நான் பட்டாளத்தில் சேர்ந்த கதை - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6906
என் தந்தை, என் தாயையும், அவள் வயிற்றில் இருந்த என்னையும் அடித்து உதைத்த மாதிரி இந்தப் பெண்களையும் யாராவது அடிப்பார்களோ? ஊஹூம்... நிச்சயமாக இருக்காது- நானே எனக்குள் சொல்லிக்கொண்டேன். எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் இந்த மாதிரி நடக்குமா என்ன? ஒரு சில பெண்களுக்கு மட்டுமே இத்தகைய விரும்பத்தாக அனுபவங்கள் கிடைக்கின்றன என்பதே உண்மை. இப்படி நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோது பின்னால் இருந்து என் கழுத்தை இறுகப் பிடித்தார் என் தந்தை. அவர் சொன்னார்: "நீ இந்த வேலையும் ஆரம்பிச்சிட்டியா?"- அவர் என் கழுத்தை இறுகப் பிடித்திருந்ததால், என்னால் வாய் திறந்து எதுவும் பேச முடியவில்லை. "என்ன வேலை?" என்று அவரைக் கேட்க வேண்டும் என்று நினைத்தேன். என் மடியில் இருந்த பூனை தாவி ஒரே ஓட்டமாக ஓடியது. என் தந்தை என் முதுகில் ஓங்கி மிதிக்க நான் வாசலில் போய் விழுந்தேன். நான் அடுத்த நிமிடம் பதறிப்போய் எழுந்து நிற்க, குளத்தில் நின்றிருந்த அன்னம், பத்மினி, கமலாட்சி- மூவரும் சிரிப்பது என் காதில் விழுந்தது. அவர்கள் ஒரு கல்லின் மேல் ஏறி நின்று என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். அப்படி அவர்கள் சிரித்தபோது அவர்களின் சிறிய மார்பகங்கள் குலுங்கின. நின்றிருந்த இடத்தில் இருந்து என் தந்தையை ஒரு நிமிடம் வெறித்துப் பார்த்தேன். அடுத்த நிமிடம்- அந்த இடத்தை விட்டு நான் ஓடினேன்.
அன்று இரவு என் தந்தை கறும்பூனையைக் கொண்ட கோணியுடன் வீட்டிற்கு வந்து, அதை சமையலறையின் ஒரு மூலையில் வைத்தார். அடுத்த நிமிடம்- இருட்டில் மறைந்து நின்றிருந்த நான் ஒரு தடியால் ஓங்கி என் தந்தையின் தலையில் ஒரு போடு போட்டேன். அடி விழுந்தது என் தந்தையின் பின்தலையில். அடி விழுந்ததும் அப்படியே கீழே சாய்ந்துவிட்டார் அவர். என் தந்தை கொண்டு வந்த கோணியை அவிழ்த்து, அதற்குள் அவரின் தலையை நுழைத்து அவரின் கழுத்துப் பகுதியில் கோணியோடு சேர்த்து கயிறால் கட்டினேன். என் தந்தையும் பூனையும் சேர்ந்து ஏதாவது பேசிக் கொண்டிருக்கட்டும் என்று அப்படியே விட்டுவிட்டேன். ஒரு அட்டைப்பெட்டியில் என்னுடைய ஆடைகளை எடுத்துக் கொண்டு, குளத்தைக் கடந்து, பலா குன்றைத் தாண்டி, வியர்வை அரும்ப வேகமாக ஓடி சாலையை அடைந்து பொன்குன்னத்தில் இருந்து பத்தரை மணிக்கு வருகிற கடைசி பேருந்தில் கோட்டயத்திற்கு வந்து, பொழுது புலரும் நேரத்தில் எர்ணாகுளத்திற்கு வந்தேன். அங்கே ஒரு சாயா கடையில் நுழைந்து ஒரு சாயா போடச் சொன்னேன். ஆனால், சாயா கடைக்காரனும் மற்றவர்களும் கூட்டமாக அமர்ந்து அன்றைய நாளிதழை ஆர்வத்துடன் படித்துக் கொண்டிருந்தார்கள். "இதென்ன! சாயா போடச் சொல்லி எவ்வளவு நேரமாச்சு! நீங்க பாட்டுக்கு பேப்பர் படிச்சிக்கிட்டு இருந்தா...?" என்றேன் நான். என் தந்தையும், பூனையும் இந்நேரம் பேசி முடித்திருப்பார்கள். அவர்கள் இரண்டு பேரும் தங்களுக்குள் பல விஷயங்களையும் பேசி சுகமாக வாழட்டும். என் தந்தை இந்த மகனை எப்போதும் ஞாபகத்தில் வைத்திருப்பார். எந்தக் காலத்திலும் மறக்க மாட்டார். இனி என் தந்தை யாரை அடிப்பார்? இதை நினைத்தபோது மனதில் இனம் புரியாத ஒரு கவலை வந்தது. நான் கண்களைத் துடைத்தவாறு சுற்றிலும் பார்த்தேன். எனக்கு யாரும் சாயா தரவில்லை. எல்லோரும் பத்திரிகையைச் சுற்றி உட்கார்ந்திருந்தனர். அவ்வளவுதான்- எனக்குக் கோபம் வந்துவிட்டது. நான் அவர்கள் அருகில் சென்ற உரத்த குரலில் சொன்னேன்: "ஒரு சாயா தர முடியுமா? முடியாதா?" இப்படிக் கேட்டவாறு நான் பத்திரிகையைப் பார்த்தேன். நான் நின்றிருந்த தரை விலகுவது போல் இருந்தது எனக்கு. நம்பிக்கை வராமல் மீண்டும் அந்தத் தலைப்பைப் படித்தேன்.
'சைனா இந்தியா மீது படையெடுப்பு! சைனா இந்தியா மீது படையெடுப்பு' என் தலையில் ஏதோ பெரிதாக விழுந்ததுபோல் இருந்தது. நான் பலத்திற்காக சுவரில் சாய்ந்து நின்றேன். கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. தெளிவற்ற குரலில் நான் சொன்னேன்: "இந்தியா மீது சைனா படையெடுப்பு!"
எனக்கு அதற்குப் பிறகு நடந்தது எதுவும் ஞாபகத்தில் இல்லை. மயக்கம் தெளிந்து பார்த்தபோது என்னை சாயா கடையில் ஒரு பெஞ்சில் படுக்க வைத்திருந்தார்கள். தண்ணீர் தெளித்திருந்ததால், என் முகமும் சட்டையும் நனைந்திருந்தன. நான் திடுக்கிட்டு எழுந்தேன். கடையின் சொந்தக்காரன் ஒரு பீடியைப் பிடித்தவாறு வெளியே நின்றுகொண்டிருந்தான். அவன் என்னைப் பார்த்துச் சொன்னான்: "உனக்கு என்ன ஆச்சு? நேத்து ஒண்ணும் சாப்பிடலியா? இல்லாட்டி அளவுக்கு மேல சாப்பிட்டு ஏதாவது பிரச்சினையா? ஒரு சாயா போடட்டுமா?
"போலோ பாரத மாதா கீ ஜே"- நான் உரத்த குரலில் சொன்னேன். அவ்வளவுதான்- கடைக்காரன் நடுங்கியே விட்டான். நடுங்கிய குரலில் என்னைப் பார்த்துக் கேட்டான்: "உனக்கு என்ன ஆச்சு?" முஷ்டியைச் சுருட்டிவிட்டு, வலது கையை உயர்த்தியவாறு நான் உரத்த குரலில் கத்தினேன்: "போலோ பாரதமாதா கீ ஜே!" அடுத்த நிமிடம்- கடைக்காரன் சற்று தள்ளி நின்று என்னையே பார்த்தான். அவனின் முகத்தில் பயமும், கவலையும் தெரிந்தது. நான் என்னைச் சுற்றிலும் பார்த்தேன். நான் கொண்டு வந்த அட்டைப் பெட்டி எங்கே? இரண்டு சட்டைகளும், ஒரு வேஷ்டியும், ஒரு கைலியும், இரண்டு ஜட்டிகளும், ஒரு துண்டும் அதில் இருந்தன. சாயா கடைக்காரன் தூரத்தில் இருந்தே கேட்டான்: "என்னத்தைத் தேடுற?" நான் சொன்னேன்: "என்னோட பெட்டியை..." அவன் கேட்டான்: "சாக்கு நூல் போட்டு கட்டிய ஒரு அட்டைப் பெட்டியா?" நான் சொன்னேன்: "ஆமா.. அதுலதான் என்னோட எல்லா துணிகளும் இருந்துச்சு." கடைக்காரன் என்னையே பரிதாபமாகப் பார்த்தான். அவன் சொன்னான்: "அதை யாரோ எடுத்துட்டு போனாங்களே! சரி... சைனா நம்ம நாட்டு மேல படை எடுத்திருக்கு! உனக்குத் தெரியுமா?" நான் சொன்னேன்: "தெரியும். பரவாயில்ல. அதுல இருந்தது எல்லாம் பழைய துணிங்கதான். போனா போயிட்டுப்போகுது. இன்னைல இருந்து நான் புதிய ஒரு ஆடை அணியப்போறேன். பட்டாள ட்ரெஸ்!" நான் இப்படிச் சொன்னதும் அந்த ஆள் கேட்டான்: "அதை வாங்க உன் கையில காசு வச்சிருக்கியா?" அந்த ஆள் கேட்டதற்கு நான் பதில் சொல்லவில்லை. வேகமாகக் கடைக்காரனின் அருகில் போய் நின்றேன். அவன் பயந்துபோய் என்னைப் பார்த்தான். நான் அந்த ஆளின் வலது கையைப் பிடித்து என் வலது கையுடன் சேர்த்து, தலைக்கு மேலே உயர்த்தியவாறு உரத்த குரலில் கத்தினேன்: "போலோ பாரத மாதா கீ ஜே... சொல்லு..." நான் அந்த ஆளிடம் சொன்னேன். அவன் வெட்கம் கவிய சொன்னான்: "கீ ஜே...!" நான் கேட்டேன்: "இங்க பட்டாளத்துக்கு ஆள் எடுக்குற இடம் எங்க இருக்கு தெரியுமா?"- அந்த ஆள் எனக்கு வழி சொல்லித் தந்தான்.
நான் வேஷ்டியை மடித்துக் கட்டி தலைமுடியை கையால் நீவிவிட்டு, தலையை உயர்த்தி, கம்பீரமாக அங்கு நடந்து சென்றேன். நான் மனதிற்குள் சொன்னேன்: "அப்பா... உங்களோட மகன்... நான் இப்போ போறேன்... என்னை ஆசீர்வதியுங்க." என் இரண்டு கண்களில் இருந்தும் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது. கண்ணீர் வழிந்தது, என் தந்தையை நினைத்து அல்ல- பாரத மாதாவை நினைத்து. "சைனாக்காரா... இதோ நான் வர்றேன்"- என் மனதிற்குள் நான் கூறினேன்.