நம்முடைய காலகட்டத்தில் - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4509
அறையில் விளக்கைப் போட்டு விட்டு, அவன் ஆடையை அவிழ்த்து மாற்றினான். நோட்டை எடுத்து மீண்டுமொரு முறை எண்ணி விட்டு, பெட்டியில் வைத்து மூடினான். பூக்கள் இருந்த பொட்டலத்தை கட்டிலின் மீது வைத்தான். தொடர்ந்து மடித்து வைத்திருந்த படுக்கையில் சாய்ந்து அமர்ந்தான். அப்போது அவனுக்கு பெருமையாக இருந்தது. புதிய கட்டில் மீட்கப்பட்டு விட்டது என்று கூறினான். முழுமையாக பணத்தைக் கொடுத்து முடிக்கவில்லையென்றாலும்....
ராமகிருஷ்ணன் சமையலறையை நோக்கி நடந்தான். ஒரு சிறிய குடும்பத்திற்குத் தேவையான வீட்டு பாத்திரங்கள் -- பெரும்பாலும் மண் பாத்திரங்கள் -- அங்கு தயார் பண்ணி வைக்கப்பட்டிருந்தன. விறகு கூட அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவன் நினைத்தான்: இனி அவள் வந்து அடுப்பில் நெருப்பு எரிய வைப்பதுதான் நடக்க வேண்டியது!
அவன் அவ்வாறு சிந்தனையில் மூழ்கியவாறு நின்றிருக்க, பக்கத்து வீட்டிலிருக்கும் கொச்சுமணி ஒரு கடிதத்துடன் வந்தான். கையெழுத்தைப் பார்த்ததும் ராமகிருஷ்ணனுக்கு புரிந்து விட்டது. அவனுடைய தந்தையின் கடிதம். நாளும், முகூர்த்த நேரமும் மீதி எல்லா தகவல்களும் அதில் இருக்கும்.
அவன் வேகமாக அதை பிரித்து வாசித்தான். '... பிறகு... உன் தாயின் காலில் மீண்டும் முன்பு இருந்ததைப் போல நீர் கட்டியிருக்கிறது. இனி நாட்டு மருத்துவம் எதுவும் செய்வதற்கு மீதியில்லை. டாக்டரிடம் காட்ட வேண்டும் என்று எல்லோரும் கூறுகிறார்கள். அதையும் கூட செய்து பார்ப்போம். இது தவிர, வேறு என்ன கூறுவது? எது எப்படி இருந்தாலும், நீ இந்த மாதம் ஏதாவது கூடுதலாக அனுப்பி வைக்க வேண்டும். மனைக்கல் வீட்டின் கடன் இன்னும் கொஞ்சம் எஞ்சியிருக்கிறது. பிறகு... நேற்று உன் ஜாதகத்தைத் திருப்பிக் கொண்டு வந்தார்கள். ஜாதகம் சேரவில்லையாம். ஆனால், தாமோதரன் சொன்னான் -- பெரிய வீடு இல்லாததுதான் காரணம் என்று. அவர்கள் அனைவரும் பிறக்கும்போதே வீட்டுடன் வந்திருக்கலாம். போகட்டும்... ஆனால், ஜானகியைப் பற்றி நினைக்கும்போதுதான்... அவளுக்கு இந்த மகரத்தில்...!'
பிறகு... அவனால் வாசிப்பதற்கு முடியவில்லை. சரீரம் தளர்ந்து போவதைப் போல தோன்றியது.
எதுவும் தெரியவில்லை.
எதுவும் கேட்கவில்லை.
எல்லா விளக்குகளும் அணைந்து போகின்றன. அவன் சுவரின் மீது சாய்ந்து கொண்டு நின்றிருந்தான். கண்களில் நீர் நிறைந்தது.
'ஏன் அழறீங்க, அண்ணா?'
கொச்சுமணி பதைபதைப்புடன் கேட்டான்: 'அண்ணா... அண்ணா, ஏன் அழறீங்க?'
அவன் அதை காதிலேயே வாங்கவில்லை.
(ஃபர்டினன்ட்: 'என்னை மறந்திட்டீங்கள்ல?'
இறக்கிறான்.
இறக்கிறான்.
புகைவண்டி)
திருமணமாகாத அந்த முப்பத்தைந்து வயது கொண்ட மனிதனின் முல்லைப் பூக்கள் அப்போதும் அங்கு நறுமணத்தைப் பரவச் செய்து கொண்டிருந்தன.