பட்டாளமும் என் விரக்தி உணர்வும் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6587
ஆனால் போரே இல்லாமல் என்ன பட்டண வாழ்க்கை? இதற்காகவா நான் எர்ணாகுளத்தில் சாப்பாடு இல்லாமல் கொசுக்கடி அனுபவித்துக் கிடந்தேன்? இரவு நேரத்தில் ரெயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் இருந்த புறம்போக்கு நிலத்தில் ஒரு பெண் என்னைக் கையைக் காட்டி அழைக்க, நான் அவளை நோக்கிப் போனதை நினைத்துப் பார்க்கிறேன். "நான் வேணுமா?"- அவள் என்னைப் பார்த்துக் கேட்டாள். தொடர்ந்து செத்துப்போன மனிதர்கள் வாயில் இருக்கும் சிரிப்பைப் போல, ஒரு சிரிப்பு சிரித்தாள். எனக்கு மனதிற்குள் ஆசை எழுந்ததென்னவோ உண்மை. இருந்தாலும் அவளிடம் நான் சொன்னேன்: "என்னைப் பார்த்தா கேக்குறே? என்னைப் பத்தி நீ என்ன நினைச்சே? நான் பட்டாளத்துக்குப் போய்க்கிட்டு இருக்கேன். உனக்குத் தெரியுமா?" அவள் எனக்கு மிக அருகில் வந்து நின்று சொன்னாள்: "அங்கே போயி சாகப்போற. ஒரு தடவை சுகமா இருந்துட்டு போக வேண்டியதுதானே! எட்டணா கொடுத்தா போதும்." சுத்தமான உடலுடன் பட்டாளத்தில் சேர வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்ததால், நான் அவளை ஒரு பக்கம் தள்ளிவிட்டு, அன்று வேகமாக நடந்தேன். "போடா நாயே... நீயும் உன் பட்டாளமும்" என்று சொல்லியவாறு அவள் என்மீது காரித் துப்பினாள். இதை எல்லாம் நான் அனுபவித்தது எதற்காக? போரில் ஈடுபட வேண்டும் என்பதற்காகத்தானே! இயந்திரத்துப்பாக்கி சைனாக்காரர்கள் கையில் மட்டும்தான் இருந்தது. நம்கையில் இருந்தது சாதாரண ரைஃபிள்தான் என்பதே எனக்கு பின்னால்தான் தெரிந்தது. என்ன இருந்தாலும், அதைக் கேட்ட போது என் மனதில் உண்டான ஏமாற்றத்திற்கு அளவே இல்லை.
சைனாக்காரர்கள் மீது மட்டுமல்ல, எனக்குச் சரியான அறிவில்லாததால், நம்முடைய மகான்களான பெரிய தலைவர்மார்கள் மீதும் எனக்கு பயங்கர கோபம் வந்தது. உடற்பயிற்சி முடிந்து, மைதானத்திற்கு வெளியே நடைபாதையில் போடப்பட்டிருந்த செங்கல்லால் ஆன வரிசைக்கு வெள்ளையடித்துக் கொண்டிருந்தபோது, ஈராற்றுபேட்டைக்காரன் பிரபாகரனிடம் நான் சொன்னேன்: "என்ன கஷ்டம்டா இது, பிரபாகரா! இவ்வளவு பெரிய நம்ம இந்தியாவுக்கு ஆறு மாசம் நீண்டு நிக்கிற மாதிரி ஒரு போர் செய்ய வக்கு இல்லாமப்போச்சு! இந்த நேருவும் மத்த தலைவருங்களும் என்னதான் செய்யிறாங்க? சும்மா தலையில தொப்பிய வச்சிக்கிட்டு, பாக்கெட்ல பூ வச்ச வெள்ளை கோட்டைப் போட்டுக்கிட்டு, நடந்து திரிஞ்சா போதுமா? இந்த மாதிரி ஆளுங்களுக்கு ஓட்டு போடற எங்கப்பாவை மாதிரியான ஆளுங்களைப் பிடிச்சு உதைக்கணும்."
"அப்பாவை அப்படியெல்லாம் பேசாதடா" என்றான் பிரபாகரன். "அந்த மாதிரி ஆளுங்களைச் சாட்டையை வச்சு பின்னி எடுக்கணும். நம்மள இந்த அளவுக்குக் கொண்டு வந்தது அவங்கதானே?" என்று நான் சொல்லிக்கொண்டே குனிந்து வெள்ளையடித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் பின் பாகத்தில் 'சுரீர்' என்று ஒரு அடி கிடைத்தது. வேதனை தாங்காமல் பின்னால் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன். 'பந்த் கரோ துமாரா பாத்சித், கேரள் காஸுவர்'-சுபேதார் கல்யாண்சிங் மீண்டும் என்னை அடிப்பதற்காக பிரம்பை ஓங்கியவாறு உரத்த குரலில் கத்தினார்.
