நம்முடைய காலகட்டத்தில் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4509
அந்த நோட்டுகளை யாராவது பிக் பாக்கெட் அடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்தபோது, ராமகிருஷ்ணனின் முகமே வெளிறிப் போய் விட்டது. அதற்குப் பிறகு உயிருடன் வாழ்ந்தே பயனில்லை. ஒரே ஒரு காரியத்தைத்தான் செய்ய வேண்டும். நேராக புகை வண்டி தண்டவாளத்தை நோக்கி நடக்க வேண்டும். பிறகு அங்கு கவிழ்ந்து படுக்க வேண்டும். வண்டி போய் விட்டால், எல்லா வேதனைகளிலிருந்தும் விடுதலை கிடைக்கும்.
சிலர் அவ்வாறு செய்திருக்கிறார்கள்.
எப்போதும் புன்சிரிப்புடன் காணப்படும் ஃபர்டினன்டின் முகம் மனதில் தோன்றியது. டெஸ்பாச் பிரிவில் க்ளார்க்காக பணியாற்றிக் கொண்டிருந்தான் ஃபர்டினன்ட். ஒருநாள் வேலைக்கு வரவில்லை. மறுநாளும் வரவில்லை. ஏதாவது உடல் நலக்கேடாக இருக்குமென்று நினைத்தான். ஆனால், விசாரித்துப் பார்த்தபோது, தெரிய வந்தது -- ஃபர்டினன்ட் தற்கொலை செய்து கொண்டிருக்கிறான்!
அதற்குப் பிறகு தூங்குவதற்காக படுத்தால், ஃபர்டினன்ட் முன்னால் வந்து நிற்பான். ஃபர்டினன்ட் சிரித்துக் கொண்டே கேட்பான்: 'என்னை மறந்து விட்டீர்களா?' 'இல்லை' என்று கூற வேண்டுமென்று நினைப்பேன். ஆனால், அப்போது ஃபர்டினன்டின் கண்களில் நீர் நிறைந்து நிற்கும். ஃபர்டினன்ட் ஏன் இறந்தான்? காதல் காரணம் இல்லை. ஃபர்டினன்டிற்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் இருந்தார்கள்.
'என்னை மறந்து விட்டீர்களா?' என்று ஃபர்டினன்ட் என்னைப் பார்த்து ஏன் கேட்டான்? ஒருவேளை, நானும் அப்படி இறக்க வேண்டும் என்பது அதற்கு அர்த்தமாக இருக்குமோ? அப்படி இருக்க வாய்ப்பில்லை. ஆனால்....
சலூனில் கூட்டமிருந்தது. காத்து நிற்பதற்கு நேரமில்லை. அதனால் பிறகு வருவதாகக் கூறினேன். ஆனால், வெளியே வருவதற்கு முன்னால் கண்ணாடியில் நன்றாக ஒரு தடவை பார்த்தேன். அப்போது வேதனை நிறைந்த ஒரு உண்மையை உணர்ந்தேன். வழுக்கை விழ ஆரம்பித்திருந்தது. நெற்றியின் இரு பக்கங்களிலும் இரண்டு இடங்களில் நன்றாக நரை இருப்பது தெரிந்தது. இனி அது அங்கிருந்து மேல் நோக்கி ஏறும், அப்படியே சென்று... சென்று ஒருநாள் காலையில் பார்க்கும்போது, தலையில் ஒரு முடி கூட இருக்காது.
ஒரு காலத்தில் தலை நிறைய முடிகள் இருந்தன. நல்ல சுருண்ட முடிதான்.... ஆனால், அப்போது ஒரு புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூட தோன்றவில்லை.
ராமகிருஷ்ணன் அதை நினைத்து கவலைப்பட்டான். நெற்றியின் இரு பக்கங்களிலும் தடவியவாறு ராமகிருஷ்ணன் கண்ணாடிக்கு முன்னால் நின்று கொண்டிருந்தான். பிறகு அவன் யாரிடம் என்றில்லாமல் கூறினான்: 'இந்த நாசமாய் போன உப்பு நீர்தான் காரணம்.'
அப்போது யாரோ கூறினார்கள்: 'சில்விக்ரின் பயன்படுத்தணும். நல்ல... சுத்தமான சில்விக்ரின்!'
ராமகிருஷ்ணன் எதுவும் கூறவில்லை. அவன் வெளியேறி நடந்தான். அப்போது மனதில் நினைத்துக் கொண்டிருந்தான் -- சில்விக்ரின். சில்விக்ரின் என்றால் என்ன? எதனாலும் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. சிலருக்கு இளம் வயதிலேயே வழுக்கை வருகிறது. சிலருக்கு வயதான பிறகும் வருவதில்லை. அதெல்லாம் ஒரு அதிர்ஷ்டம்!
இனி நரையே வந்து விட்டது என்று கூட வைத்துக் கொள்வோம். தாங்கிக் கொள்வதைத் தவிர, வேறு என்ன செய்வது?
ராமகிருஷ்ணன் சென்ட்ரலுக்கு முன்னால் குறுக்காக நடந்தான். சாலையைக் கடக்கும்போது சங்கர்ஜியைப் பார்த்தான். அவனைப் பார்த்து நீண்ட காலம் ஆகி விட்டிருந்தது. பார்த்தவுடன் சங்கர்ஜி சொன்னான்: 'ராமகிருஷ்ணா, உன்னைப் பார்க்கவே முடியலையே?'
'நான் இப்போது லாட்ஜ் மாறி விட்டேன், சங்கர்ஜி. நீ?'
'நானா? நான்.... என்னை ஹோட்டலிலிருந்து போகச் சொல்லி விட்டார்கள். இப்போது குறிப்பிட்டுச் சொல்கிற மாதிரி எந்தவொரு இடமும் இல்லை. முன்பே சென்னை முழுவதும் எனக்கு வீடு மாதிரிதானே?'
சங்கர்ஜி புன்னகைத்தான். ராமகிருஷ்ணனும் சிரித்தான். ஆனால், அவனுக்குள் கவலை இருந்தது.
பிரியும்போது சங்கர்ஜி சொன்னான்: 'இந்த சனிக்கிழமை சமாஜத்திற்கு வா. ஒரு விவாதம் இருக்கிறது. இலக்கியத்தில் தேக்க நிலை இருக்கிறதா, இல்லையா? இல்லை என்பதுதான் என்னுடைய வாதம். எது எப்படி இருந்தாலும்.... வா... அப்போது பார்ப்போம்!
சாலையில் விளக்குகள் எரிந்தன.
'குட்பை!'
மக்கள் கூட்டத்தில் அவன் கரைந்து போவதைப் பார்த்தவாறு ராமகிருஷ்ணன் சிறிது நேரம் நின்றிருந்தான். பிறகு மெதுவான குரலில் கூறினான்: 'ஒரு ஆச்சரியமான மனிதன்!'
சமாஜத்தில் வைத்துத்தான் சங்கர்ஜியை முதல் தடவையாக பார்த்தான்.
'இப்போது சமாஜத்திற்கு யாரெல்லாம் வருவார்கள்? கேசவன் நாயரும் கோவிந்தனும் வருவார்களா? கங்காதரன் இருப்பாரா? நான் செல்வதே இல்லை. செல்ல வேண்டும். எவ்வளவு வேலைகள் இருந்தாலும், சமாஜத்திற்குச் செல்லாமல் இருக்க முடியாது?
டைலன் தாமஸின் கவிதையைப் பற்றி அவன் உற்சாகத்துடன் பேசினான். ஒரு 'பொஹீமியத்தின் தோற்றம் வெளிப்பட்டது. அப்போது தோன்றியது - ஆள் சாதாரணம் இல்லை.
அவன் சாதாரண ஒரு ஹோட்டல் பணியாள் என்பதே பிறகுதான் தெரிந்தது.
சங்கர்ஜி பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தான். தேர்ச்சி அடைந்ததும், வேலை தேடி சென்னைக்கு வந்தான். நான்கு நாட்கள் சென்னையில் தெருக்களில் அலைந்த பிறகு, ஒரு ஹோட்டலில் பணியாளாக சேர்ந்தான். என்ன காரணத்தாலோ.... அதில் வெட்கப்படும் அளவிற்கு எதையும் அவன் பார்க்கவில்லை. பகல் வேளையில் வேலை பார்த்தால் போதும்.... இரவில் படிக்கலாம்.
வாரத்தில் ஒரு நாள் மட்டும் இருக்கக் கூடிய விடுமுறையை சங்கர்ஜி சமாஜத்தின் வேலைகளுக்கு பயன்படுத்தினான்.
ஆனால், இப்போது அவனுக்கு பணி இல்லாமல் போயிருக்கிறது.
அவன் இனி என்ன செய்வான்?
சொந்த ஊருக்கு திரும்பிச் செல்வானோ?
ராமகிருஷ்ணனுக்கு வருத்தம் உண்டானது. சங்கர்ஜி புன்னகைத்தவாறு இலக்கியத்தின் தேக்க நிலையைப் பற்றி சொற்பொழிவாற்றினான். ஆனால், அவனுடைய மனம் வேதனைப்படாதா?
ஊருக்கு அவன் பணம் அனுப்ப வேண்டாமா?
திடீரென்று ராமகிருஷ்ணன் நினைத்தான்: சங்கர்ஜிக்கு திருமணம் ஆகியிருக்குமா?
ஒருவேளை... ஆகியிருக்காது. இதுவரை அதைப் பற்றி எதுவும் கூறி, கேட்டதில்லை.
சில நாட்களுக்குள் நான் திருமணம் செய்து கொள்வேன். அப்போது....
ராமகிருஷ்ணனின் உதடுகளில் புன்னகை பரவியது.
அவன் பார்க் ஸ்டேஷனை நோக்கி நடந்தான். அங்குள்ள மேம்பாலத்தின் மீது, வண்டியிலிருந்து இறங்கி வருபவர்கள், ஏறப் போகிறவர்கள் ஆகியோரின் கூட்டமும் ஆரவாரமும் காணப்பட்டன. ஒரு கிராமத்து மனிதன் ராமகிருஷ்ணனின் மீது வந்து மோதி, காலை மிதித்து விட்டுச் சென்றான். ராமகிருஷ்ணனுக்கு கோபம் வந்தது. ஆடை முழுவதையும் அசுத்தமாக்கி விட்டான். இனி நாளை அதை மாற்ற வேண்டியதிருக்கும். சலவை செய்யும் ஆள் வந்திருப்பானோ என்னவோ? வேறு ஆடை எதுவுமில்லை. வாரத்தில் ஒரு முறைதான் அவன் வருவான். சில நேரங்களில் தாமதமாக வருவான்.
அவன் வந்திருப்பானா?