அவளின் சுயசரிதை
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6095
அவளின் சுயசரிதை
பி.கேசவதேவ்
தமிழில் : சுரா
அவர்கள் எல்லாரும் என்னைப்பார்த்து அழுதார்கள். அதைப்பார்த்து நானும் அழுதேன். மரணச் செய்தியைத் தெரிந்துகொண்ட பக்கத்து வீடுகளைச் சேர்ந்த எல்லாரும் வந்து சேர்ந்தார்கள். வந்தவர்கள் அனைவரும் என்னைத் தேடுகிறார்கள். என்னைப்பற்றிப் பேசுகிறார்கள். பெண்கள் என்னைப் பற்றி, என்னவெல்லமோ கூறி கூப்பாடு போடுகிறார்கள். ஒரு கிழவி எனக்கருகில் வந்தமர்ந்து சொன்னாள் : “குழந்தை, கடவுள் தீர்மானித்த விஷயம். எல்லா துக்கங்களிலும் மிகப் பெரியது விதவையாக இருக்கக்கூடிய துக்கம்தான். என்ன செய்வது? இனி கடவுளின் பெயரைச் சொல்லு. மோட்சம் கிடைக்கும்.”
அவள் கூறியது எதுவும் எனக்குப் புரியவே இல்லை.
இறந்த உடலைக் குளிப்பாட்டி, சந்தனமும், மலர்களும் அணிவித்து, தெற்கு திசையில் தலையை வைத்துப் படுக்கச் செய்திருந்தார்கள். தலையின் அருகில் வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கின் சுடர், பிணத்தின் கண்மணிகளைப்போல அசைவே இல்லாமல் இருந்தது.
புரோகிதர் வந்துவிட்டிருந்தார். சிலர் ஒரு மாமரத்தை வெட்டி துண்டு போட்டுக் கொண்டிருந்தார்கள்.
இறந்த உடலைச் சிதையில் வைத்தார்கள். புரோகிதர் என்னிடம் என்னவோ செய்யும்படி கூறினார். நான் அவர் சொன்னபடி செய்தேன். நெருப்பு பற்றி எரிய ஆரம்பித்தது. இறந்த மனிதரின் ஆன்மாவை எடுத்துக்கொண்டு, புகை சொர்க்கத்தை நோக்கி உயர்ந்து சென்றது.
இப்படி பத்தாவது வயதில் நான் விதவையாக ஆனேன்.
எனக்குத் திருமணமாகி ஒன்றரை வருடங்களே ஆகியிருந்தன. விருந்து, பூஜை, சில சடங்குகள், நாதசுரம் எல்லாம் நடந்தன. அது என்னுடைய திருமணம் என்று எல்லாரும் கூறினார்கள். நானும் அதை நம்பவே செய்தேன். எனக்கு அதுவரை அறிமுகம் ஆகியிராத ஒரு மனிதர் - என்னைவிட பத்து பதினைந்து வயது அதிகம் இருக்கக்கூடிய ஒரு ஆள் - அவர்தான் என்னுடைய கணவர் என்று எல்லாரும் கூறினார்கள். நான் அதை நம்பினேன்.
திருமணத்திற்குப் பிறகும் என்னுடைய வாழ்க்கையில் மாறுதல்கள் எதுவும் உண்டாகவில்லை. நான் பெற்றோரின் வீட்டிலேயே இருந்துகொண்டு, பக்கத்து வீடுகளிலிருக்கும் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடி மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருந்தேன். அவர் - என்னுடைய கணவர் என்று கூறப்பட்ட அந்த மனிதர் - சில நாட்களில் அங்கு வருவார். வரும்போது எனக்கு ஏதாவது கொண்டு வந்து தருவார்.
நான் அவரை ‘அண்ணா” என்றுதான் அழைத்தேன். அப்படி அழைக்கக்கூடாது என்று தந்தையும் தாயும் என்னைத் திட்டினார்கள். அப்படி அழைப்பது அவருக்கும் பிடிக்கவில்லை என்பதை நான் புரிந்துகொண்டேன். அதனால் நான் அவரை எதுவும் கூறி அழைக்கவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அவர் உடல்நலமில்லாமல் படுத்த படுக்கையில் கிடக்கிறார் என்று ஒரு ஆள் வந்து சொன்னார். என் தந்தை என்னை அவருடைய வீட்டிற்கு அழைத்துக்கொண்டு சென்றார். இரண்டு நாட்கள் கடந்தபிறகு, அவர் இறந்துவிட்டார்.
நாங்கள் பிராமணர்கள். திருமணம் முடிந்துவிட்டால், அதற்குப்பிறகு பெண்ணுக்கு பெற்றோர் வீட்டில் எந்தவொரு உரிமையும் இல்லை. அவள் கணவனது வீட்டின் உறுப்பினராகிவிடுவாள். அவளுடைய உரிமைகள் அனைத்தும் அங்குதான். விதவையான பிறகும் அவள் அங்கேயே கிடந்து கஷ்டங்களை அனுபவித்து சாக வேண்டும்.
என்னுடைய தாய்க்கும் தந்தைக்கும் ஒரே ஒரு பிள்ளைதான் - நான் மட்டுமே. அதனால் விதவையான என்னை முன்பு இருந்ததைப்போல பெற்றோரின் வீட்டிலேயே இருக்கச் செய்தார்கள்.
மனைவி பதவி என்றால் என்ன என்பது எனக்குத் தெரியாமலிருந்ததால், விதவைக்கோலம் என்றால் என்ன என்பதையும் நான் அறிந்திருக்கவில்லை. நான் சில வேளைகளில் தோழிகளான சிறுமிகளுடன் சேர்ந்து வீடு கட்டி விளையாடுவதையும், ‘வெள்ளைக்காயை’ எடுத்து வைத்துக்கொண்டு பிரசவமான பெண்ணாகப் படுத்துக் கிடப்பதையும் பார்த்து என்னுடைய தாய் கண்ணீர் வழிய நின்று கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
என்னுடைய தந்தை வறுமையில் உழன்று கொண்டிருக்கும் ஒரு அப்பள வியாபாரி. நாற்பது வயது வரை தொடர்ந்து கடுமையாக உழைத்து சம்பாதித்து வைத்திருந்த பணம் கொஞ்சம் கைவசம் இருந்ததை வைத்து என்னுடைய திருமணத்தை நடத்தினார். அது அப்படி ஆகிவிட்டது.
அப்பளம் தயாரிக்கும் விஷயத்தில் என்னுடைய சக்திக்கு இயன்றவரை என் தந்தைக்கும் தாய்க்கும் நான் உதவியாக இருப்பேன். என் தாய் உளுந்தை அரைக்கும்போது, நான் உளுந்தைச் சிறிது சிறிதாக திருவைக் கல்லில் தள்ளிவிடுவேன். அப்பளத்தைப் பரப்பி விடுவது, உலர வைப்பது, அடுக்குவது ஆகிய வேலைகளிலும் நான் உதவுவேன்.
அப்பளத்தை விற்பதற்காக என் தந்தை நகரத்திற்குச் செல்லும்போது, பக்கத்து வீடுகளில் விற்பனை செய்வதற்கு என் தாய் என்னை அனுப்பி விடுவாள். எண்ணுவதற்கும் கணக்கு பார்ப்பதற்கும் எனக்குத் தெரியும். என்னுடைய அப்பள வியாபாரத்தில் எந்தவொரு நஷ்டமும் உண்டாகவில்லை.
இப்படியே மூன்று வருடங்கள் கடந்தோடிவிட்டன. நான் வயதிற்கு வந்தேன். அதற்குப்பிறகு என்னை அப்பள வியாபாரத்திற்கு அனுப்ப என் தந்தைக்கும் தாய்க்கும் தயக்கமாக இருந்தது. ஆனால், ஜாதி ஆச்சாரங்கள் அனைத்தும் வறுமைச் சூழலில் எரிந்து போய்விடுமே!
எங்களுடைய பக்கத்து வீடுகள் முழுவதும் ஈழவர்கள் இருக்கக்கூடிய வீடுகள். அவற்றில் ஒன்று ஒரு சாணார் இனத்தைச் சேர்ந்தவர்களுடையது. அவர்கள் எங்களுடைய ஊரிலேயே மிகப்பெரிய வசதி படைத்தவர்கள். பண வசதி மட்டுமல்ல; இடங்களும் நிறைய இருந்தன. நான் அப்பளம் விற்பதற்காக அங்கேயும் வழக்கமாக போய்கொண்டிருந்தேன். ஈழவர்கள் எங்களைவிட தாழ்ந்த இனத்தவர்கள் என்றும், அதனால் நான் அவர்கள் வீட்டிற்குள் நுழையக்கூடாது என்றும் என் அன்னை கூறியிருந்தாள். நான் அங்குசென்று வாசலில் நின்றுகொண்டிருப்பேன்; அவ்வளவுதான்.
ஒருநாள் காலையில் நான் அப்பளத்தை எடுத்துக்கொண்டு சாணாரின் வீட்டிற்குச் சென்றேன். வாசலில் யாருமில்லை. தெற்குப் பக்கத்திலிருந்த அறையில் ஒரு இளைஞன் நாற்காலியில் அமர்ந்து, மேஜையின்மீது காலை வைத்தபடி ஒரு பாட்டை முணுமுணுத்துக்கொண்டிருந்தார். நான் உரத்த குரலில் அழைத்தேன்: “அப்பளம் வேணுமா?”
பதிலாக எந்தக் குரலும் வரவில்லை. அந்த மிகப்பெரிய வீட்டிற்குள் என்னுடைய குரல் போய்ச் சேரவில்லை. அறையில் அமர்ந்திருந்த இளைஞன் சாளரத்தின் வழியாக என்னை ஒருமுறை பார்த்துவிட்டு, மீண்டும் பாட்டைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.
நான் நான்கைந்து முறை அழைத்தேன். என்னுடைய உரத்த அழைப்பு தொந்தரவாக இருப்பதைப்போல எண்ணிய அந்த இளைஞன் எழுந்து அந்தப் பக்கமாகச் சென்றார். சிறிது நேரம் கடந்ததும், அவன் வாசலுக்கு வந்து சொன்னார் : “பெண்ணே, ஒரு கட்டு அப்பளம் தா.”
நான் துணிக்கட்டுக்குள்ளிருந்து அப்பளத்தைக் கையில் எடுத்துக்கொண்டு நின்றிருந்தேன். அவர் சொன்னார் : “இங்கே கொண்டு வா.”
அப்பளத்தை திண்ணையில் வைத்துவிட்டு நான் திரும்பவும் விலகி நின்றேன். அவர் கையிலிருந்த சக்கரத்தை (பழைய திருவிதாங்கூர் நாணயம்) என்னை நோக்கி நீட்டி, ஒரு மென்மையான புன்னகையுடன் சொன்னார் : “இந்தா சக்கரம்.”