கால் சுவடு
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6659
'கால் சுவடு என்ற இந்தக் கதை ஒரு அரசியல்வாதி சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இரவு நேரத்தில் ஒரு இலக்கியவாதியின் அறைக்குள் நுழைந்து அவரிடம் நேரில் சொன்ன ஒன்று.
இந்தக் கதையைக் கேட்ட இலக்கியவாதி சில நிமிடங்களுக்கு என்ன பேசுவதேன்றே தெரியாமல் சிலை என அப்படியே நின்றுவிட்டார். இதை அந்த இலக்கியவாதியே என்னிடம் ஒருநாள் சொன்னார்.
நான் இப்போது அந்தப் பழைய கதையை நினைத்துப் பார்ப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது என்ன காரணம் என்பதைப் பின்னால் சொல்கிறேன்.
அந்த இலக்கியவாதியைப் போலவே, யாரும் கூறி அரசியல் காரியங்களில் ஈடுபடவில்லை அந்த அரசியல்வாதி. உள்மனதில் எழுந்த ஒரு உத்வேகம்... இப்படி சொல்வது ஒரு வேளை சரியாக இருக்கலாம்... இதுதான் அவரை அரசியலுக்குக் கொண்டுவந்திருக்க வேண்டும். தன்னைச் சுற்றிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கை அவலம் நிறைந்ததாக இருக்கிறது, காணச் சகிக்க முடியாததாக இருக்கிறது, அடிமைத்தனம் கொண்டதாக இருக்கிறது - அதனால் அழகான, ஆரோக்கியமான, சுதந்திரமான ஒரு மனித வாழ்க்கையை அந்த அரசியல்வாதி தன் மனதின் அடித்தளத்தில் கற்பனை செய்து பார்த்தார். அவர் அப்படியொன்றும் பெரிய தகுதிகள் கொண்டவர் இல்லை. அவர் பிறந்தது என்னவோ மிகவும் ஏழ்மையான ஒரு குடும்பத்தில்தான்.
பதினெட்டு வயதிலிருந்து அவரின் அரசியல் வாழ்க்கை ஆரம்பமாகிவிட்டது. பல்வேறு சமயங்களில் - மொத்தம் ஒன்பது வருடங்கள் சிறையில் இருந்திருக்கிறார். அவர் நன்றாகப் பேசுவார். நிறைய படிப்பார். நன்றாகச் சிந்திப்பார்.
அவர் மிகச் சில நாட்களிலேயே அந்தப் புரட்சிகரமான கொள்கைகளைக் கொண்ட அரசியல் கட்சியின் தலைவராகவும் ஆனார்.
அந்தக் கால கட்டத்திற்கு அந்த அரசியல்வாதியை அந்த இலக்கியவாதிக்கு நன்கு தெரியும். அவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே சமயத்தில் சிறைத்தண்டனை அனுபவித்திருக்கிறார்கள். அவர்கள் இருவருக்குமிடையே ஏகப்பட்ட விஷயங்களில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. இருவரின் செயல்களில் கூட வேறுபாடு இருந்தன. இது ஒருபுறமிருக்க, ஒரு ஆச்சரியமான விஷயமும் அவர்களுக்கு இடையே இருந்தது. அது - அந்த அரசியல்வாதி மென்மையான மனிதர் இல்லையென்றாலும், இலக்கியவாதியுடன் பேசும்போது ஜாலியாக மனம்விட்டுச் சிரித்தவாறே பேசிக் கொண்டிருப்பார்.
அந்த இலக்கியவாதி அந்த அரசியல்வாதியிடம் அவரின் நிறத்தைப் பற்றியும், மற்ற விஷயங்கள் குறித்தும் கிண்டல் பண்ணுவார்.
"தலைவரே!" - இலக்கியவாதி கூறுவார்: உங்களோட கண்களோட வெள்ளையும் பற்களும் மட்டுமே வெண்மை நிறத்துல இருக்கு."
"நகங்கள்?"
"ம்... நகங்களைக் கூட சேர்த்துக்கலாம். சரி... நீங்கள் ஏன் இவ்வளவு கருப்பா இருக்கீங்க?"
"போக்கிரி! என்னோட நிறத்தைப் பற்றிப் பேசி என்னை ஒரேயடியா மட்டம் தட்டுறியா?"
போலீஸ்காரர்கள் அவரின் நிறத்தைச் சொல்லி அவரைக் கேவலமாகப் பேசியிருக்கிறார்கள். போலீஸ்காரர்களைப் பொறுத்தவரை - ஒரு ஆளைத் தரம் தாழ்த்திப் பேசுவதற்கோ, அடிப்பதற்கோ பெரிய காரணம் ஒன்றும் தேவையில்லை. அந்தக் காலத்தில் நாட்டை ஆண்டுகொண்டிருந்ததே வெள்ளை நிறத்தவர்தாம். அவர்களின் அடிமைகளாகத் தவிட்டு நிறமுடைய ராஜாக்கள் இருந்தார்கள். அந்த ராஜாக்களின் அடிமைகளாகப் பொதுமக்கள் இருந்தார்கள்.
அப்படிப்பட்ட பொதுமக்களில் ஒருவனான - அதுவும் ஒரு கருப்பன் - அரசியல் விஷயங்களைப் பேசுவதா?
