பட்டாளமும் என் விரக்தி உணர்வும் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6587
"டேய் தலைவர்மார்களா! என்னடா நீங்க நாட்டை ஆளுறீங்க? என்னை நீங்க ஏமாத்திட்டீங்களே! இப்படிக் கக்கூஸ்ல உட்கார்ந்து மலம் கழிக்கிறதுக்கும் மூத்திரம் இருக்குறதுக்கும் திங்கிறதுக்கும் குடிக்கிறதுக்குமா நான் பட்டாளத்துல வந்து சேர்ந்தேன்? ஒரு போர் வந்ததை ஏன்டா தேவையில்லாம நிறுத்துனீங்க? தேசத் துரோகிகள்! நாத்தமெடுத்த ஜென்மங்கள்! நாய்கள்! பிசாசுகள்!" அடுத்த கழிவறையில் உட்கார்ந்திருந்த தண்டபாணி மலம் கழிப்பதைத் தற்காலிகமாக நிறுத்திவைத்து சத்தம் போட்டுச் சொன்னான்: "யாரு? யாரு? என்னது? பிசாசா? அம்மா, தாயே, பிசாசா?" அவன் ஒரேயடியாகக் கூப்பாடு போட்டவாறு கழிப்பறையை விட்டு வெளியே ஓடி வந்தான். நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன். நான் அப்படி உரத்த குரலில் சத்தம் போட்டதன் விளைவு -மூன்று நான்கு நாட்களாக மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டிருந்த என் வயிறு திடீரென்று குணமாகி, தன் வேலையை ஒழுங்காகச் செய்ய ஆரம்பித்தது. அதை அனுபவித்தவாறு, நான் கழிவறையிலேயே உட்கார்ந்திருந்தேன். வெளியே- தண்டபாணி நான் இருக்கும் கழிவறையின் கதவைத் தட்டினான். "என்னாச்சு? யார் உள்ளே இருக்கிறது? பிசாசு எங்கே? முருகா! முருகா!" நான் கதவை இலேசாகத் திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டியவாறு சொன்னேன்: "டேய் தண்டபாணி, இங்கே எந்த பிசாசும் இல்ல... நான்தான் இருக்கேன்!" "நீயா?"- தண்டபாணி நிம்மதிப் பெருமூச்சு விட்டவாறு சொன்னான்: "யாரோ இப்ப பிசாசு பிசாசுன்னு கத்தினாங்க!" நான் அவனிடம் சொன்னேன்: "டேய்... பிசாசு பட்டாள கேம்புக்கு வருமா? அதுவும் கழிவறைக்கு. பட்டாளக்காரங்களோட பிசாசுகள் போர் நடந்த இடத்துல இருக்குற மரத்திலும், கிணற்றிலும், குளத்திலும் இருக்கும்" "நீ சொல்றது சரி"- தண்டபாணி சொன்னான்: "பிசாசு கக்கூஸுக்கு ஏன் வரப்போகுது? அது ஏன் மலமா இருக்கப் போகுது?" அவன் திரும்பிப் போய் கதவை அடைத்து தண்ணீர் எடுப்பதை நான் கேட்டேன். "தண்டபாணி...."-நான் மெல்ல அழைத்தேன். "என்ன?"- அவன் கேட்டான். "சைனா போர் முடிஞ்சதுனால உனக்கு ஒண்ணும் வருத்தம் இல்லியா?" "போடா முட்டாள்..."- அவன் சொன்னான்: "பேசாம உட்கார்ந்து மலம் கழிக்கப் பாரு"- தொடர்ந்து அவன் எல்லாத் திசைகளிலும் கேட்கிற மாதிரி ஒரு காற்றை வெளியே விட்டான். அதைக் கேட்டதும், என் கவலையும், கோபமும் இருந்த இடம் தெரியாமல் போய்மறைந்தன. என்னிடமிருந்த விரக்தி உணர்வு என்னை விட்டு நீங்கியது.
ஜெய் ஹிந்த்! ஜெய் ஜவான்! ஜெய் கிஸான்!