திவாகரனின் தந்தை - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6750
அவள் இருக்கிறார் என்றோ இல்லை என்றோ கூறவில்லை. பயங்கரமான ஏதோ நினைவில் அவளுடைய முகத்தில் இருந்த அழகு ஒரு நிமிட நேரத்திற்கு இல்லாமற் போனது. தன்னுடைய சுருண்ட தலைமுடியை இறுகப் பற்றிக்கொண்டு, தூங்கிக் கொண்டி ருக்கும் கோழியைப் போல அவள் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
நான் அதற்குப் பிறகு அவளிடம் எதையும் கேட்கவில்லை. எனக்கு அனைத்தும் புரிந்துவிட்டன.
முதலில் ஈர்க்கப்படுவது, பிறகு சகித்துக் கொள்வது, சம்மதிப்பது, அதில் இன்பம் காண்பது, இறுதியில் அழுவது, கவலைப்படுவது, கடைசியில் நிரந்தரமாகக் கஷ்டப்படுவது- ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அந்த பயங்கரமான ரகசியங்கள்... நாகரீகத்திற்காகப் புதுப்பிக்க முடியாத அந்த பழைய பல்லவிகள்... அதற்குப் பிறகும் நான் எதற்கு அதைப் பற்றிக் கூற வேண்டும்?
திவாகரன் கண் விழித்து நான்கு பக்கங்களிலும் பார்த்தான். நான் அவனுக்கு அருகில் சென்றேன். என்னைப் பார்த்ததும் அவன் சற்று புன்னகைத்துக் கொண்டே சொன்னான்: “வணக்கம். நான் உங்களை எப்படி அழைக்க வேண்டும்?''
நான் அவனுக்கு அருகில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு அவனை அணைத்துக் கொண்டேன்.
“திவாகரா, நான் நீ காண வேண்டிய ஆள்தான்.''
“யார்?'' ஒரு சந்தேகத்துடன் அவன் என்னைப் பார்த்தான்.
“உன் அப்பா.''
“என் அப்பாவா?''
தன்னுடைய கறுப்பு விழிகளால் விழித்தவாறு அவன் சிறிது நேரம் அசைவே இல்லாமல் என்னையே பார்த்தான்.
ஆபத்து நிறைந்த ஒரு நீரோட்டத்திற்கு எதிராக என்னுடைய இதயம் நீந்திக் கொண்டிருந்தது. மலையில் இருக்கும் தனிமை அங்கு வந்து ஆட்சி செய்வதைப்போல எனக்குத் தோன்றியது.
திவாகரன் எழுந்து உட்கார்ந்தான். நான் அவனைத் தாங்கிக் கொண்டேன். அதற்குப் பிறகு சிறிது நேரத்திற்கு அவன் என் முகத்திலிருந்து தன் கண்களை எடுக்கவில்லை. தொடர்ந்து அவன் “அம்மா...'' என்று அழைத்தான்.
இந்திரா அருகில் வந்தாள்.
“அம்மா... இவர் என் அப்பாவா?''
இந்திராவின் முகம் வெளிறிப் போனது. அவள் குழப்பத்துடன் என் முகத்தையே பார்த்தாள்.
இந்திராவின் முகத்தை நானும் அர்த்தம் நிறைந்த ஒரு இரக்கப் பார்வையுடன் பார்த்தேன். அதைத் தொடர்ந்து, இப்போது சொல் லியே ஆக வேண்டும் என்பதைப் போல அவள் ஏதோ ஒரு சத்தத்தை உண்டாக்கினாள். அது அவளுடைய ஒப்புக்கொண்ட பதில் என்பதாக திவாகரன் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அவன் என்னுடைய மார்பில் கையை வைத்துக்கொண்டு சகஜமாக அந்த மிடுக்குடன் சொன்னான்: “அப்படின்னா நீங்கள்தானே என் அப்பா?''
நான் திவாகரனை இறுக அணைத்துக் கொண்டே சொன்னேன்: ஆமாம்... திவாகரா, நான் உன் அப்பா. நீ என் செல்ல மகன்.''
“நீங்கள் இரக்கம் இல்லாத ஒரு மனிதர் என்றாலும், நல்ல ஒரு அப்பா என்று தோன்றுகிறது. இல்லையா அம்மா?''
நான் சிரித்தேன்: “எதனால் அப்படிச் சொல்கிறாய் திவாகரா?''
“நீங்கள் இதுவரை என்னிடம் எதற்காகக் கூறவில்லை?''
“என் மகனான உன்னால் என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்ப்பதற்காக அல்லவா நான் உன்னிடம் கூறாமல் இருந்தேன்?''
“ஓ... நான் எப்படித் தெரிந்துகொள்ள முடியும்? அம்மா சொல்லிக் கேட்டேனே தவிர, நான் இதுவரை உங்களைப் பார்த்ததே இல்லை. நான் என் தந்தையைப் பற்றிக் கேட்கும்போதெல்லாம் அம்மா "அடுத்த நாள் வருவார்... நாளை வருவார்' என்று சொல்லுவாங்க. நீங்கள் இதுவரை எங்கே இருந்தீங்க? பினாங்கிலா? சிங்கப்பூரிலா? இல்லாவிட்டால்... காங்கிரஸில் சேர்ந்து சிறையில் இருந்தீங்களா?''
