பிறகும் ஒரு மாலை நேரம்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6775
மணி ஆறு
புரோகிதரின் முனை வளைந்த செருப்புகள் கறுத்து மினுமினுப்பாகத் தெரியும் மரப்படிகளில் பட்டு மேலே போகிறபோது உண்டாகும் சத்தம் தெருவில் கேட்டு, கொஞ்சம் கொஞ்சமாக அவர் மேலே நடந்து போய் சேர்ந்ததும், அதுவும் இறுதியில் நின்று போனது.
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு... மணியோசை சிறகடித்துப் பறந்தது. கோபுரத்திற்கு புத்துயிர் வந்ததுபோல் இருந்தது. வண்ணம் இழந்திருந்த ஒலிபெருக்கி விட்டுவிட்டு உச்சஸ்தாயியில் கத்தியது.
‘அல்லாஹூ... அக்பர்ர்ர்...’ - புரோகிதரின் ராகத்துடன் இணைந்த குரல் நகரமெங்கும் பரவி அலைந்தது. உள்ளே கால் மூட்டுகளை மடக்கி, அமர்ந்து, தலைகளைக் குனிந்து, உடலைச் சுருக்கிக் கொண்டு, ஆகாயத்தில் உயர்ந்த சத்தத்திற்கேற்ப தெய்வத்தை நோக்கி மனங்கள் விரிந்தன. மற்ற பள்ளி வாசல்களில் இருந்தும் தெய்வத்தைப் பற்றிய வார்த்தைகள் காற்றில் பரவி வந்தன. நகரத்திற்கு மேலே ஆகாயத்தில் மனங்கள் தங்களைத் தேடி அலைந்தன. ஒன்றையொன்று பின்தொடர்ந்து சென்று இருட்டோடு சங்கமமாயின.
‘ஃபா’-பேலம்மா கத்தினாள். தொடர்ந்து நிலத்தில் காறித் துப்பினாள்.
மேற்கு திசையில் ஆகாயத்தில் சூரியன் அஸ்தமனமாகி விட்டதற்கான அடையாளங்கள் எஞ்சி இருந்தன. இரத்தம் தோய்ந்த துணியைப் போல சிவப்பு வர்ணம் படர்ந்த ஒரு மேகம். கொஞ்சம் மஞ்சள் நிறம். இழுத்துக் கட்டிய வலையைப் போல ஆகாயத்திற்குக் கீழே நீண்டு வளைந்து அழுக்கேறிப் போய் கிடக்கும் மேகங்களுக்குப் பின்னால் கொஞ்சம் பிரகாசம். இலேசாக வெளிறிப் போயிருக்கும் நீல ஆகாயம். ஒரு பக்கம் இருட்டில் பறந்து மறையும் இரண்டு காகங்கள். பருந்துகள் பழுப்படைந்து காணப்படும் அஸ்தமன வானத்தை நோக்கி கறுத்த சிறகுகளை வீசி ஒருவித சுயஉணர்வு இன்மையுடன் பறந்து செல்கின்றன. சிவப்பு வர்ணகற்கள் வெளியே நீட்டிக் கொண்டு இருக்கும் பாசி பிடித்த பழமையான சுவருக்கு மேலே நாம் இத்தனை விஷயங்களையும் பார்க்கலாம்.
பழைய மூத்திரத்தின் வாடை. அழுகிப் போன ஆட்டின் குடல்கள். ஓடிக் கொண்டிருக்கும் அழுக்கு நீர். காய்ந்து போய் கிடக்கும் சாலையில் இருக்கும் குதிரைச் சாணம். சுற்றிலும் கறுத்த கடலைப்போல கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வரும் இருட்டு.
அந்தப் பக்கத்தில் இருந்த பெரிய சாலையில் இருந்து வெளிச்சங்களும், சத்தங்களும் இடைவிடாது வந்து நாலா பக்கங்களிலும் பரவிக் கொண்டிருந்தன.
பேலம்மா நிழல் பக்கம் இலேசாக தள்ளி அமர்ந்து கொண்டு தன் கால்களை சாலைப் பக்கம் நீட்டி வைத்தாள். புடவையை மேல் நோக்கி தூக்கி தடித்துப் போன கால்களைச் சொறிந்தாள். சொறிந்தவாறு கால் மூட்டுகளில் தலையை வைத்து குனிந்து அமர்ந்தாள். சிவப்பு வர்ண டவுண் பஸ்கள் இரைச்சலை உண்டாக்கிக் கொண்டு ஓடுவதை அவள் கவனித்தாள். உள்ளே இருந்த வெளிச்சத்தில் களைத்துப் போய் வியர்வை அரும்பிய முகங்களுடன் பின்னால் அமர்ந்திருக்கிற பயணிகளை அவள் மனதிற்குள் பார்த்தாள். அவர்கள் எல்லோரும் ஒவ்வொரு கேட்டைத் திறப்பார்கள். மணல்கள் வழியாக ஓசை எழும்ப நடப்பார்கள். திண்ணையில் அமர்ந்திருக்கும் குழந்தைகளைப் பாசத்துடன் வாரி எடுப்பார்கள். மனைவியைப் பார்த்து சிரிப்பார்கள்.
