எலியாஸ் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 9270
அவர்களை வேலைக்கு வைத்திருப்பது ஒரு விதத்தில் பார்க்கப் போனால் முஹம்மது ஷாவுக்கு லாபகரமான ஒரு விஷயமாகவே இருந்தது. வேலைகளைப் பற்றிய முழு அறிவும், அதை எப்படி முறையாகச் செய்வது என்பதும் அவர்களுக்கு நன்கு தெரிந்திருந் ததே அதற்குக் காரணம். அவர்கள் சோம்பேறியாக எதுவும் செய்யா மல் இருக்க சிறிதும் விரும்பவில்லை. மாறாக, அவர்களால் எந்த அளவுக்குச் செய்ய முடியுமோ, அதைச் செய்து கொண்டிருந் தார்கள். உயர்ந்த நிலையில் இருந்த அவர்களை இப்படிப்பட்ட ஒரு நிலையில் பார்ப்பதற்கு உண்மையிலேயே முஹம்மது ஷா மிகவும் வருத்தப்பட்டார்.
இதற்கிடையில் ஒருநாள் முஹம்மது ஷாவின் சொந்தக்காரர்கள் சிலர் தூர இடத்திலிருந்து அவருடைய வீட்டுக்கு விருந்தாளிகளாக வந்தார்கள். அவர்களில் ஒரு முல்லாவும் இருந்தார். முஹம்மது ஷா எலியாஸிடம் ஒரு ஆட்டைப் பிடித்துக் கொண்டு வந்து அறுக்கும் படி சொன்னார். எலியாஸ் ஆட்டை அறுத்து மாமிசத்தை வேக வைத்து விருந்தாளிகளுக்கு அனுப்பி வைத்தார். விருந்தாளிகள் மாமிசத்தைச் சாப்பிட்டார்கள். தேநீர் பருகினார்கள். பிறகு க்யூமிஸ் ஸைக் குடித்தார்கள். தரை விரிப்பின்மீது போடப்பட்டிருந்த குஷன்களில் உட்கார்ந்து அவர்கள் முஹம்மது ஷாவுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, வேலைகளை முடித்துவிட்ட எலியாஸ் திறந்திருந்த கதவு வழியாக அவர்களைக் கடந்து போனார். எலியாஸ் நடந்து போவதைப் பார்த்த முஹம்மது ஷா விருந்தாளிகளில் ஒருவரைப் பார்த்துக் கேட்டார்:
“இப்போ நம்மைக் கடந்து போனாரே, ஒரு வயதான மனிதர்! அவரை கவனிச்சீங்களா?”
“ஆமா...” அந்த விருந்தாளி சொன்னார்: “அவரைப் பற்றி சொல்றதுக்கு ஏதாவது இருக்கா என்ன?”
“ஆமா... இந்த ஊர்ல இருக்குறவங்கள்லேயே ஒரு சமயம் மிகப்பெரிய பணக்காரரா இருந்தவர் அவர்.” முஹம்மது ஷா சொன்னார்: “அவர் பேரு எலியாஸ். அவரைப் பற்றி நீங்க கேள்விப்பட்டிருக்கலாம்.”
“ஆமா... நான் கேள்விப்பட்டிருக்கேன்.” அந்த விருந்தாளி சொன்னார்: “அவரை நாங்க இதுக்கு முன்னாடி பார்த்தது இல்ல. ஆனா, அவரோட புகழ் தூர இடங்கள்லகூட பரவியிருக்கு...”
“நீங்க சொல்றது சரிதான்... ஆனா, இப்போ அவர்கிட்ட எதுவுமே இல்ல.” முஹம்மது ஷா சொன்னார்: “இப்போ என்னோட வேலைக்காரரா அவர் என்கூட வாழ்ந்துக்கிட்டு இருக்காரு. அவரோட மனைவிகூட இங்கேதான் இருக்காங்க. அவங்கதான் ஆடுகள்கிட்ட இருந்து பால் கறக்குறாங்க.”
அதைக் கேட்டு ஆச்சரியத்தின் உச்சிக்கே போய்விட்டார் அந்த விருந்தாளி. அவர் நாக்கால் ஒரு ஓசை உண்டாக்கியவாறு தலையை ஆட்டிக்கொண்டே சொன்னார்:
“அதிர்ஷ்டம்ன்றது ஒரு சக்கரத்தைப்போல மாறிமாறி சுழன்று கொண்டிருக்கும். ஒரு மனிதனை அது மேலே உயர்த்திவிடும். அதே நேரத்துல இன்னொரு மனிதனைக் கீழே தள்ளிவிடும். தன்னிடமிருந்த எல்லாவற்றையும் இழந்ததற்காக அந்த வயதான மனிதர் கவலைப்படலையா?”
“யார் அதைப் பற்றி அவருக்கிட்ட கேட்கமுடியும்? அவர் எந்த பிரச்சினையும் இல்லாம மிகவும் அமைதியா வாழ்க்கையை நடத்திக்கிட்டு இருக்காரு. தான் செய்யிற வேலையை ஒழுங்கா செய்யிறாரு...”
“நான் வேணும்னா அவர்கிட்ட பேசட்டுமா?” அந்த விருந்தாளி கேட்டார்: “நான் அவரோட வாழ்க்கையைப் பற்றி அவர்கிட்ட கேட்க விரும்புகிறேன்.”
“தாராளமா...” முஹம்மது ஷா சொன்னார். சொன்னதோடு நிற்காமல் தாங்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்தே, “தாத்தா, வாங்க. எங்களோட உட்கார்ந்து ஒரு கோப்பை க்யூமிஸ் குடிங்க. உங்க மனைவியையும் இங்கே வரச்சொல்லுங்க” என்றார்.
எலியாஸ் தன் மனைவியுடன் அங்கு வந்தார். தன் முதலாளிக்கும் விருந்தாளிகளுக்கும் வணக்கம் சொன்ன அவர் ஒரு பிரார்த்த னையை வாயால் கூறியவாறு கதவுக்கு அருகில் போய் உட்கார்ந்தார். அவருடைய மனைவி திரைச்சீலைக்குப் பின்னால் தன்னுடைய எஜமானிக்கு அருகில் போய் உட்கார்ந்தாள்.
எலியாஸுக்கு ஒரு கோப்பை க்யூமிஸ் கொடுக்கப்பட்டது. அவர் விருந்தாளிகளும் தன் முதலாளியும் நல்ல உடல்நலத்துடன் இருக்கவேண்டும் என்று வாழ்த்தியவாறு, தலையைக் குனிந்து கொண்டு, சிறிது க்யூமிஸைக் குடித்துவிட்டு, கோப்பையைக் கீழே வைத்தார்.
“சரி, தந்தையே!” அவருடன் பேச நினைத்த விருந்தாளி சொன்னார்: “எங்களைப் பார்த்தவுடன் உங்க மனசுல வருத்தப் பட்டீங்கன்னு நான் நினைக்கிறேன். இது உங்களோட பழைய செழிப்பான வாழ்க்கையையும் இப்போ இருக்குற கவலைகளையும் ஞாபகத்துல கொண்டு வந்திருக்கலாம்.”
அதற்கு எலியாஸ் புன்னகைத்தவாறு சொன்னார்: “வாழ்க்கை யில எது சந்தோஷம் தரக்கூடிய விஷயம், எது துரதிர்ஷ்டம்னு நான் சொல்றதா இருந்தா, நீங்க நான் சொல்றதை நம்ப மாட்டீங்க. நான் சொல்றதைவிட என் மனைவி சொல்றது பொருத்தமா இருக்கும். அவ ஒரு பெண். அவ இதயத்துல என்ன இருக்குதோ, அதுதான் வெளியேயும் வரும். அவள் எல்லா உண்மைகளையும் உங்களுக்குச் சொல்லுவா...”
விருந்தாளி திரைச்சீலையை நோக்கித் திரும்பினார்.
“சரி, பாட்டி...” அந்த விருந்தாளி தொழுதவாறு சொன்னார்: “உங்க பழைய சந்தோஷம் நிறைந்த வாழ்க்கையையும் இப்போ இருக்குற துரதிர்ஷ்டம் வாய்ந்த வாழ்க்கையையும் பற்றிச் சொல்லுங்க...”
ஷாம் ஷெமாகி திரைச்சீலைக்குப் பின்னாலிருந்தவாறு பதில் சொன்னாள்:
“நான் எங்க வாழ்க்கையைப் பற்றி நினைக்கிறது இதுதான். நானும் என் வயதான கணவரும் சந்தோஷத்தைத் தேடி ஐம்பது வருடங்களா வாழ்க்கையை நடத்தினோம். ஆனால், எங்களால மகிழ்ச்சின்ற ஒண்ணைப் பார்க்கவே முடியல. கடந்த ரெண்டு வருடங்களா, எங்கக்கிட்ட எதுவுமே மீதம் இல்லைன்ற சூழ்நிலை உண்டாகி நாங்க தொழிலாளர்களா ஆன பிறகுதான் உண்மையான மகிழ்ச்சியையே நாங்க பார்க்குறோம். இப்போ இருக்குறதைவிட பெரிசா நாங்க எதையும் எதிர்பார்க்கல.”
அதைக் கேட்டு விருந்தாளிகள் ஆச்சரியப்பட ஆரம்பித்தார்கள். முஹம்மது ஷாவும்தான். அவர் எழுந்து அந்த வயதான பெண்ணின் முகத்தை எல்லாரும் பார்க்கும் வண்ணம் திரைச் சீலையை இழுத்து விட்டார். அந்த வயதான பெண் அங்கு கைகளைக் கட்டிக்கொண்டு தன் கணவரைப் பார்த்து புன்னகை செய்தவாறு நின்றிருந்தாள். எலியாஸ் திரும்பி அவளைப் பார்த்துப் புன்னகைத்தார். கிழவி தான் சொல்லிக் கொண்டிருந்ததைத் தொடர்ந்தாள்.
“நான் உண்மையைச் சொன்னேன். இதைச் சொன்னதுக்காக நான் வருத்தப்படல. அரை நூற்றாண்டு காலமாக நாங்க சந்தோஷத்தைத் தேடி அலைஞ்சோம். நாங்க பணக்காரர்களா இருந்த வரைக்கும், எங்களுக்கு அது கிடைக்கல. இப்போ எங்கக்கிட்ட எதுவும் இல்ல. தொழிலாளிகளா நாங்க வேலை செய்ய ஆரம்பித்தவுடனே, இதைவிட உலகத்துல சிறப்பானது என்ன இருக்குன்னு சொல்ற அளவுக்கு நாங்க வாழ்க்கையில சந்தோஷத்தை அனுபவிச்சிக்கிட்டு இருக்கோம்.”
“எது உங்களுக்கு சந்தோஷத்தைத் தருது?” அந்த விருந்தாளி கேட்டார்.