
“அம்மா... எனக்கு ஆரஞ்சுப் பழம் வேணும்.''
“திவாகரா... இங்கே எங்கும் ஆரஞ்சுப் பழம் கிடைக்காது. என் மகனே, உன் களைப்பை மாற்றுவதற்கு கொஞ்சம் பார்லி நீர் குடி...''
“அம்மா... என்னால் எதையும் குடிக்க முடியாது. ஆனால், நீங்க வற்புறுத்தினால் நான் குடிக்கிறேன்.''
தாயும் மகனும் இப்படி உரையாடிக் கொண்டிருந்தபோது நான் அங்கு நுழைந்தேன்.
திவாகரன் என்னைக் கூர்ந்து பார்த்துவிட்டு தன்னுடைய தாயிடம் ஏதோ ரகசியமாகக் கேட்டான். அவள் ஏதோ பதில் சொன்னாள்.
திவாகரன் என்னைத் தன் அருகில் வரும்படி அழைத்தான். நான் அவனுடைய மெத்தைக்கு அருகில் போய் நின்றேன்.
அவன் என் கையைப் பிடித்துக் கொண்டே சொன்னான்: “நீங்கள் செய்த உதவிக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன்.''
நான் புன்னகைத்துக் கொண்டே அவனுடைய மெத்தையில் உட்கார்ந்து அவனுடைய கையைத் தடவினேன்.
சிறிது நேரம் கழிந்ததும் அவன் கேட்டான்: “உங்களுக்கு என்ன வேலை?''
நான் சொன்னேன்: “நான் ஒரு வக்கீல்''.
“நான் படித்து பெரியவனாக ஆன பிறகு ஒரு வக்கீலாக வர வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். ஆனால், ஒரு டாக்டராக ஆவதுதான் நல்லதென்று இப்போது தோன்றுகிறது.''
நான் சிரித்துக் கொண்டே கேட்டேன்: “எதனால்?''
“காரணம்- நான் ஒரு சிறிய காரில் ஏறி எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கலாம். எல்லாரும் என்னை டாக்டர் திவாகரன் என்று அழைப்பார்கள். வக்கீல் திவாகரன் என்பதைவிட டாக்டர் திவாகரன் என்று இருப்பதுதான் நல்லது. பிறகு எனக்கு சொந்தத்தில் பெரிய மருத்துவமனை இருக்கும். அதற்கு நான் என்னுடைய தாயின் பெயரை வைப்பேன். "இந்திரா ஃபார்மஸி” என்று.'' அவன் அர்த்தம் நிறைந்த ஒரு குறும்புச் சிரிப்புடன், இடது கண்ணால் தூரத்தில் தைத்துக் கொண்டிருந்த தன்னுடைய தாயைச் சற்று பார்த்தான். இந்திராவும் சிரித்துக் கொண்டே என்னுடைய முகத்தைப் பார்த்தாள்.
தொடர்ந்து திவாகரன் என்னிடம் ரகசியமான குரலில் சொன்னான்: “எனக்கு ஒரு ரப்பர் குழாய் வேண்டும். அந்த டாக்டர் காதில் வைத்த பொருள் இருந்தது அல்லவா? அதைப் போன்று ஒன்று. அதன் பெயர் என்ன?''
“ஸ்டெத்தாஸ்கோப்'' என்று நான் சொன்னேன். அவன் அந்த பெயரை ஐந்தெட்டு தடவை திரும்பத் திரும்பக் கூறினான்.
அன்று சாயங்காலம் நான் கோழிக்கோட்டிற்குச் சென்று டாக்டர் பெயர் எழுதித் தந்த புதிய மருந்தையும், ஒரு டஜன் ஆரஞ்சுப் பழங்களையும் டாக்டர் தாஸிடமிருந்து ஒரு பழைய ஸ்டெத்தாஸ்கோப்பையும் வாங்கிக் கொண்டு திவாகரனிடம் வந்தேன்.
நான் கொண்டு வந்திருந்த சாமான்களையும் பரிசுகளையும் பார்த்து அவனுடைய முகம் மலர்ந்தது. அவன் படுக்கையை விட்டு எழுந்து உட்கார்ந்து, கூடையிலிருந்து ஆரஞ்சுப் பழங்களை ஒவ்வொன்றாக எடுத்து மெத்தைமீது வைத்தான். பிறகு... அந்த ரப்பரால் ஆன கருவியைக் காதில் வைத்துக் கொண்டான். முதலில் தன்னுடைய இதயத் துடிப்பையும் தன் தாயின் இதயத் துடிப்பையும் ஆர்வத்துடன் கவனித்தான். அதற்குப் பிறகு அவன் சிறிது நேரம் என்னுடைய முகத்தையே அமைதியாகப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். ஒரு மெல்லிய உருக்கத்துடன் என் கையைப் பிடித்து அழுத்தியவாறு திவாகரன் சொன்னான்: “நீங்கள் எவ்வளவு நல்ல மனிதர்! இப்படி யாரும் எங்களிடம் கருணை காட்டியதில்லை.''
