
அவன் அதிர்ச்சியடைந்து எழுந்து கட்டிலில் இருந்து பின்னால் நகர்ந்து நின்றான். தன் மனைவியைப் பார்த்தவாறு அவன் கதவுக்கு அருகில் போய் நின்றான்.
“நீ போய் பிச்சை எடுடா. கஞ்சிக்கு சம்பாதிக்கத் தெரியாதவன் பாராயணம் பண்றதுக்கு குடும்பத்தில் வந்து இருக்கிறானாம்!''
கட்டுப்பாட்டை இழந்து கத்தியவாறு, கைகளை முன்னோக்கி வீசிக் கொண்டு பெண் அவனை நோக்கி ஓடிச் சென்றாள். அவன் பயத்துடன் கதவுக்கு வெளியே போய் நின்றான். பெண்ணின் நெஞ்சு உயர்ந்து தாழ்ந்தது. கண்கள் மின்னின.
அவன் மூச்சை அடக்கிக் கொண்டு, சற்று நடுக்கத்துடன் மெதுவான குரலில் சொன்னான்:
“முட்டாளே! நரகம் என்ன என்று உனக்குத் தெரியுமா? இந்தப் பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் இரை தருவது யார்? பகவான்! அவர் நமக்கும் தருவார்.'' குரலை உயர்த்திக் கொண்டு சொன்னான்: “ஹ! பகவானிடம் நம்பிக்கை இல்லாமல் ஆகியிருக்கிறாய்! உணவைப் போன்ற சாதாரண விஷயங்களுக்காக கணவனை புராணத்தை வாசிக்க விடமாட்டேன் என்கிறாய். முட்டாளே!''
பெண் சிறிது நேரம் எதுவும் பேசாமல் நின்றாள். மேலும் அதிகமான தைரியத்துடன் கைகளைக் கதவின் இரண்டு பக்கங்களிலும் வைத்துக் கொண்டு அவன் தொடர்ந்து சொன்னான்: “ஹ! பகவானை மதிக்காமல் இருக்கிறாய்! உனக்கு நரகம்தான். கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் நீ பற்றி எரிவாய். பாம்புகளையும் பிசாசுகளையும் உனக்குத் தெரியுமா? ச்சே... புராணத்தை வாசிக்க விடவில்லை!''
பெண் மீண்டும் பேசாமல் நின்றிருந்தாள். மின்னிக் கொண்டிருந்த கண்கள் மட்டும் அசைவே இல்லாமல் அவனைத் துளைத்து எடுத்துக் கொண்டிருந்தன. அவன் வீட்டிற்குள் வந்தான். கிழிந்து போன ஒரு சட்டையையும் ஒரு பழைய வேட்டியையும் எடுத்து அணிவதற்கு அவனிடம் தைரியம் இருந்தது. நரகத்தைப் பற்றிய விளக்கம் உரத்த குரலில் தொடர்ந்து கொண்டிருந்தது.
திடீரென்று மனைவி ஒரு பாம்பைப் போல சீறியவாறு இரண்டு கைகளையும் சுருட்டி அவனை நோக்கிப் பாய்ந்து சென்றாள். அவளுடைய கண்கள் வெறித்து நின்றன. கோபத்தால் மெலிந்துபோன கால்கள் நடுங்கின. அவன் அதிர்ச்சியடைந்தான். அடுத்த நிமிடம் வாசலுக்குச் சென்றான். அவனைத் தொடர்ந்து திண்ணைக்குப் பாய்ந்து வந்த பெண் கூறத் தொடங்கினாள்:
“இதுதான்டா நரகம். நீதான் பிசாசு. என்னைக் கொல்லாமல் கொல்கிறாய் அல்லவா? உன்னுடைய பகவானும் நரகமும்! நீதான்டா நரகம்.... சைத்தான்!''
பழைய ஒரு கத்தியைக் கையில் எடுத்துக்கொண்டு அவள் வாசலை நோக்கி ஓடினாள். அவள் வியர்வையில் குளித்திருந்தாள். ஆடை அவிழ்ந்து விட்டிருந்தது. உடலெங்கும் எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன.
அவன் சாலைக்குச் சென்று பயத்துடன் ஓடியே போய்விட்டான். நரகத்தைப் பற்றிய சிந்தனை நின்று போயிருந்தது.
அந்தப் பெண் மீண்டும் திண்ணைக்கு வந்தாள். இருமல் அவளை பாடாய்ப் படுத்தியது. இருமலுக்கு மத்தியில் உரத்த குரலில் கத்தியவாறு அவள் திண்ணையில் ஓடினாள்.
வழிப்போக்கர்கள் ஆச்சரியத்துடன் வெறித்துப் பார்த்தார்கள்.
நரகம்! அவனுடைய நரகம்! நான் நரகத்திற்குத்தான் செல்ல வேண்டும்! இங்கு ஒரு கயிறு இல்லையா? ஒரு கயிறு...
அறை முழுக்க ஒரு கயிறுக்காகத் தேடினாள். கயிறு இல்லை. கோபம் அதிகமானது. கெட்ட வார்த்தைகள் வெளியே வந்தன. கத்தியை எடுத்துக் கொண்டு கட்டில்மீது ஏறி, தொட்டில் கயிற்றின் மேலே இருந்த பகுதியை அறுத்தாள். தொட்டில் ஒரு அசைவுடன் தரையில் விழுந்தது. குழந்தை சுய உணர்வில்லாமல் இருந்தது. பெண் கயிற்றைப் பிடித்து அவிழ்த்து, ஒரு ஒடிந்த நாற்காலியில் ஏறி, மேலே இருந்த கொம்பில் இறுகக் கட்டினாள். முடிச்சு போட்டாள். தலையை முடிச்சுக்குள் நுழைத்தாள்.
குழந்தை சத்தம் போட்டு அழ ஆரம்பித்தது. அது கைகளையும் கால்களையும் அசைத்து ஒரு புழுவைப்போல நெளிந்தது. சிறிது நேரம் பெண் ஆழமான வெறுப்புடன் அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள். தலையை முடிச்சுக்குள் இருந்து எடுத்துவிட்டு, அவள் கீழே இறங்கினாள். மோசமான வார்த்தைகளால் திட்டியவாறு அதைத் தொட்டிலில் இருந்து வெளியே எடுத்து, சுருங்கிப்போன ஒரு மார்பகத்தை அதன் வாய்க்குள் திணித்துவிட்டுக் கத்தினாள்: “குடி... பிசாசே... குடி....'' சற்று நேரம் கடந்ததும், கீழே உட்கார்ந்து இன்னொரு மார்பகத்தைத் தேடி குழந்தையின் வாய்க்குள் வைத்தாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook