ஜல சமாதி - Page 5
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6908
பதில் சொல்லக்கூடிய நிலையில் தான் இல்லை என்பதை நினைத்தபோது அதனால் முனுசாமிக்கு எந்த வருத்தமும் உண்டாகவில்லை. அன்றைய சம்பவத்திற்குப் பிறகு தன்னைச் சுற்றிலும் புரிந்து கொள்ள முடியாத, கண்ணிகள் கொண்ட வலைகள் சூழ்ந்திருப்பதை அவனால் உணர முடிந்தது.
சிறிது நேரம் கழித்து உரத்த ஓசையுடன் கதவை இழுத்து அடைத்துவிட்டு அவன் போனபிறகு காவேரி வேகமாக அங்கு ஓடி வந்தாள்.
“அண்ணன் என்ன சொன்னான்?'' அவள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க கேட்டாள்.
எதுவும் சொல்லவில்லையென்று தலையை ஆட்டினான் முனுசாமி.
“அவன் பேச்சை நம்பாதப்பா. உடம்பைப் பார்த்துக்கோ...'' காவேரி சொன்னாள்.
முனுசாமி அப்போதும் வெறுமனே தலையை ஆட்டினான்.
“உடம்பு சரியாகலைன்னா, வேலைக்குப் போக வேண்டாம்.''
அதற்குப் பிறகு ஒரு வாரம் கழித்துத்தான் முனுசாமி கம்பெனிக் குச் சென்றான். கழுத்திலும் தோளிலும் வீக்கம் குறைந்திருந்தாலும் தலையை அசைக்கும்போது பயங்கரமான வலியிருந்தது.
அய்யர்வாளுக்கு முன்னால் தலையைக் குனிந்து கொண்டு கைகளால் தொழுதவாறு முனுசாமி சிறிது நேரம் நின்றிருந்தான். பருத்தியைப் போல நீளமான முடியையும் நரைத்துப்போன அடர்த்தியான புருவங்களையும் கொண்ட அய்யர்வாள்... நெற்றியில் அகலமாகப் பூசப்பட்டிருந்த திருநீறுக்கு மத்தியில் பெரிய ஒரு குங்குமப் பொட்டு... கீழே பளிங்குக் குண்டுகளைப்போல உருண்டு கொண்டிருக்கும் பளபளப்பான கண்கள்... தனக்கு ஒரு வாழ்க்கையைத் தந்த கண்கண்ட தெய்வமாக அவரை நினைத்தான் முனுசாமி.
அன்றைய சம்பவத்தைப் பற்றி அய்யர்வாள் தீவிரமாக ஏதாவது விசாரிப்பார் என்று அவன் நினைத்திருந்தாலும், அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை.
“என்னப்பா முனுசாமி? உடம்பெல்லாம் எப்படியிருக்கு?'' வழக்கமான ஒரு கேள்வி... அடர்த்தியான புருவங்களுக்கு மத்தியிலிருந்து எதையோ தேடிக் கண்டுபிடிக்க முயற்சித்தார் அய்யர்வாள்.
எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு அய்யர்வாள் மீண்டும் தன்னுடைய முகத்தை உற்றுப் பார்ப்பதைப்போல் அவன் உணர்ந்தான்.
தன் கண்களில் வலி இருப்பதை முனுசாமியால் உணரமுடிந்தது. தொண்டைக்குள் என்னவோ குடைந்து கொண்டிருந்தது.
“எல்லாத்துக்கும் முருகன் துணையா இருக்கான் அய்யா!'' அவனுடைய குரல் இடறியது.
“கெட்ட காலம் சாமி... பார்த்து நடந்துக்கணும்.'' அய்யர்வாள் சொன்னார்.
அதுவும் சம்பிரதாயமான ஒரு பேச்சுதான் என்பதை முனுசாமி யால் புரிந்து கொள்ள முடிந்தது. பழைய அதிகார தோரணை சிறிதும் வெளியே தெரியாத மாதிரி அவர் பார்த்துக் கொண்டார். எனினும், அவர் தன்னுடைய பளபளப்பான கண்களை உருட்டியவாறு அவனுடைய உடலை மேலிருந்து கீழ்வரை ஆராய்ந்து கொண்டிருந்தார்.
பேச நினைத்த வார்த்தைகள் தனக்குள் கிடந்து சுழன்று கொண்டிருப்பதை முனுசாமியால் உணரமுடிந்தது.
“எல்லாத்துக்கும் முருகன் துணை இருக்கான் அய்யா.''
எதற்கு அந்த வார்த்தைகளைக் கூறுகிறோம் என்று தெரியாமலே அதை மீண்டும் சொன்னபோது முனுசாமியால் அடக்க முடியவில்லை. அய்யர்வாளுக்கு முன்னால் குனிந்து நின்று கொண்டு அவன் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான்.
அழுகைச் சத்தத்தைக் கேட்டுத்தான் இருக்க வேண்டும்-வாசலில் யாரோ வந்து எட்டிப் பார்த்தார்கள்.
“சரி... சரிப்பா...'' அய்யர்வாள் தர்மசங்கடமான நிலையில் தான் இருப்பதைப் புரிந்துகொண்டு உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தார். என்னவோ வாயில் மெதுவான குரலில் பாடியவாறு வெற்றிலைப் பெட்டியில் தாளம் போட ஆரம்பித்தார் அவர்.
