எலியாஸ் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 9270
“இப்போ இருக்குற வாழ்க்கைதான்...” அந்த கிழவி சொன்னாள்: “நாங்க பணக்காரர்களா இருந்தப்போ, என் கணவருக்கும் எனக்கும் ஏகப்பட்ட பொறுப்புகள் இருக்கும். நாங்க ஒருவரோடு ஒருத்தர் பேசிக்கிறதுக்குக்கூட எங்களுக்கு நேரம் இருக்காது. எங்களைப் பற்றி நாங்க நினைக்கிறதுக்கும் கடவுளை வணக்குறதுக்கும்கூட நேரம் இருக்காது. எங்களைத் தேடி விருந்தாளிகள் வருவாங்க. அவங்களுக்குத் தேவையான உணவைத் தயார் பண்ணித் தரணும். அவங்களுக்குப் பரிசுகள் ஏதாவது தரணும். இல்லாட்டி எங்களைப் பற்றி அவங்க ஏதாவது தப்பா பேசுவாங்க. அவங்க கிளம்பிப் போன பிறகு நாங்க எங்க வேலைக்காரர்களைப் பார்க்கணும். அவங்க முடிஞ்ச வரையில வேலையை ஒழுங்காச் செய்யாம, நல்லா சாப்பிடணும்னு மட்டும் நினைப்பாங்க. ஆனா, நாங்க அவங்கக்கிட்ட இருந்து எந்த அளவுக்கு வேலையை வாங்க முடியுமோ, அந்த அளவுக்கு வேலையை வாங்குவோம். சொல்லப் போனா, நாங்க பாவம் செய்தோம். எங்கே ஓநாய் வந்து கன்னுக் குட்டியைத் தூக்கிக்கிட்டுப் போயிடுமோ, திருடர்கள் வந்து குதிரைகளைக் களவாடிக்கிட்டு போயிடுவாங்களோன்னு ஒவ்வொரு நிமிடமும் பயத்துலயே இருக்கணும். ராத்திரி நேரங்கள்ல எங்கே ஆடுகளை ஏதாவது மிருகங்கள் வந்து அடிச்சுக் கொன்னு தூக்கிட்டுப் போயிடுமோன்னு கொஞ்சம்கூட தூங்காம முழிச்சிக்கிட்டு இருப்போம். ஆடுகள் எல்லாம் சரியா இருக்கான்னு அப்பப்போ எழுந்து பார்த்துக்கிட்டே இருப்போம். ஒரு வேலை முடிஞ்சா, இன்னொரு வேலை தலையை நீட்டும். குளிர்காலம் வந்திருச்சுன்னா, புல் தயார் பண்ணி வைக்கணும். இது ஒருபுற மிருக்க, வயதான என் கணவருக்கும் எனக்கும் சில நேரங்கள்ல கருத்து வேறுபாடு வந்திடும். நாம இப்படிச் செய்யணும் அப்படிச் செய்யணும்னு அவர் சொல்லுவாரு. நான் அவர் கருத்துக்கு மாறுபாடா ஏதாவது சொல்லுவேன். அதன் விளைவாக எங்க ரெண்டு பேருக்குமிடையே சண்டை வரும். இப்படி மறுபடியும் பாவம் செய்வோம். இப்படியே ஒரு தொந்தரவுல இருந்து இன்னொரு தொந்தரவுக்கு... ஒரு பாவத்துல இருந்து இன்னொரு பாவத்துக்கு நாங்க போய்க்கிட்டே இருப்போம். வாழ்க்கையில சந்தோஷத்தையே பார்க்க முடியாது.”
“இப்போ?”
“இப்போ என் கணவரும் நானும் காலையில கண்விழிச்சவுடனே, ஒருத்தரையொருத்தர் இனிமையா ஒரு வார்த்தையாவது சொல்லிக்குவோம். நாங்க ரொம்பவும் மன அமைதியா வாழ்ந்திக்கிட்டு இருக்கோம். சண்டை போடுறதுக்கான காரணமே இல்ல. எங்களுக்குன்னு பெரிய பொறுப்புகள் எதுவும் இல்ல. எங்க முதலாளிக்கு முழுமையா சேவை செய்யணும்ன்றது மட்டும்தான் மனசுல இருக்கும். எங்க உடம்புல சக்தி இருக்குற வரைக்கும் நாங்க வேலை செய்யிறோம். எங்களால எங்க முதலாளி நஷ்டமடையக் கூடாது. எங்களால அவருக்கு ஆதாயம் இருக்கணும். நாங்க வீட்டுக்குள்ளே வந்தா, எங்களுக்கு சாப்பாடு தயாரா இருக்கும். குடிக்கிறதுக்கு க்யூமிஸ் இருக்கும். குளிரா இருந்தா உஷ்ணம் உண்டாக்க விறகுகள் இருக்கு. குளிருக்கு அணியிறதுக்கு உரோம ஆடைகள் இருக்கு. பேசுறதுக்கு எங்களுக்கு நேரம் கிடைக்குது. எங்களைப் பற்றி நினைக்கிறதுக்கு நேரம் கிடைக்குது. கடவுளைத் தொழுறதுக்கும் நேரம் கிடைக்குது. ஐம்பது வருடங்களா நாங்க சந்தோஷத்தைத் தேடினோம். ஆனா, கடைசியில இப்போதான் அதை நாங்க பார்த்திருக்கோம்.”
அதைக் கேட்டு விருந்தாளிகள் சிரித்தார்கள். அதற்கு எலியாஸ் சொன்னார்:
“சிரிக்காதீங்க, நண்பர்களே. இது சிரிக்கிறதுக்கான விஷயம் இல்ல. இதுதான் வாழ்க்கையின் உண்மை. நாங்ககூட ஆரம்பத்துல முட்டாள்களாகத்தான் இருந்தோம். எங்க சொத்து முழுவதும் எங்களை விட்டுப் போனதுக்காக நாங்க வாய்விட்டு அழுதோம். ஆனா, இப்போ கடவுள் உண்மை எதுன்றதை எங்களுக்குக் காட்டிட்டாரு. எங்க மன ஆறுதலுக்காக நாங்க இதைச் சொல்லல- உங்க நல்லதுக்காகவும்தான்...”
அப்போ முல்லா சொன்னார்:
“உண்மையிலேயே இது ஒரு புத்திசாலித்தனமான பேச்சு. எலியாஸ் எது உண்மையோ, அதைச் சொல்லியிருக்கார். இதேதான் புனித நூல்லயும் சொல்லப்பட்டிருக்கு.”
அதைக்கேட்டு விருந்தாளிகள் சிரிப்பதை நிறுத்திவிட்டு, சிந்திக்க ஆரம்பித்தார்கள்.