அவளின் சுயசரிதை - Page 5
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6095
அன்று உத்ராடம். இரவு ஏழு நாழிகை இருட்டிய பிறகும், ரவி உறங்கவில்லை. அவன் தன்னுடைய தந்தையைப் பார்ப்பதற்காகக் காத்திருந்தான். அவன் அவ்வப்போது கேட்டான் : “அப்பா எப்போ வருவார்?”
நான் கூறுவேன் : “நள்ளிரவு ஆகும். மகனே, நீ தூங்கு. அப்பா வந்தவுடன் உன்னை எழுப்புகிறேன்.”
“வேண்டாம்... அப்பாவைப் பார்த்துவிட்டுத்தான் நான் தூங்குவேன்.”
தன்னுடைய தந்தையின் நிறம், உயரம், எடை அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவன் நினைத்தான். அவை எல்லாவற்றையும் நான் அவனுக்குக் கூறினேன். அவை அனைத்தையும் கேட்டவாறு, அவன் என் மடியில் படுத்துத் தூங்கிவிட்டான்.
வயலின் எதிர்க்கரையிலிருந்து ஒரு பாதி ராக்கோழி கூவிக்கொண்டிருந்தது. ரவி சுகமான உறக்கத்தில் மூழ்கிப் படுத்திருந்தான். நான் அமைதியாக என் குழந்தையைத் தூக்கியெடுத்து, தோளில் படுக்கச் செய்து, அந்த ரகசிய இடத்திற்கு... இல்லை... புண்ணிய இடத்திற்குப் புறப்பட்டேன். நள்ளிரவு வேளையில் அதைப்போன்று எவ்வளவோ புனிதப் பயணங்களை நான் மேற்கொண்டிருக்கிறேன்!
இருண்ட ஆகாயத்திலிருந்து நிலவு தன்னுடைய ஒளியைப் பரவச் செய்துககொண்டிருந்தது. நான் அவர் அருகில் சென்றேன். அவர் ஆர்வத்துடன் இரண்டு கைகளையும் நீட்டினார். நான் என் செல்லக்குழந்தையைத் தட்டி எழுப்பினேன் : “மகனே, இதோ அப்பா! உன்னுடைய அப்பா!”
அவன் கண்விழித்தான். அந்த நீட்டப்பட்ட கைகளை நோக்கி அவன் தாவினான். “அப்பா! அப்பா...!” அவன் தன் தந்தையின் மார்பில் சாய்ந்து படுத்துக் கொண்டான் : “என் அப்பா!... என் அப்பா!”
அவர் அந்தக் காதல் கனியை தொடர்ந்து முத்தமிட்டார். நான் மிகவும் சந்தோஷம்பட்டேன்.
அவன் தன்னுடைய தந்தையை இறுகப் பற்றிக் கொண்டு சொன்னான் : “இனி நான் என் அப்பாவை விடவே மாட்டேன்.”
அவர் அவனுடைய நெற்றியில் முத்தமிட்டார் - தந்தை தன் மகனின் தலையில் கைவைத்து ஆசீர்வதித்தார்.
மறுநாள் திருவோணம். நான் அவர் கழுத்தில் மாலை அணிவித்த நாள்... ஊர் முழுவதும் சந்தோஷத்தில் திளைக்கும் நாள்.
நான் காலையில் குளித்துமுடித்து திண்ணையில் அமர்ந்து தலை வாரிக்கொண்டிருந்தேன். என் தந்தை உள்ளே அமர்ந்து முந்தைய நாள் அப்பளம் விற்பனை செய்த கணக்கைச் சரி பார்த்துக்கொண்டிருந்தார். என் தாய் சமையலறையில் இருந்தாள். ரவி தன்னுடைய புதிய ரப்பர் பந்தை வாசலில் தட்டிக் கொண்டும், சில நேரங்களில் தட்டியதைத் தொடர்ந்து கவிழ்ந்து கீழே விழுந்துகொண்டும், எழுந்து நின்று ஆரவாரம் எழுப்பிக் கொண்டும் இருந்தான். என்னுடைய கர்ப்பத்தில் இருந்த குழந்தை அவ்வப்போது அசைந்துகொண்டிருந்தது.
வாசற்படியில் யாரோ வந்திருப்பதைப்போல எனக்குத் தோன்றியது. ஆமாம்... அவர்தான்- என் குழந்தையின் அப்பா. நான் எழுந்தேன். அவர் படிகளைக் கடந்து என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். பட்டப்பகல் ! எந்தவொரு தயக்கமும் இல்லாமல் அவர் என் வீட்டிற்கு வருகிறார். அதை நான் எதிர்பார்க்கவேயில்லை. அவர் ஒரு மிகப்பெரிய பணக்காரர்! நான் வறுமை வயப்பட்ட ஒரு பெண். அவர் சமுதாயத்தில் மதிக்கப்படும் நிலையிலிருக்கும் ஒரு இளைஞன். நான் சமுதாயத்தால் ஒதுக்கிவைக்கப்பட்ட ஒரு தவறு செய்த பெண். அவர் எல்லாருக்கும் தெரியும் வண்ணம் என் வீட்டிற்கு வருகிறார் என்றால்...! நான் திகைப்படைந்து நின்றுவிட்டேன்.
அவர் வாசலில் வந்து நின்றிருந்தார். ரவி வேகமாக பந்தைத் தட்டிக் கவிழ்ந்து விழுந்தான். பிறகு வேகமாக எழுந்து “ஹாயி! ஹாய்!” என்று உரத்த குரலில் கத்தினான். அவன் தந்தையைப் பார்க்கவில்லை. அவர் அவனை வாரித் தூக்கி ஒரு முத்தம் கொடுத்தார். அவன் தன் தந்தையின் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்தான். “அப்பா! அப்பா! அம்மா, அப்பா வந்திருக்காரு!”
அந்த இடத்தில் இருந்துகொண்டு நகர்வதற்கு, ஏதாவது கூறுவதற்கு என்னால் முடியவில்லை. நான் சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கி மூச்சுவிட முடியாமல் இருந்தேன். அவர் எனக்கு அருகில் வந்து சொன்னார் :
“ரதி, காதல் என்ற ஒன்றின் கழுத்தை நெறிப்பதற்கு இனி என்னால் முடியாது. தந்தை என்ற பதவியை கேலிப் பொருளாக ஆக்குவதற்கு இனி நான் தயாராக இல்லை. வா! என்னைப் பின்தொடர்ந்து வா. சமுதாய நாய்கள் குரைக்கட்டும்! நாம் இனி ஒன்றாகச் சேர்ந்து பயணத்தைத் தொடருவோம்.”
என் தந்தையும் தாயும் வாசலுக்கு வந்தார்கள். யாரும் எதுவும் பேசவில்லை. ரவி தன்னுடைய தந்தையின் காதையும் மூக்கையும் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான். அவருடைய நன்கு சீவப்பட்டிருந்த தலை முடிகளை அவன் கலைத்துவிட்டான். அவருடைய பட்டுச் சட்டையின் எல்லா இடங்களிலும் அவன் தூசிபடும்படி செய்தான்.
“வா..” அவர் கட்டளை பிறப்பித்துவிட்டு, எங்களுடைய குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டு நடந்தார். நான் அவரைப் பின்பற்றினேன்.