கால் சுவடு - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6655
அவரோட தங்கும் இடம் அந்த அரசியல் கட்சியோட அலுவலகம்தான். அந்த அலுவலகம் அரசியல் பிச்சைக்காரர்களுக்கு மட்டுமல்ல - எல்லோருக்குமே ஒரு தர்மசத்திரம் மாதிரிதான். அதற்காக அவர் யார் மீதும் வருத்தப்படல. மக்களுக்காகப் பாடுபடுறவங்களைத் தேடி மக்கள் வர்றாங்க. இரவும் பகலும் மக்கள் வந்துக்கிட்டே இருக்காங்க. இதில் என்ன தப்பு இருக்கு?
அப்படி அவர் வாழ்க்கை போய்க்கிட்டு இருக்குறப்போ, ஒரு இரவு நேரம் வருது.
அப்போ அவரைத் தேடி ஒரு ரசிகர் வர்றாரு. அவர் வர்றப்போ கிட்டத்தட்ட பாதி ராத்திரி நேரம் ஆயிடுச்சு. முன்னாடி இருந்த வராந்தாவில விளக்கு எரிஞ்சுக்கிட்டு இருக்கு. அந்த நேரத்தில் அந்த ஆள் - நம்மோட கருப்பு தலைவர் - தனக்குன்னு இருந்த ஒரே வேஷ்டியையும் சட்டையையும் சோப்பு போட்டுத் துவைச்சு வராந்தாவுல காய வச்சிக்கிட்டு இருக்காரு.
நடந்து களைச்சுப்போய் வந்திருக்கிற தன்னோட ரசிகர்கிட்ட அவரு எதுவும் அதிகமாப் பேசல. வந்த ஆளு பக்கத்துல இருக்குற பட்டணத்துல ஏதோ வேலை தேடி வந்திருக்காரு.
வந்திருந்த ரசிகருக்கு படுக்குறதுக்கு ஒரு பாயையும், தலையணையையும் எடுத்து அரசியல்வாதி கொடுத்து, வராந்தாவுல படுக்கச் சொன்னாரு. 'காலையில பார்க்கலாம்'னு அந்த ஆளுக்கிட்ட சொல்லிட்டு தன்னோட அறைக்குள்ள போயி கதவை மூடிக்கிட்டாரு. ரெண்டு மூணு நாளிதழ்களைத் தரையில விரிச்சு அதுல அவர் படுத்துக்கிட்டாரு. வேற பாயும், தலையணையும் அங்கே கிடையாது. நம்மை மாதிரியே உலகத்துல படுக்குறதுக்குக் கூட எதுவும் இல்லாம எத்தனையோ கோடி மக்கள் இருக்காங்கன்னு மனசுல நினைச்சுக்கிட்டே அந்தத் தலைவர் உறங்கிட்டாரு.
அரசியல்வாதி படுக்கையை விட்டு எழுந்தப்போ காலை எட்டு மணி ஆகியிருந்துச்சு. வாசல் கதவைத் திறந்து பார்த்தாரு. ரசிகர் அங்கு இல்லை. அவர் ஏற்கனவே போய்விட்டிருந்தாரு. தன்கிட்ட ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் போய்விட்டதற்காக அந்த அரசியல்வாதிக்கு... அப்படி எதுவும் தோணல. காரணம் - இதற்கு முன்னாடி பலரும் இந்த மாதிரி நடந்திருக்காங்க. ஏன் - அந்த அரசியல்வாதியே கூட பல வீடுகளிலும் இரவு நேரத்தில் தங்கியிருந்துட்டு காலையில் புறப்படுகிறப்போ யார்கிட்டயும் ஒரு வார்த்தைகூடச் சொல்லிக்காமலே கிளம்பியிருக்காரு. ஒரே ஒரு
வித்தியாசம் என்னன்னா - படுத்த பாயை அந்த ஆளு சுருட்டி வைக்கக்கூட இல்லை. அந்தப் பாயின் நடுவில் அதன் இதயத்தில் மிதிப்பது மாதிரி... செம்மண் பதிஞ்ச ஒரு கால்சுவடு...
முன்பு யாரும் இந்த மாதிரி படுத்த பாயைச் சுருட்டி வைக்காமலே போனதில்லைன்ற விஷயம் மனசில் தோன்றினாக்கூட, அந்த அரசியல் தலைவர் அதை ஒரு பெரிய விஷயமா எடுத்துக்கொள்ளல. அவர் குளிச்சு முடிச்சு, காயப்போட்டிருந்த சட்டையையும் வேஷ்டியையும் தேடிப்போனப்போ அவை இரண்டுமே அங்கே இல்லை!"
"இது நடந்தது நேத்து பகல்லயா?"
"ஆமா..."
அவர்கள் இருவரும் நீண்ட நேரம் ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை. சிறிது நேரத்தில் அரசியல்வாதி அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டார்.
வருடங்கள் கடந்தோடின. இதற்கிடையில் தான் பார்த்த அந்தப் பேரழகியை அவர் திருமணம் செய்துகொண்டார்."
என்னிடம் இந்தக் கதையை சொன்ன இலக்கியவாதிக்கு ஏனோ தன்னுடைய ரசிகையைத் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை.
அந்தக் கருப்பு நிற அரசியல்வாதியை இப்போது நான் நினைத்துப் பார்க்க வேண்டிய காரணம் என்ன? பழைய போலீஸ்காரர்கள் புதிய அரசாங்கத்தைத் திருப்திப்படுத்துவதற்காக அடித்துக் கொன்றார்களோ என்னவோ... பாம்பு கடித்து இறந்துவிட்டார் அவர் என்றும் சொல்கிறார்கள். அந்த அரசியல்வாதி நேற்றைக்கு முந்தின நாள் இரவில் இறந்துவிட்டார் என்று நேற்றைய பத்திரிகையில் நான் செய்தி படித்தபோது என் கண் முன்னால் தெரிந்தது - அந்த செம்மண்ணால் ஆன கால் சுவடு.