திவாகரனின் தந்தை - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6750
இந்த நிலத்தில் இருக்கும் பலா, மாங்காய் போன்றவற்றை அணிலும் காகங்களும் தவிர யாரும் ருசித்துப் பார்ப்பதுகூட இல்லை. அது இருக்கட்டும். அந்தக் காலத்தில் ஒரு சாயங்காலப் பயணத்திற்காக இந்த வழியே வர நேர்ந்தபோது இந்த நிலத்தின் பயங்கர தன்மை என்னை முதல் தடவையாகக் கவர்ந்தது. சுற்றிலும் இருந்த இடங்களைவிட முற்றிலும் மாறுபட்டு இருந்த இதன் யாருக்குமே தெரியாத தன்மையும், தனிமை உணர்வும், பேரமைதியும், இனம் புரியாத தன்மையும் சேர்ந்து என்னை அதிர்ச்சியடையச் செய்தன. ஒன்றோடொன்று இணைந்து கிடக்கும் ஒரு பயங்கர ரகசியத்திற்குள் நுழைவதைப் போல அந்த நிலத்தை நான் உற்றுப் பார்த்தபோது, என்ன ஒரு ஆச்சரியம்! அந்த மரக் கூட்டங்களுக்கு மத்தியில் ஒரு வனதேவதை தோன்றினாள்.
ஆமாம்... நான் பார்த்தது ஒரு வனதேவதை அல்ல என்பதை எப்படி நம்புவது? சாயங்காலம் கடந்து விட்டிருந்த நேரமாக இருந்தி ருந்தால் நிச்சயமாக நான் பயப்பட்டு கூப்பாடு போட்டிருப்பேன்.
அந்த இளம்பெண் மின்னலைப் போல வேலிக்கு அருகில் வந்தாள். ஒரு இனம் புரியாத உணர்ச்சி அவளுடைய வெளிறிப் போயிருந்த முகத்தை ஒரு மாதிரி ஆக்கி விட்டிருந்தது.
“இங்கு அருகில் எங்காவது டாக்டர்கள் இருக்கிறார்களா?''
அவளுடைய குரல் சாதாரண மனிதக் குரல் அல்ல என்று எனக்குத் தோன்றியது. அந்த கறுத்த விழிகளை உருட்டியவாறு கண்களை இமைக்காமல் அவள் என்னுடைய பதிலை எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
சுமார் இரண்டு மைல் தூரத்தில், நீதிமன்றத்திற்கு அருகில், ஒரு டாக்டர் இருக்கிறார் என்ற விஷயத்தை நான் எப்படியோ கூறினேன்.
“சார்... நீங்கள் ஒரு உதவி செய்ய முடியுமா? அந்த டாக்டரை உடனடியாக சற்று அழைத்துக் கொண்டு வர வேண்டும். என் குழந்தைக்கு தீவிரமான நோய் வந்திருக்கு.''
“அப்படியே நடக்கட்டும்'' என்று சம்மதித்தவாறு நான் சிரமப்பட்டு திரும்பி நடந்தேன்.
ஒரு மணி நேரத்தில் ஒரு பழைய ஜட்கா வண்டியில் டாக்டர் குமாரதாஸும் நானும் அந்த நிலத்திற்கு அருகில் வந்தோம்.
மெல்லிய ஒரு பயத்துடனும் சந்தேகத்துடனும் நான் முன்னாலும் டாக்டர் பின்னாலுமாக அந்த வீட்டிற்குள் நுழைந்தோம்.
மழை பெய்து குழி விழுந்திருந்த முற்றத்தைத் தாண்டி நாங்கள் குறுகலானதும் இருளடைந்ததுமாக இருந்த ஒரு கூடத்திற்குள் நுழைந்தோம். நோயாளி தெற்கு பக்கத்தில் இருந்த அறையில் படுத்திருந்தான். அறையின் சுவர்களில் பாதி பெரிய கற்களைக் கொண்டும் மீதிப் பகுதி ஓலையாலும் உண்டாக்கப்பட்டிருந்தது. வெயிலும் மழையும் உள்ளே வராமல் இருக்கும் வண்ணம் மேல் கூரை ஓலையால் உண்டாக்கப்பட்டிருந்தது. தாழ்ப்பாள்கள் வைக்கப் படாத சாளரத்தின் வழியாக பகலின் எஞ்சியிருந்ததும் சோர்வடைந்தது மான வெளிச்சம் உள்ளே நுழைந்து கொண்டிருந்தது.
எங்களைப் பார்த்ததும் அவள் மரியாதையுடன் எழுந்து ஒரு பழைய நாற்காலியை எடுத்துப் போட்டாள்.
கையும் காலும் ஒழுங்காக இல்லாத நிலையில் இருந்த அந்த ஆபத்தான நாற்காலியைச் சற்று சந்தேகத்துடன் பார்த்துவிட்டு, டாக்டர் தன்னுடைய தோல் பையை அதன்மீது வைத்துவிட்டு, அருகில் குனிந்து நின்றார்.
