கால் சுவடு - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6655
"சரி...ஏற்பாடு செஞ்சிட்டா போச்சு. கதவைத் திற..."
அந்த இலக்கியவாதி கதவைத் திறந்தார். அரசியல்வாதி உள்ளே நுழைந்தார்.
இதற்குமுன்பு இப்படியொரு கோலத்தில் அவரை இலக்கியவாதி பார்த்ததே இல்லை. உடம்பில் சட்டை இல்லை. வேஷ்டி இல்லை. ஒரு கிழிந்துபோன துண்டை உடலில் சுற்றியிருந்தார்.
இலக்கியவாதியின் சாய்வு நாற்காலியில் வந்து அமர்ந்த அரசியல்வாதி எதுவுமே நடக்காதது மாதிரி காட்டிக்கொண்டு சொன்னார்:
"ரொம்ப தாகமா இருக்கு. பசியும் எடுக்குது."
இலக்கியவாதி சொன்னார்:
"தாகம் எடுத்தா சாப்பிடணும்... பசி எடுத்தா... ஆமா... பசி எடுத்தா என்ன செய்றது?..."
அவர் அதைக் கேட்காதது மாதிரி சொன்னார்:
"எனக்கு இப்ப ஒரு சட்டையும், வேஷ்டியும் வேணும்."
இலக்கியவாதி தன்னுடைய பெட்டியைத் திறந்து ஒரு புதிய சட்டையையும், ஒரு புதிய வேஷ்டியையும் எடுத்துத் தந்தார்.
"உங்களைப்போல உள்ள கருத்த ஆளுங்க முகத்துல போடுற கருப்பு பவுடர் வேணும்னா..."
"எனக்கு பசியும், தாகமுமா இருக்கு" - அவர் சொன்னார். அவரின் குரல் மிக மிக பலவீனமாக இருந்தது. சாப்பிட்டே அதிக நாட்கள் இருக்கும்போலத் தெரிந்தது.
அடுத்த நிமிடம் இலக்கியவாதி வெளியே போனார். ஹோட்டலில் போய், சாப்பிட சிலவற்றை வாங்கிக் கொண்டு வந்தார்.
சாப்பிட்டு முடித்து, தண்ணீர் குடித்து, ஒரு பீடியைப் பிடித்தவாறே அரசியல்வாதி சொன்னார்:
"ஆவ்... ஆட்சி அதிகாரம் கையில வந்திடுச்சுன்னா... நாங்க செய்யப்போற முதல் வேலை என்ன தெரியுமா?"
"தெரியும்..." - அந்த இலக்கியவாதி சொன்னார்: "எனக்கு நான் சொன்ன வீடு, படகு, மரங்கள், பூந்தோட்டம் ஆகிய விஷயங்களை செஞ்சு தருவீங்க..."
"நான் சொல்றதைக் கேளு..." - அரசியல்வாதி சொன்னார்: "இலக்கியவாதிகளைக் கொல்றதுதான் முதல் வேலை..."
"பிறகு?"
அவர் கேட்டார்:
"இலக்கியவாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் என்ன வேறுபாடு?"
"அது...அது...எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்தானே!"
"இருந்தாலும் சொல்லு... என்ன வேறுபாடு?"
"அரசியல்வாதிகளுக்கு அறிவு கிடையாது. இலக்கியவாதிகளுக்கு அது இருக்கு!"
அவர் சிரித்தார். பிறகு சொன்னார்:
"இலக்கியவாதிகள் சோம்பேறிகள்... பைத்தியக்காரர்கள்... திருடர்கள்..."
இலக்கியவாதி சொன்னார்:
"ஒழுங்கா எந்திரிச்சி என்னைப் பார்த்துக் கும்பிடுங்க. என் பாதங்களைத் தொட்டு உங்க தலையில வச்சுக்கோங்க. நாங்கள் உங்களைப் பற்றி ஏதாவது சொன்னா, நடக்கிற கதையே வேறு.
நாங்கள் அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. நாங்க சொல்லப் போனால் ரொம்பவும் நல்லவங்க. எங்களைப்போல கடுமையா உழைக்கிற ஒரு இனத்தை..."
"நான் உன்னைக் கூப்பிட்டப்போ, நீ என்ன செஞ்சிக்கிட்டு இருந்தே?"
"ஒரு பெண்ணுக்கு... அதாவது - ஒரு இளம் பெண்ணுக்கு நான் கடிதம் எழுதிக்கிட்டு இருந்தேன். அவள் ஒரு கல்லூரி மாணவி..."
"அந்தக் கல்லூரி மாணவிக்கு என்ன வேணுமாம்?"
"அவளுக்கு என்ன வேணும்னு எனக்குத் தெரியாது. இல்லாட்டி, தெரியும்... அவள் ஒரு பயங்கர புத்திசாலி..."
"புத்திசாலி பொண்ணுன்னா ரொம்பவும் கவனமா இருக்கணும்" - அவர் சொன்னார்: "நான் இப்போ சப்-ஜெயில்ல இருந்தப்போ தேவையில்லாம ஒரு பிரச்சினையில மாட்டிக்கிட்டேன்..."
"என்ன பிரச்சினை?”
"வேற என்ன? காதல்தான்..."
"காதல் ஒரு பிரச்சினையா என்ன?"
"ஒரு அரசியல்வாதியைப் பொறுத்தவரை காதல்ன்றது ஒரு பிரச்சினைதான். அதுவும் எதைப் பற்றியும் நிச்சயம் சொல்லமுடியாத இந்தக் காலகட்டத்தில்... ம் ... எது எப்படியோ, நான் அதுல மாட்டிக்கிட்டேன். சீக்கிரம் அவளைக் கல்யாணம் பண்ணணும். இன்னொரு பிரச்சினை - அவ ரொம்பப் படிச்சவ."
