நமக்கு நல்லது காடுகள்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 9434
வைசாகத்தில் நடுப் பகல் நேரம். சூரியன் ‘சுள்’ளென்று சுட்டெரித்துக் கொண்டிருந்தது. வெயில் பட்டு பூமி பயங்கரமாக சுட்டது. கிராமத்தைச் சுற்றியிருக்கும் காடுகள் மீது அலைந்து கொண்டிருந்த வெண் மேகங்கள் கரிய நிழல்களைப் படிய விட்டிருந்தன.
பூர்ணேந்து கிராமத்திலுள்ள தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த கிராமத்து மக்கள் இப்போது கூட அவர்களுக்கு உண்டான அச்சத்திலிருந்து விடுபடவில்லை என்பதே உண்மை.
அவர்களின் ஒருவனான வெங்கய்யாவின் குடும்பத்தில் விழுந்த இடியை அவர்களால் எப்படி மறக்க முடியும்? அதைப் பற்றி நினைத்துப் பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும் அவர்கள் உண்மையிலேயே நடுங்கத்தான் செய்கிறார்கள். இன்று வெங்கய்யாவின் வீட்டில், நாளை தங்களின் வீட்டில் அன்று கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தாழ்ந்த குரலில் தங்களுக்குள்ளேயே பேசிக் கொள்கிறார்கள்.
கரும்பனை ஓலையால் வேயப்பட்ட மண் சுவரால் ஆன குடிசைக்குள் வெங்கய்யா குப்புறப்படுத்து அழுது கொண்டிருந்தான். ஆறுதல் வார்த்தைகள் அவனுடைய துக்கத்தை இரண்டு மடங்கு அதிகமாக்கவே செய்தன. இரண்டு, நான்கு வயது கூட ஆகாத வெங்கய்யாவின் குழந்தைகளை பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் கொண்டு போனார்கள். அவர்கள் வெங்கய்யாவிற்காக கொண்டு வந்த உணவு ஆறிப்போய் விட்டிருந்தது. பசி, தாகம் எதையும் உணர முடியாத நிலையில் இருந்தான் வெங்கய்யா. சொல்லப்போனால் அவன் எந்த உணர்ச்சியும் இல்லாத அளவிற்கு மரத்துப் போயிருந்தான். அவனுடைய வாழ்க்கையில் அவனுக்கென்றிருந்த ஒரே சொத்து அவனிடமிருந்து போய் விட்டது. அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சி முழுமையாக இழக்கப்பட்டிருக்கிறது.
வெங்கய்யாவின் மனைவி காணாமல் போய் நான்கு நாட்களாகி விட்டன. அவளைத் தேடாத இடமில்லை. கிணறு, குளம் எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தாகிவிட்டது. ஒரு பைத்தியம் பிடித்த மனிதனைப் போல தன் மனைவியின் பெயரைச் சொல்லி அழைத்தவாறு பகல் முழுக்க வெங்கய்யா ஒவ்வொரு இடமாக அலைந்து திரிந்தான். அவனுடைய மனைவியை யாருமே பார்க்கவில்லை.
வாழ்க்கையில் இவ்வளவு கொடுமையான ஒரு அவமானத்தை எந்தப் பெண்ணும் அனுபவித்திருக்க மாட்டாள். எந்தக் குற்றமும் செய்யாமலே அவளுக்கு இப்படிப்பட்ட ஒரு கடினமான தண்டனை! அந்தத் தண்டனை அவள் மீது வலிய திணிக்கப்பட்டது என்பது உண்மை.
ஒரு ஞாயிற்றுக் கிழமை ‘எஜமானின்’ வயல்களில் ஆறு நாட்கள் பகல், இரவு என்று வேலை செய்த மனிதர்கள் அவரவர்களுக்குச் சொந்தமான குடிசைகளில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது திடீரென்று அறிமுகமே இல்லாத சிலர் கிராமத்திற்குள் நுழைந்தார்கள். அவர்களின் பார்வையும், நடத்தையும், உடையும் பயப்படக்கூடிய விதத்தில் இருந்தன. அவர்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்களிடம் நகரத்திற்கே உரிய பகட்டுத்தனங்கள் இருந்தன.
அவர்களைப் பார்த்ததும் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் வியப்புடன் நோக்கினார்கள். கழியை ஊன்றிக் கொண்டு வெயில் காய்ந்து கொண்டிருந்த வயதான மனிதர்களின் குழி விழுந்த கண்களில் பயம் நிழலாடியது.
அவர்கள் வெங்கய்யாவின் வீடு எங்கு இருக்கிறது என்று கேட்டார்கள். வெங்கய்யாவின் வீடு மட்டுமே அவர்களின் குறியாக இருந்தது. சிறுவர்கள் எதுவும் பேசவில்லை. வயதான மனிதர்களும் வாயைத் திறக்கவில்லை. பயமுறுத்தியபோது சிறுவர்கள் அஞ்சி நடுங்கினார்கள். கடைசியில் சற்று வயது கூடுதலான ஒரு சிறுவன் வெங்கய்யாவின் வீட்டை அவர்களுக்கு காட்டினான்.
