இறங்கியது அவனுக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. என்னவோ வினோதமான மொழிகளில் பேசிய, பலவிதப்பட்ட மனிதர்களாக அவர்கள் இருந்தார்கள். தரிசாகக் கிடந்த, குண்டும் குழியுமாக இருந்த அந்த கரடுமுரடான இடத்தை வெட்டி சீராக்கி சமநிலைப்படுத்திய சம்பவம் மிகவும் சீக்கிரமாக நடந்தது. பூமியைப் பிளந்த பெரிய இயந்திரங்கள் போட்ட கோடுகளில் கட்டடங்கள் எழுந்தன. அவற்றுக்கு மேலே தகதகவென மின்னிக் கொண்டிருக்கும் மேற்கூரைகள் போடப்பட்டன. பருமனாக நீண்ட புகைக் குழாய்கள் பொருத்தப்பட்டன. அதற்குப் பிறகு நீளமான லாரிகளில் பெரிய பெரிய இயந்திரங்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தன.
இரவும் பகலும் மின்னும் வெளிச்சமும் சத்தமும் ஆரவாரமும் என்றாயின. ஆள் அரவமில்லாமல் இருந்த அந்த மலைச்சரிவு ஏதோ வேறொரு உலகத்தைச் சேர்ந்த சக்திகளின் கையில் அகப்பட்டு விட்டதைப்போல், அந்த இடம் புத்துணர்ச்சி பெற்று குதூகலத்து டன் காட்சியளித்தது.
பிறகு உயரமான குழாய்கள் வானத்தில் புகையைக் கக்கத் தொடங்கியதுடன் பழைய கரும்புத் தோட்டங்களைப் பற்றிய காட்சிகளை எல்லாரும் மறந்து விட்டார்கள்.
மெல்லிய காற்று வீசிக்கொண்டிருந்தது. ஒருமுறை தும்மல் வந்ததும் முனுசாமி கழுத்திலிருந்த மஃப்ளரை எடுத்து காதுகளை மூடி சுற்றிக் கட்டினான். தலையில் முன்பகுதியில் முடி முழுமையாக போனபிறகுதான் குளிர்காலங்களில் கம்பளி ஆடைகளின் முக்கியத்துவமே தெரிகிறது.
இருட்டின் ஆழங்களிலிருந்து நரிகள் ஊளையிட்டன. தலைக்குச் சற்று மேலே வவ்வால் ஒன்று சிறகடித்துப் பறந்து போனதைப் பார்த்து முனுசாமி அதிர்ச்சியடைந்தான். அவனுக்கு முன்னால் ஒரு நிறம் மங்கிப் போன புடவையைப்போல அந்த கிராமத்துப் பாதை காட்சியளித்தது. இரு பக்கங்களிலும் எதுவும் தெரியாத அளவிற்கு இருள் கருமையாகப் படர்ந்திருந்தது.
ஒரு டார்ச் விளக்கைக் கையில் எடுத்து வந்திருக்கலாம் என்று முனுசாமி அப்போது நினைத்தான். பீடியைப் பற்ற வைத்த தைரியத்தில் இருட்டைப் பார்த்து உரக்க அவன் இருமினான். அந்தச் சத்தம் மலையின் பள்ளத்தாக்குகளில் மோதி, சிறுசிறு துண்டுகளாகச் சிதறி இருட்டின் பல மூலைகளையும் நோக்கிப் பரவுவதைப்போல் அவன் உணர்ந்தான். அவன் தன்னுடைய நடையின் வேகத்தை அதிகரித்தான்.
திடீரென்று பின்னால் என்னவோ சத்தம் கேட்பதுபோல் இருந்தது. முனுசாமி திகைத்துப் போய் நின்றுவிட்டான்.
“யார்டா அங்கே?''
அடித்தளத்திலிருந்து வார்த்தைகள் வந்தன. தன்னுடைய குரலையே அறிமுகமில்லாததைப்போல் உணர்ந்து அவன் நடுங்கினான்.
அந்த நிமிடமே கால்களுக்கு வேகம் அதிகரித்தது. பாதங்கள் பட்டு உருளைக் கற்கள் நழுவி விழுந்தன. தடுமாறி விழாமல் அழுத்தி மிதித்தவாறு நடந்து கொண்டிருந்தபோது அவனுடைய பழைய செருப்பின் வார்கள் இறுகி வேதனையைத் தந்தன. அவன் தன்னையே அறியாமல் உரத்த குரலில் கத்தினான்:
“முருகா... காப்பாத்துங்க...''
வானத்தில் மேகங்கள் ஒன்று கூடியபோது கொஞ்ச நஞ்சமிருந்த இயற்கை வெளிச்சமும் இல்லாமல் போனது. இருள்படர்ந்த கிராமத்துப் பாதைகள் வழியாக தன்னுடைய கால்கள் தானாகவே நடந்து போய்க்கொண்டிருப்பதை முனுசாமியால் உணரமுடிந்தது.
கைகளை வீசியவாறு உரத்து காற்றை சுவாசிக்கும்போது, அவனுக்குள்ளிருந்து ஒரு அழுகை புறப்பட்டு வந்தது.
“முருகா!''
கிணற்றுக்குள்ளிருந்து தூக்கி பனையோலையில் படுக்க வைத்திருந்த முத்துவின் முகம் அப்போது அவனுடைய ஞாபகத்தில் வந்தது. நீரைக் குடித்து வயிறு வீங்கிப் போயிருந்தது. முகமும் வீங்கிக் காணப்பட்டது. முந்தைய நாள் நெற்றியில் வைத்த குங்குமமும் விபூதியும் சற்று அழிந்துபோய் காட்சியளித்தன.
விழித்துக்கொண்டிருந்த கண்களில் பயம் தெரிந்தது.
அந்த பயம்தான் பிறகு பல இரவுகளிலும் முனுசாமியை தூங்க விடாமல் செய்தது.