"பொண்ணு நல்ல அழகா?"
"பேரழகி!"
"கேட்கவே ஆச்சரியமா இருக்கு. உங்களைப் போல ஒரு கருப்பனை.... சரி போகட்டும்... இது எப்படி நடந்துச்சு?"
"அவ என்னோட ரசிகையா இருந்திருக்கா!"
"ரசிகையா? கேட்கவே வினோதமா இருக்கே! கருப்பனான ஒரு அரசியல்வாதிக்கு ஒரு ரசிகையா?"
"ஆமா... நான் மேடையில பேசுறதைக் கேட்டுட்டு, எத்தனை பெண்கள் அழுதிருக்காங்க தெரியுமா? எத்தனையோ பெண்கள் கழுத்துலயும், கைகள்லயும் போட்டிருக்கிற நகைகளைக் கழற்றிக் கொடுத்திருக்காங்க..."
"உங்களோட இந்தப் பேரழகி என்னத்தைத் தந்தா?"
"அவள் என்னோட சொந்தம்னு சொல்லி என்னைப் பார்க்க வந்தா. சப்-ஜெயிலுக்குப் பக்கத்துலயே அவளோட வீடு இருந்ததால, ஒவ்வொரு நாளும் சாப்பிடுறதுக்கு ஏதாவது தயார் பண்ணி அவளே என்னைத் தேடிக்கொண்டு வருவா. அவ்வளவுதான். அவள் பக்கம் ஒரேயடியா நான் சாஞ்சிட்டேன். அவள்கிட்ட என்னை முழுமையா நான் இழுந்துட்டேன்... உன்னோட அந்த இளம் ரசிகையைப் பற்றிச் சொல்லு..."
இலக்கியவாதி சொன்னார்:
"நான் ஒரு பாவமான மனுஷன்றது..."
"இது உலகமே தெரிஞ்ச விஷயமாச்சே!"
"நீங்க சொல்றது சரிதான். போன வெள்ளிக்கிழமை அவ என் கையில ஒரு கவரைக் கொண்டு வந்து கொடுத்தா. 'இதுல ஒரு சிறுகதை இருக்கு. இதைப் படிச்சுப்பார்த்துட்டு, திருத்தங்கள் பண்ணிக்கொடுங்க'ன்னா. நான் இங்கே வந்து கவரைப் பிரிச்சுப்பார்த்தா, உள்ளே ஒண்ணுமே இல்ல. அஞ்சு, பத்து ரூபாய் நோட்டுகள் மட்டும் உள்ளே இருக்கு."
"இதுதான் அவளோட சிறுகதையா! ஐம்பது ரூபாய்!"
"ஆமா..."
"அதுல இப்ப பாக்கி எவ்வளவு இருக்கு?"
"அந்தப் பணத்துல இருந்து ரெண்டு மாச அறை வாடகை கொடுத்திருக்கேன். ஹோட்டலுக்குக் கொஞ்சம் பணம் தந்திருக்கேன். புது வேஷ்டி, சட்டை வாங்கினேன். அதைத்தான் நீங்க இப்ப போட்டிருக்கீங்க… எல்லாம் போக கையில ஆறரை ரூபா இருக்கு..."
"அதுல ரெண்டு ரூபா எனக்கு வேணும்..."
இலக்கியவாதி இரண்டு ரூபாயை எடுத்து அவர் கையில் தந்தார்.
அரசியல்வாதி அவரைப் பார்த்துக் கேட்டார் :
"உங்களுக்கு ஏராளமாக ரசிகர்கள் இருப்பாங்களே!"
"நிறைய..."
"அவர்கள் யாராவது உங்களைப் பார்க்க வந்தால் நீங்கள் என்ன பண்ணுவீங்க?"
"நான் முதல்ல அவங்க வந்தவுடனே அவங்களோட பாக்கெட்டைத் தடவிப் பார்ப்பேன். அங்கே எதுவுமே இல்லைன்னா 'என்னைப் பார்க்க வேண்டாம். நீங்க போகாலாம்' னு சொல்லிடுவேன்..."
"எனக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்காங்க. நான் ஒரு கதை சொல்றேன். எப்படி அதை ஆரம்பிக்கிறதுன்றதுதான் தெரியல..."
"இது என்ன பெரிய விஷயமா? சும்மா ஆரம்பிங்க. முன்பு ஒரு காலத்தில்..."
"ஆமாம்...." - அந்த அரசியல்வாதி சொல்லத் தொடங்கினார்: "பல வருடங்களுக்கு முன்னாடி என்னைப்போல ஒரு கருப்பு நிற அரசியல்வாதி இருந்தார். பதினெட்டாவது வயசுல இருந்து அவர் அரசியல் காரியங்கள்ல ஈடுபட ஆரம்பிச்சார். போலீஸ்காரங்ககிட்ட நிறைய அடிகள் அவர் வாங்கி இருக்கார். நிறைய நாட்கள் பட்டினி கிடந்திருக்கார். தொழிலாளிகளுக்காக, விவசாயிகளுக்காக, அறிவாளிகளுக்காக - மொத்தத்தில், மக்களோட நல்வாழ்வுக்காகவும், அமைதியான சூழ்நிலைக்காகவும் இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு பாடுபட்டுக்கிட்டு இருக்கிற முற்போக்கு சிந்தனை கொண்ட ஒரு அரசியல் கட்சியோட தலைவர் அந்த மகான்.