பொன்னம்மாவின் புடவை
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4553
பொன்னம்மாவின் புடவை
(மலையாளக் கதை)
தகழி சிவசங்கரப்பிள்ளை
தமிழில்: சுரா
பொன்னம்மா ஒரு முறை திருவனந்தபுரத்திற்குச் சென்றிருக்கிறாள். இன்னொரு முறை எர்ணாகுளத்தைப் பார்க்க முடிந்தது. நான்கு தடவைகள் ஆலப்புழைக்கும் போயிருக்கிறாள். அன்று திருவனந்தபுரத்திற்குச் சென்றபோது தோன்றிய ஆசை அது. ஒரு புடவை. எல்லா வருடங்களும் அம்பலப்புழை திருவிழாவிற்குச் செல்லும்போது அவளுடைய ஆசை மீண்டும் உயிர்த்தெழும். அவள் தன் தாயைத் தொந்தரவு செய்ய ஆரம்பிப்பாள். அவளுடைய அன்னை கூறுவாள்: 'உனக்கு ஒருத்தன் வர்றப்போ, அவன்கிட்ட சொல்லு, அது வரை இது போதும்.'
'ஓ!' என்று கூறியவாறு அவள் அமைதியாக இருப்பாள். இரண்டு மூன்று நாட்களுக்கு முகத்தைக் கோண வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பாள், அழுவாள். அந்த அழுகைக்கும் கோபத்திற்கும் பலன் இருக்கும். திருவிழாவிற்கு ஒரு நல்ல புடவையையும் ரவிக்கையையும் அவளுடைய தந்தை வாங்கிக் கொடுப்பார். ஒன்றிரண்டு தடவைகள் அவளுடைய தந்தை பணிக்கருமாமன் ஆலப்புழைக்குச் சென்றபோது, ஒரு ஜவுளிக் கடைக்குள் நுழைந்து புடவையின் விலையைக் கேட்டார். ஆனால், அவ்வளவு விலை கொடுத்து ஒன்றை வாங்கி ஆசாரிப் பெண் அணிந்து ஏன் நடக்க வேண்டும் என்று அவர் சிந்தித்தார். அவ்வளவு பணம் கொடுத்தால் நான்கு முதல் தரமான புடவை கிடைக்கும். ஏன் அதிகம் சொல்ல வேண்டும்? அவர் வாங்கவில்லை.
அம்பலப்புழை திருவிழாவிற்குச் செல்லும்போது பொன்னம்மா புடவை அணிந்த பெண்கள் எல்லோரையும் பார்ப்பாள். எப்படிப்பட்ட இனங்களில் எல்லாம் அவை இருந்தன! பச்சை, சிவப்பு, நீலம், மஞ்சள் -- இப்படி எவ்வளவு நிறங்களிலும், எவ்வளவு வகைகளிலும் உள்ள புடவைகள்! எல்லா இனங்களும் அவளுக்கு தெரியும்.
பணிக்கருமாமன் தன்னுடைய மருமகன் கொச்சு பணிக்கரைக் கொண்டு பொன்னம்மாவைத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைத்தார். கொச்சு பணிக்கர் நல்ல மனிதன். ஒரு அப்பிராணி. வேலை எதுவுமில்லை. எனினும், அந்த திருமணம் பணிக்கருமாமனின் பெரிய விருப்பமாக இருந்தது. 'அவனுக்கு வேலையெதுவும் இல்லையென்றால், வேண்டாம்' என்றுதான் அவர் கூறினார். 'எனக்கு வயதான காலத்தில் பார்த்துக் கொள்வதற்கு ஒரு ஆள் இருக்கிறானே!'
பொன்னம்மாவின் கருத்தை யாரும் கேட்கவில்லை. அதை அவள் சிறிது கூட கூறவுமில்லை. ஆனால், தனியாக அமர்ந்திருக்கும்போது அவள் புடவையைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பாள். மயிலிறகு கண்களைக் கொண்ட ஒன்றும், நீல நிறத்திலுள்ள ஒன்றும் -- இப்படி இரண்டு புடவைகள் அவளுக்கு வேண்டும்.
திருமண நாள் முடிவு செய்யப்பட்டது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்தன. அது ஒரு பெரிய குறிப்பிடத்தக்க காரியமாக இல்லை. அந்த நாளன்று கட்டுவதற்கு ஒரு புடவை -- எப்படி அவள் கூறுவாள்? திருமணத்திற்கு அணிவதற்கு ஒரு புடவை வேண்டுமென்று ஒரு மணப்பெண்ணும் கூற மாட்டாள். ஆனால், பொன்னம்மா சற்று சிந்தித்தாள். திருமணத்திற்கு மணமகன் கொடுப்பது ஒரு புடவையாக இருக்கும். சமீபத்தில் அங்கு நடந்த எல்லா திருமணங்களிலும் அப்படித்தான் நடந்தன. அதுதான் இப்போதைய நாகரீகம். அவளுக்கும் புடவை கிடைக்காமற் போகுமா? அது போதும். இப்போது வாய் திறக்க வேண்டாம். அதைத் தொடர்ந்து அவள் புடவையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.
அந்த புடவை எப்படிப்பட்டதாக இருக்கும்? அது இப்படித்தான் இருக்க வேண்டுமென்று மணமகனிடம் கூறினால் என்ன? அதற்கு சூழ்நிலை இருந்தது. ஆறேழு நாட்களுக்கு முன்பு அவன் அவளுடைய வீட்டிற்கு வந்திருந்தான். அவள் அமர்ந்திருந்த அறைக்குள் நுழைந்து, வெளியே போனான். அப்போது கூறியிருக்கலாம். மயிலிறகு கண்களைக் கொண்ட புடவை போதும் என்று. அது கிடைத்தால் -- பிறகு... நீல நிறத்தில் உள்ளது போதும். பணத்தைக் கொடுத்து எதற்கும் லாயக்கற்ற ஆசாரிப் பெண்கள் அணியக் கூடிய புடவையை வாங்கி விடுவானோ? அன்று கூறவுமில்லை. அப்படி ஒன்றாக இருந்தால், அதைக் காட்டி மணமகனைக் கிண்டல் பண்ண வேண்டும். அதை அவள் அணியவே மாட்டாள்.
திருமணம் நடைபெறும் இடத்திற்கு அவள் சென்றாள். தாலி கட்டப்பட்டது. மாலை அணிந்து, தாம்பாளத்தில் வைத்து மணமகன் துணி கொடுத்தான். ஒரு ஜப்பான் புடவையும், மேற் துண்டும்!
பொன்னம்மா அறைக்குள் நுழைந்து, அமர்ந்து அழ ஆரம்பித்தாள். அந்த அழுகை வெட்கத்தால் வந்தது என்று பெண்கள் பேசிக் கொண்டார்கள்.
முதலிரவு வேளையில் படுக்கையறையில் வைத்து அவள் முதல் முறையாக கூறியது அதுதான். ஒரு புடவையை வாங்கித் தருவதாக அவன் கூறினான். ஒரு மணி நேரத்திற்குப் பிறகும் அவள் அதையே கூறினாள். அவன் சத்தியம் செய்தான் வாங்கிக் கொடுப்பதாக. எந்த விஷயத்தைப் பற்றி பேசினாலும், அவள் புடவையில் போய்தான் முடிப்பாள்.
அடுத்த நாளும், அதற்கடுத்த நாளும் பொன்னம்மா புடவையைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தாள். அப்படியே ஒரு மாதம் கடந்தது. அவள் அழ ஆரம்பித்தாள். ஒரு மாதம் கடந்த பிறகும் ஒரு புடவையைக் கூட வாங்கித் தருவதற்கு இயலாத கணவன்தான் அவளுக்கு கிடைத்திருக்கிறான். அந்த வருட அம்பலப்புழை திருவிழாவும் நெருங்கி வந்து கொண்டிருந்தது. அவள் கேட்டாள்:
'வெட்கமே இல்லாமல் எப்படி திருமணம் செய்தீங்க?'
கொச்சு பணிக்கர் சற்று நெளிந்தான். ஒரு வாரத்திற்குள் அவளுடைய ஆசையை நிறைவேற்றித் தருவதாக அவன் கூறினான். அந்த வாரமும் முடிந்தது. அவள் தன் தாயிடம் கூறினாள்.
'எனக்கு இந்த திருமண உறவு வேண்டாம்.'
எல்லோரும் அதிர்ச்சியடைந்து விட்டார்கள்.
கொச்சு பணிக்கர் முடிந்த வரைக்கும் முயற்சித்தான். ஆலப்புழைக்குச் சென்று மயிலிறகு கண்கள் கொண்ட புடவையின் விலையைக் கேட்டான். இருபத்தைந்து ரூபாய்! எங்கு இருந்து சம்பாதிப்பது? அவன் பலரிடமும் கடன் கேட்டான். யாரும் கொடுக்கவில்லை.
ஒரு இரவு வேளையில் குடும்பத்திற்குச் சொந்தமான தென்னை மரத்தில் அவன் வேகமாக ஏறினான். பாதி சென்றபோது, கீழே விழுந்தான். ஒரு மாதம் சிகிச்சையில் கிடந்தான். மேட மாத்தில் மிகவும் வேண்டிய சிலரின் களங்களுக்கு நெல் காய வைப்பதற்காகச் சென்றான். அப்போது சிறிதும் எதிர்பாராமல் ஒரு செலவு வந்தது. அவனுடைய தாய்க்கு ஒரு நோய். சம்பாதித்த பணம் தீர்ந்து விட்டது. இறுதியில் அவன் தனக்கு வர வேண்டிய பாகத்தைக் கேட்டான். அதை வாங்கி விற்று, புடவை வாங்கலாம் என்று நினைத்தான். மாமா பாகத்தைத் தரவில்லை.