பொது மக்களிடமிருந்தே இதற்கு பெரிய எதிர்ப்பு. இருந்தாலும் இதையெல்லாம் மீறி அந்த அரசியல் கட்சி வளர்ந்தது. ஆங்காங்கே நிறைய காயங்கள் அதற்கு உண்டானாலும், அது வளரவே செய்தது. அப்படி வளர்ந்து வரும் காலகட்டத்தில்... ஒரு இரவு நேரம். கிட்டத்தட்ட மணி பத்து இருக்கும். இலக்கியவாதி ஒரு பெண்ணுக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருந்தார். வாசல் கதவு அடைக்கப்பட்டிருந்தது. அப்போது வெளியே இருந்து ஒரு குரல்-
"போக்கிரி உள்ளே இருக்காரா?"
இலக்கியவாதிக்கு வெளியே இருந்து அழைப்பது யார் என்று தெரிந்துவிட்டது. அவர் சொன்னார்:
"இல்ல... முக்கியமான ஒரு விஷயமா ஒரு இடத்துக்குப் போயிருக்காரு. உங்களுக்கு என்ன வேணும்?"
"போக்கிரி!" - அவர் சொன்னார்: "கதவைக்திற..."
இலக்கியவாதி சொன்னார்:
"திறக்க விருப்பம் இல்ல..."
அவர் வெளியில் இருட்டில் நின்றவாறு சொன்னார்:
"நான் ரெண்டரை மைல் தூரம் நடந்தே வந்திருக்கேன். வழியில் நான் இருக்க வேறு இடமே இல்லை. கதவைத் திற..."
இலக்கியவாதி சொன்னார்:
"என்னோட அறை அரசியல் பிச்சைக்காரர்களுக்குக் கட்டியிருக்கிற தர்ம சத்திரமொண்ணும் இல்ல..."
"நான் இப்போ கதவை உதைச்சு உடைக்கப்போறேன்."
"தலைவரே... நான்தான் இதற்கு வாடகை கொடுத்துக்கிட்டு இருக்கேன்..."
"பரவாயில்ல... அதனால என்ன? பேசாம கதவைத் திற..."
"நான் உங்க கோஷ்டி இல்ல..."
"பிறகு?"
"ஒரு பெண்ணோட கோஷ்டி. அவளோட கண்கள் மலரைப் போல அழகானதா இல்ல... அவளோட கூந்தலுக்கு இரவில் பூக்குற பூவோட வாசனை எதுவும் இல்ல. இருந்தாலும் நான் அவள் பக்கம்தான்..."
இதைக் கேட்டதும் வெளியில் இருந்து ஒரு சிரிப்புச் சத்தம்-
"மனிதனுக்குப் பைத்தியம் பிடிச்சா நான் என்ன செய்யட்டும்?"
"எனக்கொண்ணும் பைத்தியம் பிடிக்கல..."
"அப்படின்னா கதவைத்திற..."
"கதவைத் திறக்கிறேன். ஆனா, ஒண்ணு செய்யணும்."
"என்ன?"
"உங்களோட அரசியல் நண்பர்கள் ராத்திரி, பகல் எல்லா நேரங்கள்லயும் தேவையில்லாம இங்கே வந்து எனக்குத் தொந்தரவு தர்றாங்க. இதற்குத் தடை போட முடியுமா?"
"முடியாத விஷயம்..."
"அப்படியா?"
"சரி... கதவைத்திற..."
"திறந்து விடுறேன். இந்த நாட்டை நீங்க ஆளுகிற சந்தர்ப்பம் கிடைக்கிறப்போ எனக்கு என்ன உதவி செய்வீங்க?"
"உன்னை ஒரு போலீஸ் கான்ஸ்டபிளா ஆக்குறேன்."
"எனக்கு அது வேண்டாம்."
"அப்ப போலீஸ் இன்ஸ்பெக்டர்?"
"அதுவும் வேண்டாம்."
"கமிஷ்னர்?"
"வேண்டாம்."
"விடுதலைப் படையின் கமாண்டர் இன்சீஃப்?"
"அதுவும் வேண்டாம்."
"பிறகு என்னதான் வேணும்?"
“என்னை ஒரு இஸ்பேட் ராஜாவா ஆக்கினா போதும்."
"நிச்சயமா அது முடியாது. நம்ம திட்டத்திலேயே ராஜாக்கள்ன்ற ஒண்ணே இல்லியே!"
"இருந்தாலும் ஒரு சரித்திர அடையாளம்ன்ற முறையில என்னை ஒரு ராஜாவா நீங்க ஆக்கணும். எனக்கு மக்கள் யாரும் வேண்டாம். உண்மையாவே நான் சொல்றேன். அப்பவும் நான் கதை எழுதுவேன். எனக்குத் தேவை என்ன தெரியுமா? ஏரிப் பக்கத்துல தீவு மாதிரி ஒரு இடம் இருக்குல்ல? அங்கே ஒரு சிறிய வீடு கட்டித் தரணும். அதைச் சுற்றி ஏராளமா மரங்கள் இருக்கணும். அங்கே ஒரு தாமரைக் குளமும் ஒரு பூந்தோட்டமும் இருக்கணும்..."
"பிறகு..."
"அந்த இடத்துக்கும், வீட்டுக்கும் என்கிட்ட இருந்து வாடகை எதுவும் வசூலிக்கக் கூடாது. அங்கே ரேடியோ இருக்கணும். டெலிஃபோன் இருக்கணும்."