பொன்னம்மாவின் புடவை - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4550
நான்கு நாட்கள் கடந்தன. ஒரு உச்சிப் பொழுது வேளையில் பொன்னம்மா புடவையை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள். கொச்சு பணிக்கர் உள்ளே படுத்து தூங்கிக் கொண்டிருந்தான். இரண்டு போலீஸ்காரர்களும் ஒரு ஆளும் அங்கு வந்தார்கள். ஆள் தன்னுடன் வந்த போலீஸ்காரர்களிடம் கூறினான்:
'அதோ... என் புடவை, எஜமான்!'
'இதுவா?'
'ஆமாம்...'
போலீஸ்காரன் பொன்னம்மாவிடம் கேட்டான்: 'அந்த புடவையை இங்கே தா.'
பொன்னம்மா பயந்து நடுங்கினாள். அவள் புடவையைக் கொடுத்தாள். போலீஸ்காரன் கேட்டான்.
'இதை யார் கொண்டு வந்து தந்தது?'
அவள் நடுங்கிக் கொண்டே கூறினாள்:
'என் கணவர்.'
'எப்போது கொண்டு வந்தான்?'
'மூன்று நாட்களாச்சு.'
போலீஸ்காரர்களுடன் வந்திருந்த ஆள் புடவையை வாங்கி இப்படியும் அப்படியுமாக திருப்பித் திருப்பி பார்த்தான். அவனுடைய முகத்தில் என்ன ஒரு சந்தோஷம்! அவன் சொன்னான்:
'பெரிய வீட்டைச் சேர்ந்த புடவை. எனினும், நான் சலவை செய்து உலர போட்டு விட்டு அந்தப் பக்கம் போயிருப்பேன். அதற்குள் தட்டிக் கொண்டு போய் விட்டானே, எஜமான்! அந்தத் திருட்டுப் பயலுக்கு இரண்டு அடிகள் கொடுங்க. இதற்கு தனியா கொடுக்கணும். பெரிய வீட்டு அம்மாவிடம் நான் என்ன சொல்ல முடியும்? அட கடவுளே! பத்து ஐம்பது புடவைகள் இருந்ததில், நல்லதைத்தான் இவன் திருடியிருக்கான்'
பொன்னம்மா பயத்துடன் கூறினாள்:
'நான் இல்ல.... என்னை... என்னை... '
போலீஸ்காரன் கேட்டான்:
'உங்க கணவன் இங்கே இருக்கானா?'
'இருக்காரு.'
அப்போது யாரோ பக்கத்து அறையிலிருந்து ஓடுவதைப் பார்த்து போலீஸ்காரர்களில் ஒருவன் அந்தப் பக்கமாக ஓடினான். ஓடியது கொச்சு பணிக்கர்தான். போலீஸ்காரன் கொச்சு பணிக்கரை அங்கு பிடித்துக் கொண்டு வந்தான். அவன் ஆலமரத்தின் இலையைப் போல நடுங்கிக் கொண்டிருந்தான். போலீஸ்காரன் கேட்டான்:
'இந்த சலவை செய்பவனின் புடவையை இவன் உலர்வதற்காக விரித்து போடப்பட்டிருந்த இடத்திலிருந்து நீ திருடினாயா?'
'இல்ல! அது நான் எடுத்த... இல்ல... திருடியதல்ல. அது அவள் பணம் தந்து வாங்கியது.'
'இல்லை... அது எனக்கு கொண்டு வந்து தந்தது.'
அதைத் தொடர்ந்து அங்கு ஆட்கள் கூடினார்கள். போலீஸ்காரர்கள் என்னவோ எழுத ஆரம்பித்தார்கள். பொன்னம்மாவையும் கொச்சு பணிக்கரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் அவர்கள் பிடிவாதமாக இருந்தார்கள்.
பணிக்கருமாமன் எங்கிருந்தோ ஐந்தெட்டு ரூபாய்களைத் தயார் பண்ணினார். அந்த போலீஸ்காரர்களில் ஒருவனுடைய இரக்கத்தை பணிக்கருமாமன் சம்பாதித்தார். வீட்டின் வடக்குப் பக்கத்தில் வைத்து அவர்களுக்கிடையே சிறிது நேரம் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
போலீஸ்காரன் கேட்டான்:
'இது இன்சார்ஜ் பொறுப்பில் இருப்பவருக்கு. எனக்கு....?'
பணிக்கருமாமன் மேலும் என்னவோ கொடுத்தார். அதைத் தொடர்ந்து அந்த போலீஸ்காரன், 'இன்சார்ஜ்' பொறுப்பிலிருந்த போலீஸ்காரனை, சமாதானப்படுத்தினான். அவன் சலவை செய்யும் மனிதனிடம் கூறினான்:
'குடும்ப விஷயமல்லவா? உனக்குத்தான் புடவை கிடைத்து விட்டதே! இவர்களை அவமானப்படுத்தக் கூடாது, நாம போகலாம்.'