சிறுவர்கள் ஓடிப் போய் வயதான பெரியவர்களிடம் விஷயத்தைச் சொன்னார்கள். கிராமத்திலுள்ள ஆண்களும் பெண்களும் தங்களின் வீடுகளை விட்டு வெளியே வந்தார்கள். அவர்களிடம் கேள்வி கேட்க முயன்ற நாராயணன் என்ற மனிதனுக்கு நேராக அவர்கள் துப்பாக்கியைத் தூக்கிக் காட்டினார்கள். துப்பாக்கியைப் பார்த்ததும் ஆண்களும் பெண்களும் அவரவர்களின் வீடுகளுக்குள் ஓடிப் போய் ஒளிந்து கொண்டார்கள்.
‘‘வெங்கய்யா...’’ - அவர்களின் நடுங்கச் செய்யும் குரல் கிராமம் முழுவதும் எதிரொலித்தது.
வெங்கய்யாவின் மனைவி வெங்கம்மா குடிசைக்குள் உணவு தயார் பண்ணிக் கொண்டிருந்தாள்.
அவள் காதில் வந்த மனிதர்களின் குரல் கேட்டது. அந்த ஆணின் குரல் அதற்கு முன்பே அவளுக்கு அறிமுகமில்லாத ஒன்று.
மீண்டும் ‘வெங்கய்யா’ என்ற பெயர் முழங்கியபோது அவள் உறங்கிக் கொண்டிருந்த தன் கணவனைத் தட்டி எழுப்பினாள்.
அவன் குடிசையை விட்டு வெளியே வந்தான். அவனுக்கு முன்னால் அந்தப் புதிய மனிதர்கள் நின்றிருந்தார்கள். அவர்கள் வெங்கய்யாவை வெறித்துப் பார்த்தார்கள். வெங்கய்யா குனிந்து அவர்களை வணங்கினான்.
அவர்கள் வெங்கய்யாவின் அருகில் வந்தார்கள். அவர்களைப் பார்த்த வெங்கய்யா பயந்து போய்விட்டான். எதுவும் கேட்க அவனுக்கு நாக்கு வரவேயில்லை.
அவர்களின் ஒருவன் கத்தியைக் காட்டியவாறு கேட்டான்:
‘‘உன் பொண்டாட்டி எங்கே?’’
வெங்கய்யா தாழ்ந்த குரலில் கேட்டான்:
‘‘நீங்கள் யாரு சுவாமிகள்?’’
அதற்குப் பதில் சொல்வதற்கு பதிலாக வெங்கய்யாவிற்கு ஒரு அடி கிடைத்தது. வெட்டப்பட்ட வாழையைப் போல வெங்கய்யா குப்புறப் போய் விழுந்தான். அவனுக்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. காதில் வண்டுகள் ரீங்காரமிடுவதைப் போல் உணர்ந்தான். அவன் மெதுவாக தரையை விட்டு எழுந்தான். அவனின் உதட்டோரத்தில் இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது.
‘‘உன் பொண்டாட்டியை எங்கே?’’
கத்தி முனையை அவனுடைய நெஞ்சின் மீது வைத்தவாறு ஒருவன் உரத்த குரலில் கேட்டான். அவனுடைய குரல் கிராமத்தில் எல்லா பக்கங்களிலும் எதிரொலித்தது.
‘‘அவளை ஒழுங்கா வெளியே கொண்டு வர்றியா இல்லியா?’’ - அவன் மீண்டும் கத்தினான். வெங்கய்யாவிற்கு எதுவுமே புரியவில்லை. அவன் என்னவோ சொல்ல முயன்றபோது, அவர்கள் அவனை அருகிலிருந்த மரத்தோடு சேர்த்து கட்டி வைத்து அடித்தார்கள்.
தன் கணவனை அவர்கள் அடிப்பதைப் பார்த்த வெங்கம்மா கிராமத்திலுள்ள ஒவ்வொரு பெயரையும் சொல்லி அவர்களை உதவிக்கு வரும்படி அழைத்தாள். ஆனால் யாரும் வெளியே வரவில்லை.
வெங்கம்மா தன் குழந்தைகளை மார்போடு சேர்த்து பிடித்துக் கொண்டு பயந்து நடுங்கிக் கொண்டிருந்தாள். குழந்தைகள் வீறிட்டு அழுது கொண்டிருந்தன.
வந்திருப்பவர்கள் ‘‘எஜமான்’’ அனுப்பி வைத்த ஆட்கள் என்பதை அவள் புரிந்து கொண்டாள்.
‘‘எஜமானின்’’ சகோதரி ஒரு புரட்சிக்காரனுடன் வீட்டை விட்டு ஓடிப் போனதற்கு அவள் மாட்டிக் கொண்டாள். அவள்தான் அவர்கள் ஓடியதற்கு உதவி செய்தவள் என்று ‘‘எஜமான்’’ மனதில் நம்பிக் கொண்டிருக்கிறார். தனக்கு அதைப் பற்றி எதுவுமே தெரியாது என்று கண்ணீர் மல்க கூறினாள். வெங்கம்மா ‘‘சௌடம்மாதேவி’’ மீது சத்தியம் பண்ணி சொன்னாள். ‘‘வாழ்க்கை முழுவதும் எஜமானுக்கு விசுவாசமா சேவை செய்தவங்க நாங்க. எஜமானுக்கு நாங்க துரோகம் பண்ணுவோமா? எஜமான், என்னை நம்புங்க. என் குழந்தைகள் மேல சத்தியமா சொல்றேன்’’ என்று அவள் எவ்வளோ சொல்லிப் பார்த்தாள்.