பொன்னம்மாவின் புடவை - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4550
பொன்னம்மா அவனிடம் கேட்டாள்:
'ஏன் ஆணாக இருக்கீங்க?'
ஒரு நாள் பணிக்கரைப் பார்க்க முடியவில்லை. மறுநாளும் பார்க்க முடியவில்லை. மூன்றாவது நாள் திருவனந்தபுரத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. அவன் அங்கு இருந்தான். ஏதோ வேலை இருக்கிறதாம்!
பொன்னம்மாவிற்கு உற்சாகம் உண்டானது. தன் கணவனுக்கு வேலை இருக்கிறதே! இனிமேல் பணம் கிடைக்கும். புடவையையும் வாங்கலாம். அந்த புடவைக்கேற்ற ஒரு ஜாக்கெட் வேண்டும். ஒரு ஜாக்கெட் வேண்டும் என்ற விஷயத்தையும் எழுதி அனுப்பினால் என்ன? வாங்கச் செய்யலாம். அவள் வைக்கத்தில் நடைபெறும் அஷ்டமிக்குச் செல்பவர்களின் மூலம் ஒரு குங்கும டப்பா வாங்கி வரச் செய்தாள். பக்கத்து வீட்டிலிருக்கும் ராஜம்மாவிடம் பொன்னம்மா கூறினாள்:
'எனக்கு ஒரு புடவை வாங்கிக் கொண்டு வந்து தருவதாக கடிதத்தில் இருக்கு.'
பொன்னம்மா நாட்களை எண்ணி கடத்திக் கொண்டிருந்தாள். நூற்று இரண்டு, நூற்று ஒன்று என்று இப்படி நாட்கள் குறையக் குறைய புடவையின் தோற்றமும் அவளுக்கு தெளிவாக தெரிந்து கொண்டிருந்தது. எப்படியாவது அம்பலப்புழை திருவிழா வந்தால் போதும் என்று அவள் நினைத்தாள்.
மீன மாதத்தின் ஆரம்பத்தில்தான் அம்பலப்புழை திருவிழா. கும்ப மாதத்தின் இறுதியில் ஒரு நாள் கொச்சு பணிக்கர் தன்னுடைய எஜமானி அம்மாவிடம் சொன்னான்:
'வீட்டில் இருந்து ஒரு கடிதம் வந்திருக்கு. என் மனைவிக்கு உடல் நலமில்லை. கொஞ்சம் வீடு வரை போகணும்.'
பல சமையல்காரர்களையும் பார்த்திருக்கும் முதலாளியம்மா கூறினாள் -- 'இது சமையல்காரர்கள் எப்போதும் கூறக் கூடிய தந்திர வார்த்தைகள்' என்று. அப்போது அவனை அனுப்பி வைக்கும் சூழ்நிலை இல்லை. பணிக்கர் கவலைப்பட்டான். போய் விட்டு திரும்பி வருவதாக அவன் சத்தியம் பண்ணினான். பயனில்லை. பணிக்கர் எஜமானனிடம் கூறினான். எதற்கு இதைப்பற்றி அதிகமாக கூற வேண்டும்? மீன மாதத்தின் ஆரம்பத்தில் அவன் மிகவும் சிரமப்பட்டு அனுமதி வாங்கினான். புறப்படும் நாளன்று மூன்று ஒரு ரூபாய் நோட்டுகளை எடுத்து கொடுத்துவிட்டு, எஜமானி அம்மா கூறினாள்:
'மூன்று ரூபாய் இருக்கு. திரும்பி வந்த பிறகு, மீதியை தர்றேன்.'
கொச்சு பணிக்கரின் அனைத்து திட்டங்களும் தகர்ந்து விட்டன. வழிச் செலவிற்கு இரண்டு ரூபாய் வேண்டும். புடவையை எப்படி வாங்குவது? புடவை இல்லாமல் அங்கு சென்றால் -- அதற்குப் பிறகு விவாகரத்துதான். அதை அவனால் நினைத்துப் பார்க்க முடியவில்லை, அந்த அளவிற்கு அழகான ஒரு பெண் அவனுக்குக் கிடைப்பாளா?
கொச்சு பணிக்கர் கணக்கை முடித்து விட்டு, முழு பணமும் கிடைக்க வேண்டும் என்று தீர்மானமான குரலில் கூறினான். அதற்கு பலன் கிடைக்கவில்லை. அவள் கொடுக்கவில்லை.
பொன்னம்மா உறங்கி நாட்கள் பல ஆயின. அவள் இரவு நேரங்களில் வெளியே தன் கணவனின் காலடியோசை கேட்கிறதா என்று கவனத்தைப் பதித்துக் கொண்டே படுத்திருப்பாள். பகல் முழுவதும் வாசலுக்குச் சென்று பார்த்துக் கொண்டிருப்பாள். புடவை கொண்டு வருவான் என்று அவள் உறுதியாக நினைத்தாள்.
அம்பலப்புழை கொடியேற்றத்திற்கு முந்தைய நாள் நள்ளிரவு தாண்டியிருந்தது. பொன்னம்மா நினைத்துக் கொண்டே படுத்திருந்தாள். வெளியே ஒரு காலடிச் சத்தம் கேட்டது. பொன்னம்மா எழுந்து உட்கார்ந்தாள். கொச்சு பணிக்கர் ஒரு முறைதான் அழைத்தான். அவள் கதவைத் திறந்தாள். அவன் அலட்சியமாக ஒரு பொட்டலத்தை அவளுடைய கைகளில் எறிந்தான்.
முன்பு எப்போதுமில்லாத ஒரு அதிகார குணம் அவனிடம் இருந்தது. அதை பொன்னம்மா ஏற்றுக் கொண்டாள். 'அடியே தங்கம்' என்று அவன் அழைக்கும்போது, எந்த அளவிற்கு பணிவுடன் அவள் அந்த அழைப்பைக் கேட்கிறாள்! அவன் இருக்கிறானா இல்லையா என்று கேட்காமலேயே அவள் அரிசியைச் சமைப்பதற்கு தயாரானாள். உணவு சாப்பிட்டு விட்டு எழுந்தபோது, அவள் சொன்னாள்:
'அய்யோ! ஒரு பிடி சோறு சாப்பிடலையே!'
படுக்கையறைக்குள் சென்றதும் -- அந்த அளவிற்கு இதய பூர்வமான, உணர்ச்சி வசப்பட்ட ஒரு முத்தம் கொச்சு பணிக்கருக்கு அன்று வரை கிடைத்ததே இல்லை. அவன் ஒரு செல்லப் பெயரைக் கூறி அவளை அழைத்தான்.
அவள் சொன்னாள்:
'நான் புடவையை உடுத்தும்போது, இதைவிட அழகியாக இருப்பேன். நாளை புடவையை அணிந்து விட்டு, ஒரு முத்தம் தர்றேன்'
மறுநாள் பொன்னம்மா தன்னுடைய தோழிகள் எல்லோரிடமும், புடவை வாங்கிக் கொண்டு வந்திருக்கும் கதையைக் கூறினாள். மயிலிறகு கண்களைக் கொண்ட புடவை, அவர்கள் அனைவரும் வந்து பார்த்தார்கள். பலருக்கு அது சந்தோஷமான விஷயமாக இருந்தது. வேறு சிலரோ பொறாமைப்பட்டார்கள். பொறாமைப்படுபவர்கள் யார் என்ற விஷயமெல்லாம் பொன்னம்மாவிற்குத் தெரியும். அவள் அவர்களில் ஒருத்தியின் முகத்தைப் பார்த்து கூறினாள்:
'எழுதி அனுப்பி வர வச்சது... விலை நூறு ரூபாய்.'
கிழக்கு வீட்டு கமலம்மா சொன்னாள்:
'இது புதிய புடவை மாதிரி தோன்றவில்லை.'
பொன்னம்மா கோபத்துடன் கேட்டாள்:
'ம்... என்ன?'
'இதற்கு பளபளப்பு இல்லை.'
'இது சில்க், அதனால்தான் பளபளப்பு இல்லை.'
'அப்படின்னா, புதுத் துணிக்கு இருக்கக் கூடிய மணம் இருக்குமே!'
பொன்னம்மாவால் பதில் கூற முடியவில்லை. அவள் சொன்னாள்:
'இல்லாவிட்டாலும், சின்ன வயசுல இருந்தே உனக்கு என் மீது பொறாமை.'
பொன்னம்மா புடவையை பொட்டலத்தில் சுற்றி கட்டினாள். அப்போது கமலம்மா சொன்னாள்.
'அதன் நுனிப் பகுதியில் சலவை செய்பவனின் அடையாளம் இருக்குது.'
மறுநாள் பொன்னம்மாவிற்கும் கமலம்மாவிற்குமிடையே பெரிய சண்டை நடந்தது.