அறையில் நல்ல வெளிச்சத்தைக் கொண்ட ஒரு தீபம் வேண்டுமென்று அவர் கூறினார். அவள் உடனே ஒரு "ஹரிக்கேன்” விளக்கை எரிய வைத்துக் கொண்டு வந்து ஒரு ஸ்டூலின்மீது வைத்து விட்டு விலகி நின்றாள்.
சுமார் ஒன்பது வயது இருக்கக்கூடிய ஒரு சிறுவன் கட்டிலின்மீது மல்லாந்து படுத்திருந்தான். அவனுடைய பிரகாசமான வட்ட முகத்தையும், ஒளி படைத்த பெரிய கருமையான கண்களையும் பார்த்து விட்டு டாக்டர் தன் தோல் பையைத் திறந்தார். உடனே சிறுவன் டாக்டரிடம் சற்று மிடுக்கான குரலில் சொன்னான்: “டாக்டர்... உங்களுடைய கைக்கடிகாரம் நின்று போய்விட்டது.''
டாக்டர் உடனே தன்னுடைய கைக்கடிகாரத்தைக் காதில் வைத்துப் பார்த்தார். அது நடக்கவில்லை. அவர் அதைத் துடைத்து ஓட விட்டு, ஒரு புன்சிரிப்புடன் சிறுவனின் முகத்தையே பார்த்தார்.
டாக்டர் சிறுவனைச் சோதித்துப் பார்த்துக் கொண்டிருக்க, அவனுடைய தாய் என்னை அருகிலிருந்த அறைக்கு அழைத்தாள். ஒரு தங்கத்தால் ஆன கம்மலை என்னுடைய கையில் தந்துவிட்டு அவள் சொன்னாள்: “என் கையில் டாக்டருக்குக் கொடுப்பதற்குப் பணமில்லை. தற்போதைக்கு இதை அடகு வைத்து தேவையானதைச் செய்தால், பெரிய உதவியாக இருக்கும்.''
அவளுடைய கையிலிருந்து அந்த கம்மலை வாங்குவதற்கு எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆனால், வாங்காமல் இருக்கக் கூடிய அளவிற்கு எனக்கு அவள் யார்? இந்த எண்ணமும் உண்டாகாமல் இல்லை. இறுதியில், நான் அவளைச் சமாதானப்படுத்தினேன்: “டாக்டருக்கு நான் பணம் தருகிறேன். பிறகு எனக்கு கொடுத்தால் போதும்.''
“சரியாக இருக்காது...'' அவள் வற்புறுத்தினாள்: “நீங்கள் இதை இப்போது வாங்கிக் கொள்ள வேண்டும். எனக்கு வேறு சில விஷயங்களுக்கும் பணம் தேவைப்படுகிறது.''
இறுதியில் மனமில்லா மனதுடன் நான் அந்த நகையை வாங்கினேன். நாங்கள் இருவரும் சிறுவன் படுத்திருந்த அறைக்குள் சென்றோம். அங்கு சிறுவனுக்கும் டாக்டருக்குமிடையே இந்த விதத்தில் ஒரு உரையாடல் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
“டாக்டர் குமாரதாஸ், இன்னும் நான் எத்தனை நாட்களுக்கு இப்படியே கிடக்கணும்?''
“என் குழந்தையே, ஒரு பதினைந்து நாட்களுக்குள் உனக்கு முழுமையான உடல் நலம் கிடைத்துவிடும்.''
“பதினைந்து நாட்களா? சார்... அந்தச் சமயத்தில் எனக்கு பதி னைந்து ஆங்கிலப் பாடங்கள் போய்விடுமே?''
“அது பரவாயில்லை... உடல் நலம்தானே பெரிய விஷயம்?''
டாக்டரும் நானும் வெளியே வந்தோம். சிறுவனின் நிலைமையைப் பற்றி நான் தனிப்பட்ட முறையில் டாக்டரிடம் விசாரித்ததற்கு அவர் சொன்னார்: “நிலைமை மிகவும் கவலைப்படக் கூடியது. சந்தேகப்பட வேண்டும். மிகவும் சந்தேகப்பட வேண்டும். டபுள் நிமோனியா...''
“எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. அவனை எப்படியாவது குணப்படுத்திவிட வேண்டும்.'' நான் சொன்னேன்.
“என்னால் முடியக்கூடிய அனைத்தையும் நான் செய்கிறேன். என்ன ஒரு அழகான பையன்!''
“ஆமாம்... ஆமாம்... தங்கக் கட்டியைப் போல இருக்கிறான்! அந்த அறையில் விளக்கின் தேவையே இல்லை என்று தோன்றுகிறது. கஷ்டம்! அந்தச் சிறுவன் போய் விட்டால்...?''
நாங்கள் குதிரை வண்டியில் ஏறி "தாஸ் ஃபார்மஸி'யின் முன்னால் போய் நின்றோம்.
டாக்டர் ஒரு புட்டி மருந்தைத் தயார் பண்ணி என் கையில் தந்தார். டாக்டரின் ஃபீஸையும் மருந்திற்கான விலையையும் நான் கொடுத்தேன். பிறகு மருந்தைக் கையிலெடுத்துக் கொண்டு நான் மீண்டும் அந்த வீட்டிற்கு வந்தேன்.