நமக்கு நல்லது காடுகள் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 9434
இரண்டு குண்டர்கள் வீட்டிற்குள் வந்தார்கள். அவர்களைப் பார்த்து பயந்து நடுங்கிய குழந்தைகள் தங்கள் தாயைக் கட்டிப் பிடித்துக் கொண்டு உரத்த குரலில் அழத் தொடங்கினார்கள்.
அவர்கள் வெங்கம்மாவைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார்கள். அதைப் பார்த்து வெங்கம்மா நடுங்கினாள். அவள் தரையில் குழந்தைகளை உட்கார வைத்தவாறு அவர்களைப் பார்த்து கைகளைக் கூப்பினாள். கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. தான் எந்தவொரு தப்பையும் செய்யவில்லை என்று அவள் கெஞ்சியவாறு சொன்னாள். தன் கணவனையும் தன்னையும் தேவையில்லாமல் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று அவள் திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டாள்.
அவர்கள் அவள் சொன்னதைச் சிறிது கூட காதில் போட்டுக் கொள்ளவில்லை. அதைக் கேட்பதற்கும் அவர்கள் தயாராக இல்லை. அவர்கள் மெதுவாக அவளை நோக்கி வந்தார்கள். இரை மீது பாய்ந்து விழும் மிருகத்தைப் போல அவர்கள் வெங்கம்மா மீது பாய்ந்தார்கள். அவள் வாய் விட்டு அழுதபோது, அவர்களில் ஒருவன் அவளின் வாயைக் கையால் பொத்தினான். தங்களின் தாயை முரடர்கள் நெருங்கி அட்டகாசம் செய்வதைப் பார்த்த சிறு குழந்தைகள் உரத்த குரலில் அழத் தொடங்கினார்கள். குழந்தைகளின் அழுகைச் சத்தம் பூர்ணேந்து கிராமம் முழுக்க கேட்டது. ஆனால், ஓருவர் கூட அவர்களுக்கு உதவ வெளியே வருவதாகத் தெரியவில்லை. முழு கிராமமும் நடுக்கத்தில் உறைந்து போனது. என்ன செய்வதென்று தெரியாமல் கிராமத்து மக்கள் மரத்துப் போய் விட்டனர்.
அந்த குண்டர்கள் வெங்கம்மாவை வெளியே இழுத்தார்கள். அவளின் ஆடைகளை ஒவ்வொன்றாக அவர்கள் நீக்கினார்கள். அதைத் தடுக்க முயன்றபோது, அவர்கள் வெங்கம்மாவின் கைகளை அவளுக்குப் பின்னால் வைத்து கட்டினார்கள்.
அவளை முழு நிர்வாணமாக்கி வெங்கய்யாவின் முன்னால் அவர்கள் கொண்டு போய் நிறுத்தினார்கள். அவன் ஒரு நிமிடம் கண்களை மூடியபடி நின்றான். தொடர்ந்து தன்னுடைய கட்டில் இருந்து விடுபட முடிந்த மட்டும் முயற்சி பண்ணி பார்த்தான்.
பூர்ணேந்து கிராமம் பயத்தால் நடுங்கி நின்றது. கிராமத்து மக்கள் அடைக்கப்பட்ட கதவுகளின் இடைவெளியில் என்ன நடக்கிறது என்று பார்த்தார்கள். அவர்களின் நாக்குகள் செயல்படாமல் ஒட்டிப் போய் விட்டன. தொண்டை முழுமையாக வற்றிப் போய் விட்டிருந்தது. தங்களுடைய கிராமத்தில் தங்களுடன் சம்பந்தப்பட்ட ஒரு குடும்பத்திற்கு நேர்ந்த துன்பதைப் பார்த்து அவர்கள் பயந்து போய் எதிர்ப்பு கூட காட்டாமல் இருந்தார்கள்.
முழு நிர்வாணமாக ஆக்கப்பட்ட வெங்கம்மாவை அவர்களின் கிராமத்தின் சாலை வழியே நடத்திக் கொண்டு போனார்கள். அவளுக்கு இடது பக்கத்திலும் வலது பக்கத்திலும் முன்னாலும் பின்னாலும் குண்டர்கள் உடன் வந்தார்கள்.
கிராமத்தின் மையப் பகுதியில் வெங்கம்மாவைக் கொண்டு போய் அந்த குண்டர்கள் நிறுத்தினார்கள். அவர்கள் கிராமத்து மக்களின் கதவுகளை காலால் மிதித்தார்கள். எல்லோரையும் வெளியே வரும்படி சொன்னார்கள். கிராமத்து மக்கள் அவர்கள் சொன்னபடி தங்கள் வீட்டு கதவுகளை திறந்து வெளியே வந்தார்கள். ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் எல்லோருமே வெளியே வந்தார்கள். அப்படி வந்தவர்கள் முழு நிர்வாணமாக நின்றிருந்த வெங்கம்மாவைப் பார்த்து அதிர்ச்சியடைந்து போனார்கள். பெண்கள் தங்களின் கண்களை மூடிக் கொண்டு அடுத்த நிமிடம் வீடுகளுக்குள் வேகமாக ஓடி மறைந்து கொண்டார்கள்.
குண்டர்கள் கிராமத்து மக்களைப் பார்த்து சொன்னார்கள்: ‘எஜமான்கிட்ட விளையாடினா இதுதான் நடக்கும்’. வெங்கம்மா அவர்கள் முன்னால் வேட்டையாடப்பட்டு காயம் பட்ட மிருகத்தைப் போல பரிதாபமாக நின்றிருந்தாள். அவளின் கள்ளங்கபடமில்லாத பார்வை கிராமத்து மக்களின் மனதை என்னவோ செய்தது. ஆனால், துப்பாக்கிகளுக்கு முன்னால் அவர்கள் செயலற்றவர்களாகி விட்டார்கள். எதுவுமே பேசாமல் அவர்கள் அமைதியாக நின்றிருந்தனர்.
முழு கிராமமும் பார்த்து நிற்க, அந்த குண்டர்கள் வெங்கம்மாவின் மார்பகத்தைக் கையால் பிசைந்தார்கள். அவளின் கன்னத்தை தங்களின் விரல்களால் தடவினார்கள். அப்போது அவர்கள் செய்த அட்டகாசம் ஒரு எல்லையைத் தாண்டி இருந்தது. பிசாசுத்தனமான ஆனந்தத்தை அனுபவிப்பதைப் போல அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
வெங்கய்யாவின் நண்பன் நாராயணனால் அதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவன் உரத்த குரலில் கத்தியவாறு முன்னால் வேகமாக வந்தான். குண்டர்கள் அவன் மீது பாய்ந்தார்கள். அவனுடைய மனைவியும் தாயும் தந்தையும் குண்டர்களின் கால்களில் விழுந்து அவனை மன்னிக்கும்படி சொன்னார்கள். அவர்கள் நாராயணனை வெறுமனே விட்டார்கள்.
நாராயணனன் உரத்த குரலில் சொன்னான்:
‘‘அடிமைகள்... நீங்க எல்லாரும் அடிமைகள். இவ்வளவு பெரிய அவமானம் நடக்குறப்போ, ஒருத்தன் கூட வாய் திறந்து பேசலைன்னா எப்படி?’’
நாராயணன் தரையைப் பார்த்து காரித் துப்பினான். குண்டர்கள் வெங்கம்மாவிடம் கிண்டல் குரலில் சொன்னார்கள்:
‘‘இனி யாராவது ஏதாவது பண்ணினா இவங்க முன்னாடி நாங்க உன்னை கற்பழிக்க ஆரம்பிச்சிடுவோம். புரியுதாடி?’’
வெங்கம்மா ஒரு வார்த்தை கூட பேசாமல் ஒரு சிலையைப் போல நின்றிருந்தாள்.
ஒரு பெரிய காரியத்தைச் சாதித்து முடித்ததைப் போல குண்டர்கள் கிராமத்தை விட்டு நீங்கியபோது, பெண்கள் ஆடைகளைக் கொண்டு வந்து வெங்கம்மாவின் நிர்வாணக் கோலத்தை மறைத்தார்கள். அப்போதும் எதுவும் சொல்ல முடியாத நிலையில் தூரத்தில் எங்கோ பார்வையைப் பதித்தவாறு ஒரு சிலையைப் போல நின்றிருந்தாள் வெங்கம்மா.
கட்டுகள் அவிழ்க்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட வெங்கய்யா ஒரு சிறு குழந்தையைப் போல வாய்விட்டு அழுதான். அவனுடன் சேர்ந்து கிராமத்து பெண்களும் தங்களின் மார்பில் அடித்துக் கொண்டு உரத்த குரலில் கூப்பாடு போட்டு அழுதார்கள். அவர்கள் சௌடம்மாதேவியிடம் தங்களின் குமுறலைச் சொன்னார்கள். தாங்கள் அப்பிராணி ஏழைகளென்றும், எதுவுமே செய்ய முடியாத நிலையில் இருப்பவர்களென்றும், அவர்கள் தெய்வத்திடம் முறையிட்டார்கள்.
கிராமத்திலேயே மிகவும் வயதான கிழவனான கோவிந்தலு வெங்கய்யாவின் தோளில் கை வைத்து தழ தழத்த குரலில் சொன்னான்:
‘‘நம்மால என்ன செய்ய முடியும் மகனே?’’
வெங்கய்யா அப்போதும் அழுது கொண்டுதானிருந்தான். ஆனால், வெங்கம்மாவின் கண்கள் வற்றி, வறண்டு போன குளத்தைப் போல இருந்தன.
யாரோ வெங்கய்யாவையும், அவனுடைய மனைவியையும் அவர்களின் குடிசைக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். அன்று இரவு தூங்கிக் கொண்டிருந்த தங்கள் பிள்ளைகளின் அருகில் மனைவியும் கணவனும் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். அவ்வப்போது வெங்கம்மா நீண்ட பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். பூமியிலிருந்து ஆவேசத்துடன் எரிமலையை விட உஷ்ணம் மிக்கதாக இருந்தது அவளின் மூச்சு.
வெங்கய்யா மனைவியின் தலையைப் பாசத்துடன் தடவியவாறு சொன்னான்:
‘‘நீ என்னைக்கும் என்னோடவதான் வெங்கம்மா.’’