கட்டியிருந்த கைலியால் மூக்கைத் துடைத்தான் முனுசாமி.
நிதானமாக வெற்றிலை போடலாம் என்று உட்கார்ந்தபோது, அய்யர்வாள் இயந்திரத்தனமாக மீண்டும் சொன்னதையே திரும்பச் சொன்னார்:
“சரிப்பா... பார்த்து நடந்துக்கணும்.''
ஒருவாரம் விடுமுறை கேட்கலாம் என்றுதான் அவ்வளவு தூரம் அவன் போனான் என்றாலும், அதை மட்டும் அவன் கடைசிவரை கூறவேயில்லை.
சிறிது நேரம் கழித்து கண்களைத் துடைத்துக் கொண்டே அவன் வெளியே வந்தபோது, வராந்தாவின் ஒரு மூலையில் முத்து வின் மகன் ஆறுமுகம் நின்றிருப்பதைப் பார்த்தான். அவன் சிரிக்கக்கூட இல்லை. கண்கள் எப்போதும்போல எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருந்தன. அவன்தான் தன்னுடைய மகன் ராஜாவை சீட்டு விளையாட்டுக் கும்பலில் சேர்த்து விட்டவன் என்ற விஷயம் முனுசாமிக்குத் தெரியும். அவன் முத்துவுக்கு கம்பெனி வேலை களைச் சொல்லித் தந்திருக்க, முத்துவின் மகன் அவனுடைய சீட்டு விளையாட்டையும், "தண்ணி” போடுவதையும் கற்றுத் தந்தான்.
தலையைக் குனிந்து கொண்டு அவன் வெளியேறி நடந்தான். கேட்டை நெருங்கியபோது டைம் அலுவலகத்திலிருந்த கூர்க்காவின் முகத்தில் பழைய சிரிப்பைப் பார்க்க முடியவில்லை. அவன் பார்க்காததைப்போல தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டிருந்தான்.
வண்டிப் பேட்டையை நோக்கி நடந்தபோது ஐம்பத்தொன்பதாவது வயதில் இருக்கக்கூடிய பிரச்சினைகளைப் பற்றி முத்து கூறுவது அவன் ஞாபகத்தில் வந்தது. வேலையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னாலிருக்கும் ஒரு வருடம் வாழ்வது என்பது உண்மையிலேயே மிகவும் கஷ்டமான ஒரு விஷயம்தான். இன்று அய்யர்வாளின் முகத்தில் காணாமல் போயிருந்த அந்தப் பிரகாசம் வெளியே நின்றிருந்த கூர்க்காவின் முகத்திலும் வெளிப்பட்டபோது அவர்கள் எதிலிருந்தோ தங்களை மறைத்துக் கொள்ள முயல்வதை அவனால் உணரமுடிந்தது.
வீட்டுக்குத் திரும்ப வந்த பிறகுகூட அவன் யாரிடமும் ஒரு வார்த்தைகூட பேசாமல் தன்னுடைய அந்தப் பழைய கட்டிலை நோக்கிச் சென்றான். அதே வியர்வை நாற்றம் எடுத்துக் கொண்டி ருக்கும் படுக்கை விரிப்பு. தலையணை உறையிலிருந்து கடலை எண்ணெய்யின் வாசனை புறப்பட்டு வந்து நாசிக்குள் நுழைந்து கொண்டிருந்தது.
சாப்பாடு எடுத்து வைத்திருப்பதாக காவேரி வந்து சொன்ன போது, அவன் வேண்டாமென்று தலையை ஆட்டினான். அதைக் கேட்டு அவள் முகம் வாடிப்போனதை அவன் பார்த்தான்.
“என்னப்பா? என்ன ஆச்சு? பசி இல்லையா?'' காவேரி அவனுக்கு மிகவும் அருகில் வந்து நின்றாள். அவளுடைய முகம் மிகவும் சிவந்து போயிருந்தது.
ஒன்றுமில்லை என்று அவன் கையால் சைகை செய்தான்.
“கம்பெனியில் யாராவது ஏதாவது சொன்னாங்களா?''
“இல்லை...''
“அப்புறம்?''
“அப்புறம்... ஒண்ணுமில்லம்மா...''
“அந்த டாக்டர்கிட்ட ஊசி போடச் சொல்லுவோமா?''
காவேரி அவனுடைய முகத்தையும் தலையையும் மெதுவாகத் தடவினாள். கண்ணீர் வெளியே தெரியாமல் இருப்பதற்காக முனுசாமி தன் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டான்.
“அப்பா, ஏன் அழுறீங்க?''
காவேரி அவனுடைய தாடையைப் பிடித்து ஆட்டினாள்.
அவனால் தாங்க முடியவில்லை. திடீரென்று திரும்பி தன் முகத்தை தலையணையில் புதைத்துக் கொண்டு அவன் தேம்பித் தேம்பி அழுதான்.
சிறிது நேரம் கழித்து அவனுடைய மனைவி வந்து அழைத்த பிறகும் அவன் அசையவில்லை. தலையணையில் புதைத்திருந்த அவனுடைய முகத்தை யாராலும் பார்க்க முடியவில்லை.