கிராமப்புற விலைமாது - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4624
கமலம்மா நோயாளியாக சில நாட்கள் கிடந்தாள். அந்தக் காலத்தை ராமன் குஞ்ஞு நினைத்துப் பார்க்கிறான். போலீஸ்காரர்கள் அங்கு வந்தார்கள். ஒரு பெரிய மீசை வைத்திருந்த மனிதன் அக்காவை அடிப்பதற்காக காலை மடக்கினான். அவர்கள் என்னவோ எழுதிக் கொண்டு போனார்கள். அவனுக்கு எதுவுமே புரியவில்லை.
கமலம்மாவின் நோய் குணமானது. ஆனால், என்ன ஒரு வித்தியாசம்! அவளுடைய தலை முடி முழுவதும் உதிர்ந்து விட்டது. சரீரம் வெளிறி, மெலிந்து, எலும்புகள் வெளியே தெரிந்தன.
அவளுடைய தாய் நல்ல தாயத்து தயார் செய்து, அவளுடைய உடல் நிலையை ஒரு வகையில் திரும்ப கொண்டு வந்தாள். ஆனால், இளமை கையை விட்டு போய் விட்டது. அந்த வீட்டின் அழகில் ஒன்று குறைந்து விட்டது. ராமன் குஞ்ஞுவிற்கு கஞ்சிக்கோ சோற்றுக்கோ பிரச்னை இல்லை. ஆனால், பலகாரங்கள் இல்லை. புதிய சட்டையோ, ட்ரவுசரோ எதுவும் கிடைக்கவில்லை. யாரும் அவற்றைக் கொண்டு வந்து கொடுக்கவுமில்லை. அவன் தன் அக்காவைப் போட்டு நச்சரித்தான்.
குத்து விளக்கிற்கு முன்னால் அமர்ந்து அந்தச் சிறுவன் பாடம் படிக்கிறான். அவனுக்கு அருகிலேயே கமலம்மாவும் அமர்ந்திருக்கிறாள். வெளியே நாய் குரைத்தது. ஒரு ஆள் வாசலில் வந்து நிற்கிறான். அவன் திண்ணையில் ஏறினான்.
‘ஒரு பீடி பற்ற வைக்கணும்.’
கமலம்மா எழுந்து கதவிற்குப் பின்னால் போய் நின்றாள். வாசற் படியில் வைத்திருந்த விளக்கிலிருந்து அந்த ஆண் பீடியைப் பற்ற வைத்து விட்டு, வாசலுக்குச் சென்றான். சிறிது நேரம் கழித்து பீடி அணைந்து விட்டதென்று கூறியவாறு அவன் திண்ணையில் ஏறினான். மீண்டும் வாசலுக்குச் செல்ல ஆரம்பித்தபோது, அவன் ஒரு சைகை செய்தான். சிறிது நேரம் கழித்து அக்காவும் வாசலுக்குச் சென்றாள்.
ராமன் குஞ்ஞு எதையோ நினைப்பதைப் போல எந்தவித அசைவுமில்லாமல், எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான். அவனுக்கு ஒன்பது வயது நடக்கிறது. வாசலில் நடைபெற்ற ஒரு உரையாடல் அவனுடைய காதில் விழுந்தது.
‘அந்த சிறுவன்... அவன் கேட்பான்.’
‘ஓ! அது பரவாயில்லை’ – அதை கூறியது அவனுடைய சகோதரிதான். ராமன் குஞ்ஞு சற்று எட்டி பார்த்தான். அன்று இரவு அவன் தூங்கவேயில்லை. அவனுக்கு உறக்கம் வரவில்லை. தாழ்ந்த குரலில் இருக்கக் கூடிய உரையாடல்களுக்கு அவனுடைய காது காத்திருந்தது.
‘உங்களுடைய இளைய மகளை இங்கே வரச் சொல்லுங்க’ – யாரோ கூறினார்கள்.
‘அய்யோ! சின்ன பொண்ணு!’ – அம்மா கூறினாள்.
‘ஓ! இங்கே கூப்பிடுங்க.’
அவனுடைய அன்னை வனஜாவைத் தட்டி எழுப்பி, பக்கத்து அறைக்கு அழைத்துக் கொண்டு செல்வதை ராமன் குஞ்ஞு பார்த்தான்.
மறுநாள் அவளுடைய கையில் சக்கரமும் (பழைய திருவிதாங்கூர் நாணயம்) இருந்தது.
கமலம்மா ஒரு காலத்தில் விலை மதிப்புள்ள பொருளாக இருந்தாள். இன்று அந்த பொருளின் வயது தடையாக இருந்தது. ஆனால், அந்த வீடு வாழ்ந்து கொண்டிருந்தது. முன்பு கூறுவது கிடைத்தது என்றால், இன்று கொடுப்பதை வாங்கிக் கொள்கிறாள்.
அவள் வனஜாவை அழகு படுத்துவாள். அவளுடைய தலை முடியை வாரி கட்டி விடுவாள். நல்ல புடவையை அணிவிப்பாள். வனஜாவும் நல்ல அழகான ஒரு இளம்பெண்தான்.
அந்த வழியே ஒருவன் கடந்து சென்றான். அவன் அவளை கவனிக்கவேயில்லை. கமலம்மா வனஜாவிடம் என்னவோ கூறினாள். அவள் படியைக் கடந்து பாதையை அடைந்து ஓடினாள்.
சிறிது நேரம் கழித்து அவள் திரும்பி வந்து கொஞ்சம் நாணயங்களை தன் அக்காவின் கையில் கொடுத்தாள்.
‘இப்போ இவ்வளவுதான் இருக்குன்னு சொன்னார், அக்கா.’
‘நாளை உன்னுடைய பிறந்த நாள் என்று நீ சொல்லவில்லையா?’
‘சொன்னேன். பிறகு... சாயங்காலம் வர்றப்போ தர்றேன்னு சொன்னாரு.’
கமலம்மா ஒரு நீண்ட பெருமூச்சை விட்டாள். அவளுடைய கண்கள் நீரால் நிறைந்தன. புடவையின் தலைப்பால் அதைத் துடைத்து விட்டு, அவள் உள்ளே சென்றாள்.
‘அம்மா! நான் வனஜாவைக் கூறி அனுப்பி வைத்து, நான்கு சக்கரங்கள் (பழைய திருவிதாங்கூர் நாணயம்) கிடைத்தன.’
அவள் அழுது விட்டாள். அவளே கூறி அனுப்பி வைக்க வேண்டிய நிலை உண்டாகி விட்டது. யாரும் அவளைத் தேடி வருவதில்லை. அந்த காலம் கடந்து சென்று விட்டது.
கமலம்மா நீண்ட நேரமாக கண்ணாடியை எடுத்து பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள். அவளுடைய செல்வம் போய் விட்டதாக அவளுக்கே தோன்றியது.
தாய் மகளிடம் கூறினாள்:
‘பெண் என்றால், ஒரு ஒழுக்கம் இருக்கணும்.’
‘நான் என்ன ஒழுக்கக் கேட்டைக் காட்டி விட்டேன்?’
‘உனக்கு, ஒரு துணி வாங்கித் தருவதற்கு ஒருத்தன் இருக்கானா?’
‘அம்மா, அப்படி ஒருத்தன் வாங்கி தருவதை நீ ஒத்துக் கொள்ள மாட்டே...’
அப்போது அவளுக்கு கவலை உண்டானது. இனியும் பரவாயில்லை என்று தோன்றக் கூடிய ஒருவன் வருவானா?
‘என் வாழ்க்கையை இப்படி வீணாக ஆக்கி விட்டு... கடவுளே!’
கமலம்மா தேம்பித் தேம்பி அழுதாள்.
நிறைய வாழ்ந்தவளாக இருந்தாலும், மனைவியாக ஆக வேண்டும் என்ற ஆசை அவளுக்குள் உண்டாகி விட்டிருந்தது.
‘உன் வாழ்க்கையை நான் எப்படிடீ பாழாக்கினேன்?’
‘ஒன்றுக்குப் பிறகு இன்னொன்றாக...’
‘இந்த அறிவு உனக்கு அன்று இல்லையா?’
‘நான் எதுவுமே தெரியாத சின்ன பொண்ணு! ஜரிகை போட்ட மேற் துண்டும்.. கடவுளே! துரோகி!’
அந்த இளமையின் ஆரம்பத்தில் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால் தூண்டப்பட்டு ஒன்றிற்குப் பிறகு இன்னொன்று என்று வழுகி, அவள் வீழ்ச்சியடைந்து விட்டாள். இன்று அவளுக்கு புரிந்து விட்டது – தனக்கென்று எதுவுமே எஞ்சியிருக்கவில்லை என்ற உண்மை. ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானவளாக இருந்தால் போதும் என்று அவள் நினைத்தாள். பலருக்கும் சொந்தமானவளாக இருந்து, எந்தவொரு கண்ணுக்கும் அவளுடைய உருவம் பிடிக்கவில்லை. அவளுக்கோ அனைத்துமே ஏற்றுக் கொள்ளக் கூடியதாக தோன்றுகிறது. அவள் அழுதாள். இரவு முழுவதும் அழுதாள். ஒரு பிணம் அவளை நோக்கி பற்களை இளித்து காட்டியது. ஒரு குழந்தை தொண்டையே வெடிக்குமளவிற்கு அழுகிறது. கமலம்மா அதிர்ச்சியடைந்து விட்டாள். இனி அவள் என்ன செய்வாள்?
வனஜா அந்த வாசற் படியில் நின்றுகொண்டு பாதையில் போகின்றவர்களையெல்லாம் அழைப்பாள் - ‘நாராயணன் அண்ணா’ ‘கோபாலன் அண்ணா’ என்று. அவர்களில் சிலர் அதைக் கேட்டதாக காட்டிக் கொள்ள மாட்டார்கள். அவள் உரத்த குரலில் கூறுவாள்: ‘அக்கா இங்கே வரச் சொன்னாள்.’