பட்டாளமும் என் விரக்தி உணர்வும்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6587
கதை இதுவரை:
முரடனான தந்தையின் கொடுமைகள் தாங்க முடியாமல், இளைஞனான கதாநாயகன் தன் தந்தை கரும்பூனையைப் பிடிக்க பயன்படுத்தும் கோணிக்குள் அவரைக் கட்டிப் போட்டுவிட்டு, வீட்டைவிட்டு ஓடுகிறான். மறுநாள் சைனா இந்தியா மீது படையெடுத்தது என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைகிற கதாநாயகன், நாட்டின் மீது கொண்ட அளவற்ற பற்றால் பெங்களூரில் இருக்கும் பட்டாளத்திற்கு ஆள் சேர்க்கும் மையத்திற்கு விரைகிறான்.
(இதற்கு மேல் விவரங்கள் தெரிய வேண்டுமானால் நான் எழுதிய 'நான் பட்டாளத்தில் ஏன் சேர்ந்தேன்?' என்ற கதையைப் படிக்கவும்)
ஆனால், சைனாக்காரர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள். நான் கொச்சி துறைமுகம் டெர்மினஸ்ஸை கஷ்டப்பட்டு தேடிக் கண்டுபிடித்தேன். வாழ்க்கையிலேயே முதல் தடவையாக ஆறு ரூபாய் நாற்பது பைசா கொடுத்து புகைவண்டிக்கு டிக்கெட் வாங்கி, எப்போது புகைவண்டி வரும் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்து, புகைவண்டி வந்ததும் உணர்ச்சிவசப்பட்டு ஏறி, நிற்பதற்குக் கூட இடமில்லாமல் கழிவறை வாசலில் பொழுதுபுலரும் வரை உட்கார்ந்து, அங்கேயே அமர்ந்து உறங்கியதால் தலை எங்கோ போய் இடிக்க, நெற்றியில் காயம் உண்டாகிப் புடைக்க, வழியும் மொழியும் தெரியாமல் பெங்களூர் தெருக்களில் அலைந்து திரிந்து, எச்.ஏ.எல்லுக்கு அருகில் உள்ள மலையாள மெஸ்ஸில் இரண்டு வார காலத்திற்கு சமையல் வேலை செய்து, பள்ளியில் பார்த்த ஒரு இளம் கன்னியாஸ்திரீயின் உதவியால் பட்டாளத்திற்கு ஆள் எடுக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, பட்டாளத்திற்கு நான் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டபோது, போர் முடிந்து விட்டது என்று சொன்னால் எப்படி இருக்கும்?
போர் என்றால் குறைந்தபட்சம் எட்டு வருடங்களாவது நிச்சயம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் என்றுதான் பொதுவாக நான் நினைத்திருந்தேன். எனக்கு எந்த அளவிற்கு ஒரு ஏமாற்றம் உண்டாகி இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். சைனாக்காரர்களை நான் திரும்பத் திரும்ப மனதிற்குள் சபித்தேன். இவ்வளவு சீச்கிரம் போரிலிருந்து விலகி நிற்பது என்றால் எதற்கு இந்த தேவையில்லாத ஆர்ப்பாட்டங்கள்? இயந்திரத் துப்பாக்கியுடன் உங்களுக்கு முன்னால் குதித்து கட்... கட்... என்று உங்களைச் சுட்டு வீழ்த்துவதற்கு நான் பயிற்சி கூட இன்னும் ஆரம்பிக்கவில்லை. திருட்டு சைனாக்காரர்களே! இவ்வளவு சீக்கிரம் ஏன் போரை முடிவுக்குக் கொண்டு வந்தீர்கள்?
பள்ளிக் கூடத்தில் படிக்கிறபோது என்.ஸி.ஸி.க்கு வந்த இந்திக்காரன் இயந்திரத் துப்பாக்கியைப் பற்றி சொல்லித் தந்த காலம் முதல் அது என் மனதிற்குள் மாறாத ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது. செறுமுற்றத்து ஒற்றைக் கண்ணன் கொச்சப்பன் அண்ணன் வைத்திருந்த துப்பாக்கியைப் போலவோ, என்.ஸி.ஸி.பரேடின் போது தந்த டம்மி ரைஃபிள் போலவோ, ஒவ்வொரு முறை சுட்டு முடித்தபோதும், குண்டை நிரப்புகிற வேலை இயந்திரத் துப்பாக்கியிடம் இல்லை என்பதை நான் புரிந்து கொண்டேன். குண்டு வரிசையாக நிரப்பி இருப்பதை துப்பாக்கியின் பல் சக்கரத்தின் பொறுப்பில் விட்டுவிட்டு, வெறுமனே விசையை இழுத்தவாறு அதை குறிவைத்து, நின்று கொண்டிருந்தால் போதும், அதுதானே 'பட் பட்' என்று சுட்டுக் கொண்டிருக்கும். இதே மாதிரி ஆயிரக்கணக்கான குண்டுகளை வெடிக்கலாம். பட்டாசு வெடிப்பதைப் போல தன் போக்கில் அது வெடித்துக் கொண்டிருக்கும். எதிரிகள் ஆயிரக்கணக்கில் அடுத்தடுத்து மடிந்து கீழே விழுவார்கள். நான் ஒருநாள் ஒரு கனவு கண்டேன். ஃபெரோனாப் பள்ளியில் இருக்கும் தங்கச் சிலுவையைப்போல 'பளபள'வென மின்னிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய இயந்திரத் துப்பாக்கியைப் பார்த்து நான் குண்டை நிரப்பி வெடிக்கச் செய்வதும், சந்தோஷ மிகுதியால் நடனமாடுவதுமாய் இருக்கிறேன். அதோடு சேர்ந்து பாட்டு பாடவும் செய்கிறேன். என்னுடைய குண்டுகள் வெடித்து, எதிரிகள் ஈக்களைப் போல கீழே செத்து விழுகிறார்கள். திடீரென்று என் கையில் இருக்கும் இயந்திரத் துப்பாக்கியில் ஒரு மாற்றம். நான் பார்க்கும்போது, நான் கையில் பிடித்திருப்பது என் வகுப்பில் படிக்கிற அரீப்பறம்பு குஞ்ஞன்னம் என்பதை உணர்கிறேன். அவள் உடம்பில் மருந்துக்குக் கூட துணி இல்லை. குளத்தில் குளித்து முடித்து வந்ததைப்போல உடம்பெல்லாம் வெண்மை நிறத்தில் சோப்பு நுரை. குஞ்ஞன்னம் என்னைப் பார்த்துச் சிரிக்கிறாள். அதே நேரத்தில் அவளிடமிருந்து எப்படியோ குண்டுகள் வெடிக்கின்றன. எதிரிகள் செத்து கீழே விழுந்து கொண்டிருக்கிறார்கள். நான் உரத்த குரலில் சத்தமிட்டவாறு அவளைக் கீழே போடுகிறேன். அவள் துள்ளி எழுந்து, செத்துக் கிடக்கும் எதிரிகளுக்கு நடுவில் ஓடுகிறாள். அப்போது பிணங்கள் ஒவ்வொன்றாக எழுந்திருக்கின்றன. அவை துப்பாக்கி முனைகள்போல நீட்டிக் கொண்டிருக்கும் தங்களின் பிறப்பு உறுப்புகளை எனக்கு நேராக நீட்டுகின்றன. ஒவ்வொரு பிறப்பு உறுப்பிலிருந்தும் ஒரு குண்டு புறப்பட்டு வந்து மின்னல் வேகத்தில் என்னை நோக்கிப் பாய்ந்து வருகிறது. அவை என் உடம்புக்குள் நுழைந்த போது, அடடா... நான் அனுபவித்த சுகம் இருக்கிறதே! திடீரென்று நான் என் பிறப்பு உறுப்பைத் தேடுகிறேன். என் கையில் எதுவுமே படவில்லை. காரணம்- பிறப்பு உறுப்பை அங்கே காணோம். தூரத்தில் நின்றவாறு குஞ்ஞன்னம் விழுந்து விழுந்து சிரிக்கிறாள். "வீல்' என்ற அலறியவாறு நான் கண்களைத் திறக்கிறேன்.
முதல் போர் ஒரு கனவாக இருந்தாலும், அதில் கூட இயந்திரத் துப்பாக்கி வரவே செய்தது. எவ்வளவு எதிர்பார்ப்புகளுடன் நான் பெங்களூரில் வெயிலில் பட்டாளத்திற்கு ஆள் எடுக்கும் மையத்தில் வரிசையில் நின்றிருந்தேன் தெரியுமா? மருத்துவப் பரிசோதனை நடத்திய கிழட்டு டாக்டர் என் பிறப்பு உறுப்பையும், விதைகளையும் தொட்டுப் பார்த்துவிட்டு, இதற்கு முன்பு அங்கு ஏதாவது நோய் வந்திருக்கிறதா என்று கேட்டார். அப்போது என் கனவில் அவை காணாமல் போனது ஞாபகத்தில் வந்தது.
எனக்குப் பின்னால் வரிசையில் நின்றிருந்த குற்றியாடிக்காரனான பாலகிருஷ்ணனிடம் என்னுடைய விருப்பத்தைச் சொன்னபோது, அவன் சொன்னான்: "போர் முடிஞ்சு போச்சுடா. சைனாக்காரங்க பின் வாங்கின செய்தி உனக்குத் தெரியாதா? நீ எந்த உலகத்துல வாழ்ந்துக்கிட்டு இருக்கே!" "அப்படியா? கஷ்டமாப்போச்சே!"- நான் மிகவும் வருத்தத்துடன் சொன்னேன். பாலகிருஷ்ணன் என்னையே முறைத்துப் பார்த்தான். போர் என்பது பொத்தானை அழுத்துவதைப் போல விருப்பப்படுகிற நேரத்தில் நடத்தலாம், இல்லாவிட்டால் நிறுத்திக் கொள்ளலாம்- அது நம் விருப்பப்படி நடத்திக் கொள்கிற ஒரு தொழில் என்பதே நீண்ட நாட்கள் சென்றபிறகு தான் எனக்கே தெரிந்தது.
போர் நின்று போன செய்தியை அறிந்த அன்று இரவு எனக்கு தூக்கமே வரவில்லை. நான் சிந்தனையில் மூழ்கிவிட்டேன். தந்தையைக் கோணிக்குள் போட்டு மூடிவிட்டு வந்த எனக்குப் போர் ஒரு பாதையைக் காட்டித் தந்தது என்பது உண்மைதான்.