கிராமப்புற விலைமாது
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4631
கிராமப்புற விலைமாது
தகழி சிவசங்கரப்பிள்ளை
தமிழில்: சுரா
பாதையின் அருகிலிருந்த ஒரு மண்ணால் ஆன குடிசை. சிறிதாக இருந்தாலும், ஒரு சுத்தமும் பளபளப்பும் அதில் இருந்தன.
அதன் வாசலில் மாலை வேளையில் நல்ல ஆடைகள் அணிந்த ஒரு இளம் பெண்ணைப் பார்க்கலாம். அவள் ஒரு முல்லை மாலையைச் சூடியிருப்பாள். ஒரு குங்குமப் பொட்டை அவள் அணிந்திருப்பாள்.
கமலம்மா அழகிதான். நல்ல அழகான கண்களைக் கொண்ட சரீரம். கள்ளங்கபடமற்ற தன்மை, ஏராளமான தலைமுடி – இவையெல்லாம் அவளுடைய சொத்துக்கள்.
அவளுக்கு ஐந்து வயதைக் கொண்ட ஒரு தம்பி இருக்கிறான். எட்டு வயது உள்ள ஒரு தங்கை இருக்கிறாள். நடுத்தர வயதைக் கொண்ட ஒரு தாய் இருக்கிறாள்.
வீட்டிற்குள் அவளுடைய தாயும் ஒரு இளைஞனும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அவன் மிகவும் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டிருந்தான். அவனுடைய நோக்கத்தை அனுபவங்கள் பலவற்றைப் பார்த்த அந்த வயதான பெண் புரிந்து கொண்டாள். அவனுக்குள் ஒரு ஏக்கம் இருப்பது வெளிப்படையாக தெரிந்தது. ஊரிலுள்ள இளம் பெண்களைப் பற்றியதாக இருந்தது அந்த உரையாடல்.
‘அது நடக்கக் கூடியதுதான்’ – அந்த வயதான பெண் சொன்னாள்: ‘அது உலகத்தில் நடந்து கொண்டிருப்பதுதான். ஆண்கள் பெண்களை தேடிச் செல்வார்கள்.’
‘அப்படியென்றால், நான் அவளைத் தேடிச் சென்றது தவறா?’ – இளைஞன் கேட்டான்.
‘நிச்சயமாக இல்லை. பிறகு... ஒரே ஒரு விஷயம் இருக்கு. யாருக்கும் தெரியக் கூடாது.’
‘அதை நான் சத்தியம் செய்து கூறினேன்.’
‘டேய்.... ஆமாம்.... பெண்களுடன் பழகணும். இந்த காகத்திற்கு போட்டால், கொத்தாத பிணத்தைத் தேடி உன்னைத் தவிர, யாராவது போவாங்களா? இங்கே பாரு.... என் மகள் இருக்கிறாள். கமலம்மா... நான் என் மகள் என்பதற்காக சொல்லவில்லை. அவளை ஒரு ஆண் கூட தொட்டதில்லை. எனினும், ஒரு ஒழுக்கம் வேணும்டா...’
‘அது உண்மைதான்.’
இவ்வாறு அந்த உரையாடல் கொஞ்சம் பணம் கை மாறலில் போய் முடிந்தது. இளைஞன் ஒரு பொட்டலத்தை அவளுடைய கையில் கொடுத்தான். அவள் அதை வாங்கி எண்ணிப் பார்த்தாள்.
‘இது எதுக்குடா?’ – அந்த வயதான பெண்ணின் நெற்றி சுருங்கியது.
‘இப்போது இவ்வளவுதான் இருக்கு’ – இளைஞன் ஏக்கத்துடன் சொன்னான்: ‘நான்...’
அந்த பெண் அந்த சக்கரத்தை (பழைய திருவிதாங்கூர் நாணயம்) அவனுடைய முகத்தின் மீது வீசினாள்.
‘உனக்கு வெட்கமாக இல்லையாடா? பதினான்கு சக்கரம்! அவளுக்கு பதினேழு வயதுதான் நடக்குது. நீ இதை வச்சுக்கிட்டு... முன்பு சொன்னேல்ல... அவளுக்கு கொடு. உன்னோட எச்சில் தரத்திற்கு அவள் பொருத்தமாக இருப்பாள்.’
‘என் தாய் சத்தியமா.... கடவுள் சத்தியமா. என் கையில் இப்போது இவ்வளவுதான் இருக்கு. அதனாலதான் நான்...’
ஏழரை கோழி கூவியபோது அந்த வயதான பெண் கண் விழித்தாள். பக்கத்து அறையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த மகளை தட்டி எழுப்பினாள்.
‘அடியே! பொழுது விடிஞ்சிருச்சு...’
ஒரு மெல்லிய உரையாடல் அந்த அறைக்குள் கேட்டது. சிறிது நேரம் கழித்து, அந்த வயதான பெண் மீண்டும் பொழுது விடிந்த தகவலை தன் மகளிடம் ஞாபகப்படுத்தினாள். கதவு ‘கிர்ர்’ என்று திறக்கப்படும் சத்தம் கேட்டது.
கமலம்மாவிற்கு விசேஷமான ஆடைகள் இருந்தன. நகைகள் இருந்தன. அவள் எந்தச் சமயத்திலும் எந்தவொரு ஆணுடனும் பேசி, யாரும் பார்த்ததில்லை. எந்த ஆண் அந்த வழியே கடந்து சென்றாலும், அவள் அலட்சியமாக சற்று பார்த்திருக்கலாம். ஆனால், அந்த கண்களுக்கு அசாதாரணமான ஒரு சக்தி இருந்தது. அந்த வகையில் அழிவதற்கு தயாராகாமல், விலை தராமல் மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டிருந்தாள்.
ராமன் குஞ்ஞு ஒரு பெரிய பொட்டலத்தை தன் நெஞ்சோடு சேர்த்து பிடித்தவாறு, அதிலிருந்து மிட்டாய்களை எடுத்து... எடுத்து தின்று கொண்டிருந்தான். அவன் உற்சாகத்துடன் குதித்து விளையாடிக் கொண்டிருந்தான். அந்த மிட்டாய்களை கொடுத்தவன் பத்மநாபன் அண்ணன். ஆறேழு மணி ஆகி இருட்டியபோது, அந்த அண்ணன் மீண்டும் வீட்டிற்கு வந்தான். அப்போது ஒரு நல்ல அரைக் கால் ட்ரவுசரை கொண்டு வந்திருந்தான். அவன், ராமன் குஞ்ஞுவை தன் மடியில் அமர வைத்து விளையாட வைத்தான்.
நள்ளிரவு வேளை நெருங்கியபோது, ஒரு அழுகைச் சத்தம் கேட்டது. ராமன் குஞ்ஞு அதிர்ச்சியடைந்து கண் விழித்தான். அவன் தன் தாயை அழைத்தான். தாய் கதவைத் திறந்து வெளியே வந்தாள். சில முனகல் சத்தங்களும் கேட்டன. பாயிலிருந்து தலையை உயர்த்தி அவன் வெளியே பார்த்தான். மங்கலான வெளிச்சத்தில் வாசலில் யாரோ படுத்து உருளுவதை அவன் பார்த்தான்.
மறுநாள் அதிகாலை வேளையில், அருகிலிருந்த நிலத்தில் நின்று கொண்டிருந்த மாமரத்தின் கிளையில், அந்த நல்ல மனிதனான பத்மநாபன் அண்ணன் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான்.
‘நேற்று பத்மநாபன் அண்ணன் எனக்கு அரைக்கால் சட்டையும் மிட்டாயும் தந்தார்’ என்று அந்தச் சிறுவன் கூறியபோது, அவனுடைய தாய் அவனின் வாயை இறுக மூடினாள். அதற்குப் பிறகு அவன் அதை கூறவில்லை. ரகசியத்தைக் காப்பாற்றுவதற்கு அவன் கற்றுக் கொண்டான்.
வனஜா – அதுதான் அவளுடைய தங்கையின் பெயர். வனஜாவின் கையில் ஒரு சிறிய பொட்டலத்தை பங்கஜாக்ஷன் அண்ணன் கொடுத்தான்: ‘இதை வெந்நீரில் போட்டு அக்காவைக் குடிக்குமாறு சொல்லணும்.’
தாய்க்கும் அக்காவுக்குமிடையே சமீபத்தில் ஒரு சண்டை நடந்தது. தாய் மிகவும் மோசமான வார்த்தைகளில் திட்டினாள். கமலா கேட்டாள்: ‘என்னை என்ன செய்யச் சொல்றே, அம்மா?’
‘அதற்காக இப்படியெல்லாம் செய்யணும்னு நான் சொன்னேனா?’
‘இப்படி வரும் என்று உனக்கு தெரியாதா, அம்மா? அம்மா, நீ மூணு பிள்ளைகளைப் பெற்றவள்தானே?’
‘அடியே! ஆமாம்... அப்படி அறிவு கெட்டு பேசினால், போதாது. எனக்கு வயசு குறைவு என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளணும். கவனமாக இருக்கணும் என்பதை நான் சொல்லாமலிருந்தேனா?’
நள்ளிரவு நேரத்தில் ஒரு பலவீனமான முனகல் சத்தம் கேட்டது. வனஜா கண் விழித்தபோது, அவளுக்கு அருகில் அவளின் தாய் இல்லை. பக்கத்து அறைக்குள்ளிருந்த சிறிய சாளரத்தின் வழியாக ஒரு பிரகாசம் வந்து கொண்டிருந்தது. வனஜா எழுந்து பார்த்தாள். அவளுடைய தாய் அக்காவின் கையை பலமாக பிடித்திருக்கிறாள். தாடி வளர்த்த ஒரு அரக்கன் அக்காவின் கால்களை மிதித்து பிடித்தவாறு, குனிந்து நின்று கொண்டிருக்கிறான். அக்கா இரத்தம் சிந்த மல்லாக்க படுத்திருக்கிறாள்.