நம்முடைய காலகட்டத்தில் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4509
வண்டி வருவதை எதிர்பார்த்தவாறு இரண்டு ஆங்கில இந்திய பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள். மெர்க்குரி விளக்கின் வெளிச்சத்தில் அவர்களுடைய சிவப்பாக்கிய உதடுகளிலிருந்து இரத்தம் உதிர்ந்து விழுவதைப் போல தோன்றியது. அவர்களுடைய உள்ளாடைகள் முழுமையாக வெளியே தெரிந்தன. ராமகிருஷ்ணனின் இதயம் புதிய 'லெய்லண்ட்' பேருந்தைப் போல உரக்க துடித்தது. ஒரு புதிய தாகமும் வெப்பமும் அவனிடம் உண்டாயின. இதுவரை ஒரு...
ராமகிருஷ்ணன் ஒரு நீண்ட பெருமூச்சுடன் தன்னுடைய எதிர்கால மனைவியைப் பற்றி நினைத்துப் பார்த்தான். அவள் படித்திருப்பாளா? பார்ப்பதற்கு அழகாக இருப்பாளா? என்ன வயது இருக்கும்?
என்ன காரணத்தாலோ... எதுவுமே எழுதப்படவில்லை. அவன் நினைத்தான்: என்னைப் பற்றி அவளும் நினைத்திருப்பாள் அல்லவா?
குத்து விளக்கிற்கு முன்பு அவள் நாணத்துடன் நின்று கொண்டிருக்கும்போது, என்ன செய்ய வேண்டும்? அவளிடம் என்ன கூற வேண்டும்? அவளை....
என் இதயமே!
ராமகிருஷ்ணன் நீண்ட பெருமூச்சை விட்டான்.
அவன் லாட்ஜில் இருந்த தன்னுடைய நண்பர்களை நினைத்துப் பார்த்தான். கோபாலனுக்கு மட்டுமே திருமணம் ஆகியிருந்தது. ஆனால், கோபாலன் தன் மனைவியைப் பார்த்து மூன்று வருடங்களாகி விட்டன. இடையில் அவ்வப்போது கடிதங்கள் வரும். கடிதம் வந்த நாளன்று, கோபாலனைப் பார்த்தாலே, குறிப்பாக தெரிந்து கொள்ளலாம். யாரிடமும் எதுவும் கூற மாட்டான். சிந்தனையில் மூழ்கியிருப்பான். முதலில் எல்லாம் கேட்பதுண்டு: 'என்ன கோபாலா?'
கோபாலன் எதுவும் கூற மாட்டான். கையில் கடிதத்தைத் தர மட்டும் செய்வான்.
அதில் கண்ணீர் விழுந்த அடையாளம் இருக்கும்.
திருமணம் முடிந்த மூன்றாவது நாள், இங்கு வந்தான்.
அதற்குப் பிறகு....
திடீரென்று கோபாலன் கேட்பான்: 'எழுபத்தைந்து ரூபாய் சம்பளம் வாங்கக் கூடிய ஒருவன் திருமணம் செய்தது தவறு. அப்படித்தானே?'
அப்போது கோபாலனிடம் எதுவும் கூற தோன்றாது.
கோபாலனைத் தவிர, வேறு நான்கு பேர்களும் இருந்தார்கள். எல்லோரும் திருமணம் ஆகாதவர்கள். தாமஸும் மாதவன் குட்டியும் மூன்றோ நான்கோ மாதங்கள் ஆகும்போது, ஒரு இரவு வேளையில் மைலாப்பூருக்கு ஒரு புனிதப் பயணம் செய்வார்கள். மிகவும் தாமதமாகத்தான் திரும்பி வருவார்கள். போகும்போது இருக்கக் கூடிய உற்சாகம், வரும்போது இருக்காது. அதுவல்ல ராகவனின் நிலை. சம்பளம் கிடைத்த நாளன்று அவன் ஒரு உல்லாச பயணத்திற்கு தயாராகி விடுவான்.
ராகவனின் மய்யம் ப்ராட்வே. ராகவனுக்கு வீட்டில் யாருமில்லை.
சட்ட மாணவனுக்கு ஒரு காதலி இருந்தாள். எலிஸபெத் டெயிலர். ஆவாகாட்னரேயையும் அவன் காதலித்தான். இரண்டு பேரின் படங்களையும் பார்த்துக் கொண்டே அவன் எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும், சிந்தனையில் மூழ்கியிருப்பான்.
ராமகிருஷ்னண் ஒரு பெருமூச்சுடன் நினைத்தான். எனக்கு ஏன் அப்படிச் செய்ய தோன்றவில்லை? ஏன் அவர்களைப் போல....
பழைய கால வானத்தில் நினைவுகள், கயிறு அறுந்த பட்டத்தைப் போல பறந்து விளையாடின.
ஞாயிற்றுக் கிழமை மிகவும் தாமதமாகத்தான் எல்லோரும் கண் விழிப்பார்கள். மிகவும் சோர்வுடன்தான் நாளே ஆரம்பிக்கும். ஆனால், அதற்கு சீக்கிரமே சூடு பிடிக்க ஆரம்பித்து விடும். அந்தச் சமயத்தில் சங்கரன் குட்டியைப் போன்ற ஏதாவது நண்பர்களும் வந்து சேர்ந்திருப்பார்கள். பிறகு.... பேச்சுத்தான், மதியம் உணவு தயாராகும் வரை, இலக்கியத்தையும், கலையையும் பற்றி உரையாடுவார்கள். அரசியல் பேசுவார்கள், சில வேளைகளில் சீட்டும் விளையாடுவார்கள்.
பெண்களைப் பற்றியும் உரையாடுவார்கள்.
மாதம் முடியும் நிலையில், பணத்திற்கு பிரச்னை உண்டாகி விடும்.
மெஸ்ஸில் கணக்கு கூட்டி பார்த்தாகி விட்டதா?
இந்த மாதம் என்ன வரும்?
இந்த மாதம் வீட்டிற்கு அனுப்பி வைக்க முடியும் என்று தோன்றவில்லை.
ராமகிருஷ்ணன் நீண்ட பெருமூச்சை விட்டான். என்ன ஒரு வாழ்க்கை!
எனினும், அதிலிருந்து விடுதலை பெற்று விட்டோமே என்பதை நினைத்தபோது அவனுக்கு நிம்மதி உண்டானது. ஆனால், புதிய வீட்டின் வாடகை முப்பது ரூபாய். இரண்டு பேரின் செலவும், வாடகையும் போக, மீதி ஏதாவது இருக்குமா? வீட்டிற்கு அனுப்ப வேண்டாமா?
ராமகிருஷ்ணன் இதய சுமையுடன் வெளியே பார்த்தான். மாலை நேரம் மறைந்து விட்டிருந்தது. வானம் இருட்டிக் கொண்டிருந்தது. பூந்தமல்லி நெடுஞ்சாலையின் வழியாக வாகனங்கள் .ஓடிக் கொண்டிருந்தன. சேத்துப்பட்டு ஸ்டேஷனில் பச்சை வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருந்தது.
வண்டியிலிருந்து இறங்கி வீட்டை நோக்கி நடந்தபோது அவன் சிந்தித்தான்: படித்தது தவறு. படித்திருக்க வேண்டியதில்லை.
ஆனால், அன்று அது தோன்றவில்லை. பி.ஏ. படித்து முடித்த பிறகும் இரண்டு வருடங்கள் படித்தான். அதற்குப் பிறகு அதனால் இப்போது என்ன பிரயோஜனம்? வேண்டுமென்றால் கூறலாம். டைலன் தாமஸின் கவிதையைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், மாதத்தில் நூற்றைம்பது ரூபாய் கிடைப்பதற்கு டைலன் தாமஸின் கவிதைக்கான தேவை இருக்கிறதா?
மார்க்கெட்டிற்கு முன்னாலிருந்து தெருவிற்கு திரும்பக் கூடிய திசையை அடைந்ததும், ராமகிருஷ்ணன் சிறிது நேரம் சந்தேகத்துடன் நின்றான். அங்கமுத்துவைப் போன்ற ஒருத்தி முல்லைப் பூ விற்றுக் கொண்டிருந்தாள். தினமும் அதன் வழியாக கடந்து செல்வதுண்டு. ஆனால், அந்த பூக்களின் நறுமணம் சிறிதும் அந்த அளவிற்கு இதயத்தைக் கவரக் கூடிய வகையில் இல்லை.
பச்சை, சிவப்பு நிறங்களைக் கொண்ட பட்டுப் புடவை அணிந்த இளம் பெண்கள் முல்லைப் பூக்களை வாங்கிக் கொண்டு சென்றார்கள். அவர்கள் கண்ணாடி வளையல்கள் ஒலிப்பதைப் போல பேசவும், குலுங்கிக் குலுங்கி சிரிக்கவும் செய்தார்கள். ஒரு நடுத்தர வயது மனிதன் பூக்களை வாங்கி கட்டி கோட்டின் பைக்குள் வைத்தவாறு, பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தான். அவனை எதிர்பார்த்து ஒரு பெண் அங்கு நின்று கொண்டிருந்தாள்.
ராமகிருஷ்ணனிடமும் அங்கமுத்து கேட்டாள்: 'என்னங்க, மல்லிகைப்பூ வேணுமா?'
ஆனால், ராமகிருஷ்ணன் அதை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. அவன் சாலையில் நின்றவாறு கனவு கண்டு கொண்டிருந்தான்.
சாயங்காலம் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்தபோது, அவள் காபியை தயார் பண்ணி, காத்து நின்றிருந்தாள்.
'இன்று சற்று நேரமாகி விட்டது. அப்படித்தானே?' - அவள் சொன்னாள்.
'ஓ... பரவாயில்லை, உனக்கு நான் ஒரு பரிசு கொண்டு வந்திருக்கிறேன்.'
'எங்கே? பார்க்கட்டுமா?'
'இங்கே வா...' அப்போது அவளுக்காக வாங்கிய அந்த முல்லைப் பூக்களின் நறுமணம்...
'ஏன் சாமி, மல்லிகைப்பூ வேணுமா?'
அங்கமுத்து மீண்டும் கேட்டாள். அவன் சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கியவாறு நின்றிருந்தான்.
ம்.. சரி... ஒரு இரண்டு அணாவிற்கு தா. ராமகிருஷ்ணன் சுற்றிலும் பார்த்தான். பல வர்ணங்களும், நறுமணமும் நிறைந்த ஒரு உலகம்! வாழ்க்கை எந்த அளவிற்கு இனிமையானது! உதட்டில் பாடலை முணுமுணுத்துக் கொண்டும், மனதில் புன்னகையுடனும் ராமகிருஷ்ணன் வீட்டை நோக்கி நடந்தான்.