வேகமாக சுற்றிக் கொண்டிருக்கும் மரத்தால் ஆன சக்கரங்கள் மேல் குதிரை வண்டிக்காரர்கள் தார்க்குச்சியை நீட்டி உரசினார்கள். குதிரைகள் ஓடின. சைக்கிள்கள் நிற்காமல் இங்குமங்குமாய் அலைந்து கொண்டிருந்தன. கார்களின் ஹார்ன் சத்தம் விடாது முழங்கியது. பேலம்மா கார்களை ஓட்டிக் கொண்டிருந்தவர்களையும், பின்னால் கண்ணாடி ஜன்னல்களுக்கு உள்ளே சாய்ந்து உட்கார்ந்திருப்பவர்களையும் நினைத்துப் பார்த்தாள்.
உள்ளே பார்த்து கூப்பிட்டாள்:
“ஏ... அம்மா...!”
உள்ளே பாய் நிலத்தில் வேகமாக சுற்றப்படும் சத்தம் கேட்டது. பாத்திரங்களில் ஏதோ உரசும் சத்தம். தொடர்ந்து சில முக்கல்கள்... முனகல்கள்...
பெட்ரோல் வாசனை தெருவில் வீசிக் கொண்டிருந்தது. குளிர்ந்த காற்றோடு சேர்த்து அந்த வாசனையை பலவந்தமாக இழுத்து மூக்குத் துவாரத்தின் வழியே உள்ளே விட்டாள். பின்னால் சாய்த்து வைக்கப்பட்டிருந்த பலகையால் ஆன கதவின் இடைவெளி வழியே உள்ளே பார்த்தாள். “பிசாசே... நான் கூப்பிட்டது கேட்கலையா?” - முடிந்த வரையில் தன் குரலை உயர்த்திக் கொண்டு கத்தினாள்.
வெளிறிப் போயிருந்த தடிமனான சுவர்களுக்கு நடுவில் இருந்த இடைவெளியில் இருந்த பனையோலைக் கதவைத் திறந்து ஒரு கூன் விழுந்து காணப்பட்ட கிழவி வெளியே வந்தாள். பாதி திறந்திருக்கும் கதவு வழியாக உள்ளே மங்கலாக எரிந்து கொண்டிருந்த மண்ணெண்ணெய் விளக்கு, ஒரு அடுப்பு, கொஞ்சம் கரி படர்ந்த பாத்திரங்கள், பக்கத்தில் இருந்த ஒரு சிறு அறை, அதில் கிழிந்து போய் காணப்படும் நிறம் போன ஒரு பழைய பாய், ஒன்றிரண்டு பழந்துணிகள் - இவை எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது.
கிழவி நாற்றமெடுத்த போர்வையை நன்றாக இழுத்து போர்த்தியவாறு தெருவில் இறங்கி நடந்தாள். கூன் விழுந்து நடந்த அந்த உருவம் பள்ளி வாசலின் மதிலையொட்டி நடந்து மெயின் ரோட்டிற்குத் திரும்பும் வழியின் முனையில் போய் குத்த வைத்து உட்கார்ந்தது. தூரத்தில் மங்கலாக எரிந்து கொண்டிருந்த தெரு விளக்கின் இலேசான வெளிச்சத்தில், ஒரு நரைத்த கருங்கல்லைப்போல, குவித்து வைக்கப்பட்ட ஒரு மண் குவியலைப்போல, அந்த உருவம் அங்கே உட்கார்ந்திருந்தது. சுற்றிலும் ஆக்கிரமித்து விட்டிருந்த இருட்டின் ஒரு பகுதியாகவே அது கலந்து போய் விட்டிருந்தது. வயதாகிப் போன முகத்தில் கண்கள் மட்டும் பிரகாசமாக இருந்தன. பிசாசைப் போன்று பயங்கரமாக இருந்த, கொடுமையான, மர்மங்கள் நிறைந்த, ஆர்ப்பாட்டமான இருட்டு அந்த கிழவியின் முகத்தை முழுமையாக விழுங்கி இருந்தது.
பேலம்மா ஒரு கல்லை எடுத்து அந்த உருவத்தை நோக்கி எறிந்தாள். ஒன்றிரண்டு காதால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகளையும் அவிழ்த்து விட்டாள்.
“பொழுது இருட்டினது தெரியலியா? பிசாசு... சீக்கிரமா போயிருக்க வேண்டாமா?”
கிழவியின் முகம் கருங்கல் துண்டைப்போல எந்தவித சலனமும் இல்லாமல் இருந்தது. சிறிது நேரம் பேலம்மாவையே முகத்தை ஒரு மாதிரி சுருக்கி வைத்துக் கொண்டு கிழவி பார்த்தாள். அவளையும் அறியாமல் உதடுகளில் இலேசான ஒரு புன்சிரிப்பு புறப்பட்டு வந்தது. கல்லெடுத்து எறியப்பட்ட குளத்தைப்போல, சுருங்கி வாடிப் போயிருந்த முகத்தில் அவநம்பிக்கையும், கோபமும், ரோசமும், மகிழ்ச்சியும் ஒரே நேரத்தில் மாறி மாறி வந்து முகத்தைக் காட்டின. ‘ஹீ... ஹீ...’ - கிழவி சிரித்தாள்.