“மகனே, நான் உன்னைத் தேடி அலையாமல் இருந்திருப்பேனா?''
“அப்பா... அம்மா... நான் அப்படி அழைக்கட்டுமா? நான் உங்களிடம் என்னென்னவெல்லாம் பேசவேண்டும் தெரியுமா? அங்கே இருக்கும் சீதுவும் ராமுவும் என்னை தந்தை இல்லாத பையன் என்று சொல்லி கேலி பண்ணுவாங்க. அம்மா, அந்த வீட்டுல இருக்குற சீதுவைக் கூப்பிடுங்க...''
இந்திரா கேட்டாள்: “எதற்கு மகனே?''
“சீதுவிற்கு நான் என் அப்பாவைக் காட்டணும்.''
அப்போது என் கையில் இருந்த கடிகாரத்தையும் சட்டையின் தங்க நிறப் பொத்தானையும் அவன் உரிமையுடன் தன் கையில் வைத்திருந்தான்.
அன்று நான் அங்கிருந்து புறப்படும்போது இந்திரா தன்னுடைய நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு என்னிடம் சொன்னாள்: “நீங்கள் என்ன காரியம் செஞ்சீங்க? அய்யோ... நீங்கள் குழந்தையிடம் என்ன சொல்லிவிட்டிருக்கீங்க? மகா பாவம்...''
நான் எந்தவொரு சமாதானமும் கூறாமல் முகத்தைத் தாழ்த்தி வைத்துக்கொண்டே கிளம்பினேன்.
காலப்போக்கில் திவாகரனால் என்னை எந்தச் சமயத்திலும் பிரிந்து இருக்க முடியாது என்ற நிலை உண்டானது.
நாட்கள் செல்லச் செல்ல அவனுடைய நோய்க்கு குணம் உண்டாவதாகத் தெரியவில்லை. நான் டாக்டர் தாஸின் சிகிச்சையை நிறுத்திவிட்டு, கோழிக்கோட்டிற்குச் சென்று டி.எம்.ஓ.வை அழைத்துக் கொண்டு வந்தேன்.
மருத்துவ அதிகாரி சோதித்துப் பார்த்துவிட்டு சிகிச்சை செய்தபோது, திவாகரன் யாருக்கும் இரக்கம் உண்டாகிற குரலில் அவரிடம் கூறினான்:
“டாக்டர் டி.எம்.ஓ... நோ மணி... வீ வெரி புவர்.''
அந்த வார்த்தைகள் அந்த ஐரோப்பிய டாக்டரின் இதயத்தை மிகவும் தொட்டுவிட்டது. அவர் திவாகரனின் கன்னத்தில் முத்த மிட்டார். எவ்வளவு வற்புறுத்தியும் அவர் ஃபீஸ் வாங்க சம்மதிக்க வில்லை. அது மட்டுமல்ல- கோழிக்கோட்டில் இருக்கும் அரசாங்க மருத்துவமனைக்கு அவனை அழைத்துக் கொண்டு வரும் பட்சம், எல்லா உதவிகளையும் செய்வதாகவும் அவர் சொன்னார். ஆனால், அப்படிப்பட்ட ஒரு நீண்ட பயணம் தற்போதைய அவனுடைய உடல் நிலைமைக்கு ஆபத்தாகத் தோன்றியதால், நாங்கள் அந்தக் கருத்தை அலட்சியப்படுத்த வேண்டியதாகிவிட்டது.
அன்று சாயங்காலம் திவாகரனுக்கு நல்ல முன்னேற்றம் உண்டானது. அது அவனுடைய உடல் நலக்கேடு உண்டான பதினொன்றாவது நாள். அவனுடைய நிலைமையைப் பார்த்து நாங்கள் எல்லாரும் மகிழ்ச்சியடைந்தோம். இந்திராகூட சந்தோஷத்துடன் பேச ஆரம்பித்தாள்.
ஆனால், இரவு வந்ததும் அவனுடைய நிலைமை மாறியது. அணையப் போகிற திரியைப் போல அவனுடைய முகத்தின் பிரகாசம் சற்று மங்கி, ஒளிர்ந்தது. இரவு எட்டு மணிக்கு அவன் கண்களைத் திறந்து தன் தாயை அழைத்தான்.
இந்திரா அருகிலேயே நின்றிருந்தாள்.
“அம்மா.. எனக்கு ஒரு முத்தம் தாங்க...''
இந்திரா அவனுக்கு முத்தமிட்டாள். தொடர்ந்து சுயஉணர்வு இல்லாமற் போனது.
இரண்டு நிமிடங்கள் கடப்பதற்கு முன்பே தினகரன் என் மடியில் படுத்து மரணத்தைத் தழுவிவிட்டான்
“அதோ... அங்கே தெரிவது... திவாகரனின் நிரந்தரமான ஓய்விடம். எனக்கும் இந்திராவிற்கும் இருப்பது அது மட்டுமே. இப்போது இந்திரா என்னுடைய மனைவி. புனித ஆலயம்...''