'நீ அடிக்கிற அடி எனக்கு புல்லு மாதிரிடா, சுபேதாரே'- என் மனதிற்குள் நான் கூறிக் கொண்டேன்: 'என் தந்தை என்னை அடிச்ச அடிகள் முன்னாடி நீ அடிக்கிறதெல்லாம் எனக்கு தூசி மாதிரி!'- மாப்கர்னாஸாப்'- நான் அவருக்கு சல்யூட் அடித்தவாறு சொன்னேன். அந்த ஆள் அந்த இடத்தை விட்டுப் போனதும், பிரபாகரன் தாழ்வான குரலில் சொன்னான்: "மாப் இல்லடா முட்டாள். மாஃப். என்ன இருந்தாலும், பெத்த தகப்பனைக் கன்னாபின்னான்னு பேசினதுக்கு தெய்வம் சரியான தண்டனை உனக்குக் கொடுத்துச்சு". "டேய் பிரபாகரா"- நான் சொன்னேன்: "என்னடா பெரிய தண்டனை! என் பின்னாடி இருக்குற தழும்பை என்ன நீ பார்க்கவா போற?"
ஆனால், என் மனதிற்குள் இருந்த வருத்தம் அதோடு தீர்ந்து விடவில்லை. எனக்குச் சரியாக உறக்கமே வரவில்லை. அப்படியே இலேசாக உறங்கினால்கூட, கெட்ட கெட்ட கனவுகளாக வந்தன. கனவில் குஞ்ஞன்னமோ இயந்திரத் துப்பாக்கியோ வரவில்லை. அதற்கு பதிலாக செத்துக் கிடக்கும் பூனைகள் எழுந்து பெரிய குரலில் 'ம்யாவோ' என்று அழுதவாறு, கண்களை மூடிக்கொண்டு, தொங்கிக் கொண்டிருக்கும் வாலுடன் வரிசையாகப் போய்க் கொண்டிருப்பது மாதிரி கனவு கண்டேன். பூனைகள் வரிசையாகப் போன ஊர்வலத்தின் முன்னால் கருப்புப் பூனையின் மீது என் தந்தை கையில் ஒரு பிரம்பை வைத்துக் கொண்டு பந்தாவாக அமர்ந்திருக்கிறார். சிறிது நேரத்தில் பூனைகளின் கண்கள் பாதியாகத் திறக்கின்றன. அவை என்னையே பார்க்கின்றன. என் தந்தையின் தலை கோணியால் மூடப்பட்டிருக்கிறது. கண்கள் இருக்கும் இடத்தில் இரண்டு துளைகள். அவற்றுக்குப் பின்னால் இருந்தவாறு இரண்டு சிவந்த கண்கள் என்னையே உற்றுப் பார்க்கின்றன. நான் பயந்து நடுங்கியவாறு உரத்த குரலில் அலறுகிறேன், வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுகிறேன். பக்கத்து படுக்கையில் படுத்திருந்த ராமசாமி நான் கண்டபடி உளறுவதைக் கேட்டு, அவனின் கட்டிலுக்குக் கீழே போய் பயத்தால் பம்மிக் கொண்டான் என்று லம்போதரன் என்னிடம் சொன்னான். எழுபத்தொன்றாம் வருடம் நடந்த போரில் அந்த லம்போதரனின் உடலைக்கூடக் கண்டு பிடிக்க முடியவில்லை. உண்மையிலேயே வருத்தமான விஷயம்தான்.
ராமசாமி ஒரு மடையன். அவன் என்னிடம் கூறுவான்: "டேய் தாமஸ், எங்கப்பாவைப் போல நானும் கோவில்ல பூசாரியா ஆகணும்னு மனப்பூர்வமா ஆசைப்பட்டேன். ஆனா, எங்கப்பா விட்டாத்தானே! 'டேய் ராமசாமி... கடவுளுக்கு பூஜை பண்றவங்க தேவையில்ல போல இருக்கு. அப்படித்தான் நான் நினைக்கிறேன். பூஜையை யார் பண்ணச் சொல்றாங்களோ, அவுங்கதான் கடவுளுக்கு வேணும் போல இருக்கு. இல்லாட்டி உனக்கும் ராஜிக்கும் அம்மாவுக்கும் ஒரு வேளை சாப்பாட்டுக்கு இப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியதிருக்குமா? நீ ஒரு நாளும் பூசாரியா ஆக வேண்டாம். அதுக்குப் பதிலா பட்டாளத்துல போய்ச்சேர்ந்திடு. அது போதும்.'னு அவர் சொன்னாரு."
அவனுக்கு பட்டாள வாழ்க்கை கொஞ்சமும் ஒத்து வரவில்லை. கடைசியில் அறுபத்து ஏழில் போர் அறிவிக்கப்பட்ட மறுநாள், அவன் கேம்ப்பில் இருந்த கோவிலுக்குப் போய் கடவுளைத் தொழுதுவிட்டு, ரிப்பேர் முடிந்து வந்துகொண்டிருந்த ஒரு டாங்கிற்குக் கீழே கூப்பிய கைகளுடன் படுக்க, உருளை அவனுக்கு மேலே ஏறியது. இப்படி ஒரு மனிதன்!
தூத்துக்குடிக்காரனான தண்டபாணிதான் என்னுடைய மனரீதியான போராட்டங்களில் இருந்தும், விரக்தியில் இருந்தும் என்னைப் பொதுவாகக் காப்பாற்றினான். கழிவறையில் உட்கார்ந்திருக்கும் பொழுது நான் மன வேதனைப்பட்டு என்னையும் அறியாமல் உரத்த குரலில் சொல்லிவிட்டேன்: