திவாகரனின் தந்தை
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6750
என்னுடைய ஒரு நெருங்கிய நண்பராக இருந்த சுகுமாரன் வக்கீலின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, அவருடைய சொந்த ஊருக்குச் சென்ற மறுநாள் அந்த இடங்கள் அனைத்தையும் சுற்றிப் பார்ப்பதற்காக அவர் என்னை தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்றார்.
அதிகமான ஆட்கள் வசிக்காத ஒரு கிராமப் பகுதியாக அது இருந்தது. வக்கீல் ஒரு பெரிய ஜமீன்தாராக இருந்ததால், அங்கிருந்த இடங்களில் பெரும்பாலானவை அவருக்குச் சொந்தமானவையாக இருந்தன.
நேரம் மதியம் ஆனது. தலைகள் காய்ந்து கருகி விட்டிருந்த ஐந்தோ ஆறோ வயதான தென்னை மரங்கள் மட்டுமே எஞ்சியிருந்த, விசாலமான ஒரு வெள்ளை மணல் இருந்த நிலத்தை நாங்கள் அடைந்தோம்.
அந்த நிலப் பரப்பின் கிழக்குப் பகுதியில் இன்னொரு நிலம் இருந்தது. அங்கு செல்லக்கூடிய வழியில் முட்களால் ஆன கதவு ஒரு ஆமைப்பூட்டு கொண்டு பூட்டப்பட்டிருந்தது. என்னுடைய நண்பர் தன்னுடைய பெல்ட்டில் தொங்கிக் கொண்டிருந்த சாவிக்கொத்திலிருந்து ஒரு சாவியைத் தேடி எடுத்து பூட்டைத் திறந்தார்.
என்னுடைய நண்பர் முன்னால் நடந்தார். பின்னால் நானும். ஒரு சுடுகாட்டிற்குள் நுழைவதைப் போன்ற ஒரு பய உணர்வு, காரணமே இல்லாமல் என்னை ஆட்கொண்டது. அந்த நிலப்பகுதி அந்த அளவிற்கு மிகப் பெரிய அளவு கொண்டதாக இல்லாமலிருந்தாலும், நிறைய மரங்களைக் கொண்டிருந்தது. பயங்கரமான ஒரு தனிமை அங்கு எப்போதும் ஆட்சி செய்து கொண்டிருந்தது. அங்கு காய்ந்த சருகுகள் விழுந்து நிலம் முழுவதும் மூடிக் கிடந்தது. நான்கு பக்கங்களிலும் உயரமாக முள் வேலி கட்டப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்ததால் ஒரு நாய்கூட அங்கு நுழைய முடியவில்லை.
ஒரு பெரிய புளியமரம், சில சவுக்கு மரங்கள், வேறு சில பெரிய மரங்கள்- இவை அனைத்தும் அடர்த்தியாக வளர்ந்திருந்த அந்த நிலம் ஒரு காட்டைப் போல காட்சியளித்தது. ஆனால், என்னை அதிகமாகக் கவர்ந்ததும் அச்சமுறச் செய்ததும் அங்கு நிலவிக் கொண்டிருந்த ஆழமான பேரமைதிதான். அது என்னுடைய இதயத்தை மரத்துப் போகச் செய்தது. நரம்புகளை முறுக்கேறச் செய்தது. என்னுடைய நண்பர் திடீரென்று பின்பற்றிய மவுனம் என்னுடைய பயத்தையும் சந்தேகத்தையும் அதிகமாக்கியது. அந்தப் பேரமைதியுடன் போரிட்டு, பயந்து போய் சத்தம் போட்டுக் கொண்டிருந்த என்னுடைய கன்ன நரம்புகளின் "பும்” என்ற சத்தம் மட்டும் எனக்கு கேட்டுக் கொண்டிருந்தது. எங்கிருந்தாவது- ஏதாவதொரு நாசமாய்ப் போன உயிரினம் சற்று ஓசை உண்டாக்கியிருந்தால்...! என்று நான் நினைத்தேன். ஆனால், அந்த மரத்துப் போன பேரமைதிக்கு எந்தவொரு மாறுதலும் உண்டாக வில்லை.
நாங்கள் எங்கு போகிறோம்? அந்த நிலப்பகுதி என்ன? இவற்றையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தாலும், அந்தப் பேரமைதியைக் குலைப்பது ஒரு கொலைச் செயலைச் செய்வதற்கு நிகரானது என்று எனக்குத் தோன்றியதால் மவுனமாக இருப்பதற்கு நான் கட்டாயப் படுத்தப்பட்டேன்.
பிணத்தை ஆர்வத்துடன் கொத்தி இழுக்கும் கழுகைப்போல ஒரு பெரிய பிணம் தின்னும் காகம் அந்தப் பலா மரத்தில் பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு பலாப் பழத்தை அமைதியாகக் கொத்தி இழுத்து விழுங்கிக் கொண்டிருந்தது. ஒரு புறாவும் அங்கு பறந்து வந்தது. ஆனால், அதுவும் ஓசை உண்டாக்கவில்லை.
நான் என்னுடைய நண்பரை, ஒரு மந்திர சக்திக்கு கட்டுப்பட்டு இருப்பதைப்போல பின்தொடர்ந்தேன். அவர் அந்த நிலத்தின் தெற்குப் பகுதியை நோக்கி நடந்தார். அங்கு காலியாகக் கிடந்த ஒரு இடம் வட்ட வடிவத்தில் சீர் செய்யப்பட்டு காட்சியளித்தது. அங்கு விழுந்து கிடந்த காய்ந்த ஐந்தெட்டு மா இலைகளை என்னுடைய நண்பர் பொறுக்கி எடுத்து தூரத்தில் எறிந்தார். தொடர்ந்து நாங்கள் நிலத்தின் வடக்குப் பகுதியை நோக்கி நடந்தோம். அங்கு சிதிலமடைந்த, அழிவு நிலைகளில் இருந்த ஒரு ஓலைக் குடிசை வெறுமனே கிடந்தது. இருள் நிறைந்திருந்த அதன் உட்பகுதிக்குள் என்னுடைய நண்பர் நுழைந்து பார்த்தார். நான் பேய்கள் இருக்கின்றன என்பதை நம்பாத மனிதனாக இருந்தாலும், பட்டப் பகலில் அதற்குள்ளிருந்து பேய்கள் எட்டிப் பார்க்கின்றன என்பதைப் போல எனக்குத் தோன்றியது. அந்த நிலத்தில் அரை மணி நேரம் இருந்து விட்டு, நாங்கள் அங்கிருந்த திரும்பினோம். அந்த முட்களால் ஆன கதவை முன்பு இருந்த மாதிரியே பூட்டிவிட்டு, என்னுடைய நண்பரும், பின்னால் நானும், முன்னால் சொன்ன வெண்மணல் பரப்பிற்குள் மீண்டும் கால் வைத்தோம். அப்போதுதான் என்னுடைய நாக்கிற்கு அசையக் கூடிய ஆற்றல் கிடைத்து விட்டிருப்பதைப் போல எனக்குத் தோன்றியது.
“மிகவும் தாகமாக இருக்கிறது.'' நான் மிகுந்த பதைபதைப்புடன் என்னுடைய நண்பரிடம் கூறினேன். என் தொண்டை சுக்கைப் போன்று வறண்டு போயிருந்தது.
நாங்கள் அந்த நிலத்தின் மூலையில் இருந்த ஒரு ஆல மரத்தின் நிழலில் ஓய்வெடுத்தோம். பிறகு ஒரு மனிதனிடம் கூறி இரண்டு மூன்று இளநீர்களைப் பறித்து வரச் செய்து தாகத்தைத் தீர்த்துக் கொண்டோம்.
நான் என்னுடைய நண்பரிடம் கேட்டேன்: “அந்த நிலம் என்ன?'' “அது திவாகரனின் நிலம்'' என்று அவர் கூறியபோது, எனக்கு பெரிய ஆச்சரியம் உண்டானது. இறுதியில் அவர் அந்தக் கதையை என்னிடம் கூறியபோது, எனக்கு அனைத்தும் புரிந்துவிட்டது. அவர் கூறிய கதையைத்தான் இங்கு சேர்த்திருக்கிறேன்.
அந்த சம்பவம் நடந்து முடிந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. அன்றும் இந்த நிலம் இப்படியேதான் எந்தவிதமான கவனமும் செலுத்தப்படாமல், புற்களும் செடிகளும் முழுமையாக வளர்ந்து, படர்ந்து, இருள் நுழைந்து, தனிமை பயம் நிறைந்ததாக இருந்தது. இந்த நிலத்தின் அன்றைய உரிமையாளர்தான் இன்று நீங்கள் இதில் பார்த்த வீட்டைக் கட்டியவர். ஆனால், வீட்டின் வேலைகள் பாதி முடிவடைவதற்கு முன்பே அவர் காரணமே இல்லாமல் மரண மடைந்து விட்டார். அதற்குப் பிறகு அந்த வேலையை முழுமை செய்வதற்கு யாரும் முயற்சிக்கவில்லை.
அந்த நிலத்தைப் பற்றி பலரும் பல கதைகளையும் கூறிக் கொண்டிருந்தார்கள். அது ஒரு வீடு முடிவடையாத இடம். அங்கு ஒரு பாழுங்கிணறு இருக்கிறது. அதில் தங்கத் துகள்கள் இப்போதும் இருக்கின்றன என்று ஆட்கள் கூறுகிறார்கள். இங்கு உள்ளவர்கள் எல்லாருக்கும் அந்த நிலத்தைப் பற்றி பெரிய பயம் இருக்கிறது. அவர்கள் அதை, “சைத்தானின் நிலம்'' என்றுதான் குறிப்பிடுகி றார்கள். சாயங்கால நேரம் வந்துவிட்டால், அதற்குப் பிறகு ஒரு மனித உயிரைக்கூட இந்த நிலத்தின் கூப்பிடும் தூரத்தில் பார்க்க முடியாது.