தொடர்ந்து அவன் தன்னுடைய முகத்தை நான் முத்தமிட வேண்டும் என்பதைப் போல உயர்த்திக் காட்டினான்.
அந்த வெளிறிய வியர்வை அரும்பியிருந்த கன்னத்தில் உணர்ச்சி வசப்பட்டு நான் மீண்டும் மீண்டும் முத்தமிட்டேன்.
தன்னுடைய கன்னங்களைத் துடைத்துக் கொண்டே அவன் சொன்னான்: “என் தாயைப் போல, அந்த அளவிற்கு கடுமையாக முத்தமிட உங்களுக்குத் தெரியவில்லை சார்.''
மறுநாள் காலையில் நான் திவாகரனைப் பார்ப்பதற்காகச் சென்றேன். அவன் படுக்கையில் கண்களை மூடிக்கொண்டு தளர்ந்து போய் படுத்திருந்தான். இந்திரா மெத்தைமீது உட்கார்ந்திருந்தாள்.
என்னைப் பார்த்ததும் அவள் எழுந்து நான் உட்காருவதற்காக ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டாள். இந்திரா சொன்னாள்: “நேற்று இரவு திவாகரனுக்கு உடல்நலக் கேடு கொஞ்சம் அதிகமாகி விட்டது. ஒருமுறை சுயஉணர்வு இல்லாத நிலைகூட உண்டாகி விட்டது.'' ஆடையால் கண்ணீர் துளிகளைத் துடைத்துக் கொண்ட அவள் தொடர்ந்து சொன்னாள்: “எங்களுக்கு இங்கே யாரும் துணையென்று இல்லை. என்னை விற்றால்கூட பரவாயில்லை. நான் திவாகரனைக் காப்பாற்றியாக வேண்டும்.''
அவள் கருணை கலந்த ஒரு பார்வையை என்னை நோக்கிச் செலுத்தினாள். நான் அழவில்லை. அவ்வளவுதான்.
உடனடியாக நான் டாக்டரைத் தேடி ஓடினேன். மீண்டும் அவர் வந்து திவாகரனைச் சோதித்துப் பார்த்துவிட்டு திரும்பிச் சென்றார்.
திவாகரன் கண்களைத் திறந்தான். “என் அப்பா வந்துட்டாரா?'' என்று கேட்டான்.
எதிர்பாராத அந்தக் கேள்வியைக் கேட்டு நான் திகைத்துப் போய்விட்டேன். இந்திராவின் உதடுகளோ வெள்ளைத் தாளைப் போல வெளிறிப் போயின.
திவாகரன் சற்று கோபத்துடன் இந்திராவின் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டே மீண்டும் கேட்டான்: “சொல்லுங்க... என் அப்பா வந்துட்டாரா இல்லையா?''
அவள் உதட்டைக் கடித்துக்கொண்டு எதுவும் பேசாமல் நின்றிருந்தாள். திவாகரனின் கோபம் அளவுக்கு மேல் அதிகமானது. அவன் விரிப்பை எடுத்து வீசி எறிந்தான்.
“சொல்லுங்க... என் அப்பா வரவில்லையா? இல்லாவிட்டால் எனக்கு அப்பான்னு ஒருத்தர் இல்லையா?''
இந்திரா குலுங்கிக் குலுங்கி அழுதாள். திவாகரனின் நடவடிக்கை திடீரென்று மாறியது. அவன் ஒரு மான் குட்டியைப் போல அமைதியானவனாக ஆனான். இந்திராவை இறுக கட்டிப் பிடித்துக் கொண்டு அவன் சொன்னான். “அம்மா, அழாதீங்க. நான் என் னென்னவோ சொல்லிட்டேன். நான் தூங்கும்போது என் அப்பா வந்திருப்பதாக ஒரு கனவு கண்டேன். அதனால்தான் நான் கேட்டேன். அப்பா வரலைன்னா வேண்டாம். வர்றப்போ வரட்டும்.''
அந்த அன்னையும் மகனும் ஒருவரையொருவர் இறுக அணைத் துக் கொண்டார்கள். அந்த அணைப்பில் சிக்கிக் கொண்டு திவாகரன் கண்களை மூடித் தூங்கிவிட்டான். திவாகரன் உறங்கிய பிறகு, நான் இந்திராவிடம் மெதுவான குரலில் கேட்டேன்:
“அவன் தன் தந்தையைப் பற்றி விசாரிக்கிறானே! அவனுடைய அப்பா எங்கே இருக்கிறார்?''
இந்திரா முகத்தைத் தாழ்த்திக் கொண்டு உட்கார்ந்திருந்தாளே தவிர, எந்த பதிலும் கூறவில்லை. மழைபெய்து முடித்தவுடன் மரங் களிலிருந்து நீர்த்துளிகள் விழுவதைப் போல அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் வழிந்து கொண்டிருந்தன.
நான் மீண்டும் கேட்டேன்: “திவாகரனின் தந்தை உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?''
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook