நம்முடைய காலகட்டத்தில்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4510
நம்முடைய காலகட்டத்தில்
டி. பத்மநாபன்
தமிழில்: சுரா
ராமகிருஷ்ணன் ட்ரவுசரின் பாக்கெட்களில் கைகளை வைத்தவாறு நடைபாதையின் வழியாக மெதுவாக நடந்தான். அவனுடைய மனதில் சுகமான ஒரு குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது. சுட்டெரித்துக் கொண்டிருக்கும் ஒரு சஹாரா பாலைவனமாக இதுவரை இருந்தது வாழ்க்கை. ஆசைகள் உதிர்ந்து விழுவதும், கனவுகள் வாடுவதும் மட்டுமே எப்போதும் நடந்திருக்கின்றன. இப்போது முதல் தடவையாக சில தளிர்கள் தலையை நீட்டுகின்றன. அதை நினைத்தபோது ராமகிருஷ்ணனுக்கு பெருமையும், சந்தோஷமும் உண்டாயின. அவனுடைய வறண்டுபோய் காணப்பட்ட உதடுகளில் கள்ளங்கபடமற்ற ஒரு புன்சிரிப்பு பரவவும் செய்தது. மிகவும் தாமதமாக நடந்தாலும் அவனும் ஒரு மனிதனாக ஆகப் போகிறான்.
ராமகிருஷ்ணனின் விரல் நுனிகள் அந்த புதிய நோட்டுகளை ஒரு புது பெண்ணை வருடுவதைப் போல தடவின. நூற்றைம்பது ரூபாய் இருக்கிறது. ஒரு மாத சம்பளம். இரண்டு நாட்களுக்குள் ஃபண்டிலிருந்து இருநூறு ரூபாய் கடன் வாங்கினான். அப்போது முன்னுற்றைம்பது ரூபாயாக ஆகி விட்டது. எல்லா செலவுகளையும் கழித்தாலும், ஊருக்குப் போய் சேரும்போது ஒரு இருநூற்றைம்பது ரூபாயாவது மீதமிருக்கும். அதை வைத்து எல்லாவற்றையும் நல்ல முறையில் நிறைவேற்றலாம்.
யாரும் வருவார்கள் என்று தோன்றவில்லை. எனினும், உடன் பணி செய்யும் எல்லோரையும் அழைக்க வேண்டும். பழைய நண்பர்கள் யாரையும் விட்டு விடக் கூடாது. வாழ்க்கையில் ஒரு முறைதானே ஒரு திருமணம் நடக்கிறது!
வாழ்த்துக்கள் ஏராளமாக வரும். எதையும் தூக்கி போட்டு விடக் கூடாது. எல்லாவற்றையும் எடுத்து வைக்க வேண்டும். பிறகு... எல்லா காரியங்களும் முடிந்த பிறகு, எல்லோருக்கும் பதில் எழுத வேண்டும். இப்போது சிலர் பத்திரிகைகளில் பிரசுரம் செய்வது வழக்கமாக இருக்கிறது. எல்லோருக்கும் சேர்த்து ஒரு பதில். ஐந்தோ ஆறோ ரூபாய்களில் காரியம் முடிந்து விடும். ஆனால், அது மோசமான விஷயம். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்றதல்ல.
ராமகிருஷ்ணன் மெதுவான குரலில் தனக்குத் தானே கூறிக் கொண்டான்: 'அய் விஷ் யூ எ ஹேப்பி அண்ட் ப்ராஸ்பெரஸ் மேரீட் லைஃப்!' -- இப்படித்தான் பெரும்பாலான வாழ்த்துக்களும் இருக்கும்.
வேண்டுமென்றால் இங்கேயே அழைப்பிதழை அடிக்கலாம். மிகவும் அருமையாக இருக்கும். ஆனால், திருமண நாளும், நடைபெறும் நேரமும் இனியும் அறிவிக்கப்படவில்லையே!
மாதம் ஆரம்பித்தவுடன், வர வேண்டும் என்பதுதான் இறுதியாக வந்த கடிதத்தில் இருந்த தகவல். எல்லாவற்றையும் தெளிவாக விளக்கி எழுதியிருக்க வேண்டும். அப்படி செய்யவில்லை. போகட்டும்...
ராமகிருஷ்ணனைத் தெரிந்திருக்கும் பலரும் அவனைக் கடந்து சென்றார்கள். க்ளார்க்குகள், பெண் டைப்பிஸ்ட்டுகள், கல்லூரி மாணவர்கள் -- இப்படி பலரும். ஆனால், அவன் யாரையும் பார்க்கவில்லை. தனக்குள்ளேயே மூழ்கிப் போய் நடந்து கொண்டிருந்தான்.
திடீரென்று அவன் நினைத்தான்: பெயர் என்னவாக இருக்கும்? லட்சுமிக்குட்டி என்றோ அம்மிணி என்றோ இருக்குமோ? ஆனால், அவையெல்லாம் பழைய பெயர்கள். இப்போது அவற்றிற்கெல்லாம் மதிப்பே இல்லை. சமீப காலத்தில் ஒரு பெயரைப் பார்த்தான். விலாஸ குமாரி.
எவ்வளவு இனிமையானது? விலாஸ குமாரி ராமகிருஷ்ணன்!
அவன் மீண்டும் மெதுவான குரலில் கூறினான்.
என் முதல் குழந்தைக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும். க்ளோரியா.... ஆனால், ஒரு பெண் குழந்தையாக இருக்கும் என்பதை எப்படி உறுதியாக கூற முடியும்? ஆண் குழந்தைதான் வேண்டும். எனினும்...
க்ளோரியா!
அந்தப் பெயர் எவ்வளவு இனிமையாக இருக்கிறது?
ஆனால், அந்த பெயரை நினைத்தபோது, அவனுடைய இதயம் மிகவும் கவலைக்குள்ளானது. நான்கு வருட காலம் அமைதியாக காதலித்தான். யாருக்கும் அது தெரியாது. ஒருவேளை, அவளுக்கே கூட தெரிந்திருக்காது. இல்லாவிட்டால், அவள் தெரிந்திருப்பாளோ?
'சிறானோ'வின் சோகம் நிறைந்த வாழ்க்கைக் கதையை வாசித்து விட்டு, அந்த பேரமமைதியான காதலனைப் போல தானும் ஆள் அரவமற்ற இடத்தில் வேதனையுடன் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்ததை அவன் நினைத்துப் பார்த்தான். க்ளோரியா... நான் உன்னைக் காதலிக்கிறேன். மிகவும் ஆழமாக காதலிக்கிறேன். மேலும் மேலும் அதிகமாக காதலிக்கிறேன்!
காற்றில் அந்த குரல் வெறுமனே கலந்து கரைந்தது. அவ்வளவுதான்.
எதுவுமே நடக்கவில்லை.
கல்லூரியிலும் வெளியிலும் வாழ்க்கை நிறைந்து வழிந்து கொண்டிருந்த ஒரு காலமது.
அப்போது நண்பர்களிடம் கூறுவான்: 'என் தேனிலவை நான் பாரிஸில் கொண்டாடப் போகிறேன்'. அங்குள்ள ஒரு மது விடுதியில் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு இரவு முழுவதும் நடனம் ஆடிய பிறகு, காலையில் ஒரு கள்ளச் சிரிப்புடன் அவளிடம் கூறுவேன்: 'ஏய்... என் அழகான, பரந்த இந்த நெஞ்சத்தில் தலையை வைத்து சிறிது நேரம் ஓய்வு எடு.'
ஒரு தாமரையின் தண்டைப் போல என் மார்பில் அவள் ஒட்டிக் கொண்டு படுத்திருக்கும்போது.....
ராமகிருஷ்ணன் நீண்ட பெருமூச்சை விட்டான்.
க்ளோரியா!
அன்று வயது இருபத்து மூன்று நடந்து கொண்டிருந்தது. இப்போது முப்பந்தைந்து ஆகி விட்டது. ஒரு பெண்ணின் சரீரம் எப்படி இருக்குமென்று இதுவரை தெரிந்து கொள்ள முடியவில்லை!
ராமகிருஷ்ணனுக்கு வெறுப்பு உண்டானது. வாழ்க்கை எந்த அளவிற்கு அர்த்தமற்றதாக இருக்கிறது!
வால்டாக்ஸ் சாலையை அடைந்தபோது, அவனுக்கு ஞாபகத்தில் வந்தது -- தலைமுடியை வெட்ட வேண்டும். தலைமுடி, காட்டைப் போல வளர்ந்து காணப்பட்டது. தலைமுடியை வெட்டி ஒரு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது. உண்மையிலேயே கூறுவதாக இருந்தால் -- சமீப காலமாக எதைச் செய்வதற்கும் நேரம் கிடைக்கவில்லை. பகல் முழுவதும் வேலைகளைச் செய்து விட்டு, சாயங்காலம் திரும்பி வரும் போதும் தன்னுடன் கோப்புகளைக் கொண்டு வர வேண்டும். பிறகு இரவிலும் வேலையைச் செய்தால்தான், வேலை முடியும்.
அப்படி இருக்கும்போது சாவகாசமாக எப்படி முடியை வெட்ட முடியும்?
இன்னும் ஒரு வகையில் கூறுவதாக இருந்தால் -- தெய்வம் இந்த மறைப்பை ஏன் ஆணுக்கு அளிக்க வேண்டும்? தாடியும் முடியும் இல்லாவிட்டாலும், அதனால் தரமொன்றும் இறங்கி விடப் போவதில்லையே! பணத்தையும், நேரத்தையும் மிச்சப்படுத்தலாமே!
அவை இல்லாமலிருப்பதுதானே நல்லது!
இப்படி ஒவ்வென்றையும் நினைத்துக் கொண்டே சலூனை நோக்கி நடக்கும்போது, அவனுக்குள் திடீரென்று ஒரு எச்சரிக்கை மணி அடித்தது.
வால்டாக்ஸ்.... சாலை! சென்னையின் அனைத்து பிக் பாக்கெட் அடிப்பவர்களும் இருக்கக் கூடிய இடம்! அவன் தன் பாக்கெட்டிற்குள் கையை விட்டுப் பார்த்தான். அந்த நோட்டுகள் அங்கு இருக்கின்றனவா?
இருந்தன.
அவனுக்கு மனதில் சமாதானம் உண்டானது.