Lekha Books

A+ A A-

கிராமப்புற விலைமாது - Page 3

ஒரு கணவனை உண்டாக்குவதற்கு – மனைவி என்ற பதவியை அவள் கனவு காணுவாள். முன்பு கமலம்மா விட்டெறிந்து பேசச் கூடியவளாக இருந்தாள். எந்தவொரு காதலனையும் அவள் பொருட்படுத்தியதில்லை. அவளுடைய உதைகளை வாங்கியவர்கள் இருக்கிறார்கள். அவளால் எச்சில் துப்பப்பட்டவர்கள் இருக்கிறார்கள். எதிர்ப்பைப் பொறுத்துக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அந்த வாழ்க்கை.... கேவலம் என்றுதான் சொல்ல வேண்டும் – காரியத்தில் மட்டுமே கண் வைத்திருக்கக் கூடிய ஒன்றாக இருந்தது. பேசி பணத்தை வாங்கி, அதற்கான விலையைக் கொடுத்தாள். அவ்வளவுதான். ஒருவனையும் அவள் உபசரித்ததில்லை. யாரிடமும் கொஞ்சியதில்லை. குழைந்ததில்லை. யாருக்கும் கீழ்ப்படிந்ததில்லை. அங்கு வந்தவர்கள் அனைவரும் அவளுடைய தாசர்களாக இருந்தார்கள்.

இன்று? அவள் அனுசரித்துப் போக கற்றுக் கொண்டாள். இன்று இரவு நேரத்தில் ஒரு காதலனுக்காக கதவைத் திறக்கும்போது, அவள் வேண்டிக் கொள்கிறாள்... ‘கடவுளே! இவன் என்றென்றும் எனக்கு இருக்க வேண்டும்’ என்று. அவள் ஒவ்வொரு இரவிலும் அன்றன்றைய காதலனுக்காக வாழ்கிறாள். அந்த மாதிரி நேரங்களிலெல்லாம் அவள் நினைப்பாள் - ‘நான் மனைவி’ என்று. மனைவி ஆகக் கூடிய பாடங்களை அவள் அந்த வகையில் கற்றுக் கொண்டாள்.

கமலம்மா கர்ப்பமாக ஆனாள். அதை உண்டாக்கியது ஒரு எக்ஸைஸ் அலுவலகத்தில் வேலை பார்ப்பவன். அவன் அதை மறுத்தான்.

அவளுடைய தாய் மரணத்தைத் தழுவி விட்டாள். வனஜா யாருடனோ சேர்ந்து ஓடிப் போய் விட்டாள். ராமன் குஞ்ஞு எங்கோ போய் விட்டான்.

அந்த குழந்தையை அவள் வளர்த்துக் கொண்டு வந்தாள். அதை மடியில் படுக்க வைத்து, அதன் முகத்தைப் பார்த்தவாறு அவள் சிந்திப்பாள் – ‘இவனுடைய அப்பா யார்?’ என்று. அந்த கதை தெரியாத குழந்தை சிரிக்கும். தன் அன்னையின் மூக்கைப் பிடிப்பதற்காக கையை உயர்த்தும். அவன் பிறந்ததற்கு மூல காரணமாக இருந்த அந்த ஆணின் மீது அன்பு செலுத்தலாம் என்று அவள் மனதிற்குள் முடிவு செய்வாள்.

இளம் வயதில் சிலர் அவளிடம் கூறிய உணர்ச்சி வசப்பட்ட வாக்குறுதிகளையும் சபதங்களையும் அவள் நினைத்துப் பார்த்தாள். சந்தர்ப்பங்கள் அனைத்தும் பாழாகி விட்டன. இப்போது யாரும் எந்தவொரு வாக்குறுதியையும் தருவதில்லை. வாழ்வதற்காக இன்று அவள்தான் எதிர் பார்த்துக் கொண்டிருப்பவள்.

பக்கத்து வீடுகளில் இருந்த பெண்களிடம் அவள் ஒருநாள் கூறினாள்:

‘நாறாபிள்ளை அண்ணன் நேற்று வந்திருந்தார். அவர்தான் அங்கு தேவைப்படுவதைப் பற்றி விசாரிக்கிறார்.’

இப்படியே ஒரு வாரம் தாண்டிய பிறகு, அவள் கூறுவாள்:

‘கோபாலன் நாயர் அண்ணன்தான் விசாரிக்கிறார்.’

அந்த வகையில் அனைவரும் அவளைப் பார்த்து பயப்பட ஆரம்பித்தார்கள். அவளுடன் கொஞ்சம் பேசினால், அது வெளியே வந்து விடும்.

அதற்குப் பிறகும் கமலம்மா பிரசவித்தாள். அது ஒரு பெண் குழந்தை. வறுமை மிகவும் அதிகமானது. அவளுக்கு வயது முப்பத்தைந்தும் ஆனது. காலையில் ஒரு குழந்தையைக் தூக்கிக் கொண்டும், இன்னொன்றை நடக்க வைத்துக் கொண்டும் அவள் வீட்டை விட்டு வெளியேறுவாள். ஒரு தட்டை தலையில் வைத்துக் கொண்டு பாதையில் நடக்கும் போது, பழைய அன்பிற்குரியவர்களில் சிலரை அவள் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகலாம்.

‘அண்ணா!’ – அவள் வாயைத் திறந்து சிரிப்பாள். அவர்கள் யாரும் அவளைப் பார்த்தது மாதிரியே காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

‘துரோகி! அழிஞ்சிடுவே!’ – அவள் கண்ணீருடன் சாபமிடுவாள்.

அந்த வகையில் அவள் தூரத்தில் இருக்கும் இடங்களுக்கும் பிச்சை எடுப்பதற்காகச் செல்வாள். இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகுதான் திரும்பி வருவாள்.

கமலம்மா மீண்டும் கர்ப்பமானாள். பிரசவித்தாள்! ஒரு பெண் குழந்தை.

கிழிந்த துணித் துண்டைச் சுற்றி, தலை முடியை சடையாக கட்டி, கறுத்துப் போய் – அவளுடைய தோற்றம் இரக்கத்தை வரவழைக்கக் கூடியதாக இருந்தது.

நல்ல வசதிகள் இருந்த காலத்தில் அவள் அடித்து விரட்டிய ஒரு ஆண் அவளுக்கு நான்கு சக்கரங்களைக் (பழைய திருவிதாங்கூர் நாணயம்) கொடுத்தான். கமலம்மா அழுது கொண்டே வாங்கிக் கொண்டாள். அவனுடைய இரக்கம், வாழ்க்கையின் தோல்வியை அவளிடம் ஞாபகப்படுத்தியது.

‘என்னிடம் அன்பு இருந்ததா?’ – அவள் கேட்டாள்.

‘இருந்தது’ – இரக்கத்துடன் அவன் பதில் கூறினான்.

‘என்னை... அன்று மனைவியாக ஏற்றுக் கொண்டிருப்பீர்களா?’

‘அதுதான் என்னுடைய விருப்பமாக இருந்தது.’

அவள் நீண்ட பெருமூச்சை விட்டு விட்டு, எதுவுமே கூறாமல் நடந்தாள். இனிமேலும் அதற்கு ஆசைப்படக் கூடாது. எனினும், ஒரு விஷயத்தைக் கேட்பதற்காக அவள் முயன்றாள். அதற்காக திரும்பி நின்றாள். ஆனால், கேட்கவில்லை.

பாதையின் அருகிலிருந்த ஒரு மரத்திற்கு அடியில் மரணத்துடன் போராடிக் கொண்டு மூச்சு விட்டுக் கொண்டிருந்த ஒரு குழந்தையை மடியில் வைத்தவாறு அவள் அமர்ந்திருக்கிறாள்.

சூரியன் மறையும் நேரம் வரையில் அவளை அந்த நிலையில் பார்த்தார்கள். மற்ற இரண்டு குழந்தைகளும் அவளுக்கு அருகில் இருந்தார்கள். மறுநாள் காலையில் அந்த குழந்தையின் இறந்த உடல் மட்டும் மரத்திற்கு அடியில் கிடந்தது. காகம் அதன் கண்களை கொத்தி இழுத்து வெளியே போட்டது.

தூரத்திலிருந்த அந்தச் சிறிய நகரத்தில் ஒரு பச்சிளம் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அலைந்து திரிவதை அந்த ஊரில் உள்ளவர்கள் சிலர் பார்த்தார்கள். ஒரு நான்கைந்து மாதத்திற்கும் அதிகமாக அதற்கு வயது இருக்காது.

வருடங்கள் சில கடந்தோடின. ஒரு வயதான பெண் அந்த கிராமப் புறத்தில் மதிப்புடன் இருக்கும் ஒரு மனிதனின் வீட்டிற்குச் சென்றாள். அவள் ஒரு பிச்சைக்காரி. அந்த பெரிய மனிதன் – அவன் ஒரு வயதான மனிதன் – அவளையே வெறித்துப் பார்த்தான்.

‘ம்.. என்ன?’ – அவன் கேட்டான்.

‘என்னை தெரியலையா?’

குரல் தடுமாற, அவன் கூறினான்: ‘இ... இல்லை...’

அவள் ஒரு அடக்க முடியாத சிரிப்புடன் கூறினாள்:

‘நான்... கமலம்மா.’

அந்த பெரிய மனிதன் சற்று அதிர்ச்சியடைந்ததைப் போல தோன்றியது. சிறிது நேரத்திற்கு யாரும் பேசவில்லை.

‘நான் என் வீட்டில் வசிப்பதற்காக வந்திருக்கிறேன்.’

‘சரி.... சரிதான்...’

‘எனக்கு செலவிற்கு தரணும்.’

‘நானா? எதற்கு?’

அவள் குலுங்கிக் குலுங்கி சிரித்தாள்.

‘எதற்கா? பத்து... நாற்பது வருடங்களுக்கு முன்பு.. அன்று இரவு வேளையில் பத்மநாபன் நாயரை... ஞாபகத்துல இல்லையா? அதை இப்போதும் ஆட்கள் ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள்.’

அந்த பெரிய மனிதன் பற்களைக் கடித்தவாறு உரத்த குரலில் கத்தினான்: ‘ஓ...! நாசம்!’

அவள் பிசாசுத்தனமாக சிரித்தாள்.

‘என்ன... என்னை காப்பாற்ற மாட்டீங்களா?’

‘நீ சாகக் கூடாதா?’

‘இல்லை... இல்லை... இப்படி நான் எல்லாரையும் பார்ப்பேன். எனக்கு அருகில் யாரும் பெரிய மனிதனாக இருக்க வேண்டாம்.’

பாதையின் அருகிலிருந்த ஒரு மண் குடிசை. அதற்கு அழகோ சுத்தமோ இல்லை. உரிய நேரத்தில் வேயாததால், அந்த கூரை சிதிலமடைந்திருந்தது. இரண்டு வயதானவர்கள் மட்டுமே அங்கு வசிக்கிறார்கள். ஒருத்தி – கமலம்மா. இன்னொருத்தி – வனஜா. எங்கெங்கோ சென்ற ஒரு வாழ்க்கைக்குப் பிறகு அவள் திரும்பி வந்தாள்.

அந்த வழியே யாரும் செல்வதில்லை. யார் சென்றாலும், அவள் ஏதாவது கேட்பாள். பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் இப்போதும் அந்த ஊர்க்காரர்களில் ஒரு வீட்டுக்காரர்களாக அவர்களை கருதுகிறார்கள்.

Page Divider

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel