எலியாஸ்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 9270
பல வருடங்களுக்கு முன்பு உஃபா என்ற நாட்டில் எலியாஸ் என்ற பெயரைக் கொண்ட ஒரு விவசாயி வாழ்ந்தார். அவருக்குத் திருமணம் செய்து வைத்த ஒரு வருடத்தி லேயே அவருடைய தந்தை இறந்துவிட்டார். இறக்கும்போது தன் மகனுக்கு பெரிதாகக் கூறும் அளவுக்கு சொத்து எதையும் அவர் விட்டுச் செல்லவில்லை. அப்போது எலியாஸிடம் ஏழு செம்மறி ஆடுகளும், இரண்டு காளைகளும், இருபது வெள்ளாடுகளும் இருந்தன.
எலியாஸ் ஒரு அருமை யான நிர்வாகி. அதனால் மிகவும் குறுகிய காலத்தில் அவர் படிப்படியாக நல்ல நிலைக்கு உயர்ந்தார். அவரும் அவருடைய மனைவியும் காலையிலிருந்து இரவு வரை கடுமையாக உழைத்தார்கள். மற்றவர்களைவிட சீக்கிரமே படுக்கையைவிட்டு எழுந்து, மற்றவர்களைவிட தாமத மாகத் தூங்கச் சென்றார்கள். அவருடைய சொத்து ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே இருந்தது. தான் வாழ்ந்துகொண்டிருந்த வாழ்க்கையின் மூலம் எலியாஸ் பெரிய அளவில் பணம் சம்பாதித்தார். தனக்கு 35 வயது ஆகும்போது அவரிடம் 200 குதிரைகளும் 150 மாடு களும் 1200 ஆடுகளும் இருந்தன. வேலைக்கு அமர்த்தப் பட்ட தொழிலாளர்கள் அவருடைய ஆடுகளையும் மாடுகளையும் மேய்த்தார்கள். கூலிக்கு அமர்த்தப்பட்ட பெண்கள் ஆடுகளிடமும் மாடுகளிடமும் பால் கறந்து, “க்யூமிஸ்” என்ற நறுமணம் கமழும் குளிர்பானத்தை அதிலிருந்து தயாரித்தார்கள். அத்துடன் வெண்ணெயை யும், வெண்ணெய்க் கட்டியையும். எலியாஸிடம் எல்லாமும் ஏராளமாக இருந்தன. அந்த வட்டாரத்திலிருந்த ஒவ்வொருவரும் அவரைப் பார்த்துப் பொறாமைப்பட்டார்கள். அவர்கள் அவரைப் பற்றிச் சொன்னார்கள்: “எலியாஸ் ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி. அவர்கிட்ட எல்லாமும் ஏராளமா இருக்கு. இந்த உலகம் அவருக்கு உண்மையிலேயே சொர்க்கம் மாதிரி...”
நல்ல நிலையில் இருக்கும் மனிதர்கள் எலியாஸைப் பற்றி கேள்விப்பட்டு அவருடன் அறிமுகம் ஆகிக்கொள்ள விரும்பினார்கள். அவரைப் பார்ப்பதற்காக பிற இடங்களிலிருந்துகூட ஆட்கள் வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் அவர் வரவேற்று, அவர்களுக்கு உணவும், குடிப்பதற்கும் கொடுத்தார். எப்போது யார் வந்தாலும் அவர்களுக்கு க்யூமிஸ், தேநீர், சர்பத், மாமிசம் எல்லாம் தயாராக இருக்கும். அவரைப் பார்ப்பதற்கு ஆட்கள் வரும் போதெல்லாம் கட்டாயம் ஒரு ஆடு வெட்டப்படும். சில வேளைகளில் இரண்டு ஆடுகள்கூட. நிறைய பேர் வந்து விட்டால், ஒரு செம்மறி ஆட்டையே அவர்களுக்காக அவர் வெட்டுவார்.
எலியாஸுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். இரண்டு மகன்களும் ஒரு மகளும். அவர்கள் எல்லாருக்கும் அவர் திருமணம் முடித்து விட்டார். அவர் மிகவும் ஏழையாக இருந்தபோது, அவருடைய மகன்கள் அவருடன் சேர்ந்து வேலை செய்வார்கள். ஆடு, மாடுகளைப் பார்த்துக் கொள்வார்கள். ஆனால், அவர் பணக்காரராக வளர்ந்தபோது, அவர்கள் மிகவும் கெட்டுப் போனார்கள். அவர்களில் ஒருவன் குடிப்பழக்கத்திற்கு அடிமை யாகிப் போனான். மூத்த மகன் ஒரு தகராறில் கொலை செய்யப் பட்டான். இளைய மகன் தன்னிச்சை குணம் கொண்ட ஒரு பெண்ணை மணந்து, தந்தையைச் சிறிதும் மதிப்பதில்லை. அதனால் அவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ முடியாமல் போய்விட்டது. அதனால் அவர்கள் பிரிந்துவிட்டார்கள்.
எலியாஸ் தன் மகனுக்கு ஒரு வீட்டையும், கால்நடைகளில் சிலவற்றையும் கொடுத்தார். அதன் விளைவாக அவருடைய சொத்து சற்று குறைந்தது. அதற்குப் பிறகு ஒரு நோய் பரவியதில், எலியாஸின் ஆட்டுக் கூட்டத்தில் பெரும்பாலானவை இறந்தன. தொடர்ந்து வந்த அறுவடை மிகவும் மோசமாக இருந்தது. நினைத்த மாதிரி பயிரின் அறுவடை இல்லை. பயங்கர ஏமாற்றத் தைத் தந்தது. அந்தக் குளிர் காலத்தின்போது கால்நடைகளில் பெரும்பாலானவை இறந்தன. கிர்கிஸ்காரர்கள் அவருடைய மிகச்சிறந்த குதிரைகளைப் பிடித்துக்கொண்டார்கள். கடைசியில் எலியாஸின் சொத்து குறைந்துகொண்டே வந்தது. அவர் எழுபது வயதை அடைந்தபோது, தன்னிடமிருந்த கம்பளி, போர்வை, குதிரைகளின் சேணங்கள், கூடாரங்கள் எல்லாவற்றையும் விற்க ஆரம்பித்தார். கடைசியில் மீதமிருந்த கால்நடைகளையும் அவர் இழக்க வேண்டிய சூழ்நிலை உண்டானது. சிறிது நாட்களில் அவர் பற்றாக்குறை கொண்ட மனிதராக ஆனார். இந்தச் சூழ்நிலை தனக்கு எப்படி வந்தது என்பதை நினைக்கும் நேரத்தில், அவர் தன்னிட மிருந்த எல்லாவற்றையும் இழந்திருந்தார். தங்களின் வயதான காலத்தில் அவரும் அவருடைய மனைவியும் வேலைக்குப் போக வேண்டிய சூழ்நிலை உண்டானது. அணிந்திருந்த ஆடை, ஒரு உரோமத்தால் ஆன அங்கி, ஒரு தொப்பி, வீட்டுக்குள் அணியும் காலணிகள், வெளியே அணியும் காலணிகள், வயதாகிப் போன அவருடைய மனைவி ஷாம் ஷெமாகி- இவற்றைத் தவிர எலியாஸிடம் எஞ்சி இருந்தது வேறெதுவுமில்லை. அவரிடமிருந்து பிரிந்து சென்ற அவருடைய மகன் எங்கோ தூர தேசத்திற்குச் சென்று விட்டான். அவருடைய மகள் இறந்துவிட்டாள். கடைசி யில் அந்த வயதான தம்பதிகளைக் காப்பாற்றுவதற்கு இந்த உலகில் யாருமே இல்லை என்ற நிலை உண்டாகிவிட்டது.
அவர்களுக்கு பக்கத்து வீட்டிலிருந்த முஹம்மது ஷா அவர்களைப் பார்த்து இரக்கம் கொண்டார். அவர் மிகப்பெரிய பணக்காரரும் இல்லை- ஏழையும் இல்லை. ஆனால், எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். மொத்தத்தில்- அவர் ஒரு நல்ல மனிதராக இருந்தார். அவர் எலியாஸின் விருந்தோம்பும் குணத்தை நினைத்துப் பார்த்து அவரிடம் சொன்னார்:
“எலியாஸ், நீங்களும் உங்க வயதான மனைவியும் என்கூட வந்து இருங்க. கோடை காலத்துல என்னோட தர்பூசணி தோட்டத்துல உங்களால எந்த அளவுக்கு முடியுதோ, அந்த அளவுக்கு வேலை செய்யலாம். குளிர்காலம் வந்திருச்சின்னா, என்னோட கால்நடை களை நீங்க பார்த்துக்கலாம். ஷாம் ஷெமாகி என்னோட ஆடுகளைக் கறந்து க்யூமிஸ் தயாரிக்கட்டும். நான் உங்க ரெண்டு பேருக்கும் தேவையான உணவு, உடை ஆகிய விஷயங்களைப் பார்த்துக்குறேன். உங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டா, என்கிட்ட சொல்லுங்க. உடனே உங்களுக்கு அது கிடைக்கிற மாதிரி செய்யிறேன்.”
எலியாஸ் தன் பக்கத்து வீட்டுக்கார முஹம்மது ஷாவுக்கு நன்றி சொன்னார். அவரும் அவருடைய மனைவியும் முஹம்மது ஷாவிடம் வேலைக்காரர்களாகச் சேர்ந்தார்கள். முதலில் வேலை செய்வது அவர்களுக்கு கஷ்டமாகவே இருந்தது. ஆனால், பழகப் பழக எல்லாம் சரியாகிவிட்டது. அவர்களின் உடல் எந்த அளவுக்கு ஒத்துழைக்கிறதோ, அந்த அளவுக்கு அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்தார்கள்.