
என்னை அடித்ததன் மூலம் என் தந்தையின் கையும் வலித்திருக்க வேண்டும். அறுபத்தைந்தாம் ஆண்டில் நான் வெடிவைத்துக் கொன்ற ஒரு பாகிஸ்தான் பட்டாளக்காரனின் பிணத்திற்குப் பக்கத்தில் நின்றிருந்தபோது, என்ன காரணத்தாலோ என் தந்தையை நினைத்தேன். இந்த மனிதனுக்கும் எனக்கும் என்ன விரோதம் இருக்கிறது? இவனை நான் ஏன் கொன்றேன்? இதே மாதிரிதான் எந்தவித காரணமும் இல்லாமலே என் தந்தை என்னை அடித்திருக்க வேண்டும். உண்மையில் அன்பின் காரணமாகத்தான் நான் இந்த மனிதனைக் கொன்றேன். அதாவது- நான் பிறந்த என் நாட்டின் மீது நான் கொண்ட அன்பு. இதுபோல வெளியே சொல்ல முடியாத அன்பு காரணமாக என்னை என் தந்தை அடித்திருக்க வேண்டும். அவனின் இரண்டு கண்களும் திறந்திருந்தன. நான் கீழே அமர்ந்து அவனின் கன்னங்களை வருடியவாறு சொன்னேன்: "ஸாரி தம்பி... பாரத மாதாவுக்கு ஜே!" நான் அவனையும் அவன் என்னையும் சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டோம். நான் என் கால் சட்டை பையினுள் கையை விட்டுப் பார்த்தால், அங்கு நேரு தலை உள்ள ஒரு ரூபாய் நாணயம் ஒன்று இருந்தது. அந்தப் பையனின் வலது கண்ணில் அந்த நாணத்தையும், இடது கண்ணில் ஒரு சிறிய கல்லையும் வைத்து நான் அவனின் கண்களை மூடினேன். பிறகு... என்னுடைய நெற்றியில் சிலுவை வரைந்தேன். அது அவனுக்கும் சேர்த்துதான் என்று என் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.
நான் சொல்ல வருவது என்னவென்றால், என்னதான் இருக்கட்டும், ஒரு தந்தையுடன் ஒரு மகன் கோபம் கொள்ளலாமா? நிச்சயமாக கூடாது. ஆனால் என்னால் சகித்துக் கொள்ள முடியாத ஒரு விஷயம் இருந்தது. அது - பூனைக்கறி. பொதுவாகவே பூனைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். என் தந்தையிடம் அடி வாங்கி நான் குடிசையின் ஒரு மூலையில் அமர்ந்து மூக்கைச் சிந்திக்கொண்டிருக்கும்போது, பூனைகள் அடுப்புக்கருகில் இருந்த இடத்தை விட்டு எழுந்து வந்து என்னை வாலால் தடவுவதும், உடலால் உரசுவதும், என் முகத்தைப் பார்த்து 'மியாவ்' என்று சிறிய குரலில் அழுவதும்... பூனைகளின் உடலில் அடுப்பின் உஷ்ணம் இருக்கும். காச நோய்க்கு கரும்பூனைக்கறி நல்லது என்று யாரோ சொன்னார்கள் என்று என் தந்தை கரும்பூனைக் கறியைத் தொடர்ந்து சாப்பிட ஆரம்பித்தார். ஆனால், வீட்டில் பூனைகளுக்கு கறுப்பு குட்டிகள் எப்போதாவதுதான் பிறக்கும். அவை வளர்ந்து பெரிதாகிவிட்டால், என் தந்தை அதைக் கொன்று சாப்பிட்டு விடுவார். சில நேரங்களில் சாயங்கால நேரம் வந்துவிட்டால் ஒரு கோணியை எடுத்துக்கொண்டு வெளியே போவார். காலையில் சமையலறையின் மூலையில் கிடக்கிற கோணிக்குள் சாடுவதும், உறுமுவதும், கத்துவதுமாய்... பூனைகள். மதிய நேரம் அவருக்கு பூனைக்கறியுடன் சாப்பாடு. பூனைக்கறியைப் பார்க்கிற போது எனக்கு வயிற்றைப் புரட்டிக்கொண்டு வரும். அது வைக்கப்பட்டிருந்த பாத்திரம் எதுவாக இருந்தாலும், எனக்கு ஒத்து வராது. அந்தப் பாத்திரத்தில் என்னால் சாப்பிட முடியாது. ஆனால், என் தந்தை என்னை அடித்து சாப்பிடச் சொல்லுவார். என்னுடைய பன்னிரண்டாம் வயதில், ஏழாவது மைலில் இருக்கும் கள்ளுக்கடையில், பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் தண்ணீர் எடுத்துக்கொடுக்கும் வேலை எனக்குக் கிடைத்தது. என் சம்பளப் பணத்தில் மறைத்து வைத்திருந்த காசில் ராமன் நாயரின் சாயா கடையில் நான் காப்பியும் பலகாரமும் வாங்கிச் சாப்பிடுவேன். ராமன் நாயரின் மனைவி மாறுகண்ணால் என்னை அன்புடன் பார்த்தவாறு, புன்சிரிப்பு தவழ இலையில் வைத்து எனக்குத் தந்த ஏத்தக்கா அப்பமும், போளியும், உளுந்து வடையும் சாப்பிட்டபோது, பூனைக்கறியை நான் மறந்தே போனேன். மூன்று பலகாரங்களுமே எனக்கு மிகவும் பிடித்தவையாக இருந்ததால் கடைசியில் எதைச் சாப்பிடுவது என்று முடிவெடுக்க முடியாமல் இருந்தேன். காரணம்- கடைசியில் எதைச் சாப்பிடுகிறேனோ, அந்த ருசிதான் காப்பியின் இனிப்புடன் சேர்ந்து நான் வீட்டுக்குப் போகும்வரை வாயில் தங்கி இருக்கும். சில நேரங்களில் நான் தீர்மானம் எடுக்க முடியாமல் பலகாரத்தையே பார்த்தவாறு வாயில் எச்சில் ஊற உட்கார்ந்திருப்பேன். அப்போது ராமன் நாயரின் மனைவி வந்து மேஜைமேல் கையை ஊன்றியவாறு குனிந்து நின்று என்னையோ பார்த்துச் சிரித்தவாறு கூறுவாள்: "என்னடா தம்பி... எதையும் சாப்பிடாம பார்த்துக்கிட்டே இருக்கே! சாப்பிடு..." அவளின் சிரிப்பில் குளிர்ந்து போகும் நான் வேகமாக ஒரு பலகாரத்தை எடுத்துக் கடிப்பேன்.
சின்னப்பையனாக இருந்தபோது என் தந்தை புளியங்கொம்பாலும், கையாலும் என்னை அடித்தார் என்றால், எனக்கு பதினாலு வயது ஆனதிலிருந்து மூங்கிலாலும், தென்னை மட்டையாலும் என்னைத் தாக்குவார். காரணம், அப்போது என் தந்தையைப் போலவே நான் கருங்கல் போன்ற தேகத்தையும், ராட்சசன் போன்ற தோற்றத்தையும் கொண்டிருந்ததுதான். என்னைக் கையால் அடிக்கிறபோது, என் தந்தையின் இரண்டு விரல்களில் பலமாக வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் கையால் அடிப்பதை நிறுத்தி விட்டார். அந்தச் சமயத்தில்தான் நான் ஆறாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். அப்போதே எனக்கு போர் என்றால் மிகவும் பிடிக்கும்.
போரைப் பற்றி நான் படித்த ஒரு பாட்டை மெட்டுடன் உரத்த குரலில் பாடியவாறு நான் வெட்ட வெளிகளில் சுற்றித்திரிவேன். ஆறாம் வகுப்பு முடித்தவுடன் நான் முழு நேரமும் கூலி வேலைக்குப் போகத் தொடங்கினேன். அப்போது நான் ஒரு பாறைபோல வளர்ந்துவிட்டிருந்தேன். ஆனால் என் தந்தையை விட எனக்கு பலம் அதிகம் என்பது எனக்கு நன்கு தெரிந்திருந்தாலும் அவர் என்னை அடிக்கும்போது நான் எதுவுமே செய்யாமல் அமைதியாக நின்று கொண்டிருப்பேன். கடைசியில்... ஒரு ஞாயிற்றுக்கிழமை- அன்று வேலை இல்லாததால், ஓய்வாக திண்ணையில் உட்கார்ந்து- மடியில் ஒரு பூனையை வைத்துத் தடவியவாறு என்னவோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன். அப்போது எங்கள் வீட்டுக்கு முன்னால் இருந்த குளத்தில் குளிப்பதற்காக என்னுடன் படித்த மூன்று பெண்கள் போய்க் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் அந்தப் பெண்கள் ப்ளவுஸ், பாவாடை ஆகியவற்றைக் கழற்றி வைத்துவிட்டு, துண்டை உடம்பில் சுற்றுவதையும், துணி துவைப்பதையும், சோப்பு போடுவதையும், பூனையின் காதுக்குக் கீழே சொறிந்தவாறு இங்கிருந்தே பார்த்துக் கொண்டிருந்தேன். நான் அவர்களின் வயிறுகளைப் பார்த்தேன். நல்ல பரந்த- மினுமினுப்பான வயிறுகள். தொப்புகளைக் கூட இங்கிருந்து நன்றாகப் பார்க்க முடிந்தது. இந்த வயிறுதானே பெண்கள் கர்ப்பமான பிறகு பந்து மாதிரி ஊதிப் போய்த் தெரிவது என்பதை யோசித்துப் பார்த்தேன். அந்தப் பந்தில் பலூனின் வாய்போல இருக்கும